காலையிலேயே வெயில் சூடாக இருந்தது. வெயில் கூச்சத்துக்கு கண்களுக்கு மறைப்பாக கையை கண் முன்னாடி வைத்து மறைத்துக்கொண்டு சிலர் கிழக்குப் பக்கம் பார்த்தார்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பேருந்து தென்படவில்லை. எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது? பேருந்து இன்னும் வந்தபாடில்லை! தினமும் இது ஒரு ரோதனை! அவஸ்தை.! வெள்ளலூரிலிருந்து நகருக்குச் செல்ல முக்கால் மணி நேரத்திற்கு ஒரு பேருந்துதான்! நிற்கவே முடியாத அளவுக்கு பேருந்தில் கூட்டம் பிதுங்கி வழியும். சில சமயம் பேருந்து வரவே வராது! ஒருவேளை நேரமாகச் சென்றுவிட்டதோ என பள்ளி செல்லும் மாணவ மாணவியரும், வேலைக்குச் செல்பவர்களும் தவித்துக்கொண்டு நிற்பார்கள். தாமதமாக மெல்ல ஊர்ந்து வரும்! மாலையில் வீடு திரும்பும்போதும் இதே தவிப்புதான். சில சமயம் பேருந்து பழுதாகி நின்றுவிட்டது என்று ஒரு பழைய தொலைதூரப் பேருந்தை இந்தப் பக்கம் போட்டிருப்பார்கள். அதில் நின்று போக கூட முடியாது! உள்ளுக்குள் நிற்கவே முடியாத படிக்கு அகலம் குறைவாக அவ்வளவு இடைஞ்சலாக இருக்கும்
நகர வளர்ச்சி, ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் நகருக்குள் பல இடங்களில் காலம்காலமாக கூழோ கஞ்சியோ குடித்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை இப்படி நகருக்கு வெளியே வெளியேற்றி கொண்டு வந்து அடுக்குமாடி குடியிருப்புகளில் வீசி எறிந்து அவர்களின் வாழ்க்கையை அலைக்கழித்து பெருமைப்படுவது அரசாங்கத்தின் உயரிய திட்டங்களில் ஒன்றாகிவிட்டது! வெள்ளலூரில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு அதற்காகவே உருவாக்கப்பட்டிருந்தது. எ பிளாக், பி பிளாக் என்று பிரிக்கப்பட்டு நீளவாக்கில் பெட்டி பெட்டியாக தனிமையைக் குலைக்கும் விதமாக நெருக்கமான வீடுகள். எண்களை சரியாக ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். எல்லாம் ஒரேமாதிரியாக இருக்கும் எ பிளாக், பி பிளாக், சி பிளாக் கட்டிடங்களையும் ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும்.
வந்த புதிதில் எல்லோரு தங்கள் வீடுகளை கண்டுபிடிப்பதில் தடுமாறினார்கள்! நான்கு மாடிகளை ஏறிய பிறகுதான் ‘அட! இது நம்ம வீடு இல்லையே!’ என்று உறைக்கும். ஒரு கட்டிடத்தில் இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசி வரைக்கும் இரண்டு பக்கமும் இருபது இருபது என நாற்பது வீடுகள். இது ஒரு பிளாக். இப்படி வரிசையாக பல பிளாக்குகள். தெரிந்தவர்கள், உறவினர்கள் என யாராவது பார்க்க வந்தால் அவர்களுக்கு வீடு நெம்பர் அடையாளம், வரும் வழி சொல்லி அவர்கள் வீட்டைக் கண்டுபிடித்து வருவதற்குள் தாவு தீர்ந்துவிடும்! ஒவ்வொரு முறையும் இதே அவஸ்தைதான். இதனால் விசேசங்களுக்கு அழைப்பு கொடுக்க நிறையப்பேர் வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பு பக்கம் போவதையே தவிர்த்து விடுகிறார்கள்.
‘உங்க வீட்டு கல்யாணத்துக்கு கூப்பிடவே இல்ல ?’ என்று கேட்டால், ‘வந்தேன் வீடு கண்டுபிடிக்கவே முடியல. திரும்பிப் போயிட்டோம்.’ என்று தப்பித்துக்கொள்வார்கள்.! .
*****
நகரை ஒட்டியிருந்த அன்புநகர் குடியிருப்புப் பகுதிக்கு வந்த நின்ற ஜீப்பை கண்டதும், டீ கடையில் உட்கார்ந்திருந்த இரண்டு மூன்று பேர் ஜீப் அருகே வந்தனர். சில வருடங்களுக்கு முன்பு இதே போல ஒருநாள் ஜீப்பில் வந்த அதிகாரிகள் வீடுகளையெல்லாம் காலி பண்ணச்சொல்லி சென்றிருந்தனர். அதன் பிறகு எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் அதை எல்லோரும் மறந்துவிட்ட நிலையில் மறுபடி இப்போது வந்திருக்கிறார்கள்! !
