இணைய இதழ் 121சிறுகதைகள்

பித்ருக்கள் கடன் கொடுப்பதில்லை – கே.ரவிஷங்கர்

சுரீர்ரென்று மண்டையில் மின்னல் போல வலி ஊடுருவியதும் உடம்பு உதறியது அம்பிகா குமாரிக்கு. அதே வேகத்தில் உஸ்ஸ்ஸென்று பல்லைக் கடித்துத் தலையில் கை வைத்துக் குனிந்தபடித் திரும்பிப் பார்த்தாள். ‘விஷ்க்’ – காக்கை பறந்து வந்து கொத்திய அதே வேகத்தில் இறக்கையைப் பறப்பிப் பறந்தபடி எதிர்ப்பக்கத்தில் உள்ள ஒரு பிளாட்டின் ஷன்ஷேடில் உட்கார்ந்துக் கத்த ஆரம்பித்தது. கூடவே மற்ற காக்கைகளும் கூட்டமாகக் கத்தியது. சுருங்கிய முகத்தில் மெல்லிய புன்னகையுடன் மெதுவாகத் தலைத் தூக்கிக் காக்காவைப் பார்த்தாள். போன மாதம் கொத்திய காக்காவா? இல்லை…. இல்லை. அது பூஞ்சையாக இருந்தது. இது சராசரிக் காக்கையை விடச் சற்று உப்பிய உடல்வாகு கொண்டிருந்தது. காக்கை குடும்பத் தலைவர் தோற்றம். நீளமான அலகு. பளபள கருப்பு நிற இறக்கைகள். பக்கவாட்டில் பார்த்தபடித் தலையை இப்படியும் அப்படியும் அசைத்துக் கொண்டிருந்தது. தூரத்தில் அம்பிகாவிற்குப் பின்னால் வாக்கிங் வந்தவர்களையும் பார்த்தது. இவர்கள் கத்த விடமாட்டார்கள். அவர்கள் அம்பிகா போல அல்ல. பாதையை மாற்றிவிடுவார்கள். கூடு இருப்பது தெரியும்.

மீண்டும் கையைத் தலையில் வைத்து அடிபட்ட இடத்தில் தேய்த்தாள். சுரீர் வலிக்குக் காரணம் அடர்த்தியான முடி இல்லை. அறுபத்தைந்து வயதாகிச் சுருங்கிய மண்டைத் தோலிலும் பலம் இல்லை. மெத்தென்று படர்ந்து மாமிசம் போலக் காட்சி அளிக்கும். காக்கையின் கண்களுக்கு எதிர்ப்பு இல்லாதது போலச் சின்ன உருவமாகத் தெரியும் குள்ளமான உடல்வாகு.

வலி குறைந்து மரத்தை விட்டு நடக்க ஆரம்பித்ததும் பறந்து காணாமல் போனது. இதையெல்லாம் பால்கனியில் நின்று கவனித்துக் கொண்டிருந்த மூணாவது பிளாக் முதல் மாடி எட்டாம் நம்பர் வீட்டு அனுசுயா நடராஜன் அம்பிகாவை வினோதமாகப் பார்த்தாள். ‘கூடு இருக்குன்னு தெரியும் தள்ளி நடந்தா என்ன? சில்லி ஃபிரீக் (silly freak) மேம்’ எரிச்சலில் முணுமுணுத்தபடி உள்ளே போனாள். அம்பிகாவிடம் பேசுவது இல்லை. முதல் காரணம் காக்கா. இரண்டாவது வயது வித்தியாசம். இவள் மட்டும் இல்லை. இந்தப் பெரிய வளாகத்தில் வசிப்பவர்கள் இப்படித்தான் இவளை வினோதமாகப் பார்த்துப் பழகிவிட்டார்கள். இவளுக்கு ‘காக்கா லேடி’ என்ற பட்டப் பெயரும் உண்டு. காலை வாக்கிங்கில் மட்டும்தான் அம்பிகா தென்படுவார். செக்யூரிட்டி ஜான்சன் வைத்த பெயர் ‘காக்கா மெண்டலு’. அந்தப் பெயர் வைப்பதற்கு முன் காக்கா கூடு கட்டி இருக்கும் இடங்களைக் கை காட்டி ‘உசாரா இருங்க’ என்று அறிவித்திருந்தான். தொப்பியும் அணியச் சொன்னான். இதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் மீறி வாண்டட் ஆகா கொத்து வாங்க ஆரம்பித்ததும் காக்காவை முன்னொட்டாகச் சேர்த்து ‘காக்கா மெண்டலு’ ஆக்கிவிட்டான். அனுதாபப்பட்டு பல தடவை எச்சரித்திருக்கிறான். மருந்துக்கும் சட்டை செய்ய மாட்டாள்.

இன்று கொத்து வாங்கியது வேறு ஒரு இடத்தில். இப்போது மூணாவது பிளாக்கை ஓட்டி இருக்கும் பெரிய மரத்தில் கூடு கட்டி இருக்கிறது காக்கா. அந்த மரத்தை நெருங்கும் போதே காக்கைகள் குழுவாகக் கத்த ஆரம்பித்து விட்டது. வார்னிங் சிக்னல் கொடுத்துதான் கொத்துகிறது. மற்றவர்கள் ஜாக்கிரதை உணர்வுடன் நடக்கும் போது அம்பிகா குமாரி மட்டும் கவனிப்பதில்லை. இதுதான் பிளாட்வாசிகளுக்குப் புரியவில்லை. அதன் கீழே நடக்க விடுமா? காக்கா கூட்டம் திரண்டு அதன் தலைமையில் ஒரு காக்கா பறந்து வந்து சடாரென்று கொத்தி விட்டது. காக்கைக்குத் தன் குஞ்சுப் பொன்குஞ்சு இந்த விஷயத்திலும். கொத்தியதை விட நாராசாரமாகக் காக்காவின் அபாயக் குரல்கள் கேட்கச் சகிக்கவில்லை பிளாட்காரர்களுக்கு. ‘இன்னிக்கும் கொத்து வாங்கி இருப்பா!’. பிளாட்வாசிகளுக்குத் தெரிந்த விஷயம். அவள் கூட வாக்கிங் வருபவர்கள் சொல்லியும் கேட்பதில்லை.

சமீபத்தில் இறந்த இன்னொரு செக்யூரிட்டி குணசாமி இவள் மீது கரிசனம் கொண்டு குச்சியால் காக்கைகள விரட்டுவான். ‘அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும் விரட்டாதீங்க’ என்று சொல்லித் தடுப்பாள். வீட்டில் எடுத்துச் சொல்வதற்கும் ஆள் இல்லை. உறவுகளோடும் ஒட்டுதல் இல்லை. தனியாக வாழும் பெண்மணி. குழந்தைகள் கிடையாது. கணவர் இறந்து ஒன்றரை வருடம் ஆகப்போகிறது. காசிக்குப் போய்த் தனியாகக் காரியம் செய்தாள். இது யாருக்கும் சுத்தமாகத் தெரியாது.

கொத்து தவிரக் காக்கையின் எச்சத்தையும் தலை தோள் பட்டையில் வாங்கி இருக்கிறாள். வீட்டிற்குப் போய்தான் துடைத்துக் கொள்வாள். இதுவும் பிளாட்காரர்களை முகம் சுளிக்க வைத்தது.

பிளாட்டின் பின்னால் இடது பக்கம் இரண்டு மூன்று மரங்கள் உண்டு. அங்கும் நிறையக் காக்கைகள் வசிக்கிறது. அவ்வப்போது புறாக்களின் கழுத்துகள் நெரிக்கப்பட்டுச் சவமாகக் கீழே விழுந்து கிடக்கும். உரிமையாளர்களுக்குத் தொல்லைதான். ஆனால், குடித்தனக்காரர்கள் இதை மதிப்பதில்லை. அருகில் இருக்கும் பிளாக் இரண்டாவது மாடிக் குடித்தனக்காரி இளவரசி ராஜ்குமார் உதிரித் தின்பண்டங்களை இறைத்து வைத்திருப்பாள். வயலில் நெல் விதைத் தூவுவது போலத் தூவி வைத்திருப்பாள். காக்கைகள் உட்கார்ந்துக் கொத்திக் கொண்டிருக்கும். ஆனால், இளவரசிக் கொத்து வாங்க மாட்டாள். அம்பிகா மகிழ்ச்சியுடன் நின்று பார்த்துவிட்டுப் பார்த்துவிட்டு வாக்கிங் தொடருவாள். அம்பிகா இதை ஒரு நாளும் செய்வதில்லை. இதுவும் பிளாட்வாசிகளுக்குப் புரியாத புதிர். தீனி அருகிலேயே கிடைப்பதால் வசதி காக்கைகளுக்கு. தின்றுவிட்டு மேலேறி இனப் பெருக்கம் செய்யும் வழக்கம் கொண்டிருந்தது. அம்பிகாவிற்கு வாடிக்கையாகக் கொடுக்கும் கொத்துக்கும் தயாராக இருந்தது.

ஏன் இவ்வளவு காக்கை? பிளாட் வளாகம் எட்டுப் பிளாக்குகளும் அதில் நிறைய வீடுகளும் கொண்டது. சின்னத் தோப்பாக இருந்த இடத்தில் டெவலப் செய்து கட்டியது. மனையைச் சுற்றி இருக்கும் மரங்களை அப்படியே விட்டுவிட்டு நடுவில் கட்டிவிட்டார்கள். குளுகுளுவென இருந்தது வந்த புதிதில். காக்கைகளும் புறாக்களும் அணில்களும் ஓணான்களும் பூச்சிகளும் மரங்களில் நிரம்பி வழிந்து சோலையாக இருந்தது. வீடுகளில் குடி வந்த பிறகுதான் பிளாட்வாசிகள் சோலையைத் தொல்லையாக உணர்ந்தார்கள். வாட்ஸ் அப் மூலம் தொல்லைகள் பகிரப்பட்டது. பிளாட் அசோசியேஷன் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

இந்த வளாகத்தில் இவளைத் தவிர யாரும் கொத்து வாங்கியது இல்லை. சுலபமாகத் தவிர்க்க வேண்டிய விஷயம். இது நாய் துரத்தும் பிரச்சனை இல்லை. மரத்தின் கீழ் அம்பிகா போல தில்லாக வந்தாலும் கொத்தாமல் இருக்கப் பிளாட்காரர்கள் டெக்னிக் வைத்திருக்கிறார்கள். கூடு இருப்பது தெரிந்து மரத்தின் அருகில் வரும் போது குச்சியைப் பிடித்துத் தலையின் மேல் சுற்றியபடி வருவார்கள். காக்காக்கள் நாராசாரமான வறட்டுக் கத்தலோடு நின்றுவிடும். ‘கத்துங்கக் கத்துங்க’ என்று ரசித்துவிட்டு நடப்பார்கள். அம்பிகாவிற்குக் கைவலி என்பதால் குச்சிப் பு(பி)டி விரட்டல் சாத்தியமில்லை. இன்னொரு டெக்னிக் வாக்கிங் வரும் போது திசை மாற்றுவார்கள். அம்பிகா இதில் எதையுமே வழக்கம் போலச் சட்டை செய்வதில்லை. வாக்கிங் தனியாகத்தான் போவாள். யாரையும் கூட்டுச்சேர்க்க மாட்டாள். முதலில் சிலர் பேர் கூட்டாகப் போய் இவளால் கொத்து வாங்கினார்கள். கொத்த வரும்போது இவளை விட்டுத் திபுதிபுவென ஓடியும் இருக்கிறார்கள். தனியாகப் போயும் கொத்து வாங்காமல் கடந்திருக்கிறாள். அன்று அவளின் முகபாவத்தை யாரும் கவனித்ததில்லை. இன்று கொத்து வாங்குவது பத்தாவது தடவை. கடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது தடவை. செல்போனில் கணக்கு வைத்திருக்கிறாள்.

போன மாதம் கொத்தித் தலையில் சீழ் பிடித்த நிலையில் டாக்டரிடம் காட்டி மருத்து மாத்திரை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தாள். உறவுக்கார டாக்டர் அவளைத் திட்டி அனுப்பினார். அடுத்த முறை இது மாதிரி நிகழ்ந்த போது டாக்டரை மாற்றினாள்.

சமீபத்தில் குடி வந்த பேராசிரியை அகிலா பரமேஸ்வரன் அவரிடம் நட்பாகிக் கவுன்சிலிங் செய்து வந்தாள். அவள் நல்ல மன நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. தலையாட்டிக் கேட்டுக் கொள்வாளே தவிர உள்வாங்கியது இல்லை என்பதை அகிலா உள் வாங்கிக் கொண்டாள். அம்பிகா வார்த்தைகளும் விட மாட்டாள். அகிலா அவளை அவள் இஷ்டப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டாள். கடைசியாக ஒரு மாதப் பழக்கத்தில் அம்பிகாவிற்குக் கணவனைப் பற்றிய ஏதோ ஒரு விஷயம் சின்னப் பொறியாகத் தோன்றி மறைந்தது. அகிலாவிற்கு அதில் ஒன்றும் பெரிசாக விளங்கவில்லை. அம்பிகா இவளைத் தவிர்க்க ஆரம்பித்ததும் அகிலாவும் விட்டுவிட்டாள். இது நாளைடைவில் சரியாகி விடும் என்று சமாதானமானாள்.

ரத்தமும் சதையுமானப் பல வருட கேஸ் ஸ்டடி அனுபவத்தில் அம்பிகாவின் கேஸ் அகிலாவிற்கு வித்தியாசமான ஒன்று. ‘மிஸ்டிக் சித்தா பிஹேவியர் டெண்டென்சி’ என்று அவ்வப்போது தோன்றி அவள் மேல் கரிசனம் வரும்.

இப்படி அம்பிகா குமாரி கொத்து வாங்குவது பல வித வளாக வம்பாக இருந்து பல மாதங்கள் ஓடியது. கடைசியாக உளவியல் படிக்கும் மாணவி ஸ்ரீதிவ்யா கணேசன் இதை ‘masochistic behaviour’ என்று பக்கத்து பிளாட்வாசி ரம்யாவிடம் தனிப் பேச்சில் ஆங்கிலத்தில் பகிர்ந்து கொண்டாள். வலியில் சுய இன்பம் காண்பது. ஃபோர்னோகிராஃபியில் இதை தனி மெனுவாக வைத்திருப்பார்கள். துன்புறத்தப்பட்டு கலவி கொள்ளுதல். நாளடைவில் மரியாதை குறைந்து என்ன மாதிரியான விநோதமான ஜந்து என்றும் வெளியே சொல்லாமல் மனதில் எண்ணிக்கொண்டார்கள்.

இப்படியான நேரத்தில் அம்பிகா குமாரி ஒரு நாள் இறந்து போனாள். சமயலறையில் விழுந்து கிடந்தாள். வேலைக்காரி மூலம்தான் தெரிய வந்தது. பிளாக்வாசிகள் அந்த ‘காக்காக் கொத்து அம்மா’ இறந்துட்டாங்க என்று பேசிக் கொண்டார்கள். பிணம் அமரர் ஊர்தியில் கேட்டை விட்டுப் போனதும் ‘கொத்து கொத்தாக வாங்கி பித்ரு கடன தீர்த்துட்டு போய்ட்டாங்க!’ என்று பேசிக் கொண்டார்கள். எல்லாம் முடிந்து ஒரு வழியாக மேலே போய் விட்டாள். காக்கைகளுக்கு எட்டாத உயரம்.

லட்சக் கணக்கில் பித்ருக்கள் வரிசையில் நின்று சந்தோஷமாக அம்பிகா குமாரியை வரவேற்றார்கள். பூலோகவாசிகள் போல பட்டப் பெயர் வைத்து அழைக்காமல் வாஞ்சையாக ‘செளபாக்கியவதி அம்பிகா குமாரி ஸ்வாகதம்….. ஸ்வாகதம்…!’ என்று வரவேற்றார்கள். காக்காக் கொத்திற்கு பித்ரு கடன் என்று தங்கள் மேல் பழி போடவில்லை. இதை  வெளியிலும் சொல்லவில்லை. சொல்லாமல் மனசிலும் அமுக்காகக் தேக்கிக் கொள்ளவில்லை. இப்படியாக  பூலோகத்தில் நாட்களைக் கடத்தி இங்கு வந்து சேர்ந்தது பித்ருக்களுக்கு மிகுந்த ஸ்ரேஷ்டமாகப் பட்டது.

பித்ருக்கள் யாருக்கும் கடன் கொடுப்பதில்லை.

ravishankark57@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button