சிறுகதைகள்
Trending

இன்னும் சில கதைகள்

கணேசகுமாரன்

வீட்டை யாரோ அலசி விடத் துவங்கியிருந்தனர். குவளை நீரைத் தரையில் விசிறி விட உதிர்ந்திருந்த ரோஜாப் பூவின் இதழ்களைச் சேர்த்துக் கொண்டு நீர் சுவரில் மோதி நின்றது. நான் அறைக்கு வந்தபோது கட்டிலில் தருண் விளையாடிக் கொண்டிருந்தான். என் பேக்கிலிருந்து துணிகளைச் சேகரித்தபடி, ‘’ நீ விளையாடிட்டுரு. அம்மா குளிச்சிட்டு வந்துடுறேன்’’ என்றேன். குளித்துவிட்டு வந்தபோது கட்டிலில் கஸ்தூரி அமர்ந்திருந்தாள். கஸ்தூரி மடியில் தருண்.

என்னைப் பார்த்ததும் வறட்சியாய் புன்னகைத்தாள். அழுது வீங்கிய வெள்ளை முகத்தில் அங்கங்கே ரோஸ் நிறத் திட்டுகள். ‘’ காபி போட்டுத் தரவா?’’ என்றாள். ‘’ அய்யோ… அதெல்லாம் வேணாம். 10 மணிக்கு பஸ். இப்பவே 9 ஆச்சு. டாக்சி புக் பண்னி கோயம்பேடு போயிடுறேன்’’

‘’ உங்க வீட்டுக்காரரும் வந்திருக்கலாமே…’’

’’ தருண் அப்பாவுக்கு பெண்டிங் ஒர்க் நெறைய இருக்கு. அதான் வர முடியல. என்னை மட்டும் அனுப்பி வச்சாரு.’’

‘’ இவ்ளோ தூரம் தனியா அனுப்பிடுறாருல்ல. உங்களுக்குத் துணிச்சல்தான். ராஜா அப்பா என்னைத் தனியா எங்கையும் விட்டதில்ல. அவருதான் எல்லாம்னு வாழ்ந்திட்டேன். இனிமே அவர் இல்லாமையும் வாழணும். ‘’ கஸ்தூரியின் கண்களில் நீர் துளிர்த்தது. நான் அருகில் அமர்ந்து கஸ்தூரியின் கைகளை ஆறுதலாய் பற்றினேன். ‘’ இங்கேர்ந்து ஓசூர் 6 மணி நேரம்தானே. அதான் தனியா அனுப்பிட்டாரு. அதுவுமில்லாம இன்னிக்கி அவசரமா லீவ் போட்டதுக்கே மேனேஜ்மெண்ட்ல சரியான ரீசன் சொல்லணும். சாப்பாடு எதுவும் வேணாம். நைட் ட்ராவல். போற வழியில ஸ்நாக்ஸ் எதுவும் வாங்கிக்கிறோம். எனக்கும் லைட்டா தலைய வலிக்குது. நான் கெளம்புறேன். பத்திரமா இருங்க. உங்க நம்பர் என்கிட்ட இருக்கு. போன்ல பேசுறேன்’’ நான் பேசப்பேச வழிந்த கண்ணீரைத் துடைக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் கஸ்தூரி.

பஸ் புறப்பட்டது. கஸ்தூரி என் முன்னாள் கணவரின் மனைவி. அவரின் மரணத்துக்குத்தான் இன்று சென்னை வந்துவிட்டுப் புறப்படுகிறேன். வரதனுக்கும் எனக்கும் நடந்தது அரேஞ்சுடு மேரேஜ். திருமண ஏற்பாடு எல்லாமே என் அம்மாவும் மாமாவும்தான். திருமணத்துக்கு முதல் நாள் இரவு மாப்பிள்ளை அழைப்பின் போதுதான் வரதனைப் பார்த்தேன். வரதன் நல்ல கறுப்பு. அது களையானதாவென்று எனக்குத் தெரியவில்லை. அகலமான தடித்த உருவம். அடர் மீசை.