“இங்கிருக்கும் வீடுகளையெல்லாம் காலி பண்ணச்சொல்லி நோட்டீஸ் குடுத்து ஒரு வருஷம் ஆச்சு..! இன்னும் வீடுகளை காலி பண்ணாம இருக்கீங்க..?” ஜீப்பில் உட்கார்ந்தபடியே அதிகாரி பேசினார்.
‘நோட்டீஸ் குடுத்து ஒரு வருஷம் ஆச்சா..!’ ஒருவரை ஒருவர் பார்த்தபடி எல்லோருமே திருதிருவென முழித்தனர்.
“வீட்டக் காலி பண்ணச்சொல்லி நமக்கு எப்பண்ணா நோட்டீஸ் குடுத்தாங்க..?” பக்கத்தில் நின்றிருந்த அய்யாசாமியிடம் மெல்ல கேட்டார் அசன்.
“குடுத்துருந்தா நமக்குத் தெரியாம இருக்குமா..நம்மள காலி பண்ண வைக்க வேண்டி பொய் சொல்றாங்க அசன்..” என்றார் அய்யாசாமி. .
ஜீப்பைச் சுற்றி கூட்டம் நிற்பதைப் பார்த்த, அங்கு சிறிய டீக்கடை வைத்திருக்கும் மீரான் பிள்ளை, கடையிலிருந்து வெளிப்பட்டு, கூட்டத்தின் பக்கம் வந்து, “எந்து பிரஷ்ன.?” என சன்னமான குரலில் கேட்டார்.
விவரத்தை அசன் சொல்ல, “ஓ! யான் செறுப்பக்காரான இருக்கும்போல் தொட்டே இவிட வாப்பாண்ட சாயாக்கட உண்டல்லோ.!” என்று இது நாங்கள் வாழும் மண்; தங்களின் இடம்; இதை விட்டுக்கொடுக்க முடியாது என்பதை நிறுவினார்.
“என்னங்க இது அநியாயமா இருக்குது! நாம இங்க எத்தன வருசமா குடியிருக்கோம்..? திடீர்னு வந்து இப்பிடி வீடுங்கள காலி பண்ணச் சொன்னா நாம எங்கங்க போறது.. நம்ம இங்க செய்ற வேல வெட்டியெல்லாம் என்னாகுறது..?” கூட்டத்தில் நின்றிருந்த ஒருவர் இன்னொருவரிடம் ஆவேசத்துடன் புலம்பினார்.
அங்கு மளிகைக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சி, ஜீப்பைச் சுற்றி கூட்டம் நிற்பதை ரொம்ப நேரமாகவே பார்த்துக் கொண்டிருந்தார். கடைப்பக்கம் யாராவது வந்தால் என்ன எது என்று கேட்கலாம் என்று வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டேயிருந்தார். எல்லோருமே ஜீப் பக்கமே போயிக்கொண்டிருக்க, ஏதோ பெரிய பிரச்சனை போல என்று எண்ணிக்கொண்டு கடையிலிருந்து வெளிப்பட்டு ஜீப் நின்றிருந்த இடத்துக்கு வந்து, “என்ன பிரச்சன.?” என்று பொதுவாகக் கேட்டார்.
அசன் விவரத்தைச் சொல்ல, “திடீர்னு வந்து வீடுகளை காலி பண்ணச் சொன்னா எப்பிடீங்க…? அம்பது வருசமா இங்க குடியிருக்கோம்ங்க.!” சத்தமாக சொல்லிக்கொண்டே கூட்டத்தை விலக்கியபடி, ஜீப் அருகே வந்து, ”என்ன சார்.! .எதுக்கு நாங்க எங்க வீடுங்கள காலி பண்ணனும்?” என்றார் கோபத்துடன்.
அதிகாரி அண்ணாச்சியை மேலும் கீழுமாக கோபத்துடன் பார்த்தார்.
“இவ்வளவு நேரமாக நா அதத்தானே சொல்லிட்டிருக்கேன்.! இனி, புதுசா உங்களுக்கு வேற சொல்லணுமாக்கும் ?” அதிகாரியின் வார்த்தையில் கோபம் தெறித்தது.
