இணைய இதழ் 103சிறுகதைகள்

மெழுகை உண்டு வாழும் பூச்சிகள் – ரூ

சிறுகதை | வாசகசாலை

காலையிலிருந்து ஐந்து முறைக்கும் மேல் கண்ணாடியைப் பார்த்து அழகுபடுத்திக் கொண்ட போதிலும் மீசைக்குள் புதைந்து ஒளிந்திருந்த ஒற்றை நரை முடி இப்போதுதான் என் கண்களுக்குப் புலப்பட்டது. கத்தரிக்கோலைத் தேட பொறுமையில்லாமல் விரல்களாலேயே பிடுங்கி எறிந்தேன். மீண்டும் ஒருமுறை தலைவாரிக் கொள்ளலாம் என்ற முனைப்பில் சீப்பைத் தேடி அவசரமாகத் தலைவாரி முடித்து வீட்டை பூட்டிவிட்டு தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கியபடி கடிகாரத்தைப் பார்த்த போதுதான் வழக்கத்தைவிட ஐம்பது நிமிடங்கள் தாமதமாகக் கிளம்பியது எனக்குள் உரைத்தது. நேரத்தை வீணடிக்காமல் வேகமாக பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.  நான் இருக்கும் இடத்திலிருந்து நான் வேலை செய்யும் அரசு மருத்துவமனை வெறும் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலே அமைந்திருந்தாலும் கூட, மலைப்பாதையில் செல்ல வேண்டும் என்பதால் சராசரியை விட அதிகமான பயண நேரம் எடுக்கும். ஒரு வழியாக மூச்சிரைக்க நடந்து வந்து பஸ் ஸ்டாப்பை அடைந்த போதுதான் நான் வழக்கமாகச் செல்லும் பஸ் கிளம்பி விட்டதையும், அடுத்த பஸ் வருவதற்கு மேலும் இருபது நிமிடங்கள் எடுக்கும் என்பதையும் சுற்றி இருப்பவர்கள் பேசுவதன் மூலம் உணர்ந்து கொண்டேன். இருபது நிமிடத்திற்குள் திரும்பி வந்துவிடலாம் என்ற நோக்கத்துடன் அங்கிருந்து நகர்ந்து நூறு அடிகள் தள்ளி அமைந்துள்ள செருப்பு கடையை நோக்கி ஓடிச் சென்றடைந்தபோது, “வாங்க தம்பி” என்று சிரித்த முகத்துடன் வரவேற்றார் அந்தச் செருப்பு கடைக்காரர்.

சொல்லிக் கொள்ளும்படி எங்களுக்குள்  பரிச்சயம் இல்லையென்றாலும் கூட அவ்வப்போது கடைத்தெருக்களில் சந்திக்கும்போது நாங்கள் புன்னகைகளைப் பரிமாறிக் கொள்வதுண்டு.

“சொல்லுங்க தம்பி என்ன சைஸ் வேணும்?”

“அண்ணே, எனக்கு இல்ல, பொம்பளைங்க செருப்பு பாக்கணும்.” என்று நான் சொன்ன போது ஓரக்கண்ணால் சிரித்தபடி என்னிடம் சாடை காட்டினார்.

“இது பூராம் பொம்பளைங்க செருப்புதான் தம்பி.” என்று அவர் என்னிடம் காட்டிய எந்த செருப்பிலுமே எனக்கு திருப்தி ஏற்படவில்லை.

“அண்ணே ரோஸ் கலர்ல செருப்பு இருக்கா?” என்று நான் கேட்டபோது, “ஒரு நிமிஷம் இருங்க தம்பி.” என்றவாறு தலையைச் சொறிந்து கொண்டே கோடவுனுக்குள் சென்றவர், நான் கேட்டது போலவே அடர் ரோஸ் நிற செருப்புடன் என் முன்னால் வந்து நின்றார்.

“இது எப்படி தம்பி இருக்கு?” என்று அவர் சொல்லி முடிக்கும் முன்னரே அவர் கைகளில் இருந்து அந்தச் செருப்புகளை வாங்கிக் கொண்டேன். அவளுடைய மென்மையான பாதங்களுக்கு அவை மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றே எனக்குத் தோன்றியது. அதற்கு மேல் மறு யோசனை இல்லாமல், “அண்ணே இது இருக்கட்டும், கவர்ல போட்டு குடுங்க.” என்றேன்.