உருண்டையான கைகளிலும், நெஞ்சு, கால்கள் என்று காணும் இடங்களிலெல்லாம் ரோமம் நிரம்பியிருந்தது. என் கனவுக் கணவன் ஒருபோதும் இப்படி இருந்ததில்லை. தலை குனிந்து தாலி வாங்கிக் கொண்டேன். இரவுகளில் என் மேல் கவிழ்ந்த வியர்வை அடர்ந்த ரோம உடம்பை பல் கடித்து ஏந்திக் கொண்டேன். ஒரு மன விருப்பமில்லாமல் நிகழ்ந்த உறவினாலோ என்னவோ வருடங்கள் ஆனாலும் கரு தங்கவில்லை. திருமணம் நிச்சயம் ஆனதுமே நான் பார்த்துவந்த டீச்சர் வேலையை விட்டுவிட்டேன். வரதனுக்குள் கொஞ்சம் காம்ப்ளக்ஸ் உண்டு. தன்னைவிட அழகான, படித்த, நிறமான மனைவி என்பதை அவர் தனக்கான சந்தோஷமாக நினைக்கவில்லை. தெருவில் இருவரும் சேர்ந்து செல்லும்போது ‘’இவனுக்கு வந்த வாழ்வ பாருடா’’ என்று யாரோ யாருடைய காதிலோ சொன்னது எங்கள் காதிலும் விழுந்தது. நான்தான் அவதியுற்றிருந்தேனே தவிர வரதன் தன்னை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. சிற்சில மன வருத்தங்கள் இருந்தாலும் ஒரு மனைவிக்கு உண்டான விருப்பங்களை ஒரு கணவனாகவும் தீர்த்து வைத்துக் கொண்டுதான் இருந்தார். 5 வருடங்களுக்குப் பிறகு டாக்டரிடம் இருவரும் சென்று உடம்பை செக் செய்தபோதுதான் பெரிய கோடு விழுந்தது. ஒரு குழந்தைக்குத் தகப்பனாகும் தகுதியை முற்றிலும் இழந்திருந்தார் வரதன்.

வரதனுக்குள்ளிருந்த கொடூர மிருகம் தன் பழக்கமான நகங்களை வெளிப்படுத்தி குத்திக் கிழிக்கத் தொடங்கியது. தன் குறை வெளியே தெரியாமல் நடிக்கத் தொடங்கினார். மலடி என்ற பழிச்சொல் சுலபமாகவே என் மேல் விழுந்தது. உறவுக்காரர்கள் எல்லா பரிகாரங்களையும் என் தலைமீது சுமத்தினார்கள். தான் ஒரு வாரிசுக்குத் தகுதியில்லையென்றானதும் படுக்கையிலும் என்னைத் தவிர்த்தார் வரதன்.
அந்நியர்களாய் உலாவத் தொடங்கிய வீட்டில் எதிரிகளாய் நடமாட இருவருக்குமே தைரியமில்லை. சந்தோஷம் இல்லாத வாழ்வை அம்மாவிடம் சொல்லி அழுது தீர்த்தேன். அப்பா இல்லாத குறையை ஒரு குடும்பத் தலைவனாய் என் மாமாதான் தீர்த்து வைத்திருந்தார். மாமா ஓசூரில் சிறியதாய் ஜவுளிக்கடை வைத்திருக்கிறார். வரதனிடம் அவர்தான் பேசினார். தாயாகும் தகுதி இல்லாதவள் எனக் குற்றச்சாட்டை என் மீது வரதன் வைத்தபோது மாமா வெகுண்டெழுந்தார். எங்கள் இருவரையும் டாக்டர் செக்கப்புக்கு கூப்பிட்டார். அவமானப்பட்ட வரதன் மாமாவை பெரியவர் என்று பாராமல் மரியாதைக் குறைவாய் பேச விவாகரத்துதான் சரியான வழி என்று முடிவானது. அம்மா அழுது ஓய்ந்து போனாள். ஆறுதலாய் வந்த மாமா, விட்டுப்போயிருந்த என் டீச்சர் வேலைக்கு ஓசூரில் விண்ணப்பித்தார். நானும் அம்மாவும் ஓசூருக்கு மாமா வீட்டுக்கு இடம் பெயர்ந்தோம்.
போன் அடித்ததும் எடுத்து ஸ்க்ரீன் பார்த்தேன். சிவநேசன். லேசாகப் புன்னகைத்தபடி காதில் வைத்தேன். ‘’ சொல்லுங்க.’’

‘’ எங்க இருக்க. கெளம்பிட்டீல்ல’’

’’ ரிசர்வ் பண்ணினது நீங்க. எனக்காக பஸ் வெயிட் பண்ணிட்டுருக்குமா… கிளம்பி ஒரு மணி நேரம் ஆச்சு.’’