‘‘நா இப்பத்தானே சார் வர்றேன். என்ன விவரம்னு தெரியமாத்தானே கேக்குறேன். நீங்க வந்து வீட்டையெல்லாம் காலி பண்ணிருங்கனா நாங்க உடனே காலி பண்ணிருணுமா..? என்ன எதுணு எங்களுக்கு விவரம் தெரிய வேண்டாமாக்கும்.? காலம் காலமா குடியிருக்குற வீடுங்கள காலி பண்ணிட்டு நாங்க எங்க போறதாம்..? கோவப்படமா விவரம் சொல்லுங்க சார் “
அதிகாரி அவரை முறைத்தப்டியே இருக்க, அவரின் அருகில் உட்கார்ந்திருந்தவர், ”ஸ்மார்ட் சிட்டி திட்டத்துல நம்ம சிட்டியும் இருக்குனு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். சிட்டி விரிவாக்கம் செய்யுறதும் அழகு படுத்தறதும் அதுல ஒண்ணு. அதனால சிட்டிய ஒட்டி இருக்கிற வீடுங்களையெல்லாம் எடுக்கச் சொல்லி ஏற்கனவே கவர்மெண்ட் ஆர்டர் போட்டிருக்கு. அதுதான் இந்த எடத்துல உள்ள வீடுகளை எடுக்கச் சொல்றோம்” என்றார்.
“அம்பது வருசமா நாங்க குடியிருக்குற வீடுங்கள இடிச்சுதான் சிட்டிய ஸ்மார்ட் சிட்டியாக்கணுங்களா ?’
“இதையெல்லாம் நீங்க எங்க கிட்ட கேக்கக் கூடாது. இது அரசாங்க உத்தரவு. நாங்க கவர்ன்மெண்ட் சர்வண்ட். அரசாங்கம் சொல்றத நாங்க செய்யிறோம். அதுக்குத்தான் எங்களுக்கு சம்பளம் தர்றாங்க.”
“சரிங்க சார்.! நீங்கபாட்டுக்கு திட்டம் அது இதுணு வீடுங்கள இடிச்சுட்டு போயிருவீங்க! நாங்கள்லாம் தெருவுல நிக்கிறதா..?”
“உங்களுக்கெல்லாம் வேற எடத்துல அரசாங்கம் வீடு குடுக்கும்..பயப்படாதீங்க !”
அதிகாரவர்க்கத்தைக்கு கட்டுப்பட்டும், அது இடும் உத்தரவுகளுக்கு பயந்துமே மக்கள் வாழப் பழகிவிட்டார்கள். அதனால் மக்களின் எதிர்ப்பு குணம் முனை மழுங்கிப் போய்விட்டது! என்ன அநீதி நடந்தாலும் எதற்குமே வாயைத் திறக்க மாட்டார்கள்! ரத்தத்தில் பயம் ஊறிக் கிடக்கிறது. நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிப் போய்விடும் குணம் எல்லோருக்குள்ளும் நீக்கமற நிறைந்து கிடக்கிறது! எவ்வளவு திரளாக மக்கள் கூட்டம் இருந்தாலும் கட்டுப்படுத்த ஒரே ஒரு போலீஸ் போதும்! அவ்வளவு பயம். எதையும் எதிர்க்கும் துணிச்சல் இல்லாமல் போய்விட்டது.
அண்ணாச்சி மட்டுமே அதிகாரிகளிடம் கொஞ்சம் தைரியமாக பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு துணையாக ஆதரவாக ஒருவர் கூட வாயைத் திறக்கவில்லை.! எல்லோரும் வெறுமனே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தங்களின் வீடுகளும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படப் போவதை நினைத்து சோகத்துடன் அவர்களுக்குள்ளாகவே புலம்பிக் கொண்டிருந்தார்களே ஒழிய, வந்திருந்த அதிகாரிகளிடம் எதிர்த்துப் பேச யாருக்கும் தைரியம் வரவில்லை!
“கட்சிக்காரங்களைப் பாத்து ஏதாச்சும் செய்யச் சொல்லணும்..” சலூன் கடை மோகன் சொல்லிவிட்டு சோகத்துடன் பெருமூச்சை வெளிப்படுத்தியவாறு, ”இனி எங்க போயி கட போடுறது ? எம்பொழப்பு அவ்வளவுதானா ! ஸ்மார்ட் சிட்டி திட்டம்னு நம்மையல்லாம் இங்கிருந்து காலி பண்ணி துரத்தி விடப்பாக்குறாங்க!” என்று கண் கலங்கினார். . .
