கனவின் வழியாக கண்டுகொள்ளும் தருணம் – உயிர்க்காடு குறுநாவலை முன்வைத்து – ‘முத்துச்சிதறல்’ முத்துகுமார்
கட்டுரை | வாசகசாலை
இக்குறுநாவலை படித்தவுடன் முதலில் தோன்றியது இது நிகழ்வுகளின் பிரதியா அல்லது பிரதிபலிப்பா என்ற கேள்விதான். பெரும்பாலும் இது போன்ற கேள்விகள் எழுவதற்குக் காரணம் அவை வாசகர்களை ஊடுருவ முடியாத படைப்பாக இருக்கலாம். இது படைப்பாளியின் போதாமையால் மட்டும் நிகழ்வதல்ல, வாசகர் அப்படைப்புக்கு அளிக்கும் கவனம், உழைப்பு போன்றவற்றின் போதாமையாகவும் இருக்கலாம். இவ்விரு போதாமைகளின் அடிப்படையிலேயே, எம்.கே. குமார் அவர்களுடைய, ‘உயிர்க்காடு‘ என்ற குறுநாவல் பற்றிய என்னுடைய அவதானிப்புக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
இந்தக் குறுநாவல், ஒரு ஆரம்பகட்ட எழுத்தாளரின் பதற்றம் நிறைந்த முயற்சி என என்னால் அனுமானிக்க முடிகிறது. கிட்டத்தட்ட ஒரு திரைப்படக் காட்சிகளின் மொழிபெயர்ப்பு போல அல்லது ஒரு திரைப்படத்திற்காக எழுதப்பட்ட script போல உயிர்க்காட்டின் களம் விரிகிறது. ஆசிரியர் அத்திரைக்கு அல்லது தன் கற்பனைக்கு முன்னால் அமர்ந்து அதன் நிகழ்வுகளை அல்லது தன் கற்பனையை அத்திரையரங்கில் இல்லாத வாசகர்களுக்காக மொழிபெயர்த்திருக்கிறார். சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு live cricket match-ன் radio commentary போல காட்சியின் அல்லது நிகழ்வின் அல்லது கற்பனையின் ஒவ்வொரு அசைவுகளையும், உரையாடலையும் இந்தப் படைப்பில் பதிய முயன்றிருக்கிறார். மிக எளிதாக இந்நாவலை ஒரு திரைப்படத்தின் காட்சிகளாக மாற்றி விடமுடியும்.
சிங்கப்பூரில் குடியேறி வாழ்பவர்களின் சமகால வாழ்வின் சிக்கலையும் அதன் விளைவால் நிகழ்ந்த ஒரு உயிரிழப்பையும் அல்லது கொலையையும் மையப்படுத்தி இக்குறுநாவல் விரிகிறது. ரானே, ட்ருமேன், மெலிசா, சில்வன் என்ற முக்கியமான கதாபாத்திரங்களை சுவாரஸ்யமான முறையில் இணைத்தது இக்குறுநாவலின் பலமாக பார்க்கிறேன். ‘சூப்பர் டீலக்ஸ்‘ திரைப்படம் நினைவிழெழுந்தது. ஆனால், இக்கதாபாத்திரங்களை தன்னளவில் பலமான அல்லது தனித்துவமான ஒன்றாக ஆக்க முயன்ற முயற்சிகள் ஒரு வாசக அயர்ச்சியையே எனக்குத் தந்தன. வளவளவென்ற உரையாடல்கள், ரானே மற்றும் ட்ருமேன் போன்ற முதலாளிகளின் குடும்பம் ஒழுக்கமற்றது; மெலிசா மற்றும் சில்வன் போன்ற தொழிலாளிகள் அப்பாவிகள் என்ற நடுத்தர வர்க்கத்தின் சோம்பேறித்தனமான முன்முடிவுகளை சித்தரித்திருக்கின்றன. இது வலிந்து ஒரு அருமையான சிறுகதையை குறுநாவலாக்க முயல்வது போலிருந்தது. குறுநாவல் தரும் வாய்ப்புக்களை துஷ்பிரயோகம் செய்தது போலும் தோன்றியது.
