நன்றியென்ற நாய் – செல்வசாமியன்
![selva samiyan](https://vasagasalai.com/wp-content/uploads/2020/03/selva.jpg)
அலாரம் அடிக்கும் முன்பே எழுந்துகொண்ட மணி, அலைபேசியில் நேரம் பார்த்தான்… ஐந்து மணியாக பத்து நிமிடங்கள் இருந்தன. இந்நேரத்திற்கெல்லாம் பனிக்கரடியைப்போல தூங்கிக்கொண்டிருப்பான். பின்தூங்கி பின்எழுபவன் என்பதால், எட்டு மணிக்குத்தான் படுக்கையை சுருட்டுவான். முகத்தைக் கூட கழுவாமல் குறைந்தது ஒருமணி நேரத்திற்கு அலைபேசியில் மூழ்கிவிட்டு, பிரக்ஞையே இல்லாமல் அபீஸை கூட்டிப் பெருக்குவான். அரைமணி நேரம் சாவகாசமாய் குளித்து முடிப்பான். பின், கட்டிய ஈரத்துண்டோடு சாமி போட்டோவின் முன்பு விளக்கேற்றி கண்களை மூடி தினமும் வாசிக்கும் வேண்டுதலை பட்டியலிட்டு, விபூதியை அள்ளி பட்டையாக பூசிக்கொண்டு வாசற்கதவை வந்து திறப்பான். மணி பத்தாகி இருக்கும். அதன்பின்தான் உதவி இயக்குநர்கள் வருவார்கள். பின், இணை இயக்குநர் வருவார். கடைசியாக இயக்குநர் வருவார். அவர் உள்ளே நுழையும்போதே சூடாக தேநீர் கேட்பார். பாலை கொதிக்க வைப்பதில் தொடங்கும் மணியின் இரண்டாம்கட்ட அலுவலகப் பணிகள்.
அலுவலகம் என்றதும் உங்கள் மனக்கண்ணில் ஒரு காட்சி தோன்றுகிறதல்லவா..? மணிக்கும் முதலில் அப்படித்தான் தோன்றியது. ஆனால், சினிமா ஆபீஸ் என்பது அப்படி இருக்காது. இரண்டு அல்லது மூன்று படுக்கையறையுடன் கூடிய குடியிருப்பு வீட்டைத்தான் அலுவலகம் என்பார்கள். ஹாலில் ஷோபா செட், ஒரு டேபிள் சேர், சுவரில் படத்தின் ப்ளோ அப்ஸ், ஒரு நியூஸ் பேப்பர், ஒரு தண்ணீர் பாட்டில் என இருக்கும். ஒரு படுக்கை அறையில் தரை முழுக்க விரிக்கப்பட்ட பஞ்சு மெத்தை… இயக்குநர் தன் உதவி இயக்குநர்களுடன் கதை விவாதம் செய்வதற்கு. இன்னொரு படுக்கை அறை தயாரிப்பாளருக்கு… அதில், டேபிள் சேருடன் இரண்டு நாற்காலிகள், ஒரு டிவி செட்டப் இருக்கும். ஒரு சமையலறை.. மின்அடுப்புடன் தேநீர் செய்வதற்கான பொருட்கள் இருக்கும்.
சினிமாவில் நடிகனாக வேண்டும் என்கிற வேட்கையுடன் சென்னை வந்த மணிக்கு, எளிதில் திறக்க முடியாது என்று சொல்லப்படுகிற கோடம்பாக்கத்தின் இரும்புக் கதவு, தடுக்கி விழுந்ததும் திறந்துகொண்டது. அலுவலகத்தை நிர்வகிக்கும் ஆபீஸ்பாய் வேலை. கப்பென்று பிடித்துக் கொண்டான். தஞ்சாவூரில் பாலிடெக்னிக்கில் படித்துக்கொண்டிருக்கும்போதே.. நடிகர்கள், இயக்குநர்கள் பேட்டியின்போது சொல்லும் ஆரம்பகால கஷ்டங்களையும் செய்தித்தாள்களில் இடம்பெறும் சினிமாத் துணுக்குகளையும் படித்து, நடிகர் ஆவதற்கான வழிகளை மனதுக்குள் வரைந்து வைத்திருந்தான். சென்னை சென்று இறங்கியதும் வடபழநி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேரவேண்டும். அதுவரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கிக்கொள்ள வேண்டும். வேலை முடிந்த பின்பு கிடைக்கும் நேரத்தில் இயக்குநர்களை சந்தித்து நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற வேண்டும். இப்படி, கோடம்பாக்கத்திற்குள் பிரவேசிக்கும் திட்டத்துடன் பஸ் ஏறியவனுக்கு, எடுத்தவுடனே சினிமா அலுவலகத்தில் வேலை கிடைத்ததும் கரைபுரண்டது வெள்ளம். மிதந்துசென்று சாலிகிராமத்தின் எம்ஜியார் தெரு என்கிற பெயர் பலகையை பற்றிக்கொண்டு கரையேறினான். “எம்ஜியார் தெரு” பிரகாசமான எதிர்காலத்தின் சமிக்ஞையாகப்பட்டது அவனுக்கு.
