இணைய இதழ்இணைய இதழ் 69தொடர்கள்

பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்; 6 கிருபாநந்தினி

தொடர் | வாசகசாலை

பெரிய கோட்டான்

தன் ஆங்கிலப் பெயர் Eurasian curlew அறிவியல் பெயர் Numenius arquata 

பேரினம் – Numenius – கிரேக்க மொழியில்  (neos, “new” and mene “moon”), பிறை வடிவ நிலா போன்ற அலகு என்று பொருள்.

சிற்றினம் – Arquata – லத்தின் மொழியில் வில் வடிவ அலகு என்று பொருள். 

வாழ்விடங்கள்

இப்பறவை ஐரோப்பா மற்றும் அயர்லாந்து நாடுகளில் உள்ள திறந்த புல்வெளிகள், சதுப்பு நிலக் காடுகள், ஈரப்பதமான புல்வெளிகள், ஆற்றுப் படுகைகள், கடலோர ஈரநிலங்கள் போன்ற பகுதிகளில் வாழ்கிறது.

அதனுடைய மிகப்பெரிய அலகினால் கடல் மணலுக்குள் உள்ள புழுக்களைத் தேடி உண்கின்றது. சில நேரங்களில் மணலின் மேற்பரப்பில் சிறிய நண்டு மற்றும் மண்புழுக்களைக் கண்டால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எளிதாக உணவை உட்கொள்ளும். 

வலசை

இப்பறவை பிப்ரவரி முதல் மே மாதம் வரை கிழக்கு மற்றும் தென் ஆப்ரிக்கா, மடகாசுக்கர், மற்றும் தென் காசுப்பியன் கடல், கிழக்கு மற்றும் தெற்காசியா வழியாக சீனா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் வரை செல்கிறது. தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் வலசை வருகிறது. இனப்பெருக்க நிலையில் உள்ள பறவைகள் வலசை செல்வதில்லை. 

இனப்பெருக்கம்

ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பித்து ரஷ்யா, எசுக்காண்டினாவியா, சைபீரியா, வடகிழக்கு சீனா, பைக்கால் ஏரி, பகுதிகளிலும், ஈரப்பதமான புல்வெளிகளிலும், ஈரநிலங்களிலும் இனப்பெருக்கம் செய்கிறது. இது ஏப்ரல் முதல் மே மாதம் வரை இனப்பெருக்கம் செய்கின்றது. மூன்று முதல் ஆறு முட்டைகளை ஒரு மாத காலம் அடைகாக்கின்றது.  

வாழ்விடச் சிக்கல்கள்

பெரிய கோட்டான் ஐரோப்பாவில் மட்டுமே 1995 முதல் 2013 வரையிலும் கிட்டத்தட்ட 46% அழிந்துவிட்டது. உலகம் முழுவதும் அழிந்து வரும் பட்டியலில் 2008 ஆண்டு இதனைச் சேர்த்தனர். இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் இருபது வருடங்களில் அதாவது 1996 முதல் 2016 வரை கிட்டத்தட்ட 50 சதவீதமும், வேல்சில் 80 சதவீதமும், அயர்லாந்தில் 90 சதவீதமும் அழிந்துவிட்டதாக தரவுகள் கூறுகின்றன. ஆதலால் இப்பறவையை மிகுதியாக அழிந்து வரும் பறவை பட்டியலில் ஐரோப்பா சேர்த்தது. பின்பு ஐக்கிய நாடுகள் (Agreement on the Conservation of African-Eurasian Migratory Waterbirds – AEWA) ஆப்ரிக்க – யுரேசியா வலசைப் பறவைகள் பாதுகாப்பு ஒப்பந்தமும் செய்துகொண்டன. 

ஈரநிலங்கள் பாதிப்பு, புல்வெளிகள் அழிப்பு, விவசாய நிலங்களில் மாற்றமடைதல் போன்றவற்றால் உணவுப் பற்றாக்குறையும் ஏற்படுவதோடல்லாமல் இனப்பெருக்கத்தின் போது முட்டைகளுக்கும் குஞ்சுகளுக்கும் மற்ற வேட்டையாடி உயிரினங்களிடம் எளிதாக  மாட்டிக்கொள்ளும் அபாயமும் ஏற்படுகின்றது.  மேலும் மனிதர்கள் இவற்றை வேட்டையாடுதலும், பறவைக் காய்ச்சலும் கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. 

வலசை மேற்கொள்ளும் நாடுகளிலும் ஈரநிலங்கள் ஆக்கிரமிப்பு, அலைகளைத் தடுக்க கட்டப்படும் சுவர்களினால் அதன் வாழ்விடங்களான காயல் பகுதிகளும், சதுப்பு நிலங்களும் மிகப் பெரிய பாதிப்புக்குள்ளாகின. மாசுபாடும், மனிதர்கள் வேட்டையாடுதலும் சேர்ந்து எறியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போன்று அதன் வாழ்விடங்கள் மிகப்பொரும் அளவில் பாதிப்பகுள்ளாகின. 

தற்போது 2023 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் சில பகுதிகளுக்கு வந்துகொண்டிருந்தாலும் இச்சிக்கல்கள் தொடர்ந்தால் தற்போதிருக்கும் எண்ணிக்கையும் குறைந்துவிடும் அபாயம் உள்ளது.  

(தொடரும்…)

kirubhanandhini@yahoo.in

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button