இணைய இதழ்கதைக்களம்

தாய் மண் – ஸரோஜாசகாதேவன் 

கதைக்களம் | வாசகசாலை

லகின் கூரையென்றும் பனித்தூவிகளின் நாடு என்றும் அழைக்கப்படும் திபெத்தின் ஒரு பகுதி. ,முகட்டில் பனி படர்ந்த மலை. சரிவில் உயர்ந்து நின்ற மரங்களும் செடி கொடிகளும் பசுமை போர்த்தியிருந்தது.  சில்லென பனி அருவிகள் ஆங்காங்கே சலசலத்துக் கொண்டு மலைச் சரிவில் இறங்கிக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு நாளும் தன் மகன் நியாம்டென்சினை அழைத்துக்கொண்டு காட்டின் ரம்மியமான சூழலை ரசித்துக் கொண்டே இரண்டு மைல் தூரமாவது நடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சோஸ்ட்சென்.

அந்த மலைக்காட்டில் வெள்ளை உதடு மான்களும் கருப்பு மான்களும் கூட்டம் கூட்டமாகத் துள்ளிக் குதித்து ஓடி கொண்டிருந்தன. மரங்களுக்கிடையில் வண்ண வண்ணப் பறவைகள் இனிய ஓசை எழுப்பியவாறு அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. அதன் அழகை வேடிக்கை பார்த்தபடி தந்தையும் மகனும் வந்து கொண்டிருந்தனர்.  

திடீரென அங்கு பறந்து வந்த கம்பீரமான கழுகுகளைக் கண்டு அச்சத்தில் கண்கள் இமைக்காது அவற்றைப் பார்த்தார் சோட்ஸ்சென். ஒருகணம், ஆனந்தமாய் பறந்து கொண்டிருந்த பறவைகள், ஒடுங்கிப்போய் மரக்கிளைகளில் இலைகளுக்கிடையில் மறைந்து கொண்டன.

சோஸ்ட்சென் ஆதங்கத்தோடு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தினார்.

சுதந்திரமாய் பறந்து கொண்டிருந்த இப்பறவைகளின் மகிழ்ச்சி, ஒரு கணத்தில் அடங்கி விட்டதே..! அவைகளுக்கு ஏன் இந்த பயம்? 

இன்றைய நிலையில் திபெத்திய மக்களும் அந்தப் பறவைகளின் நிலையில்தான் இருக்கிறோம்! ஓரிரு நிமிடங்களில் எங்கிருந்தோ பாய்ந்து வரும் சீன துருப்புகள், திபெத் மக்கள்மீது நடத்தும் தாக்குதலுக்குப் பயந்து, ஒடுங்கி, மறைந்து கொள்ளும் திபெத்தியர்களும் அவர் மனதில் நிழலாடினர். சீன துருப்புகளை எதிர்க்க முடியாமல் சுணங்கிப் போகும் திபெத்தியர்களுக்கும் இப்பறவைகளுக்கும் என்ன வேறுபாடு?

மனதில் கேள்விகளோடு ஒவ்வொரு நாளும் மகனை அழைத்துக் கொண்டு காட்டின் சூழலை ரசித்துக் கொண்டே செல்வது சோஸ்ட்சென்னுக்கு வழக்கம்.

அந்த மலைக்காற்றின் தண்ணென்ற குளிர்ச்சியில் தன்னை ஒட்டி நடந்து கொண்டிருந்த மகன் நியாம்டென்சினைத் தூக்கி பருத்து வளர்ந்திருந்த ஒரு மரத்தின் அடிக்கிளையில் உட்கார வைத்தார்.

“டென்சின், நேற்று மரத்தில் ஏறக் கற்றுக் கொண்டாயல்லவா? இன்று இந்த மரத்தில் மேலிருக்கும் கிளைவரை ஏறிச்செல்.  அதன்பிறகு அடுத்த மரத்தின் வளைந்து செல்லும் கிளைக்குத் தாவிக் குதி பார்க்கலாம். குதிக்கும்போது அடுத்த மரத்தின் கிளை மட்டுமே உன் கண்ணில் நிற்க வேண்டும். கிளையைப் பற்றியதும் பிடியை இறுக்கிக் கொள்.

நான் அருகிலேயே கீழே நின்று உன்னை கவனித்துக் கொண்டிருப்பேன். பயப்படாமல் எந்த அளவு எம்பிக் குதித்து தாவிப் பிடிக்க முடியுமோ… அந்தளவுக்கு உன் சக்தியெல்லாம் திரட்டி குதித்து வா..”

சிரித்துக் கொண்டே விளையாட்டாகப் பயிற்சி கொடுத்தார்.