பத்து வருடங்களுக்கும் மேலாக அன்புநகரில் சலூன் கடை நடத்தி வருகிறார் மோகன்..இதில் வரும் வருமானத்தில் வாடகை, மின் கட்டணம் போக, மீதியில் இரண்டு ஊழியர்களுக்கு சம்பளம் மற்ற சலூன் கடைக்குத் தேவையான பொருட்களையும் வாங்கியாகணும். மீதியை வைத்து பேலன்ஸ் செய்து அப்படியே குடும்பத்தை நடத்தி வருகிறார். திடுமென இங்கிருந்து கடை பறிபோகும் அதிர்ச்சியான செய்தியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
அன்று முழுக்க அன்புநகர் குடியிருப்பு பகுதியே அல்லோலகல்லோல பட்டுக்கொண்டிருந்தது. எல்லோரது முகங்களிலும் சோகம் அப்பியிருந்தது. மாற்றுவழி என அவர்களுக்கு எந்த வழியும் புலப்படவில்லை. யாரைப் பார்த்தால் காரியம் நடக்கும்..இங்கிருக்கும் வீடுகள் அகற்றப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்று கூடிக் கூடி ஆலோசித்தார்கள்.
‘’ஆரப்பாத்தாலும் ஒண்ணும் வேலைக்காவாதப்பா..! டிவி நியூஸ்ல எல்லாம் காட்டுறாங்களே பாக்கத்தானே செய்றீங்க? கெவர்மண்டு திட்டம் போட்டு முடிவெடுத்துருச்சுனா அத யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. நிறுத்த வுமாட்டாங்க.. புல்டோசரோட வந்து வீடுங்களயெல்லாம் இடிச்சு தள்ளிட்டுப் போயிட்டே இரிப்பாங்க.! என்ன கத்தி என்ன கூப்பாடு போட்டாலும் யாரோட காதுலயும் உழுவாது“ பெரியவர் அஹமது ராவுத்தர் நடப்பைச் சொன்னார்.
“அண்ணன் சொல்றதும் சரிதா.இதுக்கு போக்கிடம்தா என்ன?”
“நமக்கு வேற எங்கயாச்சும் வூடு குடுப்பாங்களா?”
“மைல்கல்லிலோ, பிள்ளையார்புரத்திலோ குடுப்பாங்க !”
“அவ்வளவு தூரத்திலயா..?”
“அங்க போயி வயித்துப்பாட்டுக்கு என்ன பண்றதாம்?’
“நம்மளோட வேல பொழப்பெல்லாம் இங்கிருக்குது…! இத விட்டுட்டு அவ்ளவ் தூரத்துல போயி வூட்டக் குடுத்தாங்கனா..எப்பிடி பொழப்பப் பாக்குறதாம்..? தெனமும் அவ்வளவு தூரத்துக்குப் போயிட்டு வர முடியுமாக்கும்?”
ஆளாளுக்கு தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். எல்லோரது முகங்களிலும் சோகம் அப்பிக்கிடந்தது. .
*****
ஆத்துப்பாலம் பகுதியில் சாலையோர குடியிருப்புவாசிகள் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை ! திடுமென அதிகாரிகள் வந்து ‘வீடுகளையெல்லாம் காலி பண்ணுயாகணும்’ என்று சொல்லுவார்கள் என இங்கு குடியிருப்பவர்கள் யாராவது நினைத்திருப்பார்களா என்ன? பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலை ரோட்டோரத்தில் வீடுகள் கட்டிக் கொண்டு மக்கள் காலம் காலமாகவே குடியிருந்து வருகிறார்கள். இதுவரை இப்படியான எந்தப் பிரச்சனையும் வந்ததே இல்லை.
அந்த குடியிருப்புகளுக்குப் பின்புறம் சுற்றிலும் வேலி போடப்பட்ட விஸ்தாரமாக மைதானம் போல பரந்து கிடந்த இடத்தில் முழுக்க வளர்ந்திருந்த பல வகையான செடிகளின் மீது இரவு படுத்துறங்கிய பனி, சூரிய வெளிச்சம் பட்டு அப்போதுதான் விலகியிருந்தது. அதன் அடையாளமாக செடிகளின் மீது முத்து முத்தாக இன்னும் மிச்சம் இருந்த பனித் துளிகள் சொட்டு சொட்டாக வழிந்து கொண்டிருந்தது.
அதற்குள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வந்து இறங்கி விட்டார்கள்! அங்கு குடியிருப்பவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகள். எல்லோருமே நேரமாக வேலைக்குச் சென்றுவிட்டபடியால், ஒரு சில பெண்களைத் தவிர அப்போது அங்கு வேறு யாரும் இல்லை.
வீட்டின் அருகே ஜீப் வந்து நின்றதையும் அதிலிருந்து மூன்று பேர் இறங்கி குடிசை வீடுகளைப் பார்த்தவாறு நின்றதையும் கண்டு, வீட்டின் முன்புறம் சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த பிலுமியும், சரசும், ரமலத்தும் தங்கள் பேச்சை நிறுத்திவிட்டு, அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
“யாரு அவுங்கணு தெரியல.! இங்கயே பாத்துட்டிருக்காங்களே?” என்றாள் பிலுமி சரசுவைப் பார்த்தபடி. சுள்ளென்று வெயில் காய்ச்ச ஆரம்பித்திருந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த சிலர் ஜீப்பை திரும்பித் திரும்பி பார்த்தபடியே சென்றார்கள். ஜீப் வந்து நின்றலே போலீஸ் வண்டியோ என மக்களுக்கு ஒருவித பயம் அல்லது என்ன ஏது என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் வந்துவிடும் ! .