“அட , சைஸ் சரியா இருக்கான்னு பாருங்க, இல்லன்னா வேற கொண்டு வரேன்.” என்று அவர் சொன்ன போது நான் குறுக்கிட்டு, “அண்ணே, அதெல்லாம் சரியாதான் இருக்கு. நீங்க சீக்கிரம் கவர்ல போட்டு கொடுங்க. பஸ் போயிடப் போகுது.” – என்று நான் சொன்னதும் அவசரமாக பணத்தை வாங்கிக் கொண்டு கையில் கிடைத்த பாலித்தீன் கவரில் அந்த செருப்பை சுற்றி என் கைகளில் திணித்தார்.

“என்ன தம்பி கட்டிக்க போற பொண்ணுக்கா, பொண்ணு பேரு என்ன?” என்று அவர் சிரித்தபடி கேட்டபோது வெட்கத்தை மறைக்க முடியாமல் தலைகுனிந்தபடி, “அண்ணே, சும்மா இருங்கண்ணே. நீங்க வேற” என்று வேகமாக அங்கிருந்து வெளியேறி நடந்து பஸ் ஸ்டாப்பை நெருங்கவும், எனக்கான பஸ் வரவும் சரியாக இருந்தது. கூட்டத்தில் முண்டி அடித்துக் கொண்டு ஏறி பஸ்ஸின் மத்தியில் சென்று நின்று கொண்டேன். நான் வழக்கமாகச் செல்லும் பஸ் இல்லை என்பதால் அங்கிருந்த முகங்கள் எனக்கு அறிமுகமில்லாதவையாகவே இருந்தன. கூட்டத்தில் தொலைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அவ்வப்போது கவரை விலக்கிச் செருப்பு பத்திரமாக இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். பஸ் வேகம் எடுத்து நான் இறங்கப் போகும் ஸ்டாப்பை நெருங்க நெருங்க, வேலுச்சாமி அண்ணனை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற எண்ணமும் பயமும் எனக்குள் பற்றிக்கொண்டது.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு வரை தேயிலைத் தோட்டத்தில் கிட்டத்தட்ட கொத்தடிமையாகக் கூலி வேலை செய்து கொண்டிருந்த எனக்கு, தான் வேலை செய்யும் அதே அரசு மருத்துவமனையின் பிணவறையில் அட்டெண்டராக தற்காலிகப் பணியில் என்னை சேர்த்து விட்டிருந்தார் வேலுச்சாமி அண்ணன். அவர் அவ்வாறு செய்ததில் ஒரு சிறிய சுயநலமும் இருந்தது. அவருடைய வீடு மருத்துவமனையிலிருந்து மிகச் சமீபத்தில் அமைந்திருப்பதால் பெரும்பாலான நேரங்கள் வீட்டிலேயே பொழுதைக் கழிப்பார். அவ்வாறு பொழுதைக் கழிக்கும்போதும், தான் இல்லாத போதும் பிணவறையில் அவருடைய வேலைகளையும் சேர்த்துப் பார்க்க நம்பிக்கையான ஆளைத் தேடி கொண்டிருக்கும்போதுதான் என்னைக் கண்டடைந்தார். எனக்கும் அது எந்த விதத்திலும் அவரின் மீது வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு சென்று கொண்டிருந்த போதுதான் மூன்று நாட்களுக்கு முன்பு காலையில் பிணவறைக்குள் நுழைந்த எனக்கு முன்னால் வியர்க்க விறுவிறுக்கச்  சோர்வுடன் நின்றிருந்தார் வேலுச்சாமி அண்ணன்.

