“நான் படைத்த இவ்வூரும் மக்களும் இனி அமைதியற்று திரியட்டும்…”
என சபித்துவிட்டு, எழுதிக் கொண்டிருக்கும் தாளை ஆத்திரத்தோடு கட்டைவிரல் பதிய அவன் கசக்கித் திருப்பியதும், முந்தைய பக்கங்களில் உலாவிய கதைமாந்தர்கள் தங்களுக்குள் திருட்டுத்தனமாக சிரித்துக்கொண்டாலும், ஒருவித கலக்கமான சூழல் கதைக்குள் நிலவவே செய்தது.
தொளதொள ஜிப்பாவும் ஜோல்னா பையும் தடிமனான கருப்புக் கண்ணாடியும் சவரம் செய்யாமல் ஜடைமுடி சகிதமாய்த் திரியும் அக்மார்க் எழுத்தாளனின் சாபம் அவன் சிருஷ்டிக்கும் படைப்புலகில் கூடவா பலிக்காமல் போய்விடும்?
“பெரிய விஸ்வாமித்திரரு!! சாபம் கொடுக்கறாப்புல….” என்று வயலினை கீழே வைத்துவிட்டு சிரித்தான் கணியன்.
“எப்போ பாத்தாலும் கிறுக்கன் மாதிரி எதையாவது யோசிச்சு உளறிட்டு நம்ம உசுர வாங்குறான்…” பெயரிடப்படாத கதாபாத்திரம் தலையில் அடித்துக்கொண்டது.
“என்னதான் இருந்தாலும் நம்மளப் படைச்சவன் மேல பயம் இல்லாம பேசுறது சரியில்ல… அவன் கோபப்பட்டா ஒரே நிமிஷத்துல ஒண்ணுமில்லாமப் போயிருவோம்….!”
முதல் அத்தியாயத்திலிருந்து கதையில் தொடர்ந்து வரும் அக்கதாபாத்திரம் அப்படி எச்சரித்ததும் கதைக்களத்தில் ஆதரவும் எதிர்ப்பும் சரிசமமாய் வலுத்தது. மின்விசிறிக் காற்றில் மேசை மீது படபடத்த எழுதிய பக்கங்களின் அலைக்கழிந்த விவாதங்களின் சலசலப்பு இரவு முழுதும் ஓயவில்லை. அதுவே கதைமாந்தர்களுக்குள் சச்சரவாகிப் பின் கைகலப்பு வரை நீண்டது…
இதுதான் பிரச்சனை…
எழுத்தாளன் கவனிக்காத நேரத்தில் அவனது படைப்புலகம் எழுதியதைப் போல் இயங்குவதில்லை. கதைமாந்தர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்ட குணாதிசயங்களைத் துறந்துவிட்டு அவரவர் போக்கில் திரியத் துவங்கிவிடுகின்றனர். படைத்தவன் அயரும் பொழுதுகளில் அவைகளுக்குள் ஒளிந்திருக்கும் உண்மையான மனித சுயரூபங்கள் வெளிவந்து விடும்.
எழுத்தாளனும் தான் எழுதி முடித்த பக்கங்களைத் திரும்பிப் பார்ப்பதில்லை. தன் படைப்பின் மீதான மேலான நம்பிக்கையில் மீள்வாசிப்பு என்பதே கிடையாது. பக்கங்களை வரிசைப்படுத்தி வைக்கவுமில்லை. அடுக்கப்படாத காகிதங்களில் பாத்திரங்கள் இங்குமங்கும் இடம் மாறி உலாவுவதால் கதைக்குள் மேலும் ஏகப்பட்ட குழப்பம்.
தான் சித்தரித்திருக்கும் ஊருக்கு அன்பும் அழகும் ஒழுகும் ‘அறவூர்’ என்று எழுத்தாளன் பெயர் வைத்தபோதே பாத்திரங்களுக்குள் கேலிப்பேச்சுக்கள் எழாமலில்லை…
“அன்பா?? கிறுக்குப்பய!!”
“அறம் போதிக்க இவன் யாரு??”
