யாரும் பார்க்காத சொல்
அவிழ்த்தெறிய முடியாமல்
சுற்றிச் சுழல்கிறது இரவாடை
நீண்ட கொடியென பறக்கும் நெடுஞ்சாலைகள்
தோள்களைப் புதைக்கின்றன
உதறிவிட்டுப் பறக்க நினைக்கிறேன்
முடிவற்ற பழைய ஒளியில்
எனக்கானதை
மிகப்புதிதாக வாங்க வேண்டும்
எலும்புகளில் கனக்கும் மைல் கற்கள்
புடைத்து உடையும் சப்தம்
தூசுத் துகள்களை
வீண்மீன்களாக
இரவாடை முழுக்க
தைத்துக் கொண்டிருந்ததை அம்பலப்படுத்துகிறது
இரவில் கருப்பாகப் பெய்திருந்தாலும்
மழையின் சுவை
உடல் தோறும் மாறுவது
விளைந்த கனிகளின் கண்களைக்
குருடென அறிவித்து
பூட்டிய வீட்டுச் சுவற்றில்
அழித்து எழுதி மொழி பழகுதல்
ஆறாத அழுக்கு
‘உன்னைப் போல எதுவுமில்லை’
பெருமித ஒளி பீறிடும் கண்ணாடியில்
ஆழ்ந்த வடுவெனத் துளையிடுகிறது
கண்ணீர் வண்டு
பிடித்துத் தின்னும் போது
எலும்புகளின் துளைகளில் எழும் கீதம்
சொல் புதிது சுவை புதிது என அரற்றுகிறது
கழன்றோடும் இரவாடைக்குள்
உடைந்து எரிகின்றன நெடுஞ்சாலைகள்
பிறக்கும் குழந்தைக்கு
எல்லாத் திசையிலும் திறக்கிறது
யாரும் பார்க்காத சொல்
*****
நெய்தல் பாடல்
கடலுக்கு மிக அருகில்
இருக்கிறது என் வாழ்க்கை
நனைவதற்கு நகர்ந்தேன்
கை கால்களில் விலங்குகள்
கடல்நீர் குடிக்க இதழ் திறக்கிறேன்
பிளாஸ்திரியால் ஒட்டுகிறார்கள்
கண்களால் அலை குடிக்கிறேன்
கறுப்புத் துணியால்
இறுக்கிக் கட்டுகிறார்கள்
காதுகளில் அலையடித்துப் பேசுவதை
யாரோ பார்த்து உளவு சொன்னபின்
மணல் அள்ளிப் புதைக்கின்றனர்
இரண்டு காதுகளையும்
உப்புக்காற்றின் ஈரமணம் நுகர்கிறேன்
நெய்தல் மண்ணின் மகனென அறிகையில்
நாசிக்குள் நுழைகின்றன
தீக்குச்சிகள்
நிற்கிறது மூச்சு
இப்போது
கடலுக்கு மிக அருகில்
இருக்கிறது அவன் பிணம்