டென்சின் ஆர்வத்துடன் கிடுகிடுவென மரத்தின் உச்சிக் கிளைக்கு ஏறி, பக்கத்து மரத்தின் கிளையைக் குறிவைத்து எகிறிக் குதித்து, கப்பென கிளையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

“அருமை மகனே, இப்படியே அந்தக் கிளையிலிருந்து உடலை வளைத்து மேலே எம்பி கிளைமீது நிற்க வேண்டியதுதான்!” 

இவ்வாறு மகனுக்கு மரக்கிளைகளில் தாவித்தாவிச் செல்ல, நீரோடைகளைத் தாண்டிக் குதிக்க, சரிவான பாறைகளில் காலை ஊன்றி மேலே ஏற… என்று விளையாட்டாகக கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.

ஒவ்வொரு நாளும் தந்தையுடன் காட்டுக்குள் நடந்து செல்லும் போதெல்லாம் பெரிய சாகச வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவன்போல சிறுவன் டென்சின் தந்தையின் பயிற்சியில் பெருமிதம் கொண்டான்.

சோஸ்ட்சென் தன் மகனை ஒரு  பெரும் நோக்கத்தோடு தயார்படுத்திக் கொண்டிருப்பதை  அறியாமல் சிறுவனும் மகிழ்ச்சியாகப் பயிற்சி பெற்றான்.

வழியில் இருக்கும் தாவரங்களையும் அழகிய மலர்களையும் பறவைக் கூட்டத்தையும் மகனுக்கு கவிதையாக அறிமுகப் படுத்தினார். அவர் ஒரு மாபெரும் கவிஞரல்லவா! 

அன்று தன் மகனைத் தோள்மீது அமர்த்திக் கொண்டு, தனக்குப் பிடித்த மகாகவி பாரதியாரின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பாடல் வரிகளை வீரம் கலந்த உற்சாகத்தோடு பாடிக்கொண்டே நடந்தார் சோஸ்ட்சென்

LO! He is rising on the alert of our sacrifice…
எங்கள் வேள்விக் கூடமிதில்
ஏறுதே தீ! தீ! – இந்நேரம்
பங்க முற்றே பேய்க ளோடப்
பாயுதே தீ! தீ! – இந்நேரம்
…….!
…….
காட்டில் மேயும் காளை போன்றான்
காணுவீர் தீ! தீ! – இந்நேரம்
ஓட்டி யோட்டிப் பகையை யெல்லாம்
வாட்டு கின்றானே – இந்நேரம்

தந்தையின் தோள்மீது அமர்ந்திருந்த நியாம்டென்சின்,  தந்தை பாடும் பாடலை ரசித்தபடியே மலை அடிவாரத்தில் பரந்து விரிந்திருந்த புல்வெளியையும் அங்கு சுற்றித் திரியும் காட்டு எருதுகளையும் பார்த்து மகிழ்ந்தான்.

நியாம்டென்சின் மகிழ்ச்சி சட்டென மறைந்து, முகம் வெளிறியது. பதற்றத்துடன தந்தையின் காதில் கிசுகிசுத்தான்

“அப்பா, எதிர்ப் பக்கம் கீழே பாருங்க!”

மகன் சுட்டிய இடத்தைக் கவனித்தார் தந்தை. தூரத்தில் இரண்டு சீன வீரர்கள் துப்பாக்கியை நீட்டியபடி இவர்கள் இருக்கும் இடத்தை நோக்கிப் பதுங்கி பதுங்கி வந்துகொண்டிருந்தனர்.

மகனோடு வேகமாக மரத்தின் மீது தாவி ஏறிய சோட்ஸ்சென், பையனை ஒரு கிளையில் அமர்த்திவிட்டு அடுத்தடுத்த மரங்களில் தாவித்தாவிச் சென்றார். ஐம்பதடி தூரத்திலிருந்த மரத்திலிருந்து சட்டென வேகமாக வீரர்களின் மீது பாய்ந்து இரு வீரர்களின் கழுத்தையும் இறுகப் பிடித்துச் சுழற்றித் திருப்பினார்.

இமைப்பொழுதில் எதிர்பாராமல் நடத்தப்பட்ட தாக்குதலில் வீரர்களின் உடல்கள் கீழே சரிந்தன. அவர்களின் துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு சடலங்களை அருகிலுள்ள புதர்ப் பள்ளத்தில் உருட்டிவிட்டு, மீண்டும் மகனிருந்த மரத்தை நோக்கிப் பாய்ந்து வந்தார்.

தந்தையின் புதிய அவதாரத்தைக் கண்ட மகன் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, கண்கள் விரிய தந்தையைப் பார்த்தான்.

தன்னைப் புதிராகப் பார்த்த மகனின் மருண்ட பார்வையிலருந்த கேள்வியைப் புரிந்து கொண்டார்.

மகனின் பயத்தைப் போக்கிட இயல்பாக சிரித்தவாறு மகனைத் தன்னோடு  அணைத்துக் கொண்டார். டென்சினும் படத்துடன் அவன் தந்தையை இறுக வளைத்துப் பிடித்துக் கொண்டான்.