நடப்பது எதுவும் அறிந்திராத அந்தப் பாவப்பட்ட எழுத்தாளன் எழுதுவது ஒன்றே தவமென பேனா மை தீரத் தீர எழுதிக் கொண்டே இருந்தான். அவன் காட்சிப்படுத்தும் ‘அறவூர்’ பசுமை பூத்த பூமி… ஏமாற்றாத வானம்… கரைபுரண்டோடும் ஆறு…. வற்றாத புன்முறுவல் பாய்ந்தோடும் முகங்கள்…. அக்கதையின் ஒவ்வொரு நிலைகளையும் இசையின் மெல்லிய இழைகளால் இணைத்துக் கட்டினான். எப்போதும் கதையின் ஏதோவொரு மூலையில் மனதை வருடும் இன்னிசை விடிந்து கொண்டிருக்கும். வியாகுல மனநிலையை இலகுவாக்கி சமநிலையில் வைத்திருக்க இசையால் மட்டுமே சாத்தியம் என்று நம்பினான். அதற்காகவே அவன் படைத்த பாத்திரம் தான் ‘கணியன்’.
‘வயலின்தான் கணியனின் காதலி! இருவரும் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் முத்தங்கள் தான் இசை!’ என்றுதான் கணியனை முதன்முதலில் அறிமுகப்படுத்தினான்…
அவனருகில் கால் நீட்டி உட்கார்ந்திருக்கும் கருஞ்சாம்பல்நிற வளர்ப்பு நாய்தான் கணியன் அன்றாடம் இசைக்கும் பாடலின் முதல் மற்றும் இறுதிப் பார்வையாளன். வளர்ப்பு நாய்க்குப் பெயரேதும் வைக்காத கணியன் ஒரு பிறவிக் குருடன்! தினமும் அவனது வளர்ப்புநாய் முன்னே வழிகாட்ட கடுங்காப்பி நிற வயலினை முதுகில் சுமந்படி பின்னால் நடப்பான். ரயில் நிலையத்திற்குப் போகும் பரபரப்பான சாலையின் நடுவே இருக்கும் மணிக்கூண்டை ஒட்டிய பிரபல சிற்றுண்டிக் கடை வந்ததும் நாய் இரண்டு முறை குரைக்கும். அந்தக் கடைவாசல்தான் கணியனின் தெருவோர இசை அரங்கேறும் மேடை. அவனது நெளிந்த அலுமினியத் தட்டில் விழும் சில்லறைச் சப்தங்கள் தான் இசைக்கான கைத்தட்டல்கள்.
பாலில் ஊறவைத்த இரண்டு ரொட்டித் துண்டை நாய்க்குக் கொடுத்தபின் வாசிக்கத் தொடங்குவான். பெரும்பாலும் காதல் பாடல்கள்தான். அதிலும் குறிப்பாக காதல் பிரிவின் சோகமும் ரணமும்தான் அவன் பாடல்களின் மையப்பொருள். அவசர வாழ்வில் சிக்குண்டு சுழலும் கதைமாந்தர்கள் சில நிமிடம் நின்று இசையில் இளைப்பாறவே எழுத்தாளன், ‘கணியன்’ கதாபாத்திரத்தை உருவாக்கியிருந்தான்.
ஆனால் தான் படைத்ததைப் போல் கணியன் ஒன்றும் பிறவிக்குருடன் கிடையாது என்பதும் எல்லாம் காசு சம்பாதிக்கப் போடும் வேஷம் என்ற உண்மை அடுத்தடுத்த அத்தியாயம் என்று நகர்த்திக்கொண்டே போகும் எழுத்தாளனுக்குத் தெரியாது.