“என்னண்ணே ஆச்சு, களைப்பா இருக்கீங்க.” என்று நான் கேட்டபோது

வியர்வையைத் துடைத்தபடியே, “ஆமா தம்பி, காலையிலேயே போன் பண்ணிட்டானுங்க, புதுசா ஒரு பொண்ணோட டெட்பாடி வந்திருக்கு, நம்ம ஊருக்கு டூரிஸ்டா வந்த பொண்ணு போல.. ஏற்கனவே ஆஸ்துமா இருந்துருக்காம். இங்க வந்த எடத்துல மூச்சு திணறல்ல திடீர்னு செத்து போய்ருக்கு. பெரிய இடத்து புள்ள போல.. சொந்தக்காரங்க எல்லாம் வெளிநாட்டுல இருக்காங்களாமா. வந்து அடையாளம் காட்டுற வரைக்கும் இங்கதான் போல, இரு நான் சாப்பிட்டு வந்துடறேன்.” என்றபடி என்னைக் கடந்து அவர் வெளியே சென்ற பின்புதான் அங்கே கிடத்தப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் முகத்தை முதன் முதலாகப் பார்த்தேன். அறையில் முழுவதுமாக மூடப்பட்டிருந்த ஜன்னல்களையும் கதவுகளையும் ஏமாற்றிவிட்டு எப்படியோ உள் நுழைந்த காற்று அவளைக் கடக்கும்போது அவளது கன்னம் வரை நீண்டு தொங்கிக் கொண்டிருந்த முடிக்கற்றையை கடல் அலை போல அலைய வைத்தது. மின்வெட்டான ஓர் இருள் சூழ்ந்த இரவில் மொட்டை  மாடியில் இருந்து அண்ணாந்து பார்க்கும் போது தெரியும்  பௌர்ணமி நிலவுக்குரிய பிரகாசத்துடன் தெரிந்த அவளது முகத்தைக் கண்களைச் சிமிட்ட மனம் இல்லாமல் நகராமல் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அவ்வாறு உறைந்து போயிருந்ததற்கு அவளது தோற்றமும் அழகும் தாண்டி வேறு சில காரணங்களும் இருக்கத்தான் செய்தன.

விவரம் தெரிந்த வயதிலிருந்து அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த எனக்கு கவனமும் கண்டிப்பும் கிடைத்த அளவிற்கு ஆதரவும் நேசமும் கிடைக்காமலே போனது.  படிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில்  நூலகம் செல்வதும் தோட்ட வேலைகள் செய்வதும்  இறை பணி செய்வதும் கட்டாயமாக்கப்பட்ட அந்த ஆசிரமத்தில் திரைப்படங்கள் பார்ப்பதும் அதன் பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் என்னுடைய பதினெட்டாவது வயது வரை பாவச் செயல்களாகவே என்னிடம் போதிக்கப்பட்டன. முழுவதுமாக ஆண் பிள்ளைகள் மட்டுமே நிறைந்த ஆசிரமத்தில் வளர்ந்ததாலோ என்னவோ சம வயது பெண்களின் நட்பும் பழக்கமும் எனக்குக் கிட்டாமலே போனது. நான் ஆசிரமத்திலிருந்து வெளியேறிய பிறகும் கூட பெண்களின் மேல் இருக்கும் ஈர்ப்பைக் காட்டிலும் அவர்கள் மீதான பய உணர்வும் என்னை பற்றிய தாழ்வு மனப்பான்மையுமே மேலோங்கி இருந்ததால் அவர்களோடு சாதாரண உரையாடல்கள் வைத்துக்கொள்வதிலேயே எனக்கு பெருத்த சிரமம் இருந்தது. நான் வளர்க்கப்பட்ட விதம் கூட இதற்குக் காரணமாக இருக்குமோ என்று எத்தனையோ நாள் நான் யோசித்ததுண்டு. நான் வேலை செய்யும் மருத்துவமனைக்கு எதிரில் பேன்சி ஸ்டோர் நடத்தும் கனகா அக்காவை வேலுச்சாமி அண்ணன் உட்பட அனைவரும் நோட்டமிட்ட போதும் கூட “அக்கா” என்று அழைத்துவிட்டதாலோ என்னவோ எனக்குள் அவள் மேல் எந்தவித ஈர்ப்பும் ஏற்படாமலேயே போனது. ஆசிரமத்தில் வளர்ந்த காலங்களில் சமையல் வேலை செய்யும் அறுபது வயதைக் கடந்த ராதா பாட்டியையும், நாற்பத்து ஐந்து வயது நிரம்பிய கன்னியாஸ்திரி ஆரோக்கியமேரி சிஸ்டரையும் தாண்டி எனக்கு எந்தவித நிஜ உலக பெண்களுடனும் பழக்கமும் பரிச்சயமும் இருந்ததில்லை. லைப்ரரியில் தான் படித்து வியந்த புத்தகங்களையும் கதைகளையும் மாணவர்களிடம் சொல்லி வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் எபினேசர் சாரின் வகுப்புகள்  என்னுடைய விருப்பமான வெகுசில பள்ளிக்கால நினைவுகளில் ஒன்று. நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஸ்கூல் லைப்ரரியில் தான் படித்த தேவதை கதையுடனும் புத்தகத்துடனும் வகுப்பிற்கு வந்திருந்தார் எபினேசர் சார். கிராம மக்களால் வேசி என்று பொய்யாகப் பட்டம் கட்டப்பட்ட ஆதரவற்ற இளம் பெண்ணொருத்தி அதே கிராமத்து வஞ்சகர்களால் ஊரின் நடுவில் வைத்து எரித்துத் தீக்கிரையாக்கி கொல்லப்பட்டு யாரும் எதிர்பாராத விதமாக ஐந்தாவது நாளில் இறக்கைகளுடன் தேவதையாக மாறி உயிர்த்தெழுந்து ஊரில் வலம் வந்ததாகச் சொல்லப்பட்ட அந்த ஆங்கில கதையை வகுப்பில் இருந்த அனைவரும் அதீத ஆர்வத்துடன் கேட்டு கொண்டிருந்த போதும் என்னுடைய ஆர்வம் முழுவதும் அந்த புத்தகத்தின் அட்டைப் படத்திலிருந்த தேவதை ஓவியத்தின் மீதே இருந்தது. எபினேசர் சார் லைப்ரரியில் புத்தகத்தைத் திருப்பி வைக்க வருவார் என்ற நம்பிக்கையுடன் வெகு நாட்களாக அவரை வேவு பார்த்து அவர் புத்தகத்தை வைத்து விட்டுச் சென்ற பிறகு முதல் ஆளாக அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து என் அறையில் என்னுடனே வைத்துக்கொண்டேன். அந்த அட்டைப் படத்தில் இருந்த தேவதையின் முகமும் அதிலிருந்த உயிரோட்டமான புன்னகையும் பாறைக்குள்ளும் பட்டாம்பூச்சிகளைப் பறக்க வைக்கும் சக்தி படைத்தவையாய் இருக்கும் போது, உயிருள்ள என் அடிவயிற்றில் சில பட்டாம்பூச்சிகளை உயிர்த்தெழச் செய்து என்னை நெகிழச் செய்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை.

