
ஏதோ ஒரு சமயத்தில் நாம் எல்லோரும் இப்படி நினைத்திருப்போம்: மனிதனாக பிறந்ததற்கு பதிலாக ஏதேனும் விலங்காகவோ பறவையாகவோ பிறந்திருக்கலாம். மனிதர்களால் மட்டும் தான் இப்படியொரு வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. ஒரு நாயோ பூனையோ இப்படி யோசிக்குமா என்று தெரியவில்லை. ஆக இப்படி சிந்திப்பது தான் நம்மை மற்ற உயிர்களிடமிருந்து தனித்துவமாக்குகிறது. எனக்கு விலங்குகளையும் பறவைகளையும் பிடிக்கும். சிறுவயதில் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வருவதற்குள் ஏதேனும் நாய்க்குட்டியைப் பார்த்தால் எடுத்து வந்துவிடுவேன். அதைக் குளிப்பாட்டி பால் வைத்துக்கொண்டிருக்கும் போது வீட்டார்கள் நாயை விட்டுவிட்டு வரும்படு சொல்வார்கள். அழுகையும் ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு குட்டி நாயை பிரிய வேண்டிவரும். ஒருமுறை குறவர்களிடம் போராடி இரண்டு அணில் குஞ்சுகளை வீட்டுக்கு எடுத்து வந்து வளர்த்திருக்கிறேன். திருச்சியில் ஆசையாசையாக கருப்பு பூனைக்குட்டி ஒன்றை வளர்த்து வந்தேன் ஒரு நாள் பள்ளிக்கு சென்று திரும்பி வரும்போது பூனையை காணவில்லை. வீட்டுக்கு வந்த சொந்தக்கார சிறுவன் பூனையை கேட்டான் என்று தூக்கிக் கொடுத்துவிட்டார்கள். எவ்வளவு பெரிய தாராள மனம் பார்த்தீர்களா! பள்ளி பருவம் முடிந்து வீட்டை விட்டு வெளியே வந்த உடனே ஒரு நாய் வாங்கி வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பெயர் விக்கி. விக்கியின் நினைவில் என் சகோதரன் வீட்டின் முதல் மகனாகவும் தான் இரண்டாவது மகனென்றும் நினைப்பு. வீட்டில் நான் இல்லாத குறையை விக்கிதான் தீர்த்து வைக்கிறது.
அமெரிக்காவில் செல்லப்பிராணிகளுக்கென்று தனி மதிப்பிருக்கிறது. செல்லப்பிராணிகளை வைத்து தனி சந்தையே இயங்கி வருகிறது. வீட்டில் இருப்பவர்கள் வெளியில் செல்லும் போது செல்லப்பிராணிகளை பார்த்துக் கொள்வதற்கென்று தனி ஸ்தாபனங்கள் இயங்கி வருகிறது. அவைகளில் காப்பீடுகள் உணவுகள் என்று பட்டியிலிட்டால் தலை சுற்றிவிடும். என்னுடன் பணிபுரியும் பெண்மணி இரண்டு இங்க்லீஷ் புல் வளர்க்கிறார். புல்டாக் இனம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தாலும் குழந்தைகள் போல. சனிக்கிழமை தன் நாய்கள் இரண்டையும் பணிபுரியும் இடத்திற்கு எடுத்து வருவார். ப்ரூனோ மற்றும் டீனோ என்பது அவை இரண்டின் பெயர்கள். முதல் முறை பார்த்ததிலிருந்து நானும் ப்ரூனோவும் டீனோவும் நண்பர்களாகிவிட்டோம். எனக்கும் நாய்களுக்குமான பந்தம் அலாதியானது. சிறுவயதில் நாய்களைப் பார்த்தாலே பயந்து நடுங்குவேன். அதாவது பெரிய நாய்களுக்கு. ஆனால் போகப் போக நாய்களுடன் பழக ஆரம்பித்து மிகுந்த நட்பாகிவிட்டோம். உதாரணத்துக்கு சாரு நிவேதிதாவை முதல் முறை சந்தித்த போது அவருடன் செலவிட்ட நேரத்தைவிட அவரது நாய்களுடன் செலவிட்ட நேரம் தான் அதிகம். அப்போது அவரிடம் இரண்டு நாய்கள் இருந்தன. பப்பு – பெரிய