இணைய இதழ்இணைய இதழ் 91சிறுகதைகள்

பிறைகள் – இத்ரீஸ் யாக்கூப்

சிறுகதை | வாசகசாலை

ரெல்லாம் தலைப்பிறை ஜோரு அதாவது ரமலான் மாதத்திற்கு முந்திய நாள் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டிருந்தன. நோன்பை வரவேற்கும் பொருட்டில் அந்த நாளை தலைப்பெருநாள் என்றும் அழைப்பதுண்டு. அதையொட்டி பெரும்பாலான வீடுகளில் சோறும் ஆட்டுக்கறி இறைச்சி ஆனமும் (குழம்பும்) சமைக்கப்பட்டன. இருக்கப்பட்டவர்கள் புது உடைகள் கூட அணிந்திருந்தனர். மற்றவர்கள் இருந்த உடைகளில் சிறந்ததை எடுத்து உடுத்தியிருந்தனர். 

பெரியவர்களின் மகிழ்ச்சியைக் காட்டிலும் ஆயிரம் மடங்கை சிறியவர்கள் தங்களது கள்ளம் கபடமில்லா சிரிப்புகளில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். கன்றுகளைப் போல் அவர்களின் வயதுக்குரிய சிக்கலற்ற சந்தோசங்களை துள்ளித் துள்ளி சுற்றிச் சுற்றி வட்டமடித்துத் திரிந்து கொண்டிருந்த அவர்களது அந்த இளம் கால்களின் எம்பல்களிலும் ஓட்டங்களிலும் கண்டுணர முடிந்தது. 

மெஹர் தனது பால்யகால நினைவுகளிலும் பெற்ற பிள்ளைகளைப் பற்றிய கவலைகளோடும் எதிர்ப்படுவதை வேடிக்கை பார்த்தபடி சென்று கொண்டிருந்தபோது தெருவெங்கும் கறி ஆனத்தின் மணம் ஆங்காங்கே மிதந்து வந்தது. 

அப்படி அத்து மீறி வாசனைகள் நாசியைத் துளைக்கும்போதெல்லாம் தனது தூக்கு வாளியில் உள்ள சோறும், அதன் மேலே சிறிய கிண்ணத்தில் ததும்பத் ததும்ப அழுத்தி வைக்கப்பட்டிருந்த கறியானமும் அவள் கண்முன்னே வந்து வந்து போயின. 

கூடவே, ஜமீலாம்மாள் ‘ராத்தா’ (அக்கா) இறைச்சி எதுவும் வச்சிருப்பாகளா? இல்ல.. (உருளைக்) கிழங்கு மட்டும் போட்டுருப்பாகளா?’ என்று திறந்துப் பார்ப்பது போல் கைகளை அவ்வப்போதுக் கொண்டு சென்று யாரும் பார்த்துவிடப் போகிறார்கள் என்று மறுபடியும் நடக்க ஆரம்பித்தாள். 

மெஹர் அந்த ஊரின் முக்கியதஸ்தர்களில் ஒருவரான சீனி மரைக்காயர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கிறாள். பழைய கஞ்சியை பிள்ளைகளுக்கு காலை மற்றும் மத்தியானத்திற்கு கைவிட்டு அளந்து அளந்து எடுத்து மறு பானையில் மாற்றி வைத்துவிட்டு அவதி அவதியாய் தான் குடித்த கால் வயிறு பழையக் கஞ்சியோடு மரைக்காயர் வீட்டிற்கு எப்போதும் போலச் சென்றவள்தான். எல்லாம் குடுத்துவிட்டு தன்னுடைய வீட்டிற்குத் திரும்பியபோது மாலை மணி நாலாகியிருந்தது! 

தலைப்பிறை என்பதால் மதியம் இவளையும் அங்கேயே சாப்பிடத்தான் சொன்னார்கள். ஆனால், அதெல்லாம் ஒரு சம்பிரதாயத்திற்கே என்று இவளுக்குத் தெரியும். இவளும் அப்படி அங்கே சாப்பிடவும் விரும்ப மாட்டாள். ஒரு வேளை சாப்பிட நேர்ந்தாலும் குருவிக்கு வைப்பது போல வைப்பார்கள். மறுசோறென்று தட்டை நீட்டுவது இரு தரப்பிற்கும் சங்கடத்தையே ஏற்படுத்தும். ஆதலால் பெரும்பாலும் அங்கே சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுவாள். 

