பிக்பாஸ் 3 – நாள் 71-78 – பாய்ஸ் டீம் போட்டு வைத்த ஃபைனல்ஸ் திட்டம் ஓக்கே கண்மணி!!
மித்ரா
![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/09/WhatsApp-Image-2019-09-10-at-1.03.43-PM-1-695x405.jpeg)
சென்ற வார பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றித் தான் பேசப் போகிறோம். ஆனால், அதற்கு முன்பு கெத்து என்றால் என்ன, ரவுடித்தனம் என்றால் என்ன, ‘இவளை எப்டிடா சமாளிக்குறது?’ என மற்ற ஹவுஸ்மேட்ஸை கையறு நிலையில் தவிக்க வைப்பது எப்படி எனத் தெரிந்து கொள்ள நாம் ஒருமுறை போன வருடம் வரை சென்று பிக்பாஸின் செல்லக்குட்டியான (எனக்கும் தான்) ஐஸ்வர்யாவைப் பார்த்து வர வேண்டும். போன சீசனில் அவர் ஆடியதெல்லாம் வெறித்தன விளையாட்டு. இப்போதிருப்பவர்கள் போல நியாயம்டா நேர்மைடா என சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருக்க மாட்டார். “அநியாயம் தான் பண்ணுவேன் அப்டித் தான் பண்ணுவேன். முடிஞ்சதைப் பண்ணிக்க” ரகம். அதுதான் தைரியம், திமிர், தெனாவெட்டு எல்லாமும். அந்த சர்வாதிகாரி டாஸ்கை எல்லாம் இந்த சீசனில் யாருக்கும் கொடுப்பது போல நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இப்போது அப்படியே நிகழ்காலத்திற்கு வந்து வனிதாவை நினைத்துக் கொள்ளுங்கள். ஒரே கசகசா நொசநொசா பேச்சுகள் மட்டும் தான். இதில் ரவுடி பிம்பம் வேறு.
இங்கு யாரும் ஒழுக்கவாதிகள் கிடையாது. அனைவரும் மக்களின் பல்ஸ் பிடித்துப் பார்த்து விளையாடத் தான் விரும்புகிறார்கள். அப்படித் தான் விளையாடுவதாக நினைக்கிறார்கள். வனிதா ஏதோ காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டார். மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால், மக்கள் நம்மிடம் விரும்புவது இதைத் தான், மசாலா கம்மி ஆனதால் தான் நம்மை மீண்டும் அனுப்பியிருக்கிறார்கள். அப்படியென்றால் நம் எவ்வளவு பெரிய ஆள் என அவரே நினைத்துக் கொண்டார். பத்தாததற்கு சென்ற வார பார்வையாளர்கள் கேள்விகளின் போது வேறு ஒருவர் என்னத்தையோ கேட்டு விட தினவு கொண்டு எழுந்து விட்டார் வனிதா. ஆனால், அவர் கெரகம் எந்த பஞ்சாயத்தும் சிக்கவில்லை. சாக்ஷி உள்ளே வர….ரெஸ்ட் ஈஸ் ஹிஸ்டரி. உண்மையிலேயே ஒரு பிரச்சனை நடந்து அதை நாம் இப்படியெல்லாம் பஞ்சாயத்தாக்கினால் பரவாயில்லை வனிதாக்கா. சும்மா ரோட்டில் போறவனை கூப்பிட்டு, “ஏன்டா ரோட்டில் போற வீட்டிலேயே இருக்க வேண்டி தான?” எனக் கேட்பது போல் உள்ளது உங்கள் Affair கதை.
முதலில் இந்த அஃபேர் வார்த்தையைப் பார்க்கலாம். என்ன வார்த்தை இது? உண்மையிலேயே பக்குவப்பட்ட நம் ஷெரினையே வெடித்து அழ வைக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்ததா? Affair என்ற ஆங்கில வார்த்தைக்கு ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியில் என்ன அர்த்தம் வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், இந்தியர்களைப் பொறுத்தவரையில் அதன் அர்த்தம் ‘கள்ள உறவு.’ ஷெரின் எல்லா விசயங்களிலும் பக்குவமானவர். முதிர்ச்சியாகக் கையாளக் கூடியவர். முற்போக்கானவர். அதனால் தான் இந்த வார்த்தைக்கு அவர் வெடித்தது சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், அதன் பிறகு யோசித்துப் பார்க்கையில், ஷெரினுக்கு அந்த வார்த்தை பிரச்சனையில்லை. அதை தன் உற்ற தோழியான வனிதா சொன்னது சொன்னது தான் பிரச்சனையாக இருக்குமோ எனத் தான் தோன்றுகிறது. வனிதாவின் குணம் தான் இதிலும் விளையாண்டது. “வாய் தவறி அந்த வார்த்தை வந்து விட்டது. மன்னித்துவிடு” எனக் கேட்டிருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். ஆனால், அவர் மீண்டும் மீண்டும் பேசிப்பேசி அதை நிறுவ முயன்றார்.
இப்போது கள்ள உறவுக்கு வருவோம். முதலில் எந்த உறவுக்குள்ளும் சென்று மூக்கை நுழைப்பதே அநாகரிகம். இதில் அதை நல்ல உறவு, கள்ள உறவு என தரப்பரிசோதனை வேறு செய்கிறார்கள். “அவர்கள் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே. அவர்களுக்குத் தெரியாதா என்ன செய்கிறார்களென” என்ற பக்குவம் நம் சமூகத்தில் யாருக்குமே கிடையாது. வெளிப்படைத்தன்மையை சமூகம் அனுமதிக்காத போதும், அங்கீகரிக்காத போதும் மட்டுமே அங்கு ரகசியங்கள் உருவாகின்றன. இங்கு ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே ஏராளமான சந்தேகப் பார்வைகளை தினம்தினம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. காதலாக இருக்குமா? கள்ளக் காதலாக இருக்குமா? ஒருவேளை படுக்கையைப் பகிர்ந்திருப்பார்களோ? இல்லை அண்ணன் தங்கையாக இருப்பார்களோ? இவை தான் அவர்களைச் சுற்றிச்சுற்றி வரும் கேள்விகள். இதில் நட்பு என்ற வார்த்தைக்கு இடமேயில்லை. நண்பர்களாக இருப்பார்கள் எனத் தோன்றவே செய்யாது. உண்மையில் அது என்னவாக இருக்கும் என்று நாம் யோசிப்பதே தேவையில்லாத ஒன்று தான். யாராக இருந்தால் தான் நமக்கென்ன வந்தது. அவர்கள் வாழ்வு. என நினைத்துக் கொண்டு சலனமற்ற ஒரு வெற்றுப்பார்வையில் ஒரு ஆணையும் பெண்ணையும் என்று கடக்க முடிகிறதோ அன்று தான் நாம் பக்குவமடைந்து விட்டதாக அர்த்தம். அதனால் தான் தர்ஷன்–ஷெரின் உறவைப் பற்றி பேசாமல் கடக்கிறேன்.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன். பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் யாரும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. நம் பொதுச்சமூகத்தின் பிரதிநிதிகள். இன்று வனிதா ஷெரினைப் பார்த்து கேட்டதற்காகக் கொந்தளிக்கும் அனைவரும் தினமும் எத்தனை பெண்களை என்னென்னவாக நினைத்திருக்கிறோம், புறணி பேசியிருக்கிறோம் என்பதையும் நினைத்துக் கொள்வோமாக.
அடுத்ததாக லாஸ்லியாவிற்குக் கொடுத்த பச்சோந்தி பட்டம். இப்போது மீண்டும் இரண்டு வருடங்கள் பின்னால் சென்று ஓவியாவைப் பார்த்து வருவோம். ஓவியாவிற்கும் இப்படித் தான் சோம்பேறி என்றொரு விருதைக் கொடுத்தார்கள். மிக நாகரீகமாக சிரித்துக் கொண்டே அதை அவர்களிடம் மரியாதையாகத் திருப்பிக் கொடுத்து விட்டு வந்தார். லாஸ்லியா போல முகத்தில் தூக்கி எறிந்து விட்டு வரவில்லை. இங்கு வயது, திறமையெல்லாம் இரண்டாவது தான். முதலானதும் முக்கியமானதும் அடிப்படையான நாகரீகம். அது எந்தக் காலத்திலும் லாஸ்லியாவிற்கு இருந்ததே கிடையாது.