இதுபோக எழுத்தாளன் கண்ணயரும் பொழுதுகளில், பசியில் குரைக்கும் தன் வளர்ப்புநாயைக் கண்டுகொள்ளாமல் கணியன் அன்று சம்பாதித்த காசில் மட்டரகமான சாராயம் வாங்கிக் குடித்துவிட்டு, “தூ! இதெல்லாம் ஒரு பொழப்பு… காலையிலேந்து கை நோவ ‘கொய்கொய்’ன்னு வாசிச்சு பிச்சை எடுக்க வேண்டியிருக்கு. அவனுக்கென்ன! என்னைய நடுத்தெருவுல படைச்சுப்போட்டு கையில வயலினக் கொடுத்துட்டு நோகாம அடுத்த அத்தியாயம் எழுதப் போயிட்டான். ஒருநாள் மாட்டுவான்…. மயிராண்டி செத்தான்னு வச்சுக்க….”
தன்னைப் பழிக்கும் வசைச்சொற்கள் எதுவும் காதில் விழாமல் உன்னதமான கதாபாத்திரத்தைப் பிரசவித்த திருப்தியோடு எழுதி எழுதி சோர்ந்து கருவளையம் விழுந்த கண்களை இறுக மூடியபடி எழுத்தாளன் உறங்கிக் கொண்டிருப்பான்.
முப்பது வயதிருக்கும் டேவிட் கதாபாத்திரமும் இதேபோல்தான்… புகழ்பெற்ற கின்னரப்பெட்டி இசைக்கலைஞன்… பரிசுத்த மேரி தேவாலயம் சார்பாக மாதம் இருமுறையாவது டேவிடின் இசை நிகழ்ச்சி கண்டிப்பாக நடந்துவிடும். திறந்த ஜன்னல் கதவுகள் போல தான் அணிந்திருக்கும் பொத்தான்கள் இடாத கறுப்புக் கோட்டின் இடைவெளியில் தெரியும் நீலநிற டையை சரிசெய்தபடி பார்வையாளர் பகுதியை நோக்கி டேவிட் மேடையிலிருந்து கையசைத்தால் போதும், அரங்கம் கரகோஷத்தில் அதிர்ந்து நொறுங்கும். அந்த அளவுக்கு கின்னரப்பெட்டியின் கருப்பு வெள்ளைக் கட்டைகளில் தவழும் அவனது கைவிரல்கள் அக்கதை முழுதும் புகழ் பெற்றவை…
ஆனால் உண்மையில் தன் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் தேவாலய நிர்வாக முக்கியஸ்தர்களோடு சேர்ந்து டேவிட் செய்யும் பணமுறைகேடுகளைப் பற்றி எழுத்தாளன் அறிந்திருக்கவில்லை. அவனைப் பொறுத்தவரை டேவிடின் உன்னதமான இசை அவனது பரிசுத்த மனத்தின் வெளிப்பாடு. தேவனின் அன்புகோட்டையின் திறவுகோல்!
“யாரக் கேட்டு உங்க சப்பரத்த எங்க தெருல விட்டீங்க…?”
“அதைக் கேட்க நீங்க யாரு…??”
சொந்த மண்ணின் கோயில் திருவிழாவின் நினைவில், கலர் கலர் மின்விளக்குகள் மினுங்க போஸ்ட் கம்பத்தில் குழாய் ஸ்பீக்கர்கள் கட்டிவைத்து நாதஸ்வர கொட்டு மேளமும் நாடான் கூத்துமாய், எழுத்தாளன் எழுதி முடித்த கோயில்கொடை நிகழ்வில், அவன் எழுதாத திடீர் தகராறு!
அதைத் தொடர்ந்து எழுந்த கலவரத்தில் பெயரில்லா கதாபாத்திரங்கள் சில வெட்டுப்பட்டு மறைந்து போயின. தன் படைப்புலகின் தலைக்கணக்கு குறைந்த விவரம் அறிந்திடாத முட்டாள் எழுத்தாளன் பூரிப்போடு அடுத்தக்கட்டு பேப்பர் வாங்க கடைக்குச் சென்றுவிட்டான்.