சாதாரண நாளிலேயே அங்கே வேலைகளுக்கு குறைவிருக்காது. தலைப்பெருநாள் வேறு, கேட்கவா வேண்டும்? மற்ற நாட்களை விட இது போன்ற விசேச நாட்களில் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்வாள். தனக்கில்லையென்றாலும் பிள்ளைகளுக்காகவது ஒரு வாய் நல்ல சோறும் உடுப்புகளும் கிடைக்கணுமே என்ற எல்லா தாய்களுக்குமுரிய நியாயமான ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் அவளை மெஷின் போல இயங்க வைக்கும். 

அதெல்லாம் பொறுப்பற்ற தனது கணவனாலோ, உடன் பிறந்தவர்களாலோ மற்றவர்களுக்கு மாதிரி தனக்கும் தனது குழந்தைகளுக்கும் கிடைக்காத போது அவளுக்கும் வேறு போக்கிடம்தான் ஏது?

தூக்கு வாளியைத் திறந்தபோது ஓரளவு பெரிய கிண்ணத்தில்தான் குழம்பு வைத்திருந்தார்கள். கிண்ணத்தை வெளியே எடுத்தவுடன் சோற்று நடுவேயிருந்த குழிந்திருந்த பள்ளம் கிணறு போல காட்சியளித்தது. பிள்ளைகள் கறிச்சோறு உண்ண முண்டியடித்துக் கொண்டிருந்தனர். இரண்டு பெரிய கறித்துண்டுகளில் ஒன்றிலிருந்து பாதியைப் பிய்த்து, தனியாக பிரித்தள்ளப்பட்ட குழம்பு சிந்திருந்த சோற்றோடுப் பிரட்டி பிள்ளைகளுக்கும் தீத்திவிட்டு தானும் புளித்த ஏப்பம் விட்டு மரத்துப் பசியை ஆற்றிக்கொண்டாள்.

மீதமுள்ள கரித்துண்டொடு எண்ணெய் மிதந்த குழம்பில் மேலும் தண்ணீர் விட்டு புதிய குழம்பு போல் கொதிக்க விட்டாள். சுவை பார்த்து தேவையான உப்பு சேர்த்தாள். ‘இருந்தாலும் ரெண்டு கிழங்குத் துண்டையும் சேர்த்துப் போட்டிருக்கலாம் ராத்தா’ என்று சீனி மரைக்காயரின் மனைவி ஜமீலாம்மாள் மீது சற்று செல்ல அதிருப்தி வந்தாலும், கால் கிலோ அளவிலிருந்த கறி அவளை அந்நேரம் திருப்தி கொள்ளவே வைத்தது. 

வழக்கம் போல சீட்டாடிவிட்டு பொழுதொட்டு வந்த அவளுடைய தான்தோன்றிக் கணவன் முஜிபு வந்த வேகத்தில் இரவுக்காக பிள்ளைகளுக்கு வைத்திருந்த உணவில் முக்கால்வாசியை கபளீகரம் செய்தான்.

புளி மிளகாய்.. அதாவது தாளிக்காத பச்சை ரசம் பிசைந்து, மீண்டும் உலை வைத்து ரமலான் முதல் பிறை இரவைக் கடத்தி முதல் நோன்பையும் நோற்றாள். நோன்பு வந்துவிட்டதே.. பிள்ளைகள் இரண்டு இருக்கின்றனவே என்று எந்தக் கவலையும் அக்கறையுமில்லாது சுகமாக உறங்கிக் கொண்டிருந்த தனது கணவனை நொந்தபடி வெறுமையோடு பார்த்தாள். 