மணி அலுவலகத்தில் காலடி வைத்தபோது, திரையை விலக்கிக்கொண்டு ஒப்பனைக் கலைத்த முகத்தைக் காட்டியது சினிமா. ஜிகினாக்களின் வண்ண மினுமினுப்பை பார்த்தவனுக்கு நிறமிழந்த காகிதத்தைப் பார்ப்பதுபோல் ஏமாற்றம். குடியிருப்பு வீட்டை அலுவலகம் என்றால் சப்பென்றாகிவிடாதா..? எழுந்து நின்ற கனவு மாளிகைகளின் கீழ்வரிசை செங்கல்கள் நழுவி சரியத் தொடங்கின. மனதுக்குள் புகைமண்டலமாக இருந்தது. அங்கேயே தங்கிக்கொள்ளச் சொன்னார்கள். தரைமட்டமாகிவிட்ட கனவை எந்த வடிவத்தில் கட்டி எழுப்புவது என்று விழி பிதுங்கி நின்றவனுக்கு இயக்குநர் சாய்சங்கர்தான் வரைபடம் வரைந்து பிரம்மாண்ட அரண்மனையின் முதல் செங்கல்லை நட்டார்.
சாய்சங்கரின் இயற்பெயர் சங்கர். ஏற்கனவே, பிரம்மாண்டமாக ஷங்கர் என்ற பெயர் சினிமா வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுவிட்டதால் மாற்றுப் பெயரைத் தேடி தன் உதவியாளர்களுடன் விவாதித்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் விவாதம் நடந்தும் பெயரை இறுதிசெய்ய முடியாததால், ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏ.ஆர்.ரகுமான் என்று பெயர் சூட்டிய ஓம் உலகநாதனை சந்திக்க வழிகாட்டினார் ஒரு தயாரிப்பு நிர்வாகி. எம்எம்டிஏ சிக்னல் அருகே இருக்கும் அவரது அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பம் வைத்தார் சங்கர். அவர் சங்கரின் பிறந்த நேரம், தேதி, கிழமை என ஆராய்ந்து சாய்சங்கர் என பெயர் சூட்டினார். சாய்சங்கருக்கு ஆச்சர்யம். இரண்டு வருடங்களுக்கு முன்பு, விநாயகரில் தொடங்கி வேம்புலி அம்மன் வரை எல்லா கடவுள்களின் முன்பும் மண்டியிட்டும், மனமுறுக வேண்டுதல்களை வைத்தும் எஞ்சியது ஏமாற்றமே என்று களைப்புற்றிருந்த சமயத்தில், பாடலாசிரியர் தமிழமுதன்தான் சாலிகிராமம் சாய்பாபா கோயிலுக்கு அழைத்துப் போனார். அன்றிலிருந்து சங்கர் சாய்பாபாவின் முரட்டு பக்தராக மாறிப்போனார். மூன்று நாட்கள் நடந்த பெயர் விவாதத்தில் சாய் என்று தொடங்கும் அல்லது முடியும் வேறு பெயர்களை விவாதித்திருந்தனர். ஆனால், சாய்சங்கர் என்று யாருக்கும் தோன்றவில்லை. சங்கர் என்ற பெயரே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்ததுகூட, அதற்கு காரணமாக இருக்கலாம். இத்தனைக்கும் சங்கர் ஓம் உலகநாதனை சந்தித்தபோது, சாய் என்று தொடங்கும்படி பெயர் கேட்டு கோரிக்கை எதுவும் வைக்கவில்லை. அப்படி இருந்தும் சாய்சங்கர் என்று பெயர் தேர்வு செய்யப்பட்டது சாய்பாபாவின் ஆசிர்வாதம் என்று சொல்லிக்கொண்டார். வெறும் சங்கராக இருந்து சாய்சங்கராக மாறியப் பின்பே, தன் வாழ்க்கையில் ஆனந்த மாற்றங்கள் நடந்ததாக சொல்வார். மனைவியின் நட்பு கிடைத்தது.. அது காதலாக மாறியது.. பின், திருமணம் முடித்தது.. ஜாதக ஜோசியத்தின் மீது ஈடுபாடு வந்தது.. இப்போது இந்த திரைப்பட வாய்ப்பு.. என எல்லாவற்றுக்கும் இந்த பெயர் மாற்றம்தான் காரணம் என்பார்.
