இணைய இதழ்இணைய இதழ் 92தொடர்கள்

நுனிப்புல் – சுரேஷ் பிரதீப் – பகுதி 02

தொடர் | வாசகசாலை

அவலங்களைப் பேசுதல் – ‘மூஞ்சிரப்பட்டன்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து

மூஞ்சிரப்பட்டன் தொகுப்பினை அதன் வெளியீட்டு விழாவின் வழியாகவே அறிந்து கொண்டேன். பொதுவாக நம் சூழலில் முதல் நூலுக்கு வெளியீட்டு விழா நடப்பது  அரிது. சூழலில் புழங்கும் சக இலக்கியவாதிகளின் மதிப்பினைப் பெற்ற கதைகளை முதல் நூல் வருவதற்கு முன்பே எழுதிய படைப்பாளிகளின் முதல் நூலுக்கே வெளியீட்டு விழா சாத்தியம். மற்றொரு வகையிலும் ஒரு சாத்தியம் இருக்கிறது! ஆனால், அப்படி வெளியான நூல்கள் வெளியான உடனேயே மறக்கப்பட்டுவிடும்!

மூஞ்சிரப்பட்டன் அப்படியான தொகுப்பாகத் தெரியவில்லை. கதைகளின் தரத்தின் காரணமாகவே தொகுப்பு வெளியீட்டு விழா கண்டிருக்கிறது. நூலினைப் பற்றி என். ஶ்ரீராம், காளிப்ரஸாத் உள்ளிட்ட சில எழுத்தாளர்கள் பேசி இருக்கின்றனர். அவர்கள் என்ன பேசி இருக்கின்றனர் என்று இனிதான் கேட்க வேண்டும்! தொகுப்பு பற்றிய என் பார்வையை முன்வைப்பதுதானே இக்கட்டுரையின் நோக்கம்.

எழுத்தாளர் அய்யப்பன் மகாராஜன்

அய்யப்பன் மகாராஜனின் பலம் என அவருடைய விவரிப்புத் திறனைச் சொல்லலாம். ‘கண்ணாடி வீட்டின் திருடன்’ என்ற ஒரு கதை நீங்கலாக (இக்கதையும் ஒரு வகையில் பால்யம் பற்றியே பேசுகிறது) மற்ற கதைகள் அனைத்தும் கதை சொல்லியின் பால்யத்தை ஒட்டி நிகழ்கிறவையாக உள்ளன. ‘செம்மாங்குளத்தின் ஒன்பது வாத்துகள்’, ‘மூஞ்சிரப்பட்டன்’ என சிறுவர்களே முதன்மைப் பாத்திரங்களாக இடம்பெறும் கதைகள் என்பதால் இக்கதைகள் பால்யத்தில் நிகழ்கின்றன என்று சொல்லவில்லை. ‘தொட்டா’, ‘சுடலை’ போன்ற கதைகளின் காலமும் இன்றிலிருந்து சில பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே புனையப்பட்டுள்ளது. ஏறத்தாழ எல்லாக் கதைகளும் “ஒரே ஊரில்” நடப்பதாலும் அவற்றின் காலமும் ஏறத்தாழ ஒன்றுதான் என்பதாலும் கதை சொல்லியின் விவரிப்பில் ஒரு நாவலுக்குரிய துல்லியம் சேர்ந்து கொள்கிறது. 

முதல் சிறுகதைத் தொகுப்பு விதவிதமான கதைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றொரு எதிர்பார்ப்பு நம் சூழலில் நிலவுகிறது. ஒரு சூப்பர் மார்க்கெட் ஷாப்பிங் கார்ட் போல கதைத் தொகுப்பில் விதவிதமான பொருட்களைக் கொண்ட கதைகள் கிடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானதாகத்தான் தெரிகிறது. ஆனால், என்னுடைய அளவீடு கதைகளில் செயற்கைத்தனம் எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பதுதான். செயற்கைத்தனம் என்றதும் “மண் சார்ந்த கதைகள்” என்ற பதம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல! வேற்றுலகவாசிகளைப் பற்றி இயல்பாகவும் தன்னைப் பற்றியே செயற்கையாகவும் எழுத முடியும். ஆகவே, ஒரு கதையின் இயல்பினைத் தீர்மானிப்பது அக்கதையின் அக்கறை எங்கு மையமிடுகிறது என்ற காரணிதான். அவ்வகையில் அய்யப்பன் மகாராஜனின் அக்கறை செயல்படும் தளத்தை முதல் கதையிலிருந்தே நம்மால் தெளிவாகக் காண முடிகிறது. 