இதுவரை தாண்டியது பாதிக் கிணறா? முக்கால் கிணறா? இல்லை பாதி கூட நெருங்கவில்லையா என்ற ஐயம் ஒருநாள் எழவும், நாவலில் தான் கடந்துவந்த தூரத்தை அளக்க முடிவெடுத்தான். அதுவரை எழுதி முடித்த கைப்பிரதிகளுக்கு பக்க எண் இட்டு ஒரு கோப்பில் வரிசையாக அடுக்கி வைக்கும் எண்ணத்தில் எழுதியவற்றைத் திருப்பிப் பார்த்தபோது அதிர்ச்சி! அவனது படைப்புலகம் வேறொன்றாய் இருந்தது!! கதாபாத்திரங்கள் அங்குமிங்கும் இடம்பெயர்ந்திருந்தன. எதுவும் அவன் உண்டாக்கியது போலில்லை. நம்பிக்கை வராமல் திரும்பத் திரும்ப வாசித்துப் பார்த்தான்…
கதையெங்கும் வாகன இரைச்சல்களும் கூச்சலும் கூக்குரலும் வசைச்சொற்களும் போலிப்பேச்சுக்களுமென காற்று கனத்திருந்தது! எந்த முகத்திலும் புன்முறுவலோ அகமலர்ச்சியோ இல்லை. அவன் செழிப்பாய்ப் படைத்திருந்த ஊரின் வண்டல்மண் வெடிப்பு விட்டிருந்தது. ஆற்று மணல் அகழ்ந்த இடமெல்லாம் பாலைவனமாய்க் காட்சியளித்தன. மஞ்சள் நிற மேல்தளமாய் ஆவாரம்பூக்கள் வீதிகளில் இரைந்து கிடக்கும் என எழுதியிருந்த சாலைகளெல்லாம் குண்டு குழிகளாக இருந்தன. வேறு யாருடைய படைப்போ தன் கையெழுத்தில் எழுதப்பட்டிருப்பதாய்த் தோன்றியது. கதையில் தான் உருவாக்காமல் நெட்டநெடுக வளர்ந்து நிற்கும் அடுக்குமாடிக் கட்டிடங்களை கழுத்து நோக அண்ணாந்து பார்த்தான். கண்ணுக்கெட்டாத அதன் உச்சியிலிருந்து பெண்ணின் அழுகுரல் கேட்டது. “கடவுளே என்ன ஏன் படைச்ச??”
புறங்கை ரோமங்கள் குத்திட்டு நின்றன. “என்ன நடக்குது இங்க…..?” என்று தன் அறை எங்கும் எதிரொலிக்கும்படி கத்தியவன், எழுத்துப் பலகையில் ஓங்கிக் குத்தினான். கோபத்தில் எதுவும் ஓடவில்லை. மேசையில் இருக்கும் எழுதிய தாள்களைக் கலைத்து வீசினான். பின் அதன் விபரீதம் புரிந்தவனாய் மீண்டும் அடுக்கி வைத்து திரும்ப வாசித்துப் பார்த்தான். அதில் அவன் கதைக்கான பிரத்யேக தொனியில்லை.
“இது என் கதையே இல்ல!!!”
ஏமாற்றத்தில் தலையை இடம் வலமாக வேகமாய் அசைத்தான். நெற்றியில் வந்து விழுந்த முடிக் கற்றைகளை ஒதுக்கிவிட்டு வெறித்துக் கொண்டிருப்பவனை கதைமாந்தர்கள் யாரும் சட்டை செய்யவில்லை. ஆனால் எழுத்தாளனை முற்றிலும் உலுக்கியது என்னவோ மற்றொரு காட்சிதான்…
ஆள்வரத்து அதிகமிருக்கும் பூங்காவின் வாசலில் இசையின் இனிமையும் காதலின் கனிவும் நிறைந்த மீராபாய் சிலையொன்றை நிறுவியிருந்தான். மெய்மறந்த நிலையில் முகத்தை ஒருபக்கமாய் சாய்த்து விழி மூடி வலது கையில் தம்புரா மீட்டியபடியிருக்கும் அந்த வெண்ணிற மீராபாய் சிலை இடம் பெயர்க்கப்பட்டு ‘இது தனியார் இடம்’ என்ற கரும்பலகை ஊன்றப்பட்டிருந்தது.