‘’ தருண் என்ன பண்றான்?’’

‘’ இட்லி வாங்கிக் குடுத்தேன். சாப்பிட்டுத் தூங்கிட்டான். நீங்க சாப்பிட்டீங்களா?’’

‘’ ஆச்சு. போன எடத்துல எதுவும் பிரச்சனையில்லீல்ல…’’

‘’ எல்லாம் முடிஞ்சிட்டு. வரதனோட தாய்மாமா ஒருத்தர் வர லேட்டாய்டிடுச்சு. அதான் பாடிய நைட்டு எடுத்தாங்க. இல்லைனா ஈவினிங்கே கெளம்பியிருப்போம்.’’

‘’ உன்னை யாரும் எதுவும் கேக்கலியே… காரியம்லாம் யார் பண்ணா?’’

‘’ என்னை யாரும் ஒண்ணும் கேக்கல. நான்தான் கொஞ்சம் அநாவசியமா பயந்தேன். வரதன் ஒய்ஃப் கஸ்தூரிதான் உங்களப் பத்தி விசாரிச்சாங்க. காரியமெல்லாம் வரதன் பையன் ராஜாதான் பண்ணினான்.’’

‘’ என்னது!’’ சிவநேசனின் அதிர்ச்சி என் ஸ்மார்ட் போனைத் தாண்டி பக்கத்து சீட் வரை துல்லியமாகத் தெரிந்தது. ‘’ ரொம்ப ஷாக்காகாதீங்க. வரதனுக்கு 4 வயசுல ஒரு பையன் இருக்கிறதே எனக்கு இங்க வந்துதான் தெரியும்.’’

‘’ அதான்… எப்படி?’’

‘’ எல்லாத்தையும் போன்லையே சொல்லிடவா. நேர்ல பேசவும் எதுவும் வேணும்ல. போனை வச்சுட்டுத் தூங்குங்க. காலைல பேசிக்கலாம்’’ போனைக் கட் செய்தேன்.

ஆசிரியராக நான் பணிபுரிந்த ஸ்கூலில் சிவநேசன் ஓவிய ஆசிரியர். ஒரே வளாகம். ஒரே இடத்தில் பணி. அவ்வப்போது சந்தித்துக் கொள்வது என்றாலும் அறிந்து கொள்ளும் ஆர்வமெல்லாம் எதுவும் எனக்கு இல்லை. ஆனால், சிவநேசனுக்கு இருந்திருக்கிறது. என்னைப்பற்றி யார் யாரிடமோ எப்படி எப்படியோ விசாரித்து ஒருநாள் என் வீட்டுக்கு வந்து என் அம்மா எதிரில் அமர்ந்துவிட்டார். ‘’ உங்க பொண்ணு மீரா ஒர்க் பண்ற ஸ்கூல்ல நான் ட்ராயிங் டீச்சர். உங்க பொண்ணப் பத்திக் கேள்விப்பட்டேன். உங்களுக்கு விருப்பம்னா உங்க பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.’’ மாமாவுக்கு ஏனோ இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லாமல் இருந்தது. அதே சமயம் எங்கள் இருவருக்குமான அவரின் அடைக்கலம் எத்தனை நாட்களுக்கு என்ற கேள்வியும் அவஸ்தையாய் நெளிந்தது. ‘’ பொம்பளப் பொறப்பு ஏதாவது ஒரு துணையை அண்டித்தான் இருக்கணும்மா. உங்கப்பா இருந்து நடத்த வேண்டிய நம்ம குடும்பத்து நல்லதை தாய்மாமனா இருந்து என் தம்பிதான் செஞ்சிருக்கான். அது உன் முதல் கல்யாணத்துல தோத்துப் போனதால அவனுக்கு கொஞ்சம் மன வருத்தம். அதுவுமில்லாம நம்ம குடும்ப வகையில இந்த இரண்டாம் கல்யாணம்லாம் இல்லைல மீரா. அதான் என் தம்பி பட்டுக்காம நிக்கிறான். மாப்பிள்ளைகிட்ட விவரமா பேசு. கல்யாணத்த நடத்தலாம்’’ என்றாள் அம்மா அழுதுகொண்டே.
திருமணம் நிச்சயமான பிறகு ஒருமுறை சிவநேசன் என்னிடம் ‘’ பரிதாபப்பட்டெல்லாம் நான் இந்த முடிவு எடுக்கல.

உண்மையிலே நீங்க அழகாருக்கீங்க. அப்புறம் உங்க குணம். இதெல்லாம்தான் எனக்குப் புடிச்சது. குழந்தையெல்லாம் தத்துகூட எடுத்துக்கலாம். எத்தனையோ குழந்தைங்க அம்மா அப்பா இல்லாம வளரலியா… என் பேரண்ட்ஸைக் கன்வின்ஸ் பண்ணிக்கலாம். நான் புருவம் சுருக்கி, ‘’ ஏன் உங்களுக்கு எதுவும் குறை இருக்கா?’’ என்றேன். ‘’ அய்யோ… அப்படி இல்லீங்க. உங்க குறை பத்தி கேள்விப்பட்டுத்தான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கவே முடிவு பண்ணேன்.’’ வெளியில் யாரிடமோ என்னைப்பற்றி விசாரித்ததில் வரதனின் பொய், உண்மையாய் பரவியிருந்ததை உணர்ந்தேன். ஏனோ வரதனைப் பழி வாங்கினால்தான் என்ன என்று எனக்குத் தோன்றியது.

மீரா, மிசஸ் வரதனாகி மீண்டும் மிசஸ் சிவநேசனானேன். திருமணம் முடிந்த 6 ஆம் மாதம் நான் கருவுற்றேன். அன்றிரவு சிவநேசனின் நெஞ்சில் என் முகம் புதைத்து விடியும் வரை அழுது கொண்டிருந்தேன். அடுத்த சில நாட்களில் வரதன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாய் மாமா வந்து சொன்னபோது ஏன் என்ற கேள்வி மட்டும் எனக்குள் சுழன்று கொண்டிருந்தது. தருண் பிறந்த இந்த 6 வருடங்களில் என் பழைய வாழ்க்கை, பழைய ஞாபகம், பழைய வலி எல்லாவற்றையும் மறந்திருந்தேன் எனலாம். எவரின் சாயலிலும் வரதன் என் நினைவுகளில் வராமல் போயிருந்தார் என்பதே நிஜம். இடையில் ஒருமுறை உறவினர் திருமணம் என்று சென்னைக்கு வந்து போனதுதான். கோடம்பாக்கத்தில் நான் இருந்த வீட்டைக் கடந்தபோது சிவநேசனிடம் அதைக் காட்ட அவருக்கு அது பிடிக்கவில்லை என்பது புரிந்துபோனது.

நேற்று மதியம் திடுதிப்பென்று என் வகுப்பு வாசலில் வந்து நின்ற சிவநேசன் வெளியே அழைத்துப் பேசியதில் பதற்றமிருந்தது. ‘’ ரெண்டு பேருக்கும் பர்மிசன் சொல்லிட்டேன். க்ளோஸ் ரிலேஷன் இறந்துட்டதா சொல்லியிருக்கேன். நைட்டு புறப்படு. நாளைக்கு லீவு சொல்லிட்டுக் கிளம்பு’’ என்றார். விட்டுவிட்டு வந்த வார்த்தைகளில் தொண்டையைக் கவ்விய துக்கம் இருந்ததைக் கவனித்தேன். கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டியவாறு ‘’ ரிலாக்ஸ்… எதுக்கு இவ்ளோ டென்சன். யாருக்கு இப்போ என்னாச்சி? யார் இறந்தாங்க?’’

‘’ வரதன். உன் மாமா இப்பதான் சொல்லி அனுப்பினார். நாளைக்கு அடக்கமாம்’’ என் முன்னாள் கணவர் இறந்துபோனதை இந்நாள் கணவர் பதற்றத்துடன் சொல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பள்ளி மைதானத்தில் ஒரு அணில் தவ்வித் தவ்விச் சென்றதைக் கவனித்தேன். தீர்க்கமாக சிவநேசனை உற்றுப் பார்த்தபடி, ‘’ ஸோ… நீங்க வரலை. அப்படித்தானே’’ அடிபட்ட பார்வை பார்த்தார். என் முன்கதையைப் புகைப்படங்களில் கூட காண விரும்பாதவர்தான் சிவநேசன். இப்போது எப்படி நேரில் வருவார் என் இறந்த காலத்தைக் காண. அதுவும் ஒரு மரணத்துக்கு. ‘’ சரி தருணுக்கும் லீவ் சொல்லிடுறேன். நான் இல்லாம உங்களால அவனைப் பாத்துக்க முடியாது. எனக்கும் ஒரு துணையா இருக்கும். அம்மா வேண்டாம். வயசானவங்க. என்னை நைட் பஸ் ஸ்டாண்ட்ல ட்ராப் பண்ணிடுங்க.’’ இருவருக்கும் ஒரே சமயத்தில் நீளப் பெருமூச்சு வந்தது.

