தூங்கும் அப்பாவின்
கட்டை விரல் ரேகையை
மதிப்பெண் அட்டையில் சாதுர்யமாக பதிக்கிறான்
பள்ளிச் சிறுவன் ஒருவன்
காய்த்துப் போன கணவனின் கைகளை
வருடிக் கொடுத்து
ரேகைகளை மீட்டு உருவாக்கம் செய்கிறாள்
காதல் மனைவி
தன் படிப்புச் சான்றிதழை
தடவிப் பார்க்கும் போதெல்லாம்
உழைத்துத் தேய்ந்த அம்மாவின் கைரேகைகள்
தட்டுபடுவதாய் உணர்கிறாள்
நரம்பும் எலும்பும் எஞ்சிய பட்டதாரி ஒருத்தி
தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும்
எல்லா நீர்மமும் போட்டு
அழுந்த துடைத்த பின்னும்
அழியப் போவதில்லை
வீட்டுத் தரைக்கு தளம் போட்டவரின்
கைரேகைகள்
வாழ்ந்து கெட்டவனின் நிலம்
விலைபேசி முடிக்கப்பட்டு
பதிவுப் பத்திரத்தில் பதியப்பட்ட ரேகை
சிவப்பு நிறத்திற்கு மாறத் துவங்குகிறது
கைரேகை ஜோதிடம்
பார்ப்பவர்களும்
கையில்லாதவர்களும்
வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்
யாரோ சிலருக்கு
நம்பிக்கைத் துளிகளை தெளித்தபடி
*****************
எல்லோரிடமும் இருக்கின்றன
சொந்த வீட்டுக்கான
கனவுகளும் காரணங்களும்
இரசத்திற்கு
மிளகு இடிக்கும் சுதந்திரத்திற்கேனும்
கட்டிடத்தான் வேண்டும் ஒரு சொந்தவீடு
Yes very excellent line …that story I am reading of line in my maind of bold thought . Good.