லேப்ரடார் இனம். சொல்லப்போனால் அது ஒரு பெரிய சைஸ் குழந்தை. இரண்டாவது ஸோரோ – பெரிய கிரேடேன் இனம். கிரேடேன் நாய்களின் கடவுள் என்று அழைக்கப்படும் அளவுக்கு பெரிய இனம். இரண்டு நாய்களையும் நான் வருவதால் அறையில் அடைத்து வைத்திருந்தார். நான் கேட்டுக்கொண்டதற்கு இனங்க திறந்துவிட்டார். முதல் சந்திப்பிலே பெரிய அளவில் நட்பாகிவிட்டோம். சாருவே வியந்துவிட்டார். ப்ரூனோவும் டீனோவும் முதல் சந்திப்பில் என்னுடன் விளையாடியதைப் பார்த்து அந்தப் பெண்ணும் அதிசயித்துப் போனார். நான் ப்ரூனோவுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு டீனோ வேகமாக உள்ளே சென்று தன் விளையாட்டு சாமானை கொண்டு வந்து என்னிடம் கொடுத்து விளையாட அழைத்தது. ப்ரூனோவின் வயது சில வருடங்கள் தான். ஆனால் எண்பது பவுண்ட் மேலாக இருக்கும். டீனோவுக்கு இன்னும் ஒரு வயதுக் கூட ஆகவில்லை ஆனால் நாற்பது பவுண்ட் அளவுக்கு இருக்கும். இரண்டும் மேலேறி விளையாடும் போது பயங்கரமாக கனக்கும். இருந்தாலும் அவைகள் கூட இருந்தால் என் ஸ்ட்ரெஸ் லெவல் குறைந்திருக்கும். ப்ரூனோவையும் டீனோவையும் தங்கள் குழந்தைகளாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தளவுக்கு என்றால் இரண்டிற்கும் கழுத்துப் பட்டைகள் தங்கத்தில் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் இரண்டு நாய்களுக்கும் அயிரக்கணக்கான டாலர்கள் செலவிடுகிறார்கள்.
நான் நாய்களுடன் பழகுவதைப் பார்த்த என்னுடைய இரண்டு மூன்று அமெரிக்க நண்பர்கள் எனக்கு நாய்க்குட்டி வாங்கித் தர முயன்றார்கள். ஆனால் மிக எச்சரிக்கையாக வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். செல்லப்பிராணிகள் பேணுவது மிகப்பெரிய பொறுப்பான காரியம். எனக்கு அந்தளவுக்கு பொறுப்புணர்ச்சி இல்லை. ஆகவே செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்களை நண்பர்களாக்கிவிட்டால் போதுமல்லவா? என் நண்பர்கள் நிறையப் பேர் நாய்கள் வைத்திருக்கிறார்கள். ஒருவர் முயல் வளர்க்கிறார். இப்படி செல்லப்பிராணிகள் வைத்திர்ப்பவர்களை நண்பர்களாக்குவது மிக நீண்ட வரலாறுடையது. ஆந்தோன் செக்காவின் ‘நாய்க்கார சீமாட்டி’ கதை அதற்கொரு நல்ல உதாரணம்.
பதினெட்டு மற்றும் பத்தொன்பந்தாம் நூற்றாண்டில் செல்லப்பிராணிகளுடன் தங்கள் ஓவியங்களை வரைந்து கொள்வதில் பெரும் செல்வந்தர்கள் ஆர்வம் கொண்டிருந்தார்கள். அதிலும் செல்வ சீமாட்டிகள் தங்கள் கரங்களில் நாய்களை அணைத்துக் கொண்டு ஓவியங்கள் வரைந்து கொள்வதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார்கள். இளவரசி எக்கடரினா டிமிறிவ்னா தன்னுடைய பக் (pug) நாயுடன் வரைந்துக் கொண்ட ஓவியம் இந்த போக்கிற்கு ஒரு முன்னுதாரணமாக கொள்ளலாம். பெரிய வீட்டு பெண்கள் குறிப்பாக சிறிய வகை நாய்களை பெரிதும் விரும்பியிருக்கிறார்கள். இன்றும் அது வழக்கமாக இருக்கிறது. பெண்கள் சிறிய இன நாய்களை விரும்புவதும் ஆண்கள் பெரிய இன நாய்களை விரும்புவதும் இயல்பாக இருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நிறைய பெண்களுக்கு பக் இன நாயை மிகவும் பிடித்திருந்திருக்கிறது. வோடோஃபோன் விளம்பரத்துக்கு பிறகுதான் நம் நாட்டில் பக் இன நாய்கள் பிரபலமானது. ஒரு சிறிய பன்றிக்குட்டியை போல இருக்கும் பக் இன நாய்கள் மிகவும் பாசமாக இருக்கக் கூடியது. ஆனால் அதன் உள்ளடங்கிய மூக்கின் காரணமாக நிறைய சுவாசப் பிரச்சனைகளுக்கு ஆளாகிறது. எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு பக் இன நாய் இருந்தது. அதன் பெயர் கேண்டி. ஒரு நள்ளிரவில் தூக்கமில்லாமல் மாடியில் நடந்துக் கொண்டிருந்தேன். பக்கத்து தெருவிலிருந்து எப்படியோ தப்பித்து கேண்டி எங்கள் வீட்டுக்கு ஓடி வந்து விட்டது. கேண்டிக்கு எங்கள் வீட்டு நாயை பிடிக்கும் ஆனால் எங்கள் நாய்க்கு யாரையும் பிடிக்காது. வீட்டுக்காரர்களை தவிர யார் அத்துமீறி உள்ளே நுழைந்தாலும் இரக்கமில்லாமல் கடித்துவிடும். மற்ற உயிரினங்களாக இருந்தால் கொலை தான். எத்தனை பூனைகள் எங்கள் வீட்டில் இறந்திருக்கிறது தெரியுமா? ஒன்றுமறியாத கேண்டி எங்கள் நாயுடன் கொஞ்சிக் கொண்டு நின்றது. எங்கள் நாய் ஒரு பெரும் போருக்கு தயாராகிக் கொண்டிருந்தது. இடையில் புகுந்து நான் கேண்டியை மீட்டு அவர்களின் இல்லத்தில் கொண்டு சேர்த்தேன். பக் இன நாய்கள் முன்பெல்லாம் பயங்கர கோபக்கார இனமாக இருந்திருக்கிறது.
அலெக்ஸாண்றே டே போர்னே ப்ரன்ச் புரட்சியின் போது கொலை செய்யப்படுகிறார். அப்போது அவருடைய அழகிய மனைவி சிறையில் அடைக்கப்படுகிறார். அவள் பெயர் ஜோஸஃபின் டே போர்னே. ஜோஸஃபினை சிறையில் சந்திக்க ஆயிரம் கட்டுப்பாடுகள் இருந்தது. உறவினர்கள் அவளை சந்திக்க வரும்போது அவளது செல்ல நாய்க்குட்டியான ஃபார்ட்ஸூனையும் கூட்டி வருவார்கள். ஃபார்ட்ஸூன் ஒரு பக் இன நாய். ஒருவேளை ஃபார்ட்ஸூன் என்ற அதன் பெயரின் முன்னிட்டா என்று தெரியவில்லை, அதிஷ்டம் ஜோஸஃபினை நோக்கி வந்தது. சிறையின் குறுகிய இரும்புக் கம்பிகளுக்கு நடுவில் ஃபார்ட்ஸூன் நுழைந்து தன் எஜமானியிடம் விளையாடிவிட்டு வரும். ஆகவே அதன் கழுத்துப்பட்டையில் ஜோஸஃபினின் நண்பர்கள் ரகசிய செய்திகள் அனுப்புவதும் அதற்கு அவ்வறே ஜோஸஃபின் பதிலெழுதுவதும் தொடர்ந்தது. காலம் கனிந்து வந்த நேரத்தில் நெப்போலியன் போனபார்ட் ஜோஸஃபின் மீது காதல் வயப்பட்டு திருமணம் நடந்தேறியது. ஜோஸஃபின் ப்ரான்ஸ் தேசத்து அரசியானாள். இருவருக்குமான திருமண முதல் இரவில் அந்த அசம்பாவிதம் நடந்தேறியது. ஜோஸஃபினுக்கு அருகில் தான் எப்போதும் ஃபார்ட்ஸூன் தூங்கும். பெருங்காதலுடன் நெப்போலியன் தன் ஆசை மனைவியை நெருங்கினால் அவலட்சனமான சிறிய நாய் அவளருகில் படுத்திருப்பதைக் கண்டு அவனுக்கு ஆத்திரம் வந்தது. ஜோஸஃபின் எளிமையான ஒரு தீர்வை சொன்னாள். சற்று தள்ளிப்படுத்து ஃபார்ட்ஸூனுடன் படுக்கையை பகிர்ந்துக் கொள்ள சொன்னாள். சக்ரவர்த்தி நெப்போலியன் ஒரு நாயுடன் தன் காதல் படுக்கையை