‘விசேஷம்’ கதையில் நடக்க இயலாத தங்கையையும் சித்த சுவாதீனம் இல்லாத அம்மாவையும் ஒருசேரப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு கண்ணனிடம் வந்து சேர்கிறது. நடக்கவியலாத தங்கை பூப்பெய்துவதுடன் கதை தொடங்குகிறது. அழுத்தமான சொற்களில் கண்ணனின் சிக்கல்களை ஆசிரியர் விவரித்துச் செல்கிறார். அவனுடைய இளகிய மனதும் அதனூடாகத் தெரிய வருகிறது. கதை முடிவில் நாம் முற்றிலும் எதிர்பார்க்காத கோணத்தில் கண்ணனின் தங்கை வெளிப்படுகிறாள். நல்ல சிறுகதைக்குரிய அனைத்து அம்சங்களும் கொண்ட கதை. தொகுப்பின் முதல் கதையாக இது அமைந்தது அய்யப்பன் மகாராஜன் மீதான எதிர்பார்ப்பினைக் கூட்டுகிறது.  தொகுப்பில் இடம்பெற்றுள்ள எல்லாக் கதைகளிலும் இந்த அவலமே தீவிரமாகவும் நுண்மையாகவும் பேசப்படுகிறது. ஈரம் வற்றிப்போன சமூகத்தில் இருந்து பலகீனர்கள் எதிர்கொள்ளும் துயரத்தைப் பேசும் கதைகள் என்ற சட்டகத்துக்குள் இக்கதைகள் அனைத்தையும் பொருத்திவிட முடியும். ‘தொட்டா’ கதையில் வரும் கிழவி யாரையாவது தொட்டுவிட்டால் அவர்களுக்கு தீங்கு நிகழும் என்று ஊரே நம்புகிறது. கிளி வளர்க்க விரும்பி இயலாமல் போய் வாத்து வளர்க்கும் சிறுவனை ஊரே ‘வாத்து மடையன்’ என்கிறது. சிநேகிதியான சிறுமி கொடுத்த கண்ணாடிக் குடுவையை திருடிவிட்டான் என்று பழிசுமத்தப்பட்டு வாழ்நாள் முழுவதும் அப்பழியைச் சுமந்து திரிகிறான் பாலன். மகளைப் புதைத்த இடத்திலேயே வாழும் பெண் முதிர்ந்த வயதில் அவமதிக்கப்படுகிறாள். இவ்வாறாக சக மனிதர்களிடமிருந்து சற்றே நொய்ந்த மனம் கொண்டவர்கள் எதிர்கொள்ள நேரும் நெருக்கடிகளையே அய்யப்பன் மகாராஜன் கதையாக்குகிறார். பெரும்பாலான கதைகளில் சொல்லப்படாத ஒன்று வாசக ஊகத்துக்கு விடப்படுகிறது. ‘தொட்டா’ கதையில் அக்கிழவியை ஏன் யாரும் தொடுவதில்லை என்பதற்கு காரணமில்லை. அதோடு யாராலும் தொடப்படாமலேயே வாழும் உயிர் எவ்வளவு வலியை அனுபவிக்கும்! இறப்பில் கூட கட்டையால் அடிவாங்கித்தான் சாகிறாள் தொட்டா. 

கையெட்டும் தூரம் கதையில் மீனா தன்னுடைய தம்பி காதலிப்பதை எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அவள் ஏன் சித்தம் பிறழ்கிறாள் என்பதற்கு காரணங்கள் எதுவுமில்லை. ‘தூர முகங்களின் புறப்பாடு’ என்ற மாயத்தன்மை கொண்ட கதைகூட மனிதர்களின் உள்ளார்ந்த வறட்சியையே பேசுகிறது.

“இந்த வாழ்க்கை ஏன் இவ்வாறு இருக்கிறது. நான் கற்பனை செய்தது போல இல்லை?” என்ற உண்மையான ஆதங்கத்தில் இருந்தே அய்யப்பன் மகாராஜனின் கதைகள் கிளைக்கின்றன. அவருடைய அக்கறை போலியானதாகவோ மிகையானதாகவோ தெரியவில்லை. கிராமத்தினை நேர்த்தியுடன் சித்தரிக்கும் மொழி வசப்பட்டிருந்தும்கூட அர்த்தமற்ற வசவசப்புகள் ஏதுமின்றி கூர்மையாக கதைக்கு தேவையானவற்றை மட்டுமே எழுதுகிறார்.

இவையனைத்தும் இத்தொகுப்பின் சாதகமான அம்சங்கள். பாதகங்கள் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? அய்யப்பன் மகாராஜன் தன்னுடைய பாத்திரங்களின் அவலச்சூழலை மிகச் சரியாகவும் கூர்மையுடனும் எழுதி விடுவார் என்பதற்கு எல்லாக் கதைகளும் சாட்சியம் அளிக்கின்றன. நல்லது. ஆனால், அதைக் கடந்து என்று யோசிக்கும் புள்ளியில் இக்கதைகளின் பலகீனங்களை நாம் உணர்கிறோம். ‘விசேஷம்’, ‘கையெட்டும் தூரம்’ என்ற இரண்டு கதைகளும் சொல்ல வரும் விஷயத்தின் தீவிரம் காரணமாக பலவீனமடைவதிலிருந்து தப்பி விடுகின்றன. மற்ற கதைகளில் அத்தீவிரம் இல்லாமல் போகிறது. முதுமையில் கைவிடப்படல், வலி நிறைந்த பால்யம் என்ற இரண்டு கூறுகளையே எல்லாக் கதைகளும் சுற்றி வருகின்றன. ஒரு புள்ளியில் இந்த அவலங்களில் இருந்து ‘மேலதிகமான’ ஒன்றை எதிர்பார்க்கத் தொடங்குகிறோம். இதுவொரு முக்கியமான புள்ளி. இத்தகைய எதிர்பார்ப்பை அய்யப்பன் மகாராஜனின் எழுத்து தூண்டுகிறது என்பது முக்கியம். இங்கு மேலதிகம் என்று நான் சொல்வது அவலங்களுக்கான தீர்வுகளை அல்ல. அவலங்களை முன்னிறுத்தும் பிரக்ஞையின் மேலதிகமான முதிர்ச்சியை. கண்ணுற்று நினைவில் தங்கிய துயரங்களை எழுத்தாக்குவது ஒரு நிலை என்றால் அத்துயரங்களை தன்னுடைய உணர்வுத்தளைகளில் இருந்து விலக்கிக் கொள்வது அடுத்த நிலை. அய்யப்பன் மகாராஜன் தன்னுடைய அடுத்தடுத்த தொகுப்புகளில் அந்நிலை நோக்கி நகர்வார் என நம்புகிறேன்.

எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்

(தொடரும்…)

sureshpradheep@gmail.com – 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button