இணைய இதழ்இணைய இதழ் 81கவிதைகள்

ரமீஸ் பிலாலி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

நான்
என்னும்
உண்மை அறிவு
மிகுதலுமில்லை
குறைதலுமில்லை.

***

கடலுள் மூழ்குபவன்
உயர்த்திய
ஒரு கை மட்டும்
வெளியே
காப்பாற்றக்
கேட்கிறதா?
விடைபெறும்
சமிக்ஞையா?
அபய
முத்திரையா?

***

எழுபிறப்பின் முன்
உயிரும் மோனம்
மெய்யும் மோனம்
மோனம்
இரண்டன்று.

***

நெஞ்சொடு கிளர்த்தல்
ஒரு கணம்
நெஞ்சொடு கிளத்தல்
ஓராயுள்!

***

சட்டியாய்
இருப்பாய் எனில்
தழல் தாங்கியாகணும்;
நெஞ்சே!
சட்டுவமாய் இரு.

***

எரவாணத்துக்கு மேலே
இருக்கிறது வானம்
வானத்துக்கு அப்பால்
இருக்கிறது வெளி
உத்தரமே
உயரமென்று
நினைக்கிறது ஈ.

***

முன்பெல்லாம்
மழை
நல்லதொரு சாக்கு
கவிதை எழுத

இப்போதெல்லாம்,
எழுதாமலிருக்க.

*********

trameez4l@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button