இந்தப் பெருநாளை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற யோசனைகள் அவளை அழுத்தத் தொடங்கின. மரைக்காயர் வீட்டில் பெருநாள் செலவிற்கென ஆயிரமோ ஐநூறோ கொடுக்காமலா இருக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புகள் கொஞ்சம் சமாதானப்படுத்தினாலும் நல்ல நாள் பெரிய நாளுக்கு கூட உடன் பிறந்தவளின் நிலையைப் பற்றி நினைத்துப் பார்க்காத தனது அண்ணன் தம்பியை எண்ணி வருத்தங்களும் கோபங்களும் கொண்டாள். பொறுப்பானவனுக்கு கட்டி வைத்திருந்தால் தனக்கு ஏன் இந்த நிலைமை என்று எப்போதும் போல் எல்லோரையும் சாடிக்கொண்டு அடுத்த நாள் பிழைப்பிற்குத் தயாரானாள். 

வேலைகளினூடே முதல் நோன்பிற்குரிய அதிகச் சோர்வு அவளை வாட்டிக்கொண்டிருந்தாலும் மரைக்காயர் வீட்டிலிருந்து கிடைக்கப் போகும் பெருநாள் காசிற்காக எதையும் பொருட்படுத்திக் கொள்ளாமல் அவர்களின் விரல் சுட்டல்களுக்கெல்லாம் பம்பரமாய் இதோ இதோ என்று 

சுற்றிக் கொண்டிருந்தாள். 

பக்கத்திலிருக்கும் பள்ளி வாசலிருந்து இஞ்சிப் பூண்டு வாசனை காற்றினில் படர்ந்து வந்தது. நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கொட்டகைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். பள்ளிவாசல் மரைக்காயர் வீட்டிற்கு மிகவும் பக்கம் என்பதால் அதையொட்டி என்னென்ன நடக்கிறது என்பதை போகும் வரும் நேரங்களில் மெஹர் கவனிப்பதுண்டு.

நோன்புக் கஞ்சி என்றால் எல்லாப் பிள்ளைகளுக்கும் போல் அவளுடைய பிள்ளைகளான அசனுக்கும் ஆமினாவிற்கும் கூட ரொம்ப இஷ்டம்! இந்த முப்பது நாளும் சாயங்காலம் மணி மூன்றாகிவிட்டால் போதும் தூக்கு வாளியோடு பிள்ளைகளோடு பிள்ளைகளாய் மான்போல் துள்ளிக் குதித்துக் கொண்டு ஆறு வயது அசனும் கிளம்பிவிடுவான். அஸர் தொழுகைக்கு முன்பே தூக்கு வாளிகளின் இந்த வரிசை தெரு முனை வரை கூட நீண்டு விடும். 

கஞ்சியை வாங்கிக்கொண்டு அந்த அனல் மண்டலத்திலிருந்து வெளியே வரும் வரை தள்ளுமுள்ளுவிற்கும் பிள்ளைகளிடேயே சின்னச் சின்னச் சண்டைச் சச்சரவிற்கும் பஞ்சமிருக்காது. ஒரு சில நேரங்களில் பெரிய வீட்டுப் பிள்ளைகள் என்றால் விசேச கவனிப்போடு அங்கிருக்கும் பெரியவர்களே முதலில் கொண்டு போய் நிறுத்திவிடுவார்கள் அல்லது அவர்களே பிடித்தும் கூடக் கொண்டு வந்து கொடுத்துவிடுவார்கள். அந்த விசுவாசத்திற்கான காரணங்களை அவர்களே வலிந்து எதையாவது சொல்லிக் கொள்வார்கள். 

இல்லாத வீட்டு பிள்ளைகள் சில நேரம் வரிசையிலிருந்து மற்றப் பிள்ளைகளால் தள்ளி ஒதுக்கப்படுவார்கள் அல்லது கடைசியில் வா என்று துரத்தப்படுவார்கள். தைரியமான பிள்ளைகள் அதையெல்லாம் இலகுவாக எதிர்கொண்டு தத்தம் இடங்களை எப்படியேனும் தக்க வைத்துக் கொள்ளும். ஏழ்மையைக் காட்டி யாரையும் யாரும் ஒடுக்க நினைத்தாலும் தைரியமிருந்தால் ஒடுக்கும் கைகளை ஒடுக்கி விடலாம் போல. 