வெட்டப்பட்ட மரத்தைத் தேடியலையும் தாய்ப்பறவையின் படபடப்போடு, உள்ளூர் ‘எம்.எல்.ஏ’ கதாபாத்திரத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட அவ்விடத்தை எழுத்தாளனின் விழிகள் திரும்பத் திரும்ப வாசித்து அதிர்ந்தபோதுதான் கோபத்தில் சபித்தான்…
‘நான் படைத்த இவ்வூரும் மக்களும் இனி அமைதியற்று திரியட்டும். தாயின் தாலாட்டுப் பாடலுக்காக ஏங்கி அழும் குழந்தையைப் போல் தான் இனி உங்கள் வாழ்க்கை இருக்கப் போகிறது’
எழுத்தாளன் நிகழ்த்தயிருக்கும் பேராபத்தை அறிந்திராத கணியன் அன்று மாலை எப்போதும்போல் முதலைக் கண்ணீர் மல்க காதல் பாடல்களை இசைத்துக் கொண்டிருந்தான்…
“உன் பாட்டு பிரிந்து போன என் காதலிய நினைவு படுத்துது…” என்று கூட்டத்தில் நின்றிருந்த தாடிக்காரன் ஒருவன் மதுவின் போதையில் கணியனைக் கட்டிப்பிடித்து அழுதான். பின் இருவரும் சேர்ந்து இரவு மது அருந்தினர்.
“எனக்காக நீ இன்னொரு பாட்டு பாடணும்…” போதையேறிய கண்களுடன் அவன் கேட்டுக் கொண்டதன் பேரில் “காய்ந்த காதல் சருகுகள்…” என்ற பாடலை கணியன் மதுக்கடையின் முன் நடைபாதையில் நின்றபடி வாசித்தான்.
“நீ ஒருத்தன்தான் என் மனசப் புரிஞ்சு வைச்சுருக்க…”
இருவரது கண்களிலும் மதுவின் போதையும் இசையின் சோகமும் கண்ணீராய் வடிந்தது. சில்லறைகளை விட்டெறிந்த தாடிக்காரன் “இன்னும் வாசி… இன்னும் வாசி…” என்றான். இரவின் இருட்டோடு இசையும் நீண்டுகொண்டிருந்த போதுதான் அது நிகழ்ந்தது…
கணியனின் தோளில் தலைசாய்ந்திருந்த வயலின் திடீரென்று இசைப்பதை நிறுத்தியது!! ஆச்சரியமாய்ப் பார்த்துவிட்டு மீண்டும் முயற்சித்தான். ஆனால் ஊடல்கொண்ட வயலினிடமிருந்து எந்தவொரு பதில்மொழியும் இல்லை..
அதேநேரம் தேவாலயம் ஏற்பாடு செய்திருந்த டேவிடின் இசை நிகழ்ச்சியில் அரங்கம் பரபரத்துக் கொண்டிருந்தது. குள்ளமும் உயரமுமாய் வெவ்வேறு வயதைச் சேர்ந்த பதினாறு சிறுவர் சிறுமியர் கரங்களை முன்னால் கட்டியபடியே இசை நடத்துனரின் கையசைவுக்காக அரங்கத்தின் ஒட்டுமொத்த மௌனப் பெருமூச்சோடு காத்திருந்தனர்…
பட்டத்துக் குதிரையின் பளபளப்போடு மேடையில் மிடுக்காய் நின்றிருந்தது கருப்பு நிற பத்தடி கின்னரப்பெட்டி. டேவிடின் தீண்டலுக்காக அதன் விதிப்பலகையும் அந்தத் தீண்டலை இசையாக்க அதன் ஒலிப்பலகையும் அந்த இசையோடு ஒன்றாகக் கலக்க பதினாறு பாடகர்களின் ஒருமித்தக் குரலும் தயாராய் இருந்தன.
இசை நடத்துனர் தன் கைகளை இருபுறமும் விரித்து உயர்த்தவும் கின்னரப்பெட்டியில் அதற்கேற்ற விதியை டேவிடின் கைவிரல்கள் அழுத்தியதும் , உருக்குக் கம்பிகள் அதிரத் தொடங்கின. ஆச்சரியம்! அந்த அதிர்வு எதுவும் இசையாய் வெளிவரவில்லை! பாடகர்களின் கூட்டுப் பாடலும் ராகமற்ற வெறும் சப்தக் கூட்டமாக நாராசமாய் ஒலித்தது!