“ஏண்டா, உனக்கெல்லாம் இங்கிலீஷ் படிக்க வராதுல்ல, அப்புறம் என்னத்துக்கு இந்த புக்கை தூக்கிட்டு திரியுற.” என்று வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் ஏளனம் செய்ததை நான் என்றுமே கண்டு கொண்டதில்லை. அவள் மேல் எனக்கிருந்த காதலைப் பற்றிச் சொன்னால் மட்டும் அந்த மானிடப் பதர்களுக்கு புரிந்துவிடப் போகிறதா என்ன! மகிழ்ச்சியாக இருக்கும் போது அவளுடைய கன்னங்களையும் நீலக் கண்களையும் முத்தங்களால் நிரப்பி அவளை நாணச் செய்திருக்கிறேன். மனமுடைந்து அழ தோன்றும் எத்தனையோ இரவுகளில் அந்த புத்தகத்தை அட்டைப் படத்தோடு இறுக்கமாகக் கட்டி அணைத்தபடி  அழுது கொண்டே உறங்கி இருக்கிறேன். என்னுடைய ஆசிரம வாசம் முடிந்து அங்கிருந்து வெளியேறத் தயாரான போதும் கூட யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அந்தப் புத்தகத்தின் அட்டை படத்தை மட்டும் கிழித்து என்னுடன் எடுத்து வந்து விட்டேன். அதற்கு பிறகு சில மாதங்கள் வரை நான் போகும் இடங்களிலெல்லாம் என்னுடனே பயணித்த அந்த தேவதை, ஒரு பஸ் பயணத்தில் நான் பையைத் தொலைத்தபோது அதனுள்ளிருந்த அட்டைப்பட ஓவியத்தோடு சேர்ந்து அவளும் தொலைந்து போனாள்.  அந்த சம்பவம் எனக்குள் தந்த மன வலியால் எத்தனையோ நாட்கள் உறங்காமல் தவித்திருக்கிறேன்.

