
நாளை என்பது நள்ளிரவில் சூரியன்
நேற்றுகளும் இன்றுகளும்
நாளைய காலம் நினைத்துப் பார்த்து மகிழ அருகதையற்றவை
வரலாறுகள் எழுதப்படுகின்றன ரத்தத்தாலும் கண்ணீராலும்
தேசங்கள் எழுப்பப்படுகின்றன
கைப்பற்றப்பட்ட நிலங்களில் அடுக்கப்பட்ட பிணங்களின் மீது
கற்கால வேட்டைச் சமூகத்திலிருந்து
நாம் வந்தடைந்த தூரம் அதிகமில்லை
பரிணாம வளர்ச்சியில் மகத்தான முன்னேற்றம்
மனிதன் என்னும் சொல்லை அர்த்தமற்றதாக்கியது
போர்களின் கூட்டக் கொலைகளை வீரம் என்கிறோம்
ஊர்களை அழிப்பதை வெற்றி என்கிறோம்
ஒவ்வொரு தேசத்தின் ஆயிரத்தாண்டு வரலாறுகளில்
அரசாட்சி, மக்களாட்சி, சர்வாதிகாரம்
குடியரசு, ஒன்றாட்சி, கூட்டாட்சி
ராணுவாட்சி, பொதுவுடைமையாட்சி
அனைத்தும் ஆண்டன, மாறின
எதுவும் நிலைத்திருக்கவில்லை நீண்ட காலம்
நிரந்தர ஆட்சிச் சித்தாந்தம் ஏதுமில்லை உலகில்
ஆளும் கட்சிகள், ஆட்சி முறைகள் மாறிக்கொண்டேயிருக்கும்
மாறவே மாறாதது ஆள்வோரின் பேராசை
அரசியல் நரிகளின் ரட்சக அரிதாரம்
ஓட்டு மந்தை ஆடுகளுக்கான அதிகார சூதாட்டம்
உட்டோபியா – என்றும் கனவா?
சமத்துவம் எப்போதும்
பிணவறையிலும் மயானத்திலும் மட்டுமா?
ஒரே வானம்; ஒரே பூமி
மனிதச் சரும நிறம் வேறுபடலாம்
பச்சை, நீலம், மஞ்சளில் நம் ரத்தங்கள் இல்லை
ஹைட்ரஜன், மீத்தேன் வாயுக்கள்
யாருக்கும் உயிர்வளியல்ல
தேசம், மதம், இனம், ஜாதி
மனிதனைத் கூறு போட்டு விற்கும் கசாப்புக் கத்திகள்
ஒடுக்குமுறை, தீவிரவாதம், பயங்கரவாதம்
மனிதனை மிருகமாக்கும் காட்டேரிக் கொள்கைகள்
இத்தனைக்கும் இடையே
துரதிர்ஷ்டசாலிகளான நமது காலத்துக்குப் பிறகு
நாளைய காலமாவது நலமாக இருக்கும் என்ற நம்பிக்கை
விதைக்கப்படுகிறது அரிதாகவேனும்
பாருங்கள் அந்த சமூக சேவகர்களை
உண்மையான அரசியல் போராளிகளை
ஏழைப் பங்காளிகளான தியாகிகளையும்
குருதி, கண், உடலுறுப்புக் கொடையாளிகளையும்
பேரிடர் காலங்களில் நிவாரணமளிக்கும் கரங்கள்
தொலைதூரங்களிலிருந்தும் ஓடோடி வந்து
மீட்புப் பணி புரியும் தன்னார்வலத் தொண்டர்கள்
அபலைகளுக்குப் புனர் வாழ்வு தரும் நற்பணியர்கள்
இவை எல்லாவற்றுக்கும் அப்பால்
இன்று நான் மாலை நடை சென்றபோது
உலக வரலாற்றில் பதிவாகாத
ஒரு பேரற்புத நிகழ்வு
ஏழு வயதுச் சிறுமி ஒருத்தி
வழி தவறிய நாய்க்குட்டியை இரு கைகளிலும் ஏந்திப் பிடித்தபடி
ஒவ்வொரு வழிப்போக்கரிடமும் என்னிடமும் வினவினாள்
‘இது உங்களுடையதா, அங்க்கிள்?’ என
அந்தச் சிறுமியின் கண்களில் கண்டேன்
எதிர்காலம் பூத்துக் கனிப்பதை
நாளை என்பது நள்ளிரவில் சூரியன்
சூரியனும் நாளையும் ஒருபோதும் கண்டதில்லை
தங்கள் நிழல்களை.