அதேபோல் எம்.எல்.ஏ வீட்டுக் கல்யாணத்தில், ‘கெட்டிமேளம் கெட்டிமேளம்’ என்று பரபரப்பாய் பட்டுவேட்டிக்காரர் குரல் எழுப்பவும், நாதஸ்வரமும் தவிலும் ஏழுகால் பாய்ச்சலில் ஆனந்த பைரவி வாசிக்க, சுரங்களற்ற காற்று மட்டுமே வெளிவந்தது!!
அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் கதையின் எல்லா அத்தியாயத்திலிருந்தும் இசை மாயமாகியிருந்தது!! குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்… ஏழு சுரங்களும் கைகோர்த்துக் காற்றில் எங்கோ தொலைந்து போயிருந்தன!! மின்கம்பத்தில் கட்டியிருந்த குழாய் ஒலிப்பெருக்கிகள் பேச்சு வராத நாக்குகளாய் மௌனத்தில் தவித்துக் கொண்டிருந்தன.
சந்தனமப்பிய நெற்றியில் குங்குமம் பளிச்சிட, முகத்தை மறைக்கும் மீசையும் நீவிவிட்டுக்கொண்டு கோயில் பூசாரி வெற்றிலையில் மை போட்டுப் பார்த்து கண்களை அகலத் திறந்து கணியனிடம் சொன்னார்…
“இதெல்லாம் அந்த ரைட்டரோட வேலை…”
“நான் அப்பவே நெனைச்சேன், அந்த லூசுபய வேலையாத்தான் இருக்கும்னு…”
பூசாரி சொன்னதை உறுதி செய்யும் வகையில் மனிதர்களை விட்டு இசை பிரிந்து போய்விட்டதாக அடுத்த அத்தியாயத்தில் எழுத்தாளன் குறிப்பிட்டதும் கதைக்குள் பெருவாரியாக கூச்சலும் குழப்பமும் மூண்டது.
பண்ணும் தாளமுமற்ற இசைப்பாடல்கள் வெறும் பேரிரைச்சலாய் காதுமடல்களில் மோதி நின்றன. கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் தாயாய் நெருக்கத்திலிருந்த இசை இப்போது கும்பிட்டும் வராத கடவுளாகிப் போனது. இறுதி ஊர்வலத்தில் சாவுக்கொட்டு கேட்காத பிணங்கள் இடுகாட்டுச் சாம்பலாக முரண்டுபிடித்தன. கல்யாண ஊர்வலங்கள் வெறும் ஊமைச் சடங்குகளாகிப்போனது.
இசையற்ற வாழ்வில் உழலும் தன் கதைமாந்தர்களைப் பார்த்து பித்துப்பிடித்தவனைப் போல் எழுத்தாளன் சிரித்தான்.
“ஒண்ணுக்கெடக்க ஒண்ணு ஆகப்போகுதுனு அப்பவே சொன்னேன் கேட்டிங்களா…?”
“சரி நடந்தது நடந்துபோச்சு… இனிமே நம்ம இஷ்டத்துக்கு நடக்க மாட்டோம்னு படைப்பாளி கால்ல விழ வேண்டியதுதான்…”
“அதெல்லாம் சரிபட்டு வராது. அவன் எழுத்தாளன்தான். நம்மள படைச்சதுனால சாமி ஒண்ணும் கிடையாது. அந்தக் கோட்டிக்காரன்ட்ட கெஞ்சுறதுக்கு கோயில்குளத்துக்கு காணிக்கநேந்து முயற்சி பண்ணுவோம்…”
ஜன்னல் வழியே மேசை மீது விழும் நிலா வெளிச்சத்தில் எழுத்தாளனின் உறக்கத்தைக் குலைக்காத விதத்தில் கதாபாத்திரங்கள் மெல்லப் பேசி முடிவெடுத்தன.