தன்னுடைய அனுபவங்களை, தனக்குத் தெரிந்தவைகளை எப்படியாவது சொல்லி விட வேண்டுமென்ற தன்முனைப்பால் அவ்வனுபவங்களின் சாட்சியாக அல்லது அதனைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக மட்டுமே நின்றுவிடுகிறார் எம்.கே. குமார். இதைத்தான் இவ்வுரையின் முதலில் இக்குறுநாவல் பிரதியா அல்லது பிரதிபலிப்பா என்று எண்ணவைப்பதாக குறிப்பிட்டேன்.
வல்லினம் இணைய இதழினுடைய ஆசிரியர் குழுவின் சிரத்தைகளை கேள்விப் பட்டதுண்டு. இதெப்படி ஒரு குறுநாவலாக பிரசுரமாகும் வாய்ப்பை எட்டியது என்ற திகைப்போடு, வாசகசாலையின் கலந்துரையாடலுக்கும் தேர்வான ஆச்சர்யமும் ஒன்று சேர்ந்து ஒரு குழப்பத்தை உருவாக்கியது. சமீப காலமாக இலக்கிய குழப்பம் மட்டுமல்ல எந்த குழப்பமான சூழ்நிழையிலும் கவிதைகளில் நுழைந்து விடுவதுண்டு. சில சமயம் ஒரு ஆசுவாசத்தையும், தீர்வையும் கவிதைகள் அளிக்கக் கூடும். சில சமயம் அக்கவிதைகள் உருவாக்கும் குழப்பங்களில் நம்முடைய குழப்பங்கள் மறைந்து சிறிதாகி விடவும் கூடும். ‘தொடுதிரை‘ எனும் கவிதைத் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தேன். சமீபத்தில் விஷ்ணுபுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூல். மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் அவர்களின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. ஜெயமோகன் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். அதிலுள்ள முதல் கவிதையிது.
தவறாக
பிரார்த்தனைக்கு எண்ணியபோது
பிரார்த்தனைப்பாடல்கள் எவையும் நினைவிலெழவில்லை
எத்தனை துழாவியும் நினைவிலிருந்து
அது எழவேயில்லை
ஆகவே அவன் அகரவரிசையை கைகூப்பியபடி உருக்கமாக பாடினான்
அந்தப் பிரார்த்தனையை கட்டமைத்த எழுத்துக்கள்
வரிசை தவறியிருந்தாலும்
இவையெல்லாம்தானே
என்ற பொருளில்
கொஞ்சம் தவறாக அடுக்கப்பட்ட
அகரவரிசைகள்தானே எல்லா பிரார்த்தனைகளும்
என்ற அர்த்தத்தில்
அகரவரிசை
தவறாக எழுதப்பட்ட
ஒரு பிரார்த்தனைதானே
என்ற அர்த்தத்தில்
இறுகி உறைந்து போயிருக்கும் நம்முடைய அனைத்து முன்முடிவுகளையும் சற்றேனும் இளக வைக்கும் ஆற்றல் கொண்டவை இக்கவிதை வரிகள்.
பிரார்த்தனைக்காக அமரும் ஒருவர், அதற்கான மந்திரங்களை மறந்து விடுவது போல அல்லது தெரியாமல் இருக்கும் ஒருவர் போல் இந்நாவலாசிரியர் எனக்குத் தெரிந்தார். ஆனால், அப்பிரார்த்தனையில் இருந்து அவர் விலகிவிடவில்லை. மலாய் மொழி, சிங்கப்பூர் தமிழ் மொழி, சமகால உரைநடைக்கு ஒத்து வராத சுத்தத் தமிழ், இந்நாவலுக்கு சற்றும் பொருந்தாத வெண்முரசுத் தமிழ் என தொடர்ந்து பிரார்தித்து அவருக்கான மொழியை அவரே அமைத்துக் கொள்ளும் படைப்பூக்கத்தை மெலிசாவின் கனவின் வழியாக கண்டு கொள்கிறார். இந்தக் குறுநாவல் ஒரு மூச்சிரைக்கும் உயிர்க்காடாக ஆகும் தருணமிது.
மெலிசாவும், அவருடைய காதலனான சில்வனும் இயற்கையோடு ஒன்றி, தன் உருவங்களை இழந்து இயற்கையாகவே உருமாறி மனித உணர்வுகளை மட்டுமே பிரதிபலிக்கும் இம்மொழி படைப்பூக்கத்தினால் மட்டுமே சாத்தியமாவது. எம்.கே. குமாரின் பிரார்த்தனைகள் தொடர வாழ்த்துக்கள்.
**********