அடுத்த சில நாட்களிலேயே நானே எதிர்பாராத விதமாக அந்த அட்டைப்படத் தேவதை என் கனவில் வரத் தொடங்கியிருந்தாள்.  கனாக்களில் தன்னந்தனியாகக் கடற்கரையில் அழுது கொண்டிருக்கும்  என்னைத் தேற்றுவதற்காக என் கைகளைப் பிடித்து கொண்டு என்னுடன் கடல் மேல் நடத்தி கூட்டிச் செல்வாள். என் கைகளை இறுக்கப் பிடித்தபடி ஒரு விண்மீனிலிருந்து மற்றொரு விண்மீனுக்குத் தாவச் சொல்லிக் கொடுத்திருக்கிறாள். சில சமயங்களில் எதுவும் பேசாமல் அமைதியாக ஆற்றங்கரையில் புன்னகைத்தபடியே என்னோடு அமர்ந்திருக்கிறாள். அவள் என்னுடன் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என்றாலும், அவளது இருப்பு என்னை எத்தனையோ கனாக்களில் தேற்றியுள்ளது. சில சமயங்களில் நான் இருப்பது கனா என்று விளங்கி விட்டாலும் கூட அதிலிருந்து விடுபடவும் அவள் கைகளை விடவும் மனமின்றி அவளை இறுகப் பற்றிக் கொள்வேன்.

இப்போது என் எதிரில் கிடத்தப்பட்டிருந்த அந்தப் பெண்ணிற்கு அப்படியே அந்த அட்டைப்படத் தேவதையின் சாயல். இல்லை இல்லை அச்சு அசலாக அதே முகம், அதே உடல்வாகு, அதே உயரம். ஏனோ என்னால் இதை எதார்த்தமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. நான் கனவுலகில் கண்ட தேவதை கண்ணெதிரில் கிடத்தப்பட்டிருக்கும்போது எப்படி என்னால் இதைச் சாதாரணமாகக் கடக்கவும் எதார்த்தமாக எடுத்துக் கொள்ளவும் முடியும்? எனக்கு நடந்த விஷயங்களை வேலுச்சாமி அண்ணனிடமோ கனகா அக்காவிடமோ கூறுவதால் எந்த விதத்திலும் அது பயனளிக்கப் போவதில்லை. அவர்கள் என்னைப் பார்த்து ஏளனம் செய்யக்கூடும் அல்லது நான் சொல்வதைக் கேட்டு அச்சப்படக்கூடும் என்பதால் இந்த விஷயத்தை எனக்குள்ளே வைத்துக்கொள்வது என்று முடிவெடுத்துக்கொண்டேன். எனக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்தாலும் கூட அவள் என்னுடைய தேவதை என்று நம்புவதையே என் மனம் வெகுவாக விரும்பியது. குழப்பத்தில் இருந்து விடுபட்டு என்னுடைய தேவதைக்கு அருகில் சென்றேன். அவள் கண்களை மூடி இருந்த விதமும்  அவளுடைய முகம் முழுவதும் பரவி இருந்த சாந்தமும் பிரகாசமும்  விவரம் புரியாதவர்களும் வெளியாட்களும் வந்து பார்த்தால் எந்தக் கவலையும் இன்றி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நம்பும் படியே அமைந்திருந்தது. இலேசான காற்றில் அசைந்து கொண்டிருந்த அவளுடைய கூந்தலை வெகு நேரம் பார்த்து கொண்டிருந்தவன் மெல்ல அவளுடைய கைகளைப் பற்ற, பதிலுக்கு அவளும் என் கைகளைப் பற்றியது போன்றதொரு உணர்வு எனக்குள் தோன்றியது. நடந்தது நிஜமா அல்லது என்னுடைய பிரமையா என்று பகுத்துணர்ந்து ஆராய்ச்சி செய்ய என்னுடைய மனம்  ஒத்துக்கொள்ளாமல் அவள் என் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறாள் என்பதை ஆணித்தரமாக நம்பவே விரும்பியது. வெகு நேரம் அவளுடைய கைகளைப் பிடித்தபடி அவளருகில் நின்று கொண்டிருந்த எனக்குத் திடீரென்று வேலுச்சாமி அண்ணன் வரும் சத்தம் கேட்க கைகளை உதறி விட்டு அங்கிருந்து சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டேன்.