*
மூன்றாவது பேரினம்
நீருக்குள் மூழ்கிய உடலின் பெரும்பகுதி
வெளியே தெரிவது சுவாசக் குழல் மட்டும்
நனவிலி நீர்நிலை என் வீடு; ப்ரக்ஞை நிலம் என் வாழ்வாதாரம்
நிலத்திற்கு வருகிறேன் இரவோடிரவாய்
மேய்கிறேன் புல்வெளியில் கனவுகளை
ஒளிந்திருக்கும் அர்த்தங்களை வேட்டையாடி
நிலவாழ் உயிரிகளில் மூன்றாவது பேரினம்
மிதக்க முடியாது நீரில்
ஆயினும் அதுவே என் வாழ்விடம்
கனமான உடலுள் லகுவான ஆன்மா
மண்ணிலும் இல்லை, நீரிலும் இல்லை முழுமையாக
சமூகத்தின் விளிம்புகளில் உலவுகிறேன்
ஒதுக்கப்பட்ட நிலைகளின் உருவகமாக
அகவயமியான நான் வெளிப்படும் தருணங்கள் குறைவு
ஆனால், என் உணர்ச்சிகள் உண்மையானவை
வெயில் தாங்காத தோலுக்குள் ஒளிந்திருக்கும் மெல்லுணர்வுகள்,
இரண்டு உலகங்களுக்கும் இடையே ஊசாடியபடி
என் மூன்றாம் உலக வாழ்க்கை
மண்ணும் நீரும் உயிர்த் தளங்கள்தான்
எனது தனிச்சிறப்புக்கு அவை போதாது
மேலும், உயிரோடு இருப்பது வேறு; வாழ்தல் என்பது வேறு
காத்திருக்கிறேன்
என்னை முழுதாக நிலைநாட்டும் வெளிப்பாட்டு வாய்ப்புக்காக.
*
குடிகாரப் பியானோ
மானுடர் ஆழ்ந்துறங்கும் நிசிகளில் முட்டக் குடித்துவிட்டு
நிகரற்ற போதையில் தள்ளாடியபடி
தன்னைத்தானே இசைத்துக்கொள்கிறது குடிகாரப் பியானோ
கருப்பு வெள்ளைக் கட்டைகளிலிருந்து
நிறப்பிரிகை ஸ்வரங்கள் பிறழ்ந்து கசிய
கித்தானில் நடனமிடுகிறது தூரிகை
திரவக் கனவுகள் ஷாம்பெயினாகச் சொட்டுகின்றன
கருப்பு ஆசைகள் சாவியிலிருந்து பரவுகின்றன
‘டிங்… டோங்… டியாங்… டாம்…’
வாசிப்பவர் இல்லை இங்கே
தானே தனக்காக இசைத்துக்கொள்கிறது பியானோ
மனித சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றலுடன்
மனதை உருக்கும் சோக ராகத்தில்
மதுவில் நனைந்த நெஞ்சின் விம்மலாக
பியானோ குடிப்பதற்குக் காரணம்
கடந்த கால சொந்தத் துயரக் கதையாக இருக்கலாம்
எந்த சோகத்தையும் சுகமாக்கித் தரும் திறன்
இசைக்கு மட்டுமே உண்டு
‘டின்… டாங்… டொன்ங்…’
சுவரில் உறங்கும் சிலந்தி திடுக்கிட்டு விழித்தது
அதன் கனவிழந்த கண்கள்
இசைத் திசை நோக்கித் திரும்பின
பியானோவின் சோக மெல்லிசை இனிய வலையாகி
சிலந்தியைச் சிக்க வைத்தது
நள்ளிரவு எலி, தன் வளையிலிருந்து
மெல்ல வெளியே எட்டிப் பார்த்தது
இரை தேடும் வேட்டை மறந்து
துன்ப ஸ்வரங்களில் தன் துயருக்கு ஆறுதல் கண்டது
‘டாங்… டிங்… டாங்…’
காலத்தின் கடமை தவறாத சேவகனான சுவர்க் கடிகாரம்
இசைக்கேற்பத் தாளமிட்டது
இருள் திருடனான நிலவு
தூசி படிந்த கண்ணாடி ஜன்னல் வழியே ஊடுருவி
பியானோவின் மேல் வெள்ளி ஒளியை ஊற்றியது
‘டிக்… டோக்… டுக்…’
ஜடப்பொருட்கள் மீயொலியிசையால் உயிர்பெற்றன
இரும்பு மேஜை நெகிழ்ந்தது
மெல்லிதய சோஃபா விம்மியது
முரட்டு கார்பெட்டும் குழைந்தது
பியானோவின் குடிகாரப் பிதற்றலிசை
உயிரினங்களுக்குத் தாலாட்டாகி
அவற்றை அமைதியாக உறங்கச் செய்கிறது
‘டீம்… டும்… டாம்…’
வைகறைக்கு முன் பியானோவின் போதை தணிந்தது
மாயாஜால இசை மங்கி மறைந்தது
புலரிக்கு முன் மீண்டும் அது அசையாத ஜடமானது
ஆனால் இரவுகள் மீண்டும் வரும்
குடிகாரப் பியானோ போதையில் தள்ளாடியபடி
தனது இதயத்தின் துன்பியல் இசையைத்
தனக்காக இசைக்கும்
வரலாற்றின் வலிகளோடு; காலத்தின் ஒவ்வாமையோடு
மனிதச் செவிகள் கேட்கத் தவறும்
எரியும் இதயத்தின் மீயொலியிசை
ஜடங்களை உயிர்ப்பித்து
அமைதியில் துயில்கொள்ளத் தாலாட்டும்
ஆனால், அது விடியும் வரை விழித்திருக்கும்