சிறார் இலக்கியம்
Trending

சிறார் கதைப் பாடல்கள்- நல்லாசிரியர் அனுமா

1) அறியாமை காகம்

அன்னம் ஒன்றும் காகம் ஒன்றும்

அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தன

அங்கே இருந்த அத்தனை உயிர்களும்

அழகிய வண்ணமுடன் இருந்தன.

 

கருப்பாய் இருப்பதோடு அழகும் குறைந்து

அசிங்கமாக இருப்பதாய் நினைத்த காகம்

அன்னத்திடம் பொறாமை கொண்டும் கவலையோடும்

அமைதி இன்றி காலம் கழித்தது.

 

வெண்பனி போன்றும் ஒளி மிளிர்ந்தும்

வெள்ளை அன்னத்தின் சிறகுகள் கண்டு

வேதனை உற்ற காகம்நெருங்கி

வெண்மையின் ரகசியம் யாதெனக் கேட்டது.

 

நீரிலேயே இருப்பதே நிறத்தின் ரகசியம்

நீந்திக் கொண்டே சொன்னது அன்னம்.

நிசம் என்று நம்பிய காகம்

நீரில் வாழ்ந்திட முடிவு செய்தது.

 

நீந்திக் கொண்டும் குதித்துக் கொண்டும்

நீரில் உள்ளதைத் தின்று கொண்டும்

நீண்ட நாள்கள் சென்ற போதும்

நிறம் கருப்பு குறையவில்லை காகத்திற்கு.

 

மரத்தை விட்டு குளத்தில் வாழ

மாறிப் போனது உணவும் உடலும்

மாலை காலை நீரில் குளித்தும்

மாற்றம் இல்லை சிறகுகள் மீதில்.

 

சுத்தம் செய்து சுத்தம் செய்து

சோர்ந்து போனது முட்டாள் காகம்

சேர்ந்த உணவும் சீரணம் ஆகாது

சீக்கிரம் நோயில் வீழ்ந்தது காகம்.

 

உடல் மெலிந்து உருக் குலைந்து

உயிரும் ஒருநாள் பறந்தே போனது

உலகப் படைப்பு இயல்பாய் நிகழ்வது

உணர்ந்து கொண்டால் இனிக்கும் வாழ்வு.

 

நீதி:பழக்கத்தை மாற்றினாலும் இயற்கையை மாற்ற முடியாது. இயற்கையை அப்படியே ஏற்பதே நன்று.

 

2) புத்திசாலி குரங்கு

அழகிய ஆற்றின் கரை ஓரம்

அடர்ந்த கிளையுடன் நாவல் மரம்.

அங்கே குட்டியுடன் குரங்கு ஒன்று

ஆனந்தமாய் வாழ்ந்து வந்தது.

 

ஆற்றில் வாழும் முதலை ஒன்று

அடிக்கடி கரையில் வந்து சென்று

அன்பாய் பேசிப் பழகிவந்தது

அங்கே இருந்த குரங்கிடம்…

 

நாள்தோறும் நாவல் பழம் பறித்து

நண்பன் மகிழக் கொடுத்தது குரங்கு

நன்றாய் உண்டு முடித்த மிச்சம்

நல்ல மனைவிக்கு எடுத்துச் சென்றது.

 

ஒருநாள் முதலை குரங்கை அழைத்து

ஒப்பற்ற விருந்து உனக்கு அளிப்பேன்

ஒப்புக்கொள் என்று கேட்டுக் கொண்டது..

 

தப்பில்லை என்றே எண்ணிய குரங்கும் தலையை ஆட்டி உடன் சென்றது.

தன்முதுகில் குரங்கை ஏற்றிய முதலை

தடம் மாறாமல் ஆற்றில் சென்றது.

 

பாதி வழியில் போகும் போது

பகிர்ந்தது உள்ளம் அறிந்த உண்மையை

பழமே இத்தனை சுவை என்றால்

பலமுறை தின்ற குரங்கின் இதயம்

 

பலமடங்கு சுவையாய் இருக்கும் அன்றோ?

பக்குவமாய் பேசி அழைத்து வாருங்கள்

பங்கிட்டு இருவரும் சுவைத்தே மகிழ்வோம்

பகன்றது முதலை குரங்கி னிடம்..

