
வழக்கத்திற்கு மாறாக
வழி மரங்களில்
அதிக காகங்கள்
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன
அங்கேயும்
இங்கேயும்
பறந்து திரிந்து கொண்டிருக்கின்றன
‘இறப்பு’
கடக்கிறவர்களுக்கு இயல்புதானே.
*
ஒரு கவிஞரின் மரணத்தை
கவிதையால் ஏற்றுக்கொள்ள முடியாது
அவர் நல்ல கவிஞர் எனில்
அதுவும்
ஊர் உறங்கும் நள்ளிரவில்
காகிதம் கரைய கண்ணீர் சிந்தி
‘நாறித்தான் சாக வேண்டும் நான்’
என்று கவியெழுதுமளவிற்கு
நல்ல கவிஞர் எனில்
நாறித்தான் செத்துப் போகும் கவிதையும்.
*
நாடக நாள்களின்
ஓர் அரங்கேற்றத்தில்
அவர்களைக் கண்டேன்
கண்டவுடன்
‘கண்ணிலே தெரிகிறது’ என்றார்கள்
இத்தனை நாள் மறைத்து வைக்கப்பட்ட எல்லாமும்
எழுந்தாடத் தொடங்கிவிட்டது.
*
எண்ணங்களுடனான இரவுகளில்
நேரம் கழிவதே இல்லை
எழுத்துகளுடனான இரவுகளில்
நேரம் கழிவது தெரிவதேயில்லை
எண்ணங்களை எழுத்தாக்கும் இரவுகளில்
நேரம் மட்டும்
போதுவதே இல்லை.
*
சுருண்டு விழுந்தவிட்ட
என் குழந்தையை
எடுத்து ஆரத்தழுவி மார்பில் சாய்த்து
என்ன சொல்வதென்று தெரியாமல்
நிசப்தத்தை அணைத்துக்கொண்டேன்
கண்ணீர் விடும் நிலை கடந்திட்டது
கத்திக் கூச்சலிடும் நிலை மறைந்திட்டது
ஒற்றைச் சொட்டு உயிருடன்
வாழப் போராடும் குழந்தையைக்
கொலை செய்ய ஆயத்தமாகிவிட்டேன்
நெடுங்கால நீண்ட இரவுகளின்
தனிமையின் வெறுமையைத் துணை கொண்டு
பிரிவின் ஆயுதம் செய்கிறேன்
வாழ விரும்பும்
அதற்காய்ப் போராடும்
ஓர் உயிரை எடுக்க நான் யார்?
நாம் யார்?
ஊனம் என்று சொல்கிறீர்களே!
ஒரு பிள்ளை விளையாட்டை
வெறுக்கும்
விமர்சிக்கும்
மனிதர் வேடமிட்ட உயிர்களுக்கிடையே
என்ன பேசுவது?
கருணைக் கொலை என்று பெயர் வைக்கலாம்
இது கருணையற்ற கொலை
இயந்திரமாக ஏற்று
ஆயுதத்தை எடுத்து
முதலில்
நினைவுகளின் தடங்களை அறுத்தேன்
பின்
தாய்மையெனும் தன்மை அறுத்தேன்
பாசமெனும் பிணைப்பை அறுத்தேன்
நேசம் கொண்ட நெஞ்சை அறுத்தேன்
நெஞ்சில் கனக்கும் எல்லாம் அறுத்தேன்
என் குழந்தை செத்துவிட்டது
எனக்குள் இருந்ததும்…
அடடே!
என் குருதி குடித்து
பூத்த ரோஜாப்பூ எத்தனை அழகு
இன்னுமொரு ரோஜாச்செடி வாங்க வேண்டும்.
*
எந்தன் உயரம் வளர்ந்தாயிற்று
கால்களும் கைகளும்
உள்ளமும் கனவுகளும் கூட…
ஒலிபெருக்கியில் பெயர் கேட்டதும்
ஓடி வந்து முன் நிற்கிறாய்
அந்திரத்தில் ஆடிடும்
விழாக் காகிதங்களை விட
அதிகம் ஆடுகிறது மனம்
அணிந்திருக்கும் நீல ஆடை
இன்பில் பூத்து ஓவியமாகிறது
உன்னாலான ஓவியத்தை
உலகமே இரசிக்கிறது
இத்தனை இன்பம் தரத்தானா
அப்பா
கண்ணீர் பிரசவித்த
அத்தனை எதிர்ப்புகளும்?
*