இப்பொழுது ஏனோ அவள் பற்றியிருந்த கைகளை உதறித் தள்ளியது என் மனதுக்குள் ஒருவித குற்ற உணர்வைக் கடத்தியது. சிறிது நேரத்தில் வேலுச்சாமி அண்ணன் மீண்டும் வெளியில் சென்று விட அவளருகில் சென்று கைகளைப் பற்றிய போது பதிலுக்கு அவள் என் கைகளைப் பிடிக்கவில்லை. ஒருவேளை நான் கைகளை உதறிய கோபமாக இருக்கலாம். அவளை சமாதானம் செய்யப் பல்வேறு வழிகளை யோசித்த எனக்கு இறுதியாக ஒரு முடிவு கிடைத்தது. வேகமாக வெளியில் சென்று கனகா அக்காவின் கடையில் ஒரு நெயில் பாலிஷ் வாங்கிக் கொண்டு வந்து அவளருகில் அமர்ந்தபடி அவளுடைய நேர்த்தியான சிறிய  விரல்களை என் கைகளில் ஏந்தி ஒவ்வொரு விரல் நகமாக நெயில் பாலிஷைத் தீட்டினேன். அவளுடைய சின்னஞ்சிறு விரல்களுக்கு அவை மிக அழகாகப் பொருந்திப் போயின. அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் வேலுச்சாமி அண்ணன் வரும் சத்தம் கேட்க அவளின் மேலே மூடி இருந்த துணிக்கு அடியில் அவளுடைய விரல்களை ஒளித்து வைத்துவிட்டு சிறிது தூரம் தள்ளிப் போய் நின்று கொண்டேன்.

“ஏன்டா, கனகா கடையில நெயில் பாலிஷ் வாங்கினியாமே, அது எதுக்குடா உனக்கு?” என்று அவர் கேட்டவுடன் எனக்கு லேசாக வியர்க்கத் தொடங்கியது.

“அது ஒன்னும் இல்லணே, வீட்டு கதவுல டோர் நம்பர் எழுதுறதுக்காக வாங்குனேன்.” என்று ஒரு வழியாகச் சமாளித்து அங்கிருந்து நகர்ந்தேன் .

அடுத்த நாள் நன்கு காய்ந்து நிறம் மாறியிருந்த அவளுடைய விரல் நகங்களைப் பார்த்தபோது பூக்களின் இதழ்களைப் போலக் காட்சியளித்தன. அவளுடைய கைகளை இறுகப் பிடித்தபடி விரல்களில் முத்தமிட்டேன். அவளுடைய கால் பாதங்கள் நடக்கத் தொடங்காத சிறு கை குழந்தைக்குரிய மென்மையுடன் காணப்பட்டன. ஆம், அவள்தான் தேவதை ஆயிற்றே நடப்பதற்கான தேவையும் சூழலும் அமையாமலே இருந்திருக்கலாம். அந்த கால்களுக்கு ரோஸ் கலர் செருப்பு  எவ்வளவு அழகாக இருக்கும் என்ற கற்பனையை என் மனதுக்குள் ஓட விட, அது அதீத ஆவலாக உருமாறியது. அவளுடைய  உள்ளங்கையை என் இரு கைகளுக்கு இடையில் வைத்த படி  எவ்வளவு நேரம் அவளுடைய பளிங்கு கன்னங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன் என்று எனக்கே நினைவில்லை. மெல்ல அவளுடைய காதருகில் சென்று மெல்லிய குரலில், “ஏய், உண்மைய சொல்லு…நீ யாருனு எனக்கு தெரியும். நீ என் கனாவுல வந்த ரெக்கை வச்ச தேவதைதானே…உன்னோட ரெக்கை எங்க.” என்று நான் கேட்ட கேள்விக்கு அவளிடமிருந்து எந்தவித மறுமொழியும் கிடைக்கவில்லை.