 

திடுக்கிட்டு விழித்த குரங்கு

திட்டம் ஒன்றை தீட்டியது விரைந்து..

திருப்பிப் போடணும் இதயத் தசையை

திருப்புக் கரைக்கு உனது பயணத்தை..

 

எதற்கு நாம் திரும்ப வேண்டும்

எது முதலை,மரத்தின்மேலே காய்கிறது என்னிதயம்

மறந்து விட்டேன்.எடுத்துத் தரவே பதில்சொன்னது குரங்கு.

 

உடனே உடலைத் திருப்பி உல்லாசமாய்

வந்து சேர்த்தது கரையில் குரங்கை.

விரைந்து மரத்தின் உச்சியில் சென்றே

உற்ற நட்பை உணரா நீயோ நண்பன்?

 

இதயம் என்பது உடலினுள் இருக்கும்

உண்மை தெரியா முட்டாள் முதலையே

உன்னை நண்பன் என்றே எண்ணிப் பழகியது

என்தவறே.என்றபடி விலகிப் போயிற்று குரங்கு.

 

நன்றி கெட்ட முதலை இன்னும்

நல்லவன் போல் கண்ணீர் வடித்தே

காத்துக் கிடக்குது ஆற்றின் கரையில்

செத்து விட்டது போல் படுத்தே!

 

நீதி:ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும். நமக்கு இடுக்கண் வரும்போது அறிவால் வென்றிட வேண்டும்..

 

3) முயலும் நண்பர்களும்

 நல்ல முயலும்

 நண்பர்கள் மூவரும்

நலமுடன் இனிதே நகரம் ஒன்றில்

நட்பு கொண்டும் ஒன்றுக்கொன்று

நயந்து உதவியும் வாழ்ந்து வந்தன.

 

தொல்லை ஏதும் வந்தால் உனக்கு

தொடர்ந்து வந்தே காப்போம் என்றே

உறுதி அளித்தன

உவப்புடனே முயலுக்கு .

உற்ற நண்பர்கள்

உறுதியால் மகிழ்ந்து கொண்டது முயல்.

 

வேட்டை நாய்கள் ஒன்றுகூடி

வெள்ளை முயலை விடாது துரத்த

விழியில் நீருடன் ஓடிச் சென்று

உதவிக் கேட்டது குதிரை நண்பனிடம்.

 

முதலாளி சவாரி செல்லும் நேரம்

மன்னிக்க வேண்டும் இப்போது என்னால்

முயலே உனக்கு உதவிட முடியாது என்றே  குதிரை இயம்பிற்று.

 

அடுத்த நண்பன் பசுவிடம் சென்றே

ஐயோ நாய் என்னை துரத்துகிறது

நல்ல நண்பன் நீ என்னை

தூரமாய் அழைத்துச் செல் என்றது.

 

பால் கறக்கும் நேரம் இது

பச்சிளம் குழந்தைகள் பசி ஆற்றணும்

பக்கத்தில் முதலாளி வரும் நேரம்

பாவம் உனக்கு உதவிட முடியாது

 

என்ற பசுவின் பேச்சைக் கேட்டு

எதுவும் கூறாது இடத்தை நீங்கியது.

எலந்தை காட்டில் மேய்ந்தபடி இருந்த

ஆட்டிடம் உதவி கேட்டது முயல்.

 

தலையை ஆட்டி மறுத்த ஆடு

தனது உணவை மென்றபடி இருந்தது.

தனக்கு யாரும் உதவ முடியாது

தானே ஓடுவோம் என்பதை உணர்ந்து

 

தன்னால் முடிந்த அளவில் வேகமாக

தானே ஓடிச் சென்று மறைவாய்

தப்பித்துக் கொண்டது சின்ன முயல்..

 

எல்லா நேரமும் யாரோ உதவுவர்

என்றெண்ணி வாளாவிருப்பது கூடாது.

தன்னைக் காக்கும் தகுதியும் திறமையும்

தானே வளர்த்துக் கொள்ளல் அவசியம்.

 

நீதி:தன் கையே தனக்கு உதவி.

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button