“இங்க வாங்கம்மா..” ஜீப்பின் அருகே நின்றவாறே இவர்களைப் பார்த்து ஒருவர் அதிகாரத் தோரணையில் அழைத்தார்.
“நம்மளத்தான் கூப்பிடுறாங்க..எதுக்குனு தெரியலயே! வாங்கடீ..” என்றவாறு அவர்களை நோக்கி நடந்தாள் பிலுமி.
“இதெல்லாம் உங்க வீடுகளா…?” என்று கேட்டுவிட்டு, ”ஒரு வாரத்துக்குள்ள இங்கிருக்கிற வீட்டையெல்லாம் நீங்க காலி பண்ணியாகணும். இல்லேன்னா நாங்க வந்து வீடுகள இடிக்க வேண்டியிருக்கும்.” மிரட்டும் தொனியில் அதிகாரி போல இருந்தவரிடமிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தது..
“என்ன சார் சொல்றீங்க..!” அதிர்ச்சியுடன் கேட்டாள் பிலுமி.
“நாங்க இங்க ஏத்தினி வருசமா குடியிருக்கோம். நாங்க எதுக்குங்க சார் இங்கிருந்து காலி பண்ணோனும்.?” கொஞ்சம் தயங்கியவாறு சரசும் கேட்டாள்.
“ஏம்மா! இந்த எடம் உங்களுக்கு என்ன பட்டா போட்டா குடுத்திருக்கு..? வருசக்கணக்கா குடியிருந்தா எடம் உங்களுக்குச் சொந்தமாயிருமா..? நல்லா பேசுறீங்க! இங்க வீடு கட்டுனதே மொதல்ல தப்பு. இதுல சட்டம் பேசுறீங்க!” அதிகாரியின் பதிலில் கோபம் இருந்ததை உணர்ந்த சரசு எதுவும் பேசாமல் அவர்களை பார்த்தபடியே பணிவுடன் நின்றாள். ரமலத் பிலுமியின் பின் ஒட்டிக்கொண்டு முக்காடு துணியை தலையில் நன்கு இழுத்து விட்டுக்கொண்டாள்.
பிலுமி சரசுவைப் பார்த்து ‘மறுபடி எதுவும் பேசாதே’ என்று ஜாடை காட்டினாள்.
“ஆம்பிளைங்க ஒருத்தரும் இல்லையா?” அதிகாரியின் பக்கத்தில் நின்றிருந்தவர் கேட்டார்.
“யாருமில்லேங்க. எல்லாருமே வேலய்க்குப் போயிருக்காங்க..” பிலுமி சன்னமான குரலில் சொன்னாள்.
“சரி…இங்கு குடியிருக்கிறவங்க எல்லார்கிட்டயும் சொல்லீருங்க. ஒரு வாரத்துக்குள்ள இங்கிருக்கிற வீடுகளையெல்லாம் காலி பண்ணிடணும். இது ஹைவேஸ் எடம். ரோட்ட அகலப்படுத்த ஆர்டர் வந்திருக்கு ! அடுத்த வாரம் அதிகாரிங்க எல்லாம் பாக்க வர்றாங்க. அதுக்குள்ள காலி பண்ணிடுங்க..” சொல்லிக்கொண்டே அந்த அதிகாரி ஜீப்பில் ஏறி அமர்ந்தார். உடன் வந்தவர் பின் புறம் ஏற ஜீப் நகர்ந்தது.
ஜீப் செல்வதையே பார்த்துக்கொண்டு அதிர்ந்து போய் நின்றார்கள் பெண்கள்!
அப்போதுதான் எங்கோ சென்றுவிட்டு வந்துகொண்டிருந்த சுல்தானும், மூர்த்தியும், பிலுமியும், சரசும் ஜீப்பில் வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்ததையும், ஜீப் கிளம்பி போவதையும் கண்டு இருவரும் நடையை எட்டிப் போட்டு வேகமாக வந்தார்கள்..
“யாருக்கா அவுங்க.. அவுங்ககிட்ட நீங்க பேசிட்டிருந்தீங்க ! என்ன சொல்லிட்டுப் போறாங்க..?” வந்ததும் வராததுமாக மூச்சு வாங்கியபடி கேட்டான் மூர்த்தி.