“எங்ககிட்ட குறையேதும் இருந்தா மன்னிச்சுக்க… நீதான்யா அந்த ரைட்டர்கிட்டேந்து எங்கள காப்பத்தணும்…”
பூசாரி தீபாராதனை காட்டினார். கும்பிட்டுவிட்டு கோயில் தூணின் மேலிருக்கும் பஞ்சவாத்திய இயந்திரத்தை ஆசையோடு இயக்கிப் பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்த அற்புதமேதும் நிகழவில்லை. நாதஸ்வர மேளத்தை கோயிலைவிட்டு விரட்டியடித்த இயந்திர வாத்தியத்தால் கூட எழுத்தாளனை மீறி கதைக்குள் இசையை மீட்டுக் கொணர முடியவில்லை!
முன்கொண்டை குலைய… சூடிய பூக்கள் காற்றில் பறக்க… ஓங்கிய அரிவாளோடு கால்சலங்கை மணிகள் அறுந்துவிழும் வேகத்தில் கண்கள் தழலென ஜொலிக்க நுனிநாக்கைக் கடித்தபடி பூசாரி பூமி அதிர ஆவேசமாய் ஆடியும், எந்தவொரு பலனுமில்லை. மேசை அதிர்ந்து எழுத்தாளன் விழித்துக் கொண்டதுதான் மிச்சம்.
பரிசுத்த மேரி தேவாலயத்தில் டேவிட் பாடலற்ற வழிபாடு நடத்திவிட்டு ஃபாதரிடம் பாவ மன்னிப்பு கோரினான். டேவிடின் பாவச் செயல்களை முன்னவே அறிந்திருந்தாலும் அன்றுதான் தெரிந்து கொள்வது போல மௌனமாய்க் கேட்ட ஃபாதரும் பாவ மன்னிப்பு தந்தார். எழுத்தாளனின் கோபத்திலிருந்து தன்னை ரட்சிக்கும்படி மண்டியிட்டு மன்றாடும் டேவிடை கருணை வழியும் மெழுகு விழிகளோடு மேரியும் ஏசுவும் மௌனமாய்ப் பார்த்தனர். ஆனால் கதையின் சுர நிலைகளில் ஒரு மாற்றமும் இல்லை.
எழுத்தாளனும் இப்போது முன்பு போல் ஏமாளியல்ல. பன்மடங்கு எச்சரிக்கையாகவும் சுதாரிப்பாகவும் இருந்தான். காலை எழுந்ததும் கையில் தேநீர்க் கோப்பையோடு முந்தைய நாள் எழுதிய பக்கங்களை வாசிப்பதுதான் முதல்வேலை! கதாபாத்திரங்களை நிதானமாக வரிவரியாய் பின்தொடர்ந்தான். எழுத்தாளனின் பார்வை தங்கள்மேல் விழுவதை உணர்ந்ததும், அவன் ஒருவனுக்கே கட்டுப்பட்டவர்களைப் போலவும் அவன் பேனாவின் கூர்மைக்கே அஞ்சுபவர்களைப் போலவும் கதைமாந்தர்கள் காட்டும் போலிமுகங்களைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.
“என்ன ஆட்டம் போட்டீங்க? யாரும் படைச்சவன மதிக்கல… அதான் இப்படி பண்ணிட்டான்! இப்போ தலையிலயும் வாயிலயும் அடிச்சுகிட்டு என்ன பிரயோசனம்?”
ஒரு குடிகார கதாபாத்திரத்தின் மூலம் எழுத்தாளன் தான் நினைப்பதை கதையில் சப்தமாகப் பேசவைத்தான். எழுத்தாளனின் தனிப்பட்ட கரிசனத்தால் அந்தக் கதாபாத்திரம் குடிபோதையில் சாலையோரம் விழுந்து கிடக்கவில்லை. கதை வீதியெங்கும் தள்ளாடியபடியே திரும்பத் திரும்ப அதையே கத்திக்கொண்டு போனது…
“எல்லாவனும் என்ன ஆட்டம் போட்டீங்க….”