ஓசூரில் பஸ் ஏற்றிவிடும்போது, ‘’ ஸாரி… நான்தான் இப்போ உன் பக்கத்துல ஆறுதலுக்கு இருக்கணும். என்னால அப்படி இருக்க முடியாதுன்னு தெரியுது. ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்…’’ என்றபோது சிவநேசனின் கைகளைப் பற்றி ஆதூரமாய் அழுத்தினேன். கோடம்பாக்கத்தில் வரதன் இல்லை. இப்போது வடபழனியில் இருப்பதாய் ஒரு முகவரியை மெசேஜ் பண்ணியிருந்தார் சிவநேசன். காலையில் சென்னையில் வந்து இறங்கி ஆட்டோ பிடித்து வடபழனி முகவரிக்கு வந்தால் அந்தச் சிறிய சந்துக்குள் ஷாமியானா பந்தல் போட்டு துக்கத்தை அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆட்டோவில் வரும்போது,‘’ எங்கம்மா போறோம்’’ என்ற தருணின் கேள்விக்கு ‘’ ஒரு அங்கிள் இறந்துட்டாரு. அவங்க வீட்டுக்குப் போறோம். நீ அம்மாவ விட்டு எங்கேயும் போகக் கூடாது. அம்மா கூடவே இருக்கணும். சரியா’’ என்றதற்கு சரி போல் தலையசைத்தான். கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த வரதனின் முகமும் உடலும் முன்பிருந்ததை விட மேலும் ஊதிப்போய் பெரிதாய் இருந்தது. அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்த பெண்தான் வரதனின் மனைவியாக இருக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். அவளின் கைகளை ஆறுதலாய் பற்றியதும் ‘’ மீரா’’ என்றபடி பெரிதாய் கதறியபடி என்னை அணைத்து அழத் தொடங்கினாள். எனக்கு திக்கென்றது.

எப்போது வரதனை விட்டுப் பிரிந்தேனோ அன்றிலிருந்தே அவரைப் பற்றிய எந்தத் தகவலும் அறிந்து கொள்ளும் விருப்பமில்லாதவளாகிப் போனேன். மாமாதான் அவ்வப்போது ஏதாவது செய்திகள் சொல்லி விட்டுப் போவார். தப்பித்தவறி காதில் விழுமே தவிர ஈடுபாட்டுடன் அதைக் கேட்டதில்லை. இந்த மரணம், மரண வீட்டின் முகவரி எல்லாம் மாமாதான் சிவநேசனுக்கு அனுப்பி வைத்தது. சிவநேசனைத் திருமணம் செய்துகொண்ட பிறகு என் நொடிகளின் எவ்விடத்திலும் இடம் பெறாத ஒருவரின் மரணத்துக்குத்தான் இன்று வந்திருக்கிறேன். எதற்கென்றே தெரியாமல்தான் இந்த துக்கத்தை எட்டிப்பார்த்துவிட்டுப் போக வந்திருக்கிறேன். எதுவுமே தெரியாமல் வந்த இடத்தில் என் பெயர் இங்குள்ள முக்கியமான ஒருவருக்குத் தெரிந்திருப்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. யாரோ ஒருவர் ‘’ கஸ்தூரி கொஞ்சம் காபியாவது குடிம்மா’’ என்ற போதுதான் வரதனின் மனைவி பெயர் கஸ்தூரி என்று தெரிந்தது. மதியம் போல் தருணுக்கு பிஸ்கட் தரலாம் என்று அந்த வீட்டுக்குள்ளே போனபோது கஸ்தூரியும் என் பின்னாலேயே வந்தாள். ‘’ எப்படியாவது சேதி தெரிஞ்சி வந்துருவீங்கன்னு தெரியும். உங்கள போட்டோவுல பாத்துருக்கேன். அதான் ஒடனே தெரிஞ்சிச்சு’’ சோகமாய் புன்னகைத்தாள் கஸ்தூரி.