“நாமெல்லாம் இங்கிருந்து வீடுங்கள காலி பண்ணிட்டுப் போவணுமாம்.!” சரசு வருத்ததுடன் சொல்ல, ”நாம எதுக்கு இங்கருந்து காலி பண்ணனோணுமாம்..? என்ன புள்ள சொல்றே?” மூர்த்தி சந்தேகத்துடன் கேட்டபடி சரசுவின் முகத்தையே பார்த்தான் . .
“அட ! ஆமா. பிலுமியக்கா நீயே சொல்லு..”
“ரோட்ட அகலப்படுத்துறாங்களாம்..அதனால நாம வீடுங்கள காலி பண்ணனுமாம். இது ஐவேஸ் எடமாம்.”
“எத்தினி வருசமா இங்க குடியிரிக்கோம்..என்ன பிலுமி சொல்றே நீயி.! இது பொறம்போக்கு எடம். இப்பிடித்தா எதயாச்சும் சொல்லி நம்மள இங்கிரிந்து காலி பண்ண வைப்பாங்க!” என்றார் பிலுமியை விட ஐந்து வயது மூத்தவரான சுல்தான்..
“அண்ணா! அதும் ஒரு வாரத்துக்குள்ள காலி பண்ணனுமாம் !”
“என்னக்கா சொல்ற ! ஒரு வாரத்துக்குள்ளார காலி பண்ணிட்டு நாம எங்க போறதாம்..?” மூர்த்தி கோபத்துடன் கேட்டான்.
எல்லோருக்குள்ளும் இந்தக் கேள்விதான் இப்போது இருந்தது. அதைவிட கவலையும் சங்கடமும் அவர்களை ஆட்கொண்டது. இத்தனை காலமாக வாழ்ந்த இந்த இடத்தை விட்டு துரத்தியடிக்கிறார்களே..! வாழ்ந்த மண்ணை விட்டு எங்கு போவது ? இந்த வேதனையை யாரிடம் சொல்லி அழுவது?
அந்த சாலையோரத்தில் வாசிப்பவர்கள் எல்லோரும் ஒன்று கூடி இரவு ரொம்ப நேரம் கூட்டமாக நின்று கவலை பொங்க பேசியபடியே நின்றிருந்தார்கள். ஒரு வாரத்துக்குள் வீடுகளை காலி பண்ணிவிட்டு எங்கு போவது? பணத்திற்கு என்ன செய்வது? அவர்களுக்கு எதுவும் தோன்றவில்லை! யாரைப் பார்த்தால் தங்களுக்கு உதவி கிடைக்கும் என்றும் எதுவும் தெரியாமல், அந்தப்பகுதியின் கட்சித் தலைவரைப் பார்த்து முறையிடலாம் என முடிவு செய்தார்கள்.
*****
அன்புநகர் பகுதி மக்கள் சில நாட்களாக எங்கெங்கோ கால் கடுக்க அலைந்து யாரையெல்லாமோ பார்த்து மனு கொடுத்தார்கள். மாவட்ட ஆட்சித் தலைவரைப் பார்த்தார்கள். எதுவும் வேலைக்கு ஆகவில்லை!
சில நாட்களுக்குப் பிறகு அதிகாரிகள் மீண்டும் வந்தார்கள். ஆளுங் கட்சிக்காரர்களும் உடன் இருந்தனர். வீடு வீடாகச் சென்று, “ஏழை எளிய மக்கள் மீது கருணை கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் உங்களுக்கெல்லாம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை இலவசமாகத் தருகிறது” என்று குடியிருப்பு இருக்கும் இடம் சொல்லி, அரசின் கருணை பொங்கும் வார்த்தைகளையும் இலவச இணைப்பாகச் சொல்லி ஆதார் கார்டு அடையாளம் எல்லாம் சரி பார்த்து, டோக்கன் கொடுத்துச் சென்றார்கள்.
‘‘வெள்ளலூரா..?” மனசொடிந்து போனார்கள்! எல்லோரது முகங்களிலும் வேதனை படர்ந்தது! பிளையார்புரத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு வெள்ளலூரில் வீடு என்றதும் வருத்தம் இன்னும் அதிகமானது. நகரிலிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது அந்த அடுக்குமாடி இலவச குடியிருப்பு! காலம் காலமாக குடியிருக்கும் வீடுகளை இடித்துக் காலி பண்ண வைப்பது மகா கொடுமை என்றால், எங்கோ தொலை தூரத்தில் வீடுகளைக் கொடுத்து அங்கே குடி பெயருங்கள் போங்கள் என்று இங்கிருந்து மக்களை தூக்கியடிப்பது அதைவிட மகா கொடுமை – வேதனை.