தனக்கும் கதைமாந்தர்களுக்கும் இடையே ‘இசை’ பெரும் பிரச்சனையாக உருவாகி வருவதை எழுத்தாளன் கவனிக்காமல் இல்லை. தாலாட்டுப் பாடலோ கிலுகிலுப்பை இசையோ கேட்காமல் அழும் பிள்ளையை தோளில் கிடத்தியபடி ரியல் எஸ்டேட் புரோக்கர் பால்கனியில் கால்கடுக்க நடந்து கொண்டிருந்தார்.
தன் மகன் கல்யாணத்தில் நாதஸ்வரமும் சண்டமேளமும் இசைக்காமல் களையிழந்து போனதால் ‘எம்.எல்.ஏ’ வும் கடுப்பில் இருந்தார்.
“அந்த ரைட்டர சும்மா விடக் கூடாது… ஒரு நாள் எழுதனத படிக்க எட்டிப் பார்ப்பான்ல அன்னிக்கு இருக்கு! நம்ம ஏகாம்பரம்கிட்ட ஏற்கனவே சொல்லி வச்சுருக்கேன். எதாவது கேஸப் போட்டு அப்படியே உள்ள தூக்கி வச்சுருவான்…”
“ஐயா அவன் முந்தி மாதிரி இல்ல… ஆளே மாறிட்டான்…” என்று உதவியாளர் சொல்வதும் சரிதான்.
கதாபாத்திரங்கள் மீதான சமீபத்திய வெற்றியால் முன்பு எப்போதும் இல்லாத பூரிப்பில் தன் ஆஸ்தான ஜிப்பாவையும் ஜோல்னா பையையும் விட்டொழித்து சாயம் போன நிறத்தில் ஜீன்ஸ் பான்ட் அணியத் தொடங்கியிருந்தான். முகத்தை மறைக்கும் தலைமுடியை வெட்டியிருந்ததில் வாடகை வாங்க வந்த வீட்டுக்காரருக்கும் எழுத்தாளனை அடையாளம் தெரியவில்லை. இதுபோக பேனாவின் பின்பகுதி தாடையில் படும்படி எதையோ யோசிப்பதை போல் தன்னைப் புதிதாய் புகைப்படம் எடுத்து பிரேம் செய்து மேசையில் வைத்துக்கொண்டான். எழுதிக் கொண்டிருக்கும் கதையைப் பற்றி பூரிப்போடு சவரம் செய்த கன்னத்தைத் தடவியபடி நண்பர்களோடும் பத்திரிக்கை ஆசிரியர்களோடும் தொடர்ச்சியாய்ப் பேசி வந்தான்.
‘எழுத்தாளனுக்குப் பயந்து இருந்ததெல்லாம் போதும். இனி எதிர்க்கேள்வி கேட்க வேண்டியதுதான்…’ என்று கதையில் இருப்பதிலேயே அதிகம் படித்த கதாபாத்திரங்கள் முடிவெடுத்தனர். எதையும் எளிதில் ஏற்காமல் சந்தேகத்தோடு ஆராய்ந்து பார்த்து எதிர்க் கேள்வி கேட்பவர்கள்…
“ஏழிசை, மனிதனை விட்டு விலகியது நிச்சயம் ஒரு பேரழிவின் தொடக்கப்புள்ளி…” என்று எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளனின் மினுங்கும் பேனா கூர்மைக்குச் சற்றும் அஞ்சாமல் அதன் நேரெதிரில் நெஞ்சை நிமிர்த்தி நின்றது, படித்தகூட்டம்…
“மேலே எறியும் பந்து இன்னமும் புவிஈர்ப்பு விதிப்படி கீழே விழுகிறது. காற்றில் கலந்த தொலைத்தொடர்பு அலைவரிசைகள் எல்லாம் எப்போதும்போல் இயங்குகின்றன… அறிவியல் விதிகளுக்குப் புறம்பாய் வேறெதுவும் நிகழ்ந்ததாய்த் தெரியவில்லை. அப்படியிருக்க இசை மட்டும் எப்படி காற்றில் காணாமல் போகும்?”
இந்தத் திடீர் எதிