பிராட்டி
வயிற்று செல்களைக் கொத்தித்
தின்னும் பட்டாம்பூச்சிகளை மட்டும்
மேய்க்கத் தெரிந்தவளாக இருக்கிறாய்
சிலம்பணிந்து
ஆதிகாலத்து ஆப்பிளைக் கவ்வியபடி
ஒரு மாயமான் வரக்கூடும்
தயவுசெய்து பிடித்துவரப் பணிக்காதே!
அட்லஸ் ல் இல்லாததொரு தேசத்திற்கு
காலம் கடத்திவிட்டால்
கனவுகளிலும் துப்பாக்கியில்
வெண்புறாக்களைக் குண்டுகளாக்கும்
நான் என்செய்வேன்?
சரி வா,
ஒருவரின் பாதியில்
மற்றொருவரின் பாதியைத் தைத்துக்கொண்டு
வீட்டுக் கூரையின் வழியே தெரியும்
மீதமிருக்கும் நட்சத்திரங்களையும்
எண்ணி முடித்துவிடலாம்.
*****
மது
அவர் மதுக்கோப்பைக்குள்
தன்னைப் பருகிக் கொண்டிருப்பார்
உலகின் கால்களில்
மாஞ்சாவைக் கட்டி
பிரபஞ்சத்தில் பட்டம் விடுவார்
பாஸ்பரஸ் ஐ உலர வைத்து
தன் அடையாளங்களைப்
போட்டு வைப்பார்
ஏழரைக் கட்டையில்
சாரீரத்தை உயர்த்தி
மூன்லைட் ஸநாடாவைப்
பகலில் பாடிக் கொண்டிருப்பார்
எல்லா மதுவகைகளையும்
அவர் விரும்பிய அளவுக்கு
கல்லீரல் விரும்பவில்லை
சென்ற வாரம்
செத்துப் போனார்
மதுப்போத்தல் வடிவில்
சவக்குழியொன்றைத்
தோண்டினோம்
அவரே மதுவாக அதற்குள்
இறங்கிக் கொண்டார்
எங்கள் கண்களின் ஓரம் மது!!!
*****
சாலையோர தவம்
இறகுகளை ஊதி
பறவைகளைச் செய்கிறாள்
பிளாட்பாரத்து அக்கா
வானத்து வெண்புள்ளிகளை
இணைத்து வீடு வரைகிறான்
தம்பி
இவர்களின் ஸ்ருஷ்டிகள்
ஒரு சிரஞ்சீவிக்
கனவுகளாக நிலைபெற்றிருக்க
வரம் வாங்கியிருக்கின்றன.
காத்திரமான எழுத்து மேலாண்மை வெளிப்படும் படைப்புகளே வாசக சாலையின் வலிய நோக்கம் என்பது வழிய வழயத் தெரிகிறது.