என்னுடைய உதடுகளுக்கும் அவளுடைய கன்னத்திற்கும் இடையே ஒரு விரல் நுனி அளவிலான இடைவெளியே இருந்தது. நொடிப் பொழுதில் எனக்குள் நடந்த ஏதோவொரு மாற்றத்தால் என்னையும் அறியாமல் கண்களை மூடியபடி இன்னும் அவளருகில் நெருங்கி அவளுடைய மென்மையான கன்னங்களில் அதிகம் அழுத்தாதவாறு என்னுடைய உதடுகளைப் பதிய வைத்தேன். மெல்ல அவளிடமிருந்து விலகி பின்னால் திரும்பியபோது அதிர்ச்சியளிக்கும் விதமாக என்னைப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார் வேலுச்சாமி அண்ணன். அவர் என்னைப் பார்த்த கூர்மையான அந்த ஒற்றைப் பார்வையில் குழப்பம், ஆச்சரியம், அதிர்ச்சி, அருவருப்பு என எல்லா விதமான உணர்வுகளும் வெளிப்பட்டன. அவரைப் பார்த்த மாத்திரத்தில் பதற்றத்தில் வியர்த்து என் கைகள் நடுங்கத் தொடங்கின. அதற்கு மேல் அங்கே நிற்க தைரியமின்றி எதுவும் பேசாமல் தலைகுனிந்தபடி வேக வேகமாக அவரைக் கடந்து அங்கிருந்து வெளியேறி வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தேன். அறையை விட்டு வெளியேற மனமில்லாமல் இரவு முழுவதும் யோசித்து தீர்க்கமானதொரு முடிவுக்கு வந்திருந்தேன். அவர் நம்பினாலும் நம்பாவிட்டாலும் என்னுடைய தேவதையைப் பற்றி அவரிடம் சொல்லிவிடவேண்டும் என்ற முடிவுதான் அது. இந்த உண்மையைச் சொல்வதனால் எங்களுக்குள் இருக்கும் உறவு பாதிப்படைந்தாலும் பரவாயில்லை என்று எனக்குள் சொல்லிக்கொண்டுதான் காலை வீட்டிலிருந்து கிளம்பினேன்.

“எப்பா, ஜீஹெச்லாம் ஏறங்குங்க” என்ற கண்டக்டரின் குரல் என் கவனத்தை கலைக்க பஸ்ஸிலிருந்து இறங்கி மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து பிணவறையை அடைந்திருந்தபோது முந்தைய நாள் எதுவுமே நடக்காதது போல் என்னைப் பார்த்து புன்னகைத்தார் வேலுச்சாமி அண்ணன்.

“என்னடா தம்பி,  லேட் ஆயிடுச்சா.” என்று அவர் கேட்டபோது தலையைக் குனிந்தபடியே, “ஆமாண்ணே, கொஞ்சம் லேட் ஆயிடுச்சு, அப்புறம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டு, “இருடா, நான் ஒரு எட்டு வீட்டுக்கு போயிட்டு வந்துடறேன்.” என்றபடி அவர் என்னைக் கடந்து வாசல் நோக்கிச் சென்ற போதுதான்  அவள் கிடத்தப்பட்டிருந்த படுக்கை காலியாக இருப்பது என் கண்களில் பட்டது.

“அண்ணே, இங்க இருந்த பொண்ணு எங்கண்ணே.” என்று நான் கேட்டதற்கு, “அந்தப் பொண்ணோட வீட்ல இருந்து காலையிலயே ஆளுங்க வந்துட்டாங்க போல இருக்குடா, விடியக்காலையிலேயே ஃபார்மாலிட்டீஸ்ல்லாம் முடிச்சுட்டானுங்க, ஏற்கனவே இறந்து மூனு நாள் ஆச்சுல்ல.. ஊருக்கு கொண்டு போற வரைக்கும் பாடி தாங்காது. அதான் இங்கேயே எரிச்சுரலாம்னு முடிவு பண்ணி நம்ம ஊரு மின்சார சுடுகாட்டுக்கு எடுத்துட்டுப் போயிருக்காங்க” என்று அவர் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாலித்தீன் கவரால் சுற்றப்பட்டிருந்த ரோஸ் கலர் செருப்பை கையில் இறுக்கமாக பிடித்தபடி அங்கிருந்து வெளியேறி மின் மயானம் நோக்கி ஓடத் தொடங்கினேன்.

சாலையில் ஓடத் தொடங்கி சில நிமிடங்களுக்குப் பிறகு என் கால்களில் சில கற்கள் குத்தி ஏற்பட்ட காயமும் வலியும் நான் செருப்பு அணியாமல் ஓடிக்கொண்டிருப்பதை எனக்கு நினைவுபடுத்தின. அதை பொருட்படுத்தாமல் வேகத்தைக் கூட்டி ஓடி மின் மயானத்தை அடைந்து அங்கே மூச்சிரைத்தபடி அவளைத் தேடிக் கொண்டிருந்த போதுதான் வெள்ளை நிற முழுக்கைச் சட்டை அணிந்த ஒரு நடுத்தர வயது ஆண் குறுந்தாடியுடன் என் முன்னாள் வந்து நின்றார்.

“எக்ஸ்கியூஸ் மீ, யார் நீங்க என்ன வேணும்” என்று அவர் கேட்டது என் காதுகளில் தெள்ளத் தெளிவாகக் கேட்ட போதிலும் பதில் சொல்லாமல் சுற்றி முற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் அவளுடைய அப்பாவாக இருக்கலாம், அவருடன் இருந்த இரண்டு நடுத்தர வயதுப் பெண்மணிகளில் ஒருத்தி அவளுடைய அம்மாவாகவும் இன்னொருத்தி அவளுடைய அத்தையாகவோ அல்லது சித்தியாகவோ இருக்கலாம்.

“ஹலோ, உங்களைத்தான் பா கேக்குறேன்.. ஹூ ஆர் யூ? ” என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தபோதே மின் மயானத்தில் இருந்த சிறிய சதுர வடிவிலான துவாரத்தின் வழியாக எரிந்து கொண்டிருக்கும் அவளுடைய சிதை என் கண்களில் பட்டது.

அவருடைய அடுக்கடுக்கான கேள்விகளைப் புறக்கணித்துவிட்டு என் கண்களிலிருந்து தாரைத்தாரையாகக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. என் உடல் நடுக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள பாலிதீன் கவரால் சுற்றப்பட்டிருந்த அந்தச் செருப்பை நெஞ்சோடு சேர்த்து இறுக்கமாக அணைத்து வைத்துக் கொண்டேன். அவளுடைய மென்மையான பொன்னிறப் பாதங்களும்  பளபளப்பான பளிங்கு கன்னங்களும் வர்ணம் பூசப்பட்ட சின்னஞ்சிறு விரல்களும் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தபோது சத்தம் போட்டு நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால், அதிகப்படியான மூச்சு திணறலாலும் வெகுதூரம் ஓடி வந்த களைப்பினாலும் நான் வலுவிழந்திருந்தேன். என்னைச் சமாளித்துக் கொண்டு திடமாக அங்கே நிற்க முயன்றபோதிலும் அடுத்த சில நொடிகளிலேயே தலை சுற்றி சுயநினைவிழந்து தரையில் விழுந்தேன்.

நினைவு திரும்பி கண்விழித்து பார்த்தபோது என் வீட்டில் என்னுடைய அறையில் என்னுடைய கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தேன். என் அருகில் அமர்ந்திருந்த வேலுச்சாமி அண்ணனும் அவருடைய மனைவியும் நான் கண் விழித்ததைப் பார்த்ததும் அங்கிருந்து கிளம்பத் தயாராகினர். நான் என் நெஞ்சோடு சேர்த்து இறுக்கி வைத்திருந்த செருப்பை என்னிடமிருந்து வாங்கி வேறு இடத்தில் வைக்க அவர்கள் முயன்ற போது அதை பிடிவாதமாக நான் மறுக்க, அதற்கு மேல் எந்த முயற்சியும் செய்யாமல் இருவரும் அங்கிருந்து கிளம்பினர். உறக்கமும் களைப்பும் கலைந்து காலையில் நான் கண்விழித்த போது எனதருகில் செருப்பில் சுற்றப்பட்டிருந்த பாலிதீன் கவர் மட்டும் காற்றில் ஊசலாடிக் கொண்டிருந்தது. கட்டிலில் இருந்து எழுந்து பார்த்தபோது வாசல் கதவுகள் திறந்திருந்தன. நேற்று இரவு அவை பூட்டி இருந்ததாக எனக்கும் நினைவில்லை. சுற்றி முற்றி எங்கு தேடியும் அந்தச் செருப்பு என் கண்களுக்குப் புலப்படவில்லை.  மெல்ல எழுந்து செருப்பைத் தேடியபடி வாசலை அடைந்திருந்தேன்.

அங்கே, மூன்றரை அடி நீளத்தில் பெயர் தெரியாத ஒரு பட்சியின் சிறகுகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button