சாய்சங்கர் நாற்பது வயதை கடந்து சில வருடங்கள் ஆகியிருந்தன. முன் தலையில் பெருத்த சேதாரத்தை பெற்றிருந்தார். வாசிப்பின்போது மட்டும் கண்ணாடி அணிந்துகொள்வார். நெஞ்சகத்து முடிகள் வெளுக்கத் துவங்கியிருந்தன. சமூகத்தின் மீது தனக்கிருக்கும் கோபத்தை, தன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் வெளிக்காட்ட வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்.
மணி நடிப்புத் தாகத்தோடு இருப்பதை இணை இயக்குநர் விகடபாரதிதான் ஒரு வளர்பிறை நாளில் சாய்சங்கரிடம் சொன்னார். “அப்படியா..! எங்கிட்ட அவன் சொல்லவே இல்ல..” என்று அவர் ஆச்சர்யப்பட, டிக்டாக்கில் மணி நடித்திருக்கும் வீடியோக்களை விகடபாரதி காட்டினார். அதில் மணி, “நான் தனி ஆள் இல்ல.. என் பின்னாடி பெரிய கூட்டமே இருக்கு..!” என்று அஜீத் மாதிரியே பேசி நடித்திருந்தான். கண்கள் விரிய ஒவ்வொரு வீடியோவாக பார்த்த சாய்சங்கர், தேநீர் தட்டுடன் அறைக்குள் நுழையும் மணியிடம் வினவினார். பெண் பார்க்கும் படலத்தில் தேநீர் தட்டை நீட்டியபடி வெட்கத்துடன் நிற்கும் புதுப்பெண்ணின் பாவனையில் “ஆமாம்” என்பது போல் தலையாட்டினான் மணி. தேநீரை அருந்தியபடியே யோசித்த இயக்குநர், “நம்ம கதையில மணி எந்த கேரக்டருக்கு ஷீட்டபிளா இருப்பான்..?” என்று விகடபாரதியிடம் கேட்டார். அவர் நீளமாக யோசித்து, “நைட் எஃபெக்டல, லோன்லியா ஹீரோ ஹீரோயின்கிட்ட லவ் ப்ரபோஸ் பண்ணும்போது.. ஐஸ்கிரீம் வித்துட்டு வருவான்ல நார்த் இண்டியன் பாய்.. அதுக்கு சரியா இருப்பான்னு நெனைக்கிறேன்..” என்று சொல்ல,
“அது ஒரு சீன்தானே.. டயலாக் வேற இல்ல..” என்று யோசித்த சாய்சங்கர், “ஆங்.. ஹீரோயின் தம்பி கேரக்டருக்கு எப்படி இருப்பான்..?” என்று கேட்க, சட்டென “ஹன்ட்ரட் பர்சென்ட் ஆஃப்ட்டா இருப்பான் சார்..” என்றார் விகடபாரதி.
இயக்குநரை திரும்பி பார்த்தான் மணி. அவர் காலில் விழுந்து, “ஆசிர்வாதம் பண்ணுங்க சார்..” என்று சொல்ல வேண்டும்போல் இருந்தது அவனுக்கு.
இயக்குநர் “உனக்கு பிடிச்ச நடிகர் யாருடா..?”
“அஜீத் சார்..”
“அவர் எந்த படித்துல நல்லா நடிச்சிருக்காருன்னு நெனைக்கிற..?”
யோசித்தவன், “விஸ்வாசம்..!” என்றான்.
புன்னகைத்தவர், தான் இத்தனை ஆண்டுகளாக கற்றுக்கொண்ட வித்தைகளை எல்லாம் ரத்தினச் சுருக்கமாக ஒருமணி நேரத்திற்கு பாடம் கற்பித்தார். “இவ்வளவுதானா சினிமா..” – என்பதுபோல் நினைத்தாலும், “கல்லாதது கடலளவு..” என்பதுபோல் முகபாவனைக் காட்டினான்.
“நீ ஹீரோவுக்கான மெட்டீரியல் இல்லடா. ஹீரோ ஆகணும்னா டான்ஸூம் ஃபைட்டும் தெரிஞ்சா போதும். ஆனா, நல்ல நடிகனாக பயிற்சியும் தேடலும் வேணும்.. விகே.ராமசாமி, ஜனகராஜ் இவங்க இடமெல்லாம் இன்னும் காலியாவே கிடக்கு.. இவங்க இடத்தை நிரப்ப நீ ட்ரை பண்ணு.. சாகற வரைக்கும் நடிச்சிக்கிட்டே இருக்கலாம்.” என்று சொல்லி, பிறந்த தேதியையும் நேரத்தையும் கேட்டார்.