“நீ சில விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. வீட்டுக்குப் போவதற்குள் உனக்கு எல்லா விவரங்களையும் சொல்லி விடுகிறேன். ஆனால் இங்கு நடந்தது எதையும் அம்மாவிடம் சொல்ல வேண்டாம்! பயத்தால் சிறுவனாகிய நீ பாதிக்கப் படுவாய் என்று கவலைப் படுவாள்.” – என்று கூறியவர் சற்று ஓய்வாக ஒரு மரத்தடியில் அமர்ந்தார். மகனை மடிமீது அமர்த்திக் கொண்டு கதையாகச் சொல்ல ஆரம்பித்தார்.

தலைமுறை தலைமுறையாக திபெத்தில் வாழ்ந்து வரும் தங்களுக்கு தற்போதைய (1950) சீன ஆக்கிரமிப்பு எத்தகைய சவாலாக இருக்கிறது என்பதை மகனிடம் சொல்லிக்கொண்டே வந்தார். சீன கம்யூனிஸ்டுகளின் அராஜகம், மதக்குறுக்கீடு, லாமாவின் உரிமை மறுப்பு, அதனால் ஏற்பட்ட திபெத்திய மக்கள் புரட்சி என்று விவரித்துக் கொண்டே போனார்.

சீனத் துருப்புகளோடு நாமும் நம் போராட்டத்தை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறோம். திபெத்தியரின் ஒவ்வொருவரின் ரத்தமும் சீன துருப்புக்கு எதிராக கொதித்துக் கொண்டே இருக்கிறது.”

சோஸ்ட்சென் கூறி முடித்தபோது, அவன் மகனின் உள்ளத்திலும் விடுதலை வேள்வித் தீ எரிய ஆரம்பித்தது. தந்தையிடம் முறையாகப் போர்ப் பயிற்சி பெற ஆரம்பித்தான்.

ஏழெட்டு வருடங்களுக்குள் அங்குதான் எத்தனை இழப்புகள்! சீன துருப்புகளின் அழிவுத் தாண்டவம் அதிகரித்துக் கொண்டே போனது.

எதை அழிக்கிறோம?  எதற்கு அழிக்கிறோம்? காரணம் உணராமலேயே மூர்க்கமாக திபெத்தை நாசப்படுத்திக் கொண்டிருந்தனர்.

மலைச்சரிவில் ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் வெட்டப்பட்டு லாரிலாரியாக கொண்டு செல்லப்பட்டன. மலைப்பிரதேசம் முழுவதும் பாறைகளாகவும் மண்மேடுகளாகவும் மாறிப் போயின.

ஆக்க சக்திகளை உருவாக்க மனித முயற்சிக்கு நூறாண்டு காலமானாலும் போதாது. ஆனால் அழிவுக்கு…! அரைநொடி போதுமே!!

பனிபடர்ந்த பசுமை மலைகள் தங்கள் கண் முன்னாலேயே சிதைக்கப் படுவதைக் கண்டு சோஸ்ட்சென் மனம் ரணகளமாகி ரத்த ஊற்று வற்றாது வடிந்தது.

மலை முகட்டில் படியும் பனி, தாவரங்கள் இல்லாத மொட்டையாகிப் போன பாறைகளில் உருகி வழிந்து கொண்டிருந்தது.துகில் உரித்த பெண்போல, முகட்டில் படியும் பனிச்சீலையை இழுத்து இழுத்து விட்டுத் தன் மேனியை மறைத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தாள் மலைமாதேவி.

சோஸ்ட்சென் மனத்தில் மூண்டெழுந்த தீ உடலெங்கும் பரவியது. கொரில்லாப் போர்ப் பயிற்சி வீரர்களை உருவாக்குவதில் இரவுபகல் முழுவதும் தீவிரமானார். வாலிப வயதை அடைந்துவிட்ட மகனும் தந்தையோடு இப்பணியில் சேர்ந்து கொண்டான்.

நாடெங்கும் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது. சீனத்துருப்புகளுக்கு எதிராக கொரில்லாத் தாக்குதல் கடுமையாக்கப் பட்டது.

கொல்லாமையே  முதன்மைப் பண்பாகப் போதிக்கும் பௌத்த மதத்தில் ஊறிப்போன சோட்ஸ்சென் மனம், எதிர்படும் சீன வீரர்களைத் தாக்கி வீழ்த்துவதிலேயே குறியாக மாறியது.

அன்பும், அஹிம்சையும் போதித்து வந்த தலாய்லாமாவும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மௌனமானார்.

தலாய்லாமா மீது சீற்றம் கொண்டு, லாஸா அரண்மனையைத் தாக்கிய சீனப் படைகளுடன் நடத்திய போரில் 87000 பேர் கொல்லப்பட்டு, 27000 பேர் சிறைப் பிடிக்கப்பட்ட போதும் சோஸ்ட்சென் மனம் சோர்வடையவில்லை.