முட்டி மோதி, இதையெல்லாம் தாண்டி முன்னே சென்றால் கூட ஏந்தப்பட்ட பாத்திரத்தின் பின்னணிக்கேற்ப கஞ்சியின் அளவுகள் மாறுபடும். அன்று அசன் நீட்டிய தூக்கு வாளியில் ஒரு லிட்டர் அளவுள்ள ஒரே ஒரு கப் மட்டும் ஊற்றப்பட்டது. 

இன்னொரு கப் கிடைக்குமா என்று ஏக்கமாய் பார்த்தவனுக்கு ஏமாற்றம் மட்டுமே வாளியின் வெற்றிடத்தை நிரப்பியது. கஞ்சி ஊற்றிக் கொண்டிருந்த ஜப்பாரால் அவன் போ போ என்று விரட்டப்பட்டான். மற்ற பிள்ளைகள் தள்ளிய வேகத்தில் அந்த இடத்திலேயே விழுவது போல ஒரு கணம் தட்டுத் தடுமாறி ஒரு வழியாக வெளியே வந்து சேர்ந்தான்.

வெளியில் வந்ததும், குளுமையானக் காற்று அவன் முகத்தைத் தீண்ட ‘ம்..!’வென முகத்தைக் காட்டி அனுபவித்தான். முதல் நாள் கஞ்சி அவன் வீட்டிற்குச் சென்று குடிக்கும் பொறுமையைத் தரவில்லை. பள்ளிவாசலருகேயிருந்த மகிழம் மரத்தடியில் அமர்ந்து தூக்குவாளியைத் திறந்தான். ஆவி பக்கென அவன் விரல்களில் அடித்தது. ‘ஃபு ஃபு’ என்று ஊதி அதை அடக்கப் பார்த்தான் நிறைய நேரம் பிடித்தது. இறுதியாக சூடு முழுவதும் தணிந்திருக்காத கஞ்சியின் நடுவே தனது ஆட்காட்டி விரலை விட்டுச் சூப்பினான். 

தேங்காய்ப்பால் மற்றும் நெய் மணமணக்க நோன்பாளிகள் மட்டுமல்ல ஏழைகளுக்கான அந்த அமிர்தம் அவனையும் மெய்மறக்க வைத்தது. அப்போதுதான் எங்கிருந்தோ சண்டை போட்டுக்கொண்டு ஓடிவந்தவர்களில் ஒருவன் தடுமாறி பொத்தென இவன் மேல் விழ, பாதி கஞ்சி மண்ணிற்கும், மீதி கஞ்சி அவனுடைய கைகாலுக்கும், சட்டை மற்றும் டவுசருக்கும் இரையானது. 

“ம்மா..!” அலறினாலும் அங்கே அவனைக் கண்டு கொள்ள ஆளில்லை. இவன் மீது விழுந்தவன் இவனுடைய அலறலைப் பார்த்துவிட்டு தப்பித்தால் போதுமென்று எழுந்த வேகத்தில் விழுந்தடித்து ஓடிவிட்டான்.

எல்லா கஞ்சியும் கொட்டி வீணாகிப்போன ஏமாற்றத்தோடு கஞ்சி மற்றும் மண் ஒட்டிய உடம்போடு பாவமாய் தன்னுடைய உம்மாவைத் தேடிப் போனான். 

“ம்மா.. ம்மா..!” அசனுடைய சத்தத்தைக் கேட்டுவிட்டு சீனி மரைக்காயரோட மனைவி ஜமீலாம்மாள், ‘வாசலில் உன் மகன் வந்து நிற்கிறான் பார்’ என்று மெஹருக்கு குரல் கொடுத்தார். என்றாலும் அவனை பக்கவாட்டு வாசல் வழியாக கொல்லைப் பக்கமாக உள்ளே அழைத்து வந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. 

அவளுக்கும் அது புரிந்தது. வேகம் வேகமாக கஞ்சி பட்ட இடங்களை சுத்தப்படுத்திவிட்டாள். எதேச்சையாக அங்கிருந்த பிள்ளைகள் அவனைப் பார்த்துச் சிரித்தன. தனது மகள் வீட்டுப் பிள்ளைகளை உள்ளே செல்லும்படி ஜமீலாம்மாள் சத்தம் போட்டார். 

அவன் கஞ்சியெல்லாம் கொட்டிவிட்டதைச் சொல்லி இப்போது தனக்கு நோன்புக் கஞ்சி வேண்டுமென அடம் பிடித்தான். 

அவனை அங்கிருந்துக் கூட்டிக்கொண்டு பள்ளிவாசல் பக்கம் நடந்தாள். பொதுவாக பெண்களோ வளர்ந்த பெண் பிள்ளைகளோ அந்த பக்கமெல்லாம் போவதில்லை. அங்குமிங்கும் ஆம்பிளைகள் நின்றுக் கொண்டிருந்தாலும் வேலைக்காரியாக இன்னொரு வீட்டில் கிடப்பவர்களுக்கெல்லாம் பொதுவாக மற்ற பெண்கள் கடைபிடிக்கும் வெட்க விதிகள் சில இடங்களில், சில நேரங்களில் தேவையற்றுப் போகின்றன. 

மற்ற பெண்களைப் போல இதை வைத்து அவளை யாரும் விமர்சிக்கப் போவதில்லை என்றாலும் அவளுக்கு கூச்சமாக இருந்தது. நீண்ட நேரம் தெரு முனையிலேயே குறிப்பிட்ட ஆண்கள் போகும்வரை காத்திருந்தாள். அவனை மறுபடியும் போய் கேள் என்று சொன்னாலும், அவர்கள் தர மாட்டார்கள் என அவன் தயங்கினான். ஆனாலும் அவனுக்கு எப்படியாவது நோன்புக் கஞ்சி வேண்டும்!

ஒரு வழியாக ஆம்பிளைகள் எல்லாம் கலைந்த பிறகு சென்றாள். ஆனால், அதற்குள் கஞ்சி தீர்ந்துவிட்டிருந்தது. 

“அண்ணே..! புள்ள ஏமாந்துருவாண்ணே. ஏதும் தனியா எடுத்து வச்சிருந்தியன்னா கொஞ்சோ ஊத்தி குடுங்களேன்..!” ஜப்பாரிடம் கொஞ்சம் உரிமையோடு கேட்டாள். அது அவனுக்குப் பிடிக்கவில்லை போலும், எங்கேயோ பார்த்துக்கொண்டு, “சட்டிதான் இருக்கு வழிச்சுத் தரட்டுமா?” என்று கொஞ்சம் கடுகடுப்போடே கேட்டான். 

இதுபோன்று மரியாதைக்குறைவாக நடத்துவதெல்லாம் அவளுக்குப் பிடிக்காது என்பதால், அங்கிருந்து வேகமாய் நகர்ந்து வர முயலும்போது, ஜமாஅத் தலைவர் அங்கே எதிர்பட்டுவிட்டார். அவளைப் பார்த்து என்ன ஏது என்று விசாரிக்க, விவரத்தைச் சொன்னாள். 

“ஜப்பாரு, அதான் நம்ம வீட்டுக்கு கஞ்சி எடுத்து வச்சிருப்பியேப்பா, அதிலேர்ந்து குடுத்து உடுப்பா!” என்று அவனுக்கு ஒரு அதட்டலைப் போட்டார். 

அவன் ஒன்றும் பேசாமல் வெளிப்பக்கம் தனியாக எடுத்து வைத்திருந்த அண்டாவில் பாதியிருக்கும் ஒரு பெரிய வாளியைக் கொண்டு வந்தான். மெஹர் கையிலிருந்த தூக்கு வாளியை வாங்கி ஊற்ற ஆரம்பித்தான். அது நிறையவேயில்லை. ஆனால், அவள் போதும் போதும் என்று பாதி வாளியோடு நிறுத்தச் சொன்னாள். போதாதுதான் ஆனால், அதற்கு மேல் வாங்க அவளுக்கும் கூச்சமாக இருந்தது. அவருக்கு ஸலாம் சொல்லிவிட்டு மகனைக் கூட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். 