“ஏப்ரல் இருபத்தாறாந்தேதி.. டைம் சரியா தெரியலயே சார்..” என்றான்.
“இருபத்தியாறுனா..? கூட்டுத்தொகை எட்டு..! எம்ஜியார் டேட்டுடா..! பியூச்சர் பிரைட்டா இருக்கும்..” என்று சொல்ல, மணிக்கு எம்ஜியார் தெரு பெயர் பலகையை பற்றிக் கொண்டது மனதில் அலையடித்தது. “சரியான இடத்துக்குதான் வந்து சேர்ந்துருக்க.. கவலப்படாத நான் இருக்கேன்..” என்றார் இயக்குநர். மணிக்கு கண்கள் பணித்திருந்தது. இயக்குநருக்கும் அவனுக்கும் இடைவெளிகள் குறைந்திருந்தது. “சார்.. சார்..” என்று அழைத்தவன், “அண்ணே..” என்று அழைக்கலானான்.
அண்ணனுக்கு இன்று பிறந்தநாள். அதனால்தான் அலாரம் அடிக்கும் முன்பே எழுந்துகொண்டான். செல்போனைத் தொடவில்லை. முதலில் இயக்குநர் இருக்கும் அறையில் மெத்தையை சுருட்டி வைத்துவிட்டு கூட்டிப் பெருக்கி.. மாப்பு போட்டுத் துடைத்தான். இப்படி ஹால், தயாரிப்பாளர் அறை, கிச்சன், பாத்ரூம் என்று ஒவ்வொன்றாக சுத்தம் செய்துவிட்டு பூஜை அறையில் இருந்த சாமிப்படங்கள், சாய்பாபா சிலை ஆகியவற்றைக் கழுவித் துடைத்து காற்றாடியின் கீழ் காய வைத்துவிட்டு பாத்ரூமிற்குள் சென்று குளித்தான். துணிகள் வைத்திருக்கும் பேக்கை திறந்து சிவப்பு நிற கட்டம் போட்ட சட்டையை போட்டுக்கொண்டான். மணி ஏழாகியிருந்தது. வாசலுக்கு வந்து கதவை சாத்தி பூட்டிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
சென்னையின் அதிகாலைத் தெரு… நெரிசல் இல்லை, மார்கழிப் பனி வேறு குளிர்ச்சியாக இருந்தது. உற்சாகமாக சினிமா பாட்டைப் பாடியபடி, ஏவிஎம் ஸ்டுடியோ வழியாக சைக்கிளை விட்டான். நூறடி ரோடு சிக்னலை கடந்து வடபழநி முருகன் கோயில் முன்பு சென்று சைக்கிளை நிறுத்தினான். கோயில் வாசலில் பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் பெண், “வாப்பா.. செருப்ப இங்க விட்டுட்டு போ..” என்று அழைத்தது. அந்தப் பெண்ணிடம் அர்ச்சனைத் தட்டை வாங்கிக்கொண்டு கோயில் உள்ளே சென்றான். மிதமானக் கூட்டமாக இருந்தது. அய்யரிடம், “சாய்சங்கர்.. மிதுன ராசி, மிருகசிருஷ நட்சத்திரம்..” என்றான். அண்ணனுக்கு இந்தப்படம் பெரிய வெற்றியையும், தனக்கு நல்ல அறிமுகத்தையும் தர வேண்டும் என்று சாமியிடம் வேண்டிக்கொண்டான். அய்யர் தீபாராதனைத் தட்டை நீட்டி நெற்றியில் விபூதி பூசிவிட்டார். அர்ச்சனை பொருட்களையும் பிரசாதத்தையும் பெற்றுக்கொண்டு கிளம்பினான்.