என்றைக்காவது ஒருநாள் தாய்நாட்டை சுதந்திர நாடாக மீட்டே தீருவோம் என்று சபதம் செய்தார் சோஸ்ட்சென்.

நம்பிக்கையிழந்த லட்சக்கணக்கான திபெத்திய மக்கள் அகதிகளாக வெளியேறிக் கொண்டிருந்தனர்.

“நாமும் மற்றவர்களோடு சேர்ந்து வெளியேறி விடுவோம். இதற்கு மேலும் இங்கிருந்து எதுவும் செய்ய முடியாது.” – என்று நியாம்டென்சின் கூறியபோது, 

“மடையா, என்ன சொல்கிறாய் நீ! இங்கிருந்து கோழையாக ஓடி ஒளிந்து கொள்வேன் என்று நினைத்தாயா? என் தாய் மண்ணில் ரத்தம் சிந்தி உயிரை விடுவேனேயொழிய உயிருக்குப் பயந்து ஓடிப்போக என்னால் முடியாது.”

கோபத்துடன் உறுதியாகக் கூறிய தந்தையின் முடிவைக் கேட்டு எதிர்த்துப் பேச முடியாமல் மௌனமாக நின்றிருந்தான் நியாம்டென்சின்.

முதன் முதலாகத் தன் கணவனை ஆட்சேபித்து சோஸ்ட்சென்  மனைவி லாரா பேசலானாள்.

“இத்தனை நாளும் உங்களின் எந்தக் கருத்தையும் நான் மறுத்ததில்லை, எந்தக் காரியத்திலும் குறுக்கே நின்றதில்லை. ஆனால் இப்பொழுது உங்கள் முடிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இனிமேலும் இந்த ஊரில் மானத்தோடு வாழ முடியும் என்று நினைக்கிறீர்களா? இதற்கு மேலும் சீன துருப்புகளை எதிர்த்து வெற்றி பெற முடியும் என்று நம்புகிறீர்களா?”

தன் முடிவை எதிர்த்து எதிர் வாதம் செய்த மனைவியின் முகத்தை உற்று பார்த்தார். இதுநாள்வரை அவள் மனதுக்குள் புதைந்திருந்த கவலைகள் சோக ரேகைகளாக முகம் முழுவதும் பரவிக் கிடந்தது. அவளது ஆழ்மன சஞ்சலத்தை, பயத்தை கண்கள் பிரதிபலித்தன.

“பத்தி எரியற மரத்துல பறவைங்க எப்படி சேர்ந்திருக்க முடியும்? இத நான் சொல்லல, நம்ம குருதேவரோட வார்த்தைதான் இது. அம்பால் தாக்கப்பட்டு கிடக்கும் போது, அந்த அம்பை எய்தவன் யார், எங்கிருந்து எதற்காக எய்தினான் என்பதை ஆய்வு செய்து நேரத்தை வீணாக்க வேண்டாம். அந்த அம்பை உடனடியாகப் பிடுங்கி எடுப்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும்‘ –  இதையும் நம் புத்தமகான் தான் கூறியிருக்கிறார்”.

இன்றைக்கு நம்மீது வீசப்பட்ட அம்புகள் மீண்டும் மீண்டும் தாக்காமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்வதுதான் இப்போதைக்கு முக்கியம்.

லாராவின் தீர்க்கமான உறுதியில் சோஸ்ட்சென் மனம் இறங்கி வந்தது.

அரைமனதோடு திபெத்தை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டார்.

டுத்த நாள் விடியற்காலை நேரம் போர்வீரன் உடையணிந்து அதற்கு மேலே நீண்டு உடல் முழுதும் போர்த்திய கம்பளி ஆடையுடன் கண்கள் மட்டும் தெரியும்படி தலையும் முகமும் மறைத்திருக்கும் கம்பளி தொப்பியை முகத்திரையாக அணிந்து கொண்டு ஒரு உருவம் சோஸ்ட்சென் இல்லம் தேடி வந்தது.

யாரோ புதிதாக தங்கள் வீட்டருகில் வருவதைப் பார்த்த நியாம்டென்சின், ஓடிச்சென்று அதன் இரு கைகளையும் வளைத்துப் பிடித்துக் கொண்டு ‘யார் நீ’ என்று அதட்டினான்.

எந்த எதிர்ப்பும் இல்லாமல் அந்த உருவம் அவன் பிடியில் அமைதியாக நின்றிருந்தது.

“நான் கவிஞர் சோஸ்ட்சென்னை பார்க்க வேண்டும். மிகவும் அவசரம்.”

மென்மையாக வந்த குரலால் அவள் பெண் என்பதை உணர்ந்த நியாம்டென்சின் தன் பிடியின் இறுக்கத்தை சற்றே தளர்த்தியவாறு தந்தையை அழைத்தான்.

சோஸ்ட்சென்னை பார்த்ததும் அந்த உருவம் தன் முகத்திரையை வேகமாக விலக்கியது. 

“ஓ…இவள் ஒரு சைனீஸ் மாது!” மகனோடு தந்தை சோஸ்ட்சென்னும் அதிர்ந்து  போனார்.

 நியான்டென்சின் மீண்டும் அவளிடம் தன் பிடியை இறுக்கி அவளது கைகளை முறுக்கினான்.

வலியை பொருட்படுத்தாது அவள் சோஸ்ட்சென்னைப் பார்த்து புன்னகைத்தாள்.

“நான் உங்கள் ரசிகை. உங்கள் சுயமரியாதையும் சுதந்திர வேட்கையும் ஒவ்வொரு கவிதையிலும் எத்தனை வீரியமாக வெளிப்படுகிறது! கவிதை வழியாக உங்களின் ஆழ்மன உணர்வுகளை நான் புரிந்துகொண்டுள்ளேன். ” 

“அதைச் சொல்ல இதுவா நேரம்?”  – கர்ஜித்தான் நியாம்டென்சின்.

அவன் கோபத்தை அவள் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து கூறினாள்.

என் பெயர் யீஹான்.  ஒரு ராணுவ அதிகாரியின் மனைவி.

அவள் அந்த வார்த்தையை முடிக்குமுன் டென்சின் பரபரப்பாக தந்தையிடம், ” சந்தேகமே இல்லை. இவளிடம் பேசிக்கொண்டு இருப்பதே தவறு.”  என படபடத்தான்.

சோட்ஸ்சென்கொஞ்சம் பொறு, அவளை முழுமையாக விசாரிப்போம்!” என்று மகனை அமைதிப் படுத்தினார்.

நீ எங்கிருந்து வருகிறாய்? இத்தனை இருட்டில் வரக் காரணமென்னமுதலில் அதைச் சொல்.” சோஸ்ட்சென்  அந்தப் பெண்ணிடம் நிதானமாகக் கேட்டார்.

என் கணவர் காவல்துறை அதிகாரிதான்! அதனால் நீங்கள் என்னை நம்பாமல் போகலாம்நான் சொல்வதை முழுமையாகக் கேட்டுவிட்டு எந்த முடிவும் செய்யுங்கள்…”

சோஸ்ட்சென்னின் பதிலை எதிர்பார்ப்பது போல் அவரை நோக்கினாள்.

சோஸ்ட்சென், மேலே சொல் என்பதைப்போல கையை அசைத்தார்.

.”மண்ணுக்காக மனித நேயம் மரணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. சீன அரசின் செயலை விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை. மக்களின் மனங்களை, உணர்வுகளைப் படிப்பதில் எனக்கும் கொஞ்சம் நாட்டமுண்டு. உங்களைப் பற்றி நன்கு அறிந்துள்ளவள் என்பதால்தான் இங்கு வந்துள்ளேன். கவிஞர்களின் சிந்தனைக்கு எங்கிருந்தாலும் பலம் உண்டு. உங்களைப் போன்றவர்களை உலகம் எளிதில் இழந்து விடக்கூடாது….”

“சரி சரி, உன் புகழ்ச்சியும் புராணமும்  தேவையில்லை. நீ இங்கு எதற்காக வந்திருக்கிறாய்? நீ காலம் கடத்துவதைப் பார்த்தால் ஏதோ திட்டத்துடன்தான் வநதிருக்கிறாய் என்பது புரிகிறது. இவ்வளவு நேரம் உன்னை விட்டு வைப்பதே தவறு.”

அவள்மீதிருந்த சந்தேகம் குறையாமல் பொறுமையிழந்த நியாம்டென்சின் கையை ஓங்கினான்.

தன் மகனை அமைதிபடுத்திய சோஸ்ட்சென், அவளது கண்களை ஆழமிட்டார். அவளிடம் உண்மை இருப்பதாக நம்பினார். மேலே சொல்லும்படி சைகை காட்டினார்

சுற்றுமுற்றும் நோட்டம் விட்ட யீஹான் மெதுவான குரலில், “உங்களைப் போன்ற குறிப்பிட்ட சிலரை வெளியேற விடாமல் இங்கேயே கொன்று விடும்படி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. நீங்கள் இங்கிருந்தாலும் ஆபத்து, வெளியேறினாலும் ஆபத்து…”

ஒரு நொடி நிறுத்தியவள்  தன் துயரத்தை மறைத்துக் கொண்டு மேலும் தொடர்ந்தாள்.

“லாஸாவைத் தாண்டிதான் எல்லாரும் அருணாசலப் பிரதேசம் வழியாக இந்தியாவில் நுழைகிறார்கள் என்று ராணுவம் அந்தப் பக்கம்தான் ரோந்துப் பணியை தீவிரமாக்கியுள்ளது.

ஆனால் லாஸாவுக்கு முன்னாலேயே நீங்கள் நாதுலா கணவாய் வழியாக சிக்கிம் உள்ளே நுழைந்து விட்டால் அதன் பிறகு உங்களுக்கு பயம் இல்லை. நாதுலா கணவாய்வரை உங்களை பத்திரமாக நான் அழைத்துச் சென்று விடுகிறேன். என்னை நம்புங்கள்.” – 

என்று கூறி தன் உடல் முழுவதையும் வளைத்து குனிந்து வணங்கினாள்.

இவளை எப்படி நம்புவது?”  டென்சின் அவளை நோட்டமிட்டவாறே தந்தையிடம் கேட்டான்.

அவள் கூறிய செய்தியை நேற்றே நான் கேள்விப்பட்டேன். நான் அவளை முழுமையாக நம்புகிறேன். அவள் பேச்சில் உண்மை இருப்பதை அவள் கண் காட்டுகிறது.” சோஸ்ட்சென் மகனின் காதருகில் மெல்லிய குரலில் கூறினார்.

லாராவும் நியாம்டென்சின்னும் கொஞ்சம் தயங்கினார்கள். சோஸ்ட்சென்  அவளை முழுமையாக நம்பினாலும் அவளிடம் சில சந்தேகங்களைத் தெளிவு படுத்திக் கொள்ள நினைத்தார்.

 “நீ இங்கு வந்தது உன் கணவனுக்குத் தெரியுமா?”

“இல்லை, அவருக்குத் தெயியாமல்தான் வந்துள்ளேன். இப்போது அதை விவரிக்க நேரமில்லை. போகும் வழியில் பேசிக் கொள்ளலாம். பொழுது புலர்வதற்குள் கிளம்பினால் மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் யாருக்கும் சந்தேகம் வராமல் உங்களைக் கொண்டு சேர்த்து விடுவேன்.” – பரபரத்தாள்.

யீஹான் தன் முகத்திரையை லாராவுக்கு கொடுத்து போட்டுக் கொள்ளச் சொன்னாள். நியாம்டென்சின் தலையில் வேலையாள் டர்பனை கட்டி விட்டாள். சோஸ்ட்சென்னை சூட் அணியச் சொல்லி, தன் நீண்ட கம்பளி அங்கியையும் முகத்தை முக்கால் பாகம் மறைக்கும் ஆங்கிலேயரின் வட்ட வடிவ தொப்பியையும் கண்ணுக்கு பெரிய கண்ணாடியையும் கொடுத்து அணிந்து கொள்ளச் சொன்னாள்.

தூரத்தில் நிறுத்தியிருந்த தன் வண்டியின் பின் இருக்கையில் அவர்களை அமரச் செய்து வண்டியை ஓட்டிச் சென்றாள்.

“யார் வண்டியை மறித்தாலும் நீங்கள் கவனிக்காதது போல இருந்து விடுங்கள். என்னுடைய விருந்தினரை அழைத்துப் போகிறேன் என்று கூறி சமாளித்துக் கொள்கிறேன்.”

என்று கூறியவள், முதல்நாள் தன் கணவனுடன் நடந்த உரையாடலை விளக்க ஆரம்பித்தாள்.

“காவல்துறையின் உயர்ந்த அதிகாரி என்ற மிடுக்கோடு எதிராளியைத்  தாக்கிப் பணிய வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டவர் என் கணவர்.

இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற எனக்கு வாய்த்த கணவர், ஒட்டுமொத்த இலக்கியவாதிகளையும் வெறுப்பவர். நாட்டில் நிலவும் போராட்டங்கள் எல்லாமே இலக்கிய வாதிகளின் எழுத்தால ஏற்பட்ட எழுச்சிதான் என்று கோபப்படுவார்.” 

“அவர் சொல்வது ஓரளவுக்கு உண்மைதானே!” இடைமறித்தார் சோஸ்ட்சென்

அதை ஆமோதித்து புன்சிரிப்புடன் தலையசைத்த யீஹான், ” இலக்கியவாதிகள் மனித மனங்களைப் படிப்பவர்கள்; காயப்பட்ட மனதுக்கு மருந்திடுபவர்கள் என்ற என் கருத்தை அவர் ஒருபோதும் ஏற்பதில்லை!  நான் கவிதைகளைப் படிப்பதைப் பார்த்தாலே வெறுப்பை உமிழ்வார். நாட்டின் இன்றைய கலவரங்களை அடக்க முடியாமல் தங்கள் பணிக்குப் பெரும் சவாலாக இருப்பவர்கள் இலக்கியவாதிகள்தான் என்று நம்புகிறார்.”

ஒரு நொடி தன் பேச்சை நிறுத்தியவள், ” அடிப்படையில் இருவேறு துருவங்களாக இருந்தாலும் நாங்கள் ஒருவருக்கொருவர் செலுத்திக் கொள்ளும்  பரஸ்பர அன்பில் இதுவரை குறையெதுவும் ஏற்பட்டதில்லை.” 

இதைச் சொல்லும்போது ஏனோ அவள் குரலில் ஒரு துக்கம் தெரிந்தது. தன் கணவனை எதிர்த்துச் செய்யப் போகும் காரியத்தை எண்ணி சற்றே கலக்கமுற்றதை லாரா புரிந்து கொண்டாள்.

சட்டென சுதாரித்துக் கொண்டவள் மேலே பேசலானாள்.

“இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது மேசைமேல் இருந்த பட்டியலை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. உடனடியாகக் கைது செய்யவேண்டியவர்களின் பெயர்ப் பட்டியலில் உங்கள் பெயர் இருந்ததைப் பார்த்துத் துணுக்குற்றேன். அவரிடம் என் எதிர்ப்பைத் தெரிவித்தேன. “யாரெல்லாம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பது எனக்குத் தெரியும். தேவையில்லாமல் என் வேலையில் குறிக்கிடாதே! பொறுப்புள்ள அதிகாரியின் மனைவியாக நடந்து கொள்”  என்று என்னிடம் கோபப்பட்டார்.

இதைக் கேட்டதும் லாரா மனம் கலங்கினாள். 

“எங்களைக் காப்பாற்ற நினைத்து தேவையில்லாமல் உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளத் துணிந்து விட்டாயே!  எங்களுக்காக உன் வாழ்க்கையை இழக்க வேண்டாம். வண்டியை நிறுத்து. இதோடு எங்களை விட்டுவிட்டுப் போய்விடு. நிறுத்து வண்டியை…”  லாரா கத்தினாள்.

வண்டியின் வேகத்தைக் குறைத்த யீஹான், “அம்மா, அவசரப் படாதீங்க, என் கணவருக்குத் தெரிய வாய்ப்பில்லை… நேற்று மாலை திடீரென ஓர் அதிகாரி வந்து இவரிடம் ஒரு செய்தியைக் கூறினார்… உடனே வேகமாக என்னிடம் வந்த என் கணவர், நான் அலுவலக வேலையாக வெளியூர் போகிறேன், வருவதற்கு இரண்டு நாட்களாகும். வீட்டில் பத்திரமாக இரு…” என்று படபடப்புடன் கூறியவர், வந்திருந்தவரின் வாகனத்திலேயே கிளம்பி விட்டார்.

அவர்கள் பேசியதிலிருந்து அவர்கள் லாசாவுக்குப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். அங்கிருந்து இந்தியாவிற்கு வெளியேறுபவர்களைக் கண்காணித்து பட்டியலில் இருப்பவர்களைக் கைது செய்வதற்குத்தான் அவசரமாகக் கிளம்பினார்கள் என்று புரிந்தது.

உள்ளூரில் இருக்கும் காவலர்களுக்கும் அந்தப் பெயர்ப் பட்டியலை அனுப்பியுள்ளார்கள். என் கணவர் இன்று வரமாட்டார் என்ற நம்பிக்கையில்தான் உங்களைப் பாதுகாப்பாக அனுப்பி விடலாம் என்று வந்தேன்.

யீஹானின் பேச்சில் கட்டுண்டு மூவரும் வண்டியில் அமைதியாக வீற்றிருந்தனர். மூவரின் உள்ளத்திலும் யீஹான் உயர்ந்து நின்றாள்.

சூரியக் கதிர்கள் மெல்ல நிதானமாக மேலெழுந்து கொண்டிருந்தன. நாதுலா கணவாய்க்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் காவல் வீரன் ஒருவன் வண்டியை நிறுத்தினான்.

ராணுவ உடையிலிருந்த யீஹான் வண்டியிலிருந்து இறங்கிய வேகத்தில் வீரனிடம் கோபமாகச் சீறினாள்.

“யாருடைய வண்டி என்பதுகூட தெரியாமல் வேலை செய்கிறாய்! தொலை  தூரத்திலிருந்து வந்திருக்கும் என் நண்பர்கள் முன் என்னை அவமானப் படுத்தி விட்டாய்…” – என்று தாம்தூமென்று  ஆர்ப்பாட்டமாகக் கத்தியவள்,   அவன் பதிலுக்கு காத்திராமல் ஓட்டுநர் சீட்டில் அமர்ந்து படாரென கதவை அறைந்து சாத்திவிட்டு வேகமாக வண்டியைக் கிளப்பினாள்.