‘’ எப்படி ஆச்சு?’’ தெரிந்துகொள்ள பெரிதாய் ஆர்வமில்லையென்றாலும் வேறு என்ன கேட்பதென்று தெரியாமல் கஸ்தூரியிடம் கேட்டு வைத்தேன். ‘’ ராஜா அப்பாவுக்கு கொஞ்ச நாளாவே ஒடம்பு சரியில்ல. அதிகமா குடிக்க ஆரம்பிச்சாரு. அவர் குடிக்க ஆரம்பிச்சதுக்குக் காரணமே நான்தான்னு தெரியும். நடந்த தப்புக்கு மன்னிப்பு கேட்டும் ராஜா அப்பா மன்னிக்கிறதா இல்ல. தன்னையே அழிச்சிக்க ஆரம்பிச்சாரு. ஒருநாள் கூட ராஜா அவரை அப்பான்னு கூப்பிட்டதில்ல. ராஜா அப்படிக் கூப்பிடாம நான்தான் பாத்துக்கிட்டேன். ஒருநாள் கூட அப்பான்னு கூப்பிடாத ஒருத்தருக்குதான். இன்னைக்கு மகனா நின்னு கடைசிக் காரியம் பண்ணப் போறான். குடிக்கிறத நிறுத்தியிருந்தா இன்னும் கொஞ்ச நாள் இருந்திருப்பாரு. எப்பவாவது உங்களப் பத்திப் பேசுவாரு’’ தேம்பித் தேம்பி அழுதபடி திக்கித் திணறித்தான் எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் கஸ்தூரி. துக்க வீட்டில் அவளின் அழுகையும் புலம்பலும் பெரிதாய் யாரையும் சலனப்படுத்தவில்லை. என்னைத் தவிர. என்ன சொல்வதென்று தெரியாமல் வெளியில் பார்த்தேன். வரதனின் அப்பாவை கொஞ்சம் அடையாளம் தெரிந்தது. அவர் மடியில் அமர்ந்திருந்த சிறுவன்தான் கஸ்தூரியின் மகன் ராஜாவாக இருக்க வேண்டும். என் பார்வை சென்ற இடத்தை யூகித்த கஸ்தூரி, ‘’ ஆமா… அவன் தான் ராஜா. 4 வயசு ஆகுது.’’ பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள்.

காலை 5 மணிக்கு ஓசூரில் இறங்கியபோது பனி நழுவிக்கொண்டிருந்தது. குளிரில் பற்கள் தந்தியடித்தன. நிமிர்ந்து பார்க்க நேரமில்லாமல் பைக்கில் வந்து ஸ்டாண்ட் போட்டார் சிவநேசன். எதுவும் பேசாமல் பைக்கில் ஏறினேன். குளித்து முடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சிவநேசனைப் பார்த்து ‘’ என்ன எதுவும் கேக்காம சைலண்ட்டா இருக்கீங்க?’’ என்றேன்.

‘’ நீயா சொல்வேன்னு எதிர்பார்த்தேன்’’

‘’ என்னத்த சொல்றது. வரதன் மகன் ராஜான்னு வரதன் ஒய்ஃப் சொன்னதும் உங்களாட்டம்தான் எனக்கும் அதிர்ச்சியா இருந்துச்சு. ஆனா, அவங்க கண்ணுல தெரிஞ்ச குற்ற உணர்ச்சி வேற எதுவும் கேட்கவிடல. புறப்பட்டு வரும்போது நான் கேட்ட கேள்விக்கு இந்நேரம் அவங்க பதில் யோசிச்சிருந்தாங்கன்னா அவங்களும் புது வாழ்க்கைக்குத் தயாராயிடுவாங்க.’’

‘’ என்ன கேட்டே?’’

‘’ ராஜா அப்பா இறந்தது ராஜா அப்பாவுக்குத் தெரியுமான்னு கேட்டேன். பதில் எதுவும் சொல்லாம அழுதாங்க.’’ என்னை நிமிர்ந்து பார்த்த சிவநேசன், ‘’ இந்த உலகம் எல்லோருக்கும் பொதுவானதுதானே ‘’ என்றபடி எழுந்து சென்று கை கழுவினார்.

– முற்றும்

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button