சரியாக பத்து மணிக்கு இயக்குநர் வந்துவிட்டார். நீல நிற ஜீன்ஸும் சிவப்பு நிறத்தில் கட்டம்போட்ட புதுசட்டையும் அணிந்திருந்தார். தலைமுடிக்கு டை அடித்து திருத்தம் செய்திருந்தது தொப்பியின் கீழ்விளிம்புகளில் தெரிந்தது. புத்துணர்ச்சியுடன் சிரித்த முகமாக இருந்தார். விகடபாரதி உள்ளிட்ட உதவி இயக்குநர்களும் கேமிராமேனும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னார்கள். செல்போனில் அழைப்புகள் வந்துகொண்டே இருந்தது. மணி கோயில் பிரசாதத்தைக் கொடுத்து காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ள, அவனைத் தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டார். தயாரிப்பாளரின் வருகைக்காக அனைவரும் காத்திருந்தார்கள். அவர் பதினோரு மணிக்குத்தான் வந்தார். ஹாலில் டேபிளைப்போட்டு, வாங்கி வைத்திருந்த கேக்கை பிரித்துவைத்து தயாரிப்பாளர், கேமிராமேன், இணை இயக்குநர், உதவி இயக்குநர்கள் சூழ கேக் வெட்டினார் இயக்குநர். கேக்கின் சிறு துண்டையெடுத்து தயாரிப்பாளருக்கு ஊட்டினார். அவரை கட்டிப்பிடித்துக்கொண்ட தயாரிப்பாளர், “அடுத்த பர்த்டேவுக்கு இண்டஸ்ட்ரில ஒன் ஆப் தி பெரிய டைரக்டரா நீங்களும் இருப்பீங்க.. வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சி..!“ என்று, கொண்டுவந்திருந்த கிப்டைக் கொடுத்தார். நன்றி சொல்லியபடி தயாரிப்பாளரின் காலைத் தொட்டு கும்பிட்டார் இயக்குநர்.
“டேய் மணி, மதியம் எல்லாருக்கும் பிரியாணி வாங்கி கொடுத்துடுடா..” என்று சொல்லிவிட்டு இயக்குநரிடம், “டைரக்டர் சார், திருவள்ளுர்ல ஒரு ரெஜிஸ்ட்ரேஷன் இருக்கு.. பார்ட்டி வெய்ட் பண்ணிட்ருக்காங்க.. நாளைக்கு பாக்கலாம்..” என்று கைகடிகாரத்தைப் பார்த்தபடியே கிளம்பினார் தயாரிப்பாளர்.
மணி சில்வர் வாளியையும் டிபன் கேரியரையும் எடுத்துக்கொண்டு சைக்கிளில் புறப்பட்டான். திரும்பி வரும்போது உதவி இயக்குநர்கள் தயாரிப்பாளர் கொடுத்த கிப்ட்டை திறந்து வைத்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அது ஆப்பிள் ஐ போன். சந்தையில் ஐம்பதாயிரம் மதிப்புடையதாக இருக்குமென்று பேசிக்கொண்டார்கள். பிரியாணி பரிமாறும்போது இயக்குநர் இறுக்கமாக இருந்தார். காலையில் இருந்த மகிழ்ச்சி அவரிடம் இல்லை. தயாரிப்பாளர் கொடுத்த பரிசு அவருக்கு உவப்பனதாக இல்லை என்று மணிக்கு தோன்றியது.
வழக்கத்துக்கு மாறாக, இயக்குநரும் உதவி இயக்குநர்களும் வெகு சீக்கிரமாகவே வீட்டுக்கு கிளம்பினர். தனியாக இருந்த மணி செல்போனில் மூழ்கியபடியே ஷோபாவில் சரிந்து உறங்கிப்போனான்.
மறுநாள் காலை. இயக்குநர் சாய்சங்கர் அலுவலகத்திற்குள் நுழையும் போதே சிடுசிடுவென்று இருந்தார். வீட்டில் பிரச்சனையென்று மணியால் உணர்ந்து கொள்ள முடிந்தது. “மணி, சூடா டீ கொண்டு வாடா..” என்று தயாரிப்பாளரின் அறைக்குள் நுழைந்துகொண்டார். இயக்குநருக்கு பிடித்த மாதிரி டீயை ஸ்டராங்காகவும் சர்க்கரையை சற்று குறைவாகவும் கலந்து எடுத்துப்போனான். அறைக் கதவை திறக்கும்போது, இயக்குநர் இரைச்சலாக போனில் பேசிக்கொண்டிருந்தார். “சரிடி, கொடுத்துத் தொலைக்கிறேன்.. உன் இஷ்டம் போல நீ என்ன பண்ணனுமோ பண்ணிக்க..” என்று கோபமாக செல்போனை மேஜை மீது போட்டார். இயக்குநரின் மனதறிந்தவன் என்பதால் டீ கிளாஸை மேஜை மீது வைத்துவிட்டு வெளியே செல்ல முற்பட்டான். “மணி.. இந்தா, இதக்கொண்டுபோயி வீட்டுல அக்காக்கிட்ட கொடுத்துட்டு வா..” என்று தயாரிப்பாளர் கிப்ட்டாக கொடுத்த ஆப்பிள் ஐ போனை கொடுத்தார். தலையாட்டியபடி வாங்கிக்கொண்டு கிளம்பினான் மணி.
மணி அலுவலகத்துக்கு திரும்பி வந்தபோது, வாசலில் தயாரிப்பாளரின் செப்பல் கிடப்பதை பார்த்தான். அலுவலகம் என்றும் இல்லாத அமைதியான நிலையில் இருந்தது. அவ்வப்போது அறைக்குள் இருந்து தயாரிப்பாளரின் கோபக்குரல் மட்டும் சத்தமாக ஒலித்தது. இயக்குநரும் தயாரிப்பாளரும் வெளிப் பிரச்சனைகளின் அழுத்தங்களை இங்கே கொண்டுவந்து தளர்த்திக்கொள்வது வாடிக்கையானதுதானே என்று நினைத்தபடி ஹாலின் ஷோபாவில் ஓரமாக உட்கார்ந்து கொண்டான் மணி. சிறிது நேரத்திற்குப் பிறகு, கதவை படார் எனத் திறந்தபடி வெளியே வந்தார் தயாரிப்பாளர். படக்கென்று எழுந்த மணி, “வணக்கம் சார்..” என்றான். அவர் மணியை முறைத்துப் பார்த்துவிட்டு வேகமாக வெளியேப் போனார். மணிக்கு “பக்“கென்று ஆகிவிட்டது. வேலையில் சேர்ந்த நாள் முதல், வணக்கம் சொன்னால் பதிலுக்கு வணக்கம் சொல்வார். இல்லையென்றால், வணக்கத்தை ஏற்றுக்கொண்டது போல் தலையசைப்பார். இப்படி அவர் கோபமாக முறைத்துப் பார்த்ததில்லை. இயக்குநரும் விகடபாரதியும் தயாரிப்பாளரின் பின்னாலேயே சென்று அவர் காரில் ஏறி மறையும் வரை பார்த்துவிட்டு திரும்பி வந்தனர். வாசலில் நின்றுக்கொண்டிருந்த மணியைப் பார்த்து விகடபாரதி, ”அப்புறம் மணி.. பெர்பார்ம்மென்ஸ்லாம் பிச்சு எடுக்குற.. கமலஹாசனே உங்கிட்ட கத்துக்கணும் போலயே..” என்று நக்கலாக கேட்டபடி உள்ளே போனார். தயாரிப்பாளரின் பார்வையும் விகடபாரதியின் கிண்டல் பேச்சும் மணிக்கு உள்ளுக்குள் சந்தேகத்தைக் கிளப்பியது.
மணி எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயல்பாக தன்னை வைத்துக்கொண்டான். மதிய உணவு பரிமாறும்போதுகூட அவனிடம் யாரும் பேசாமல் நிசப்தமாக சாப்பிட்டது அவனுக்கு பீதியை கூட்டியது. எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் தட்டில் சோற்றைப் போட்டுக்கொண்டு சாப்பிட பிடிக்காமல் வெறும் சோற்றை பிசைந்து கொண்டிருந்தான் மணி. வெறுப்பாக இருந்தது அவனுக்கு. பேருக்கு இரண்டு வாய் சாப்பிட்டான். அப்போது, இயக்குநர் அறைக்குள் அவர்கள் கிசுகிசுப்பாக பேசிக்கொள்வது கேட்டது. விகடபாரதிதான் சொன்னார். “கூப்பிட்டு கேளுங்க சார்.. சின்ன விசயம்னு நெனைக்காதீங்க.. ஸ்க்ரிப்ட்டெல்லாம் இங்கதான் வச்சிட்டு போறோம்.. மிஸ்ஸாயிடுச்சுன்னா.. புரடியூசருக்கு யார் சார் பதில் சொல்லுவா.. கூப்பிட்டு கேளுங்க சார்..”
மணிக்கு தன்னைச் சுற்றி ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று மட்டும் புரிந்தது. அப்போது, இயக்குநர் பாசமாக “மணி.. இங்க வா கண்ணா..” என்று அழைத்தார். அவன் சாப்பிட்ட கையோடு எழுந்து உள்ளே சென்றான். மணி வந்ததும் விகடபாரதி, “நீங்கள்லாம் வெளியே வந்திருங்கப்பா..” என்று உதவி இயக்குநர்களை அழைத்துக்கொண்டு கதவை சாத்திவிட்டு வெளியே போனார்.
மணிக்கு பயத்தில் உடல் லேசாக நடுங்கத் தொடங்கியது. தரை விரிப்பாக போடப்பட்டிருந்த ஷோபாவில் அமர்ந்திருந்த இயக்குநர், “உக்காரு கண்ணா..” என்றார். தயங்கியபடி, “பரவாயில்லண்ணே.. சொல்லுங்க..” என்றான். சில நொடிகள் அவன் முகத்தையே பார்த்தவர் படக்கென்று அவன் காலடியில் விழுந்து பாதங்களைப் பற்றிக்கொண்டார். “மணி.. என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லுடா.. மணி.. ப்ளீஸ்டா.. என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லுடா.. மணி என்னை மன்னிச்சிடுடா..”