யீஹானின் அதிரடிப் பேச்சால் காவலன் ஸ்தம்பித்து நின்று விட்டான். வண்டி நகர்ந்த பின்னர்தான் வண்டியில் இருந்தவர்களைத் தான் சரியாக கவனிக்கவில்லை என்பதை உணர்ந்தான்.

வண்டியினுள் அமர்ந்திருந்தவர்கள் உள்ளுக்குள் பதறினர். அவர்கள் பதட்டம் குறைவதற்குள் வண்டி நாதுலா கணவாய் முகப்புக்கு வந்து விட்டது.

அனைவரையும் அவசரமாக வெளியே இறங்கச் சொன்னவள் சீன மொழியில் திட்டிக்கொண்டே காலால் எட்டி உதைத்து,  மூவரின் மென்னியைப் பிடித்துத் தள்ளினாள்.

அவளது திடீர் மாற்றத்தால் சோஸ்ட்சென் அதிர்ச்சி யுற்றார்.

அவள் முகத்தில் காட்டிய வெறுப்பும் வார்த்தையிலிருந்த கடுமையும் கண்டு அவர்கள் பயந்தனர்.

“இந்த நாய்ங்கள மொதல்ல உள்ளே அனுப்பு. அகதிங்களா எங்காவது போய்ச் சேரட்டும். நேரத்த கடத்தாதே….”

கணவாய் காவலிலிருந்த இரண்டு வீரர்களை நோக்கி உத்தரவு இடுவதைப் போலக் கத்தினாள்.

காவலர்கள் அவளைப் புரிந்துகொள்வதற்கு முன், இனி இந்த மண்ணை மிதிக்காதீர்கள் என்று எரிச்சலோடு கத்திக் கொண்டே மூவரையும் கணவாய் பாதையில் நெட்டித் தள்ளினாள்.

அவள் தந்திரத்தைப் புரிந்துக் கொண்டு மூவரும் வேகமாக கணவாய்க்குள் ஓடிக் கொண்டிருந்தனர்.

கொஞ்ச தூரம் கடந்த போது பின்னாலிருந்து வந்த யீஹானின் அலரல் சத்தம் கேட்டு சோஸட்சென் திரும்பிப் பார்த்தார்.

வழியில் அவர்களை நிறுத்திய வீரன் யீஹானை வளைத்துப் பிடித்துக்கொண்டு அவளை பலமாக தாக்கிக் கொண்டிருந்தான்.

சோஸ்ட்சென் தன் மகனிடம், “நீங்கள் விரைவாக கணவாயைத் தாண்டி விடுங்கள். நான் யீஹானை காப்பாற்ற வேண்டும்..” சொல்லிய வேகத்தில் மீண்டும் கணவாயின் திபெத் நுழைவாயிலை நோக்கிப் பாய்ந்தார்.

யீஹானை தாக்கிக் கொண்டிருந்த வீரனின் தலையில் தன் இரு கைகளையும் கோர்த்து குவித்து மடாரென ஓங்கி அடித்த அடியில் வீரன் நிலைகுலைந்து போனான்.

கணவாய் காவலர்கள் இருவரும் சோஸ்ட்சென்னுடன் கைகலப்பில் இறங்கினர்.

தூரத்திலிருந்து.” அவனை விட்டு விடாதே…” என்று கத்திக் கொண்டே ஓடிவந்த ராணுவ வீரன் துப்ப்க்கியால் சோஸட்சென்னை நோக்கி சுட்ட வேகத்திலேயே  யீஹானை இழுத்து ஓங்கி கன்னத்தில் அறைந்தான்.

யீஹான் நெற்றிப் பொட்டில் அடி பலமாக விழ நினைவிழந்து அங்கேயே வீழ்ந்தாள்.

கணவாயின் ஒரு முனையில் இருந்துப் பார்த்தால் அடுத்த வாசலில் ஆள் நடமாட்டம் நன்றாகத் தெரியும்படி நேர் கோட்டில் அமைந்திருக்கும் நாதுலா கணவாயை கடக்கும் நேரம் துப்பாக்கி சத்தம் கேட்டு, லாராவும் நியாம்டென்சின்னும் குழப்பத்தோடு திரும்பிப் பார்த்தனர்.

சிக்கிமில் இந்திய மண்ணை இவர்கள் மிதித்த போது அடுத்த பக்கத்தில் திபெத்திய மண்ணில் சோஸ்ட்சென் உயிர் பிரிந்து விட்டதை உணர்ந்து கொண்டனர்.

அங்கேயே மண்டியிட்டு சோஸ்ட்சென்னுக்காக பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினர்.

தன் உயிர், தாய் மண்ணில் பிரிந்த நிறைவோடு சோஸ்ட்சென் ஆன்மா விண்ணில் பயணித்தது.

*******

மார்ச் 2023 அமுதசுரபி இதழில் பிரசுரமானது. 
ஆசிரியரின் உரிய அனுமதியோடு இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

********

sarosahdev1967@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button