![](https://vasagasalai.com/wp-content/uploads/2024/11/WhatsApp-Image-2024-11-19-at-5.53.20-PM-780x470.jpeg)
சொர்க்கத்திற்குச்
சென்றேன்
எல்லாமே இருந்தது
கூடவே கண்னைக் கவரும்
தங்கக் குளமொன்றும்
தங்கக்குளமொன்றின்
மத்தியில் நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள்
முதலாமவர் தன்னைச் சிவனென்றார்
இரண்டாமவர் தன்னை இயேசுவென்றார்
மூன்றாமவர் தன்னை அல்லாவென்றார்
நான்காமவர் தன்னைப் புத்தரென்றார்
நான்கு பேரும் என்னை யாரென்றார்கள்
மனிதன் என்றேன்
அவர்களுக்குள்
எந்தப் பிரிவினையும் வரக்கூடாதெனச்
சொல்லி வந்தவழி என்னை
பூமிக்கு அனுப்பிவிட்டார்கள்.
*
அந்தக் கனவில்
நான் மட்டும்தான் மனிதனாகப் பிறந்தேன்
நான் தனியாகவே உணவகம் சென்று
நானே சமைத்து நானே உண்டுகொள்வேன்
நான் போக வேண்டிய
ஊர்களுக்குச் செல்லும் வாகனங்களை
நானே ஓட்டிக்கொள்வேன்
நான் போட வேண்டிய
ஆடைகளை நானே
நூற்பேன்
நூல்களுக்கான பருத்தியை
நானே விளைவிப்பேன்
என் பாதரட்சைகளை
நானே தைத்துக்கொள்வேன்
அதற்கான தோலையும்
என்னிடமிருந்தே உரித்துக்கொள்வேன்
என் இச்சைக்கு
என்னை நானே புணர்ந்துகொள்வேன்
என் நலமின்மைக்கு
என்னை நானே
நலம் விசாரித்துக்கொள்வேன்
என் துயரங்களுக்கு
எனக்கு நானே
ஆறுதல் சொல்லிக்கொள்வேன்
இவை யாவுமே
இல்லையெனச் சொன்னது
என் கண்முழிப்பு
அப்பொழுதில் இருந்து
எனக்கு யாரும் வேண்டாமெனவோ
யாரும் எனக்குத் தேவையில்லையெனவோ
சொல்வதை நிறுத்திக்கொண்டேன்.
*
வீட்டை விட்டுக் கிளம்பினாலே
எனக்கு எந்த மனிதனும் கண்ணுக்குத் தெரியமாட்டார்கள்
காலையில் சிவனுடன்தான் என் சிற்றுண்டி
மதிய வேளையில் நபிகளுடன் உணவு
இரவு விருந்தென இயேசுவுடன் ஒரு அருகேயமர்தல்
இடையிடையே முப்பத்து முக்கோடி
தேவர்களுடன் கொரியுணவுகள் உண்பேன்
தேவதைகளுடன்தான்
தேநீர் விருந்து
ஆகவேதான் சொல்கிறேன்
என் எல்லாப் பொழுதுகளிலும்
சதா இறைவனுடனேயே
சுற்றிக் கொண்டிருப்பதால்
எனக்கு மனிதன் பெரிதில்லை
மதம்தான் பெரிது.
- iamwriterselva@gmail.com