“அய்யோ, அண்ணே.. என்னண்ணே நீங்க..” என்று பதறியபடி விலகி அவரை தூக்க முயன்று முடியாமல் தரையோடு உட்கார்ந்துகொண்டான். குலுங்கி குலுங்கி அழுத இயக்குநர் சிறிது நேரத்திற்கு பின், கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தார்.
“என்னாச்சுண்ணே உங்களுக்கு.. ஏன்ணே இப்படி பண்ணீங்க.. சொல்லுங்கண்ணே..” என்பதுபோல் பார்த்தான் மணி. அவன் முகத்தை பார்க்க முடியாமல் தரையை பாரத்தபடி இருந்த இயக்குநர், “மணி, அண்ணன் தப்பு பண்ணிட்டேன்டா.. செல்போன் திருடு போயிடுச்சுன்னு பொய் சொல்லிட்டேன்டா..” என்று சொல்ல, மணி அதிர்ச்சியாக பார்த்தான்.
“உனக்கே தெரியும்ல, வீட்டுல எவ்ளோ பிரச்சனையா இருக்குன்னு.. வட்டிக்கு வாங்கித்தானே ஸ்கூல் பீஸ் கட்டினோம். சீட்டுப்பணம் ரெண்டு மாசத் தவணை.. வாடகை பாக்கினு வீட்டுக்கு போனா நிம்மதியே இல்லடா மணி.. கதை யோசிக்கவே முடியலடா.. புரடியூசர், செல்போனுக்கு பதிலா பணமா கொடுத்திருந்தா.. என் பிரச்சனையெல்லாம் சால்வ் பண்ணியிருப்பேன்.. என்னால சமாளிக்க முடியலடா மணி.. அதான் போனை வித்துட்டு..” என்று இழுத்தார்.
மணி இன்னும் குழப்பம் தீராதவனாக பார்த்துக்கொண்டிருந்தான்.
“நீங்க கிப்ட்டா கொடுத்த செல்போனை வித்து என் கடனையெல்லாம் அடைச்சிட்டேன்னு புரடியூசர்ட்ட சொல்ல முடியுமா..? என்னை தப்பா நினைக்கமாட்டாரு.. அதான், செல்போன் திருடு போயிடுச்சுன்னு சொல்லிட்டேன்.. ஆனா, அது உன் பக்கம் திரும்பும்னு நான் யோசிக்கவே இல்ல..” என்று சொல்லிக் கொண்டிருக்க, அவுட் போகஸில் இருந்த காட்சிகள் போகஸ் ஷிப்ட்டாகி தெளிவாகத் தெரிந்தன மணிக்கு. “ஆபீஸில் இருந்த செல்போன் காணாமப் போயிட்டுன்னு நான் சொன்னதும் எல்லாரும் உன்னைத்தான் சந்தேகப்படுறாங்க.. ஆனா, நான் சந்தேகப்படல..” என்று சொல்லி, மணியின் கைகளை பற்றிக்கொண்டு, “பதினஞ்சு வருசப் போராட்டம்டா கண்ணா.. லைப்ல எல்லாத்தையும் இழந்துதான் இந்த படத்தை பிடிச்சிருக்கேன்.. இந்தப் படமும் கைவிட்டுப்போச்சுன்னா.. நான் தற்கொலைப் பண்ணிக்கிறத தவிர எனக்கு வேற வழி தெரியாதுடா..”
மணி நிமிர்ந்து பார்த்தான்.
“அந்த செல்போனை நீதான் திருடுனேன்னு ஒரே ஒரு… ஒரே ஒரு பொய் மட்டும் சொல்லிடுடா…” கெஞ்சினார் இயக்குநர். மணி செய்வதறியாமல் தரையைப் பார்த்தான். அவன் திரையில் காட்சிகள் இருண்டிருந்தன. அரங்கிலிருந்து ஒவ்வொருவராக வெளியேறுவதுபோல சத்தம் கேட்டது.