பகிர்ந்துக் கொள்வதா? முதல் இரவில் தம்பதியர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். பரிதாபமாக இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தது அந்த நாய். சண்டையின் உச்சியில் நெப்போலியன் நாயை எட்டி உதைத்து கதவுக்கு வெளியே தள்ளினார். தூக்கியெறிந்த அதே வேகத்தில் திரும்பி வந்த நாய் நெப்போலியனின் கெண்டைக்காலை வலுவாக கடித்தது. இப்படியாக நெப்போலியனின் முதல் இரவு மறக்க முடியாத ஒன்றாக மாறிப்போனது. அதன்பிறகு நெப்போலியன் அந்த நாயை வெறுக்க ஆரம்பித்தார். பெரிய அரசனாக இருந்தாலும் மனைவியின் செல்லப்பிராணியை அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அதன்பிறகு ஐரோப்பா முழுவதும் சுற்றி வந்து போர்கள் புரிந்த நெப்போலியன் தன் மனைவி ஜோஸஃபினை எங்கு அழைத்தாலும் அவள் இந்த நாயை பராமரிப்பதைக் காரணம் காட்டி எங்கும் செல்ல மறுத்தாள். இந்த நாயின் காரணமாக அவர்களுக்குள் எப்போதும் சண்டை நிகழ்ந்தவாறே இருந்திருக்கிறது. இவற்றுக்கெல்லாம் நெப்போலியன் ஜோஸஃபினுக்கு எழுதிய கடிதங்களே சாட்சி. இப்படியான ஒரு சூழலில் நெப்போலியனின் மாளிகையில் வேலைப்பார்த்த இன்னொருவரின் ஒரு பெரிய வேட்டை நாய் ஃபார்ட்ஸூனை கடித்து கொன்றுவிட்டது. ஜோஸஃபின் உடைந்து அழுதாள். என்று ஃபார்ட்ஸூன் இறந்ததோ அன்றிலிருந்து ஃபார்ட்ஸூனை நெப்போலியனும் நேசிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன் இறப்பு அவரையும் பெரிதாக பாதித்திருக்கிறது. அதன்பிறகு ஃபார்ட்ஸூனுக்கு இறுதிசடங்குகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
பெரிய ஆளுமைகள் தங்கள் வளர்த்த செல்லப்பிராணிகள் இறக்கும் போது குழந்தைகள் போல உடைந்து அழுதிருக்கிறார்கள். இசை மேதை மொஸார்ட் ஒரு மைனை வளர்த்திருக்கிறார். அது இறந்த போது அதற்காக ஒரு இசைக்கோர்வை எழுதி இசைத்திருக்கிறார். அலெக்ஸாண்டர் போப் கிரேடேன் நாய்கள் பல வளர்த்திருக்கிறார். அவை அனைத்துக்கும் ஒரே பெயரை இடுவது அவருக்கு வாடிக்கையாக இருந்திருக்கிறது. ஏன் அவர் பெரிய நாய் வைத்திருந்தார் என்றால், அவருடைய கவிதைகளில் வரும் எள்ளல் பிடிக்காத சிலர் அவரை தாக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆகவே ஒரு தற்காப்புக்காக பெரிய நாய்களை அவர் உடன் வைத்திருந்திருக்கிறார்.
செல்லப்பிராணிகள் பெரும் பொறுப்புணர்ச்சியை நமக்கு கத்துக்கொடுக்கின்றன. அதே போல இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்ற உண்மையை நாள் தோறும் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றன. பரபரப்பான வாழ்க்கையில் இப்போது அனைவருக்கும் மனச்சோர்வும் மன அழுத்தமும் மண்டிக்கிடக்கிறது. அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிடுவது மட்டும் தான். நாய்களும் பூனைகளும் பறவைகளும் வளர்க்க முடியாவிட்டாலும் ஒரு சிறிய கண்ணாடித் தொட்டியில் சில மீன்கள் வளர்க்கலாம். அமைதியாக அமர்ந்து மீன்கள் நீந்துவதைப் பார்ப்பது தியானத்துக்கு சமம்.
(தொடரும்…)