
நில நிலவரம்
ஏற்கனவேயிருந்த
இடத்தை விற்று
மெயின் ரோட்டில்
இடம் வாங்கி
வீடு கட்டலாம் என்பது திட்டம்
தரகர் காட்டிய இடம் சதுர வடிவம்
அவ்விடத்தை
பொறியாளர் ப்ளூ பிரின்டில் முக்கோணமென
உறுதியளித்தார்
இரண்டாம் தரகரிடம்
விசாரிக்கச் சொன்ன பொழுது
அந்த இடம் கனசதுரம்
தாலுகாவில் ஈசி போட்டபோது
கூம்பு வடிவம்
நாங்கள் செவ்வக வடிவ
இடத்தைக் காட்டுங்கள்
சொந்த வீடு கட்டி வாழ வேண்டும்
என்றுதான் கேட்டோம்.
***
மருதம்
பரந்த மலை மேலே
சிவன் கோயில்
ஆடு மேய்க்கும் சிறுவன்
அழைப்பு கொடுக்க
விடையளிக்காது
திமிறிவோடும் ஆடுகள்
கீற்றுப் பின்னலென
பச்சை பரவிய
செடி கொடி மரங்கள்
மூலிகை
மருத்துவத் தாவரங்கள் எங்கே?
பாதைகள் வழி நடத்திப் பிரிந்திடும்
மணம் வீசிய பூக்களின் நிறங்கள் வெறுக்கத்தக்கது
கற்பாறைகள் உடையுமா?
அவை உருண்டோடாது
பிடித்துக் கொள்கிறதே எதனை!
முட்கள் பென்சில் கூர்மை
சிற்றருவி சலசலப்பு
விரல்களில் பற்றிப் படரும் குளிர்ச்சி
நிரம்பிய நிழல்
மாநகர வீட்டுக் குளிர்சாதன அறை
பிறப்பிக்க முடியாத உயிர்கள்
சகஜமாக ஊர்வலம்
எதிரொலிக்கும்
விலங்கினக் குரல்
அச்சுறுத்துகிறதே
அசைவ மனதை
மலை கீழே ஓடும்
ரயிலில்
குருட்டுப் பிச்சைக்காரன்
இந்நேரம்
கடவுள் உள்ளமே கருணை இல்லமே பாடல் பாடுவான்
அதைக் கேட்க
தற்போது
வாய்பே இல்லை.
***
1+1 = 1
உறக்கம் தொலைத்த
நடுநிசி வேளை
சாளரம் ஏற்ற
அம்புலி வெளிச்சம் நிரம்பிய வானத்தில்
துணையின்றித் தனித்திருந்தது
என் போல்
பௌர்ணமியும்.
**********