இப்போது சேரனின் சீக்ரெட் ரூம் காதை போய்க்கொண்டிருக்கிறது. உண்மையிலேயே மக்களின் ஓட்டுகள் தான் எவிக்சனைத் தீர்மானிக்கிறது எனும்பட்சத்தில் சேரனின் எவிக்சனில் யோசிக்க வேண்டியுள்ளது. எதனடிப்படையில் சேரனை மக்கள் காப்பாற்றவில்லை என வனிதா எழுப்பிய அத்தனை கேள்விகளும் உண்மையானவை. இங்கு தான் தமிழ் மக்களின் அந்த தொட்டுத்தொடரும் ஓட்டுப்போடும் கலாச்சாரம் இன்னும் மாறவில்லை எனத் தோன்றுகிறது. ஒருவன் நல்லவனா கெட்டவனா புரியாது. என்ன செய்கிறான் என்பது தெரியாது. ஆனால், அவன் பரிச்சயமானவன், திரையில் நம்மைக் கவர்ந்தவன் என்றால் குத்து அவனுக்கு ஓட்டை என்பதே நம் கலாச்சாரம். கவினுக்கு இருக்கும் ஃபேன் பேஸும் குறிப்பாக ரசிகைகளின் எண்ணிக்கையும் வியக்க வைக்கின்றன. மனதிற்குப் பிடித்தவன் என்ன பேசினாலும் அது தான் உண்மை என மக்கள் நம்பி விடுவார்கள் போல. காலர் ஆஃப் தி வீக் கேள்வியாகவே கேட்டு விட்டார். ஒருமுறை கூட கேப்டன் ஆகவில்லை. எந்த டாஸ்க்கிலும் பெஸ்ட் பெர்ஃபார்மர் ஆனதில்லை. ஆனால், இன்று பிரமாண்ட ஃபேன் பேஸுடன் கவின் நிற்கக் காரணம், அவரின் ஆன் ஸ்க்ரீன் இமேஜும், போட்டி வியூகங்களும் தான் காரணம். எந்த உழைப்பும் இல்லாமல் நட்பு, உறவு, தியாகம் எனப் பேசிப் பேசி சாண்டி, லாஸ்லியா, தர்ஷன் ஆதரவாளர்களையும் தன் பக்கம் இழுத்திருக்கிறார். இதில் சமூகவலைதளங்களில் அவருக்காக கேம்பைன் நடப்பாதாகவும் தெரிகிறது. சரவணனை வெளியேற்றியது போல விஜய் டிவி கவினையும் வெளியேற்றலாம். ஆனால், செய்ய மாட்டார்கள்.
இந்த சீசனில் கமலிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரின் உடைகள். உடைகள் மட்டுமே. அவரைப் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். ஞானச்செருக்கை நாலு டீஸ்பூன் அதிகமாகக் கொண்டவர். அவரை விட அதிகமாகப் பெர்ஃபார்ம் செய்ய எப்போதும் யாரையும் அனுமதிக்க மாட்டார். அதிலும் இந்த சீசனில் வயதிற்கு மரியாதை, திறமைக்கு மரியாதை என யாரேனும் பேசி விட்டால் உடனே சந்திரமுகி படத்தில் சரவணன் பாய்ந்து வந்து செந்தில் கை கோப்பையைத் தட்டி விடுவது போல வந்து விடுகிறார். எனக்கு இருக்கும் ஒரே ஆசை, கமல் ஒருமுறை போட்டியாளாராக வீட்டிற்குள் செல்ல வேண்டும். எந்த வித மரியாதையையும் எதிர்பார்க்காமல் நூறு நாள் இருந்து விட்டு வர அவரால் முடிகிறதா எனப் பார்க்க வேண்டும்.
ஊரில் இல்லாதத் திருட்டுத்தனம், ஃப்ராடுத்தனம், மரியாதை இல்லாத்தனம் என அனைத்தையும் செய்து கொண்டிருக்கும் சாண்டி அணியுடன் சேர்ந்து கொண்டு மற்றவர்களை மட்டம் தட்டிக் கொண்டே வருவது உங்கள் நிலைக்கு அழகல்ல கமல். குறைந்தபட்சம் அவர்கள் செய்யும் பிழைகளையும் கண்டிப்பான முறையில் சுட்டிக்காட்ட வேண்டும். நேர்மையாக விளையாட வற்புறுத்த வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு ஆடியன்ஸ் கை தட்டுகிறார்கள் என்பதற்காக வனிதாவையே டார்கெட் செய்வது உங்கள் பணிக்கு செய்யும் நேர்மையல்ல. வனிதா கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டியவர் தான். அதற்காக மற்றவர்கள் யாரும் எந்தத் தப்பும் செய்யாத உத்தமர்கள் அல்ல. நான் சொல்கிறேன், “இத்தனை பேசும் வனிதாவையே நான் மடக்கி விடுகிறேன் பார்த்தாயா..” என்ற பெருமையும், அதற்கு கிடைக்கும் கைதட்டல்களும் தான் உங்களுக்குத் தேவையாக இருக்கிறது.
இந்த வார நாமினேசனில் முகேன் & லாஸ்லியா தவிர அனைவரும் உள்ளனர். இந்த வாரம் வனிதாவும், அடுத்து ஷெரினும் வெளியேறுவார்கள். இறுதிப் போட்டி வாரத்தில், சேரன் வெளியேற்றப்பட, திட்டமிட்டபடியே பாய்ஸ் டீம் அப்படியே ஃபைனல் செல்லப் போகிறது.