கவிதைகள்
Trending

கவிதைகள்- பூவிதழ் உமேஷ்

பூவிதழ் உமேஷ்

1. பைத்தியம் என்னும் கலை
நேற்று நான் பைத்தியம்
நாளைக்கான பைத்தியம் கொஞ்சம் இருக்கு
இன்று நீங்கள் நினைப்பது போல் இல்லை

நீங்கள் கல்லெறியும் போது
உங்கள் கண்ணின் பீளை உட்பட நான் கவனித்தேன் .

கையில் தட்டுப்பட்டு நழுவிய ஒரு கல்லில்
முன்பே யாரையோ தாக்கிய குருதி இருந்தது

அவசரத்தில் எறிந்தததில்
மரப்பாச்சி பொம்மையின் தலையும் இருந்தது
அதைத் தொட்டு விளையாடிய
பிஞ்சு விரல்களின் ஸ்பரிசம் தெரிந்தது.

ஒவ்வொருவரும் பைத்திய தனத்தை
காது அழுக்குப் போல தெரியாமல் வைத்திருக்கிறார்கள்

தூங்கும் போது ஒரு பைத்தியம்
மற்ற யாவரையும் விட சாந்தமாகத் தூங்கும்
அப்போது வெளியேறும் பைத்திய நிலை
யாரோ ஒருவருடைய கனவில் நுழையும்

பைத்தியமும் ஒரு கலை
உங்களுக்கும் கைத்தெரிந்தால்
நீங்கள் மகா கலைஞன்.

2. MLA நகர்.

1. நாணல் புதரில் தூக்கி கடாசிய தூண்டிலை
பரிதாபமாகப் பார்த்த
வற்றிய குளத்தின் கடைசி மீன்
இறப்பதற்கு முன்
மூன்று பொருட்களை இறுதி உணவாக விழுங்கியது

2. கோடையில் இறந்த கிழவனின் “பசி ”
குளத்தை மரங்களாக மாற்றிய
தகர வாளியின் “வெறுமை”
கடைசி துளி நீரைப் பருகிய “சூரியன்”
3. உயிர் பிரியும் போது மூன்று குமிழ்களை விட்டது
இரண்டு குமிழ்கள் கிழவனின் கண்கள் போல இருந்தன
கடைசி குமிழ் வெறுங்காலில் இருந்த கொப்புளம்

4. கண்கள் தோண்டிய முகம் போல
வற்றிய குளம் இருந்தது
நீர்க்கால் ஓடை பொறம்போக்கு எல்லாம்
சிமெண்ட் சாலை

5. மீன்களைப் பழகிய கிழவன் கண்கள்
மனிதர்களைப் பழகத் தொடங்கியது
தொப்பி நீழலில்

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button