அவனை வாசலிலேயே நிற்கச் சொல்லிவிட்டு தான் வேலை பார்க்கும் மரைக்காயர் வீட்டிற்குள் சென்றாள். 

“ராத்தா, அவனை நான் வூடு வரைக்கும் போய் உட்டுட்டு வந்திர்றேன்” என்றாள். 

ஜமீலாம்மாள் ஒன்றும் பதில் பேசவில்லை. அவளது மகனை உள்ளே கூட்டி வந்து சுத்தம் செய்துவிட்டது அவருக்கு கோபத்தை வரவழைத்திருந்ததாக அவள் கருதிக் கொண்டாள். இருக்கலாம்தான். 

“போய்ட்டு வரவா ராத்தா?” 

‘ம்ம்’ என்பது போல் அவள் தலையாட்டினாள். 

வெளியில் வந்தபோது எதிர்வீடுதான் ஜமாஅத் தலைவர் வீடு என்பதால் அந்த நோன்புக் கஞ்சி வாளியோடு அவர்கள் வீட்டு வாசலில் ஜப்பார் நின்று கொண்டிருந்தான். இவளைக் கண்டதும் கவனிக்காதது போல் தலையைக் குனிந்து கொண்டான். இவளும் எதுவும் பேசாமல் மகனைக் கூட்டிக்கொண்டு தனது வீட்டிற்கு விறுவிறுவென நடக்கலானாள். 

அவள் மீண்டும் பெருநாள் செலவுகளைப் பற்றிச் சிந்திக்கலானாள்.

அடுத்த நாள் மரைக்காயர் வீட்டிற்கு வந்தபோது, மாட்டுக்கு வைக்கும் கழனித் தொட்டி அருகே நேற்று தலைவர் வீட்டிற்கு போன நோன்புக் கஞ்சி முக்கால் வாளி அளவிற்கு அப்படியே இருந்தது. முந்தைய நாள் நடந்த சம்பவத்திலிருந்து மீளாதவள் போல, “இது என்ன ராத்தா நோன்புக் கஞ்சி மாதிரி இருக்கு?!” என்று ஜமீலாம்மாளிடம் தெரியாதது போல் விசாரித்தாள். 

“அது ஏதோ மிச்சப்பட்டு போச்சாம் புள்ள.. கொஞ்சோ மிந்திதான் அவ்வோ வூட்ல வேலப் பாக்குற சபுரா கொண்டு வந்து வச்சிட்டுப் போறா.. நம்ம வூட்ல மாதிரி அவ்வோ வூட்ல என்ன மாடு கன்னா இருக்கு?”  

‘மெஹர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் தனது வேலைகளைப் பார்க்கலானாள். 

அடுத்த நாள் வரிசையில் நின்றுகொண்டிருந்த தன்னைக் கூப்பிட்டு கஞ்சி ஊற்றிக் கொடுத்ததாக அசன் அவளிடம் சொன்னபோது அவளுக்கு ஜப்பார் மீதிருந்த வருத்தம் முழுவதுமாக விலகவில்லை என்றாலும், அவன் அப்படிச் செய்ததும் பெரிய விசயமாக அவளுக்குப் படவில்லை. ஏதோ ஒரு சலிப்பு, விரக்தி அவளது மனதில். 

ஆனால், எதிர் வீட்டில் வேலை பார்த்தாலும், வழிகளில் அவ்வப்போது அவளை ஆங்காங்கே எதிர்கொள்ள நேரிட்டாலும் எப்போதும் அமைதியாகவே கடந்துச் செல்லும் ஜமாஅத் தலைவர் நோன்புக் கஞ்சி சம்பவத்திற்கு பிறகு காணும் நேரங்களில் நலம் விசாரித்து வருவது அவளுக்கு மிகவும் சந்தோசமளித்தது. தெரிந்தவரே என்றாலும் பொதுவாக பேசாத ஒருவர், புன்னகையோடு கடந்து செல்லும் ஒருவர் திடீரென்று பேசத் துவங்க இது போல் ஒரு சந்தர்ப்பம் வாய்ப்பு அமைத்துக் கொடுக்கும் போல! 