“மணி ப்ளீஸ்டா.. ஒத்துக்கடா.. இந்த அண்ணன் உன்னை கைவிட்ற மாட்டேன்டா.. உன்னை பெரிய நடிகனா.. பெரிய ஹீரோவா.. ஆக்கிக் காட்றேன்டா.. இது சத்தியம்டா..” என்று அவன் தலையில் கைவைத்து சொல்லிவிட்டு, மீண்டும் அவன் கரங்களை பற்றிக்கொண்டார். மணியின் கற்பனையில், இயக்குநரின் முகத்தின் மீது தயாரிப்பாளர் ஸ்கிரிப்ட் புத்தகத்தை விசிறியடிப்பது போலவும், “என் முகத்துலயே முழிக்காதே..” என்று வெளியேத் தள்ளி கதவை அடைப்பது போலவும் காட்சிகள் ஓடின. தலையை லேசாக சிலுப்பி எதிர்மறைக் காட்சிகளை உதறித் தள்ளினான். அது இயக்குநரின் பார்வையில் “உங்களுக்காக பழிய ஏத்துக்குறேன்..” என்பதாகத் இருந்தது.
“தேங்க்ஸ்டா மணி.. தேங்க்ஸ்.. இந்த நன்றியை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்.. மறக்கவே மாட்டேன்.. தேங்க்ஸ்.. தேங்க்ஸ்..” என்றார்.
தயாரிப்பாளர் டைனிங் டேபிளில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார். உயர்ரக பாட்டிலில் பாதி காலியாகி இருந்தது. அவரின் எதிரில் துவைக்கப்பட்ட நிலையில் மண்டிப்போட்டிருந்தான் மணி. கன்னங்கள் கன்றிப்போயிருந்தன. உதட்டோரம் இரத்தம் உறைந்துபோயிருந்தது. விகடபாரதியும் உதவி இயக்குநர்களும் அடியாட்களைப்போல பொஸிசனில் நிறுத்தப்பட்டிருந்தனர். இயக்குநர் கிளாஸில் மதுவை ஊற்றி, பழச்சாறை கலந்து வைக்க, அதை எடுத்து ஒரே மிடறில் குடித்த தயாரிப்பாளர், மணியின் பக்கவாட்டு மண்டையில் ஓங்கி அறைந்தார். அவன் பொத்தென்று சரிந்து விழுந்தான். சில விநாடிகள் அப்படியே கிடந்து, பின் எழ முயன்றான். அவனால் முடியவில்லை. அடிவாங்கி அடிவாங்கி மிகவும் சோர்வுற்றிருந்தான். தள்ளாடியபடியே எழுந்த தயாரிப்பாளர், வார்த்தைகள் இடற..
“த்தா.. என் ஆபீஸ்லயே கை வக்கிறியா..? ” என்று காலால் ஒரு எத்து எத்தினார். பாத்ரூம் கதவில் மோதி தரையில் விழுந்தான் மணி. ”உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா.. எங்கிட்டயே நீ ஆட்டையப் போடுவ.. அவ்ளோ பெரிய திருடனாடா நீ.. உன்னை..” என்று மீண்டும் காலைத் தூக்கி உதைக்கப்போக, விகடபாரதி அவரை தடுத்து பிடித்துக்கொண்டு, “சார்.. சார்.. பாவம் சார்.. தெரியாமப் பண்ணிட்டான்.. மன்னிச்சு விட்றுங்க சார்..” என்று சொல்ல,
“ஏன் சார் அவரைத் தடுக்குறீங்க.. விடுங்க, அந்த நாயை அடிச்சிக் கொல்லட்டும்.. கூடப்பொறந்த தம்பி மாதிரி பாத்துக்கிட்டேன் சார்.. இப்படி பண்ணிட்டானே சார்.. அடிச்சிக் கொல்லுங்க சார் அவனை..” என்று இயக்குநர் சாய்சங்கர் சொல்ல, மணி லேசாக தலையை உயர்த்தி இயக்குநரை பார்த்தான். அவர், கலப்படமில்லாத தூய்மையான கோபத்தை முகத்தில் காட்டிக்கொண்டிருந்தார். “அவரை என்னடா பாக்குற.. திருட்டுத் தாயொலி..” என்று முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டார் தயாரிப்பாளர். வாயிலிருந்து இரத்தம் கொட்ட, வாசலில் வந்து விழுந்தான் மணி. “இன்டஸ்ட்ரி பக்கம் உன்னை எங்கேயாவது பார்த்தேன்.. சாவடி அடிச்சிருவேன்.. ஓடிப்போயிரு..” என்று அவன் மீது துணிப்பையை வீசினார்.
தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. நாய்கள் மட்டும் உலவிக்கொண்டிருந்தன. துணிப்பையை இழுத்தபடி தள்ளாடித் தள்ளாடி தெரு முனைக்கு வந்தான். எங்கே போவதென்று தெரியவில்லை. பசி மயக்கம் வேறு கிறுகிறுவென்று இருந்தது. நடைபாதையில் சரிந்து உட்கார்ந்து தெருவின் வழிகாட்டி பெயர் பலகையை பார்த்தான். “எம்ஜியார் தெரு“ என்று இருந்தது.