நகர வளர்ச்சி, நகரை ஸ்மார்ட் சிட்டி ஆக்குகிறோம்- அழகு படுத்துகிறோம் நான்கு சக்கர சாலை வருகிறது, மேம்பாலம் கட்டுகிறோம் என்ற பெயரில் சாலை ஓரங்களிலும், நீர்நிலை ஓரங்களிலும் புறம்போக்கு இடங்களிலும் காலங்காலமாக வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்களின் வசிப்பிடங்களை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு, அந்த மண்ணின் மைந்தர்களை சுமார் இருபது முப்பது கிலோமீட்டருக்கு அப்பால் நகருக்கு வெளியே இலவச வீடு என்று எங்காவது வீடு கொடுக்கிறது அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் அவர்களை அள்ளித் திணிக்கிறது அரசாங்கம்!
சொந்த இடத்தில் மக்களை வாழ விடாமல் விரட்டியடித்துவிட்டு நகரை ஸ்மார்ட் சிட்டி ஆக்குவது யாருக்காக? இதனால் யாருக்கு என்ன பயன்? மக்கள் எரிமலையாக குமுறிக்கொண்டிருந்தார்கள்.
ஒரு சுபயோக சுப தினத்தின் காலையிலேயே புல்டோசர், லாரி, போலீஸ் வாகனங்கள் என புடை சூழ அதிகாரிகள் அன்பு நகரில் வந்திறங்கினார்கள். போலீஸ் பாதுகாப்புடன் கிடுகிடுவென தனது ராட்சச கையை உயரத் தூக்கியவாறு புல்டோசர் இயங்க ஆரம்பித்தது. அன்புநகர் அன்பே இல்லாத நகராகி கொண்டிருந்தது.!
செங்கல்களும், ஓடுகளும் கான்கிரீட் பாளங்களும், மரச்சட்டங்களும், ரீப்பர் கட்டைகளும், ஜன்னல்களும், கதவுகளும் சடசடவென பெயர்ந்து விழுந்தன. அந்த மக்கள் தங்களின் உடமைகளையும், பொருட்களையும் எடுக்கக் கூட அவகாசம் தராமல் அதிகாரிகள் எல்லாம் இரும்பு இதயங்கள் கொண்ட இயந்திரங்களாகியிருந்தார்கள் !
காலம் காலமாக உழைத்துக் கட்டிய அவர்களின் கனவு இல்லங்கள் இடிந்து தரைமட்டமாகிக் கொண்டிருந்தன. பெண்களின், குழந்தைகளின் கதறல்களும், கூக்குரல்களும் அங்கு எடுபடவில்லை! அரசு அதிகாரிகளின் கண்களின் முன்னே ஸ்மார்ட் சிட்டி கதகளி ஆடிக்கொண்டிருந்தது.
பேச்சுவார்த்தை எதுவும் பயனளிக்கவில்லை! கட்சிக்காரர்கள் சூழ்ந்து அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருக்க புல்டோசரின் இயந்திரக்கை வீடுகளை இடித்து தகர்த்துக் கொண்டிருந்தது!
“டோக்கன் குடுக்கும் போதே ஒரு வாரம் டைம் சொல்லிட்டுத்தானே போனோம்.?“
‘’அதுக்காக இப்பிடி திடீர்னு வந்தா இடிப்பீங்க நாங்க சாமான்களையெல்லாம் எடுக்க வேண்டாமா?”
“இங்கிருக்குற இத்தன பேரும் அவுங்கவுங்க சாமான்களையல்லாம் ஒரு வாரத்துக்குள்ளாற எப்பிடீங்க வெள்ளளூருக்கு கொண்டு போறது? டெம்போ, லாரியெல்லாம் கெடைக்க வேண்டாமாக்கும்? வாடக குடுக்கணுமல்ல.? அதுக்கு பணம் வேணுமில்ல?” பெண்கள் குமுறினார்கள்.
“வேற பக்கமெல்லாம் அறிவிப்பே இல்லாம அதிரடியா வந்து வீடுகளை இடித்து தரை மட்டம் ஆக்கும் காலத்துல, நம்ம அரசாங்கம் அறிவிப்பும் குடுத்து, முன்னாடியே டோக்கனும் குடுத்து இலவசமா அடுக்கு மாடி வீடும் குடுக்குது..இத நெனச்சு சந்தோஷப்படுங்க மக்களே!” என்று ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் கூறிக்கொண்டிருந்தார். ..
அன்பு நகரில் வீடுகள் இடித்து தகர்க்கப்படுவதைப் போலவே, நகரின் வெளிப்பகுதியான ஆத்துப்பாலம் மெயின் ரோட்டில் உள்ள அந்த குடிசை லைன் வீடுகளையும் புல்டோசர் தகர்த்துக்கொண்டிருந்தது.
குடியிருப்புவாசிகள் அழுது புலம்பியவாறு சாமான்களை எடுத்து சாலையின் ஓரமாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். நிறைய பொருட்கள் ரோட்டோரத்தில் சிதறிக் கிடந்தன. புல்டோசர் இளைப்பாறிக் கொண்டிருந்த நேரத்தில் இடிந்து கிடந்த தங்கள் வீடுகளுக்குள் ஓடிப்போய் மக்கள் எதை எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள். .பசியால் குழந்தைகள் கதறிக்கொண்டிருக்க, அதிகாரிகள் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தார்கள்.
காலியாவது குடிசைகள் மட்டுமல்ல, இந்த ஏழை மக்களின் வாழ்க்கையும்தான் என்பதை ஆட்சியாளர்களும் அதிகாரவர்க்கமும் உணருவதில்லை! மண்ணின் மைந்தர்களை வாழும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தி நகரை விட்டு வெளியேற்றுவது மட்டும்தான் நகர வளர்ச்சிக்கான திட்டங்களின் ஒரே நோக்கம்! மண்ணின் மைந்தர்களை வாழும் இடங்களிலிருந்து அப்புறப்படுத்தி விட்டு நகரை ஸ்மார்ட் சிட்டி ஆக்குவது யாருக்காக?
இப்படி மக்களை வெகு தூரத்திற்கு இடப்பெயர்ச்சி செய்யப்படும் போது அந்த மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை பாதிக்கப்படுவதைப் பற்றி, குழந்தைகளின் கல்வி பாதிப்பது பற்றி, அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் மக்கள் தங்கள் வேலைகளை இழப்பது பற்றி, அவர்கள் தினமும் அவதிப்படுவது பற்றியெல்லாம் இங்கு யாருக்கும் அக்கறையும் இல்லை கவலையும் இல்லை !
வீடுகளும் குடிசைகளும் தகர்க்கப்பட்ட அன்பு நகர் குடியிருப்பில் எந்த வேலையும் துவங்கப்படாமல் அந்த இடமே மண்மேடு குவியலாக இன்னும் அப்படியே கிடந்தது !
அடுக்குமாடி குடியிருப்பில் பெட்டிக்கடை கூட போட முடியாத நிலையில் மார்கெட்டுக்குள் ஒரு மளிகைக் கடைக்கு வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் அண்ணாச்சி, அன்பு நகரைக் கடந்து போகும் போதெல்லாம் தன் கடையும் வீடும் இன்னும் மண் குவியலாக அப்படியே கிடப்பதைப் பார்த்து வயிறு எரிந்து போனார்! இன்னும் கொஞ்ச காலத்திற்கு இந்த இடம் மண் குவியலகத்தான் கிடக்கப் போகிறது!
அன்பு நகரில் சொந்தமாக சலூன் கடை வைத்திருந்த மோகனும் வேறு ஒரு சலூன் கடைக்கு வேலைக்குப் போக ஆரம்பித்தார். இங்கே கடை போட முன்பணம் கொடுக்க பணம் புரட்ட வழியில்லை. கிடைக்கும் கூலியில் தினமும் வெள்ளளூரிலிருந்து நகருக்குள் வந்து செல்ல பேருந்து கட்டணமே எக்கச்சக்கமாகி விட, பெரும்பாடுபட்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நெருக்கடி அவரை வாட்ட ஆரம்பித்தது.
இங்கே டீக்கடை போட முடியாத சூழ்நிலையில் தெருத்தெருவாக அலைந்து சைக்கிளில் டீ விற்க ஆரம்பித்திருந்தார் சொந்தமாக டீக்கடை வைத்திருந்த மீரான் பிள்ளை. ஒருநாளுக்கு இருபத்தஞ்சு டீ விற்பதே பெரும்பாடாக இருந்தது.
நகரிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு இங்கு குடி அமர்த்தப்பட்ட பெண்களுக்குத்தான் பிரச்சனை இன்னும் அதிகமாகிப்போனது! உடல்நிலை சரியில்லாத உறவினர்களைப் போய் ஒரு எட்டு பார்த்து விட்டு வர முடிவதில்லை. தங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் கூட பஸ்சுல ஏறுனமா பெரியாஸ்பத்திரிக்குப் போனமானு இருந்தது போயி, இப்ப அதுக்கும் போயி வர ஒருநாள் பொழப்பாகுது. அவ்வளவு கூட்டத்துல பஸ் ஏறி போகவா முடியுது! வீட்டாம்பிளைங்களையும் எதுக்கும் எதிர் பார்க்கமுடியாத நிலயாயிப் போச்சே! அவுங்க வேல பொழப்புக்குப் போயிட்டு வரவே நைட்டாயிருது! அண்ணாச்சியின் மனைவி விசனத்துடன் அவளுக்குள்ளாகவே புலம்பிக் கொண்டிருந்தாள்.
*****