“மெஹரே.. மெஹரே..!” ஜமீலாம்மாள் கூப்பிட ஹால் பக்கம் சென்றாள் மெஹர். சீனி மரைக்காயரும் உடன் இருந்தார். அப்போது நோன்பு பிறை பத்தைக் கடந்திருந்ததால் ‘பெருநாள் காசு’ கொடுக்கதான் கூப்பிட்டிருக்கிறார்கள் என்று விளங்கிக்கொண்டு, முகத்தில் கூடுதல் களையைக் காட்டினாள். 

“இந்தாமா..!” என்று ஒரு பணச்சுருளை நீட்டினார். முக்காடை சரி செய்தவளாய் மிகவும் பவ்யத்தோடு பொத்தி வாங்கினாள். ஏதோ காசு கூடுதலாக இருப்பது போல உணர்ந்தாள். அவளை உள்வாங்கிக் கொண்டவராய், “எவ்வளவு என்று பார்!” என்றபோது ஜமீலாம்மாளும் கனிவைக் காட்டினார். 

பிரித்துப் பார்த்தபோது நாலாயிரமிருந்தது! கிடைக்கபோவது எப்போதும் போல ஐநூறோ ஆயிரமோ என்றிருந்தவளுக்கு இம்முறை நாலாயிரம் கிடைத்தது. எல்லையில்லாத மகிழ்ச்சி கொண்டாள். அவளைப் பொறுத்தவரை அது பெருந்தொகைதான். 

கண்ணீர் மல்க நன்றி கூறுவது போல நின்றாள்! 

“இது யாரோட பணம்னு கேக்க மாட்டியா?” என்றார் பெரியவர். இப்போது ஜமீலாம்மாள் இரட்டிப்பாகப் புன்னகைத்தார். இவள் அவர்களைப் புரியாமல் பார்த்தாள். 

“உனக்காக தம்பி அனுப்பியிருக்கான்ம்மா!” என்றார் பெருமிதமாய்! தம்பி என்றால் அவர்களுடைய மகன் ரியாஸ். சில மாதங்களுக்கு முன்புதான் வெளிநாட்டுக்கு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்துச் சென்றான். ஆனால், அவன் இவளுக்காக பணமெல்லாம் அனுப்புவான் என்று கனவில் கூட நினைத்ததில்லை! 

உள்ளம் நெகிழ்ந்து போய் அப்படியே என்ன சொல்வதெனத் தெரியாமல் திகைத்து நின்றாள். 

“என்னம்மா இப்படி தெகச்சி நிக்கிற? நீயும் நம்ம வூட்ல ஒரு ஆளு போலதான? சொந்த தம்பியாட்டம் நெனச்சு சந்தோசமா அவனுக்காக துஆ செய்!” 

“இன்ஷா அல்லாஹ்! இன்ஷா அல்லாஹ்! கண்டிப்பாகச் செய்கிறேன்” என்று ஆமோதித்தாள். 

அவர்கள் சார்பிலிருந்து எப்போதும் கொடுக்கும் ஆயிரத்தைச் சேர்த்துக் கொடுக்க அதெல்லாம் அவள் மூளைக்கே எட்டாமல் ரியாஸின் பாசத்தை நினைத்து உருகிக்கொண்டிருந்தாள். 

எந்நிலையிலும் உதவாத தன்னுடைய சகோதர்களைக் கூட மன்னித்துவிட்டது போல மனசு இலகுவானாள். 

மனசெல்லாம் நிறைந்து, உணர்ச்சிப்பிழம்பாய் அவள் வெளியே வந்தபோது அவளுக்காகவே காத்திருந்தது போல எதிர் வீட்டுப் பெரியவரும் அங்கே நின்றுகொண்டிருந்தார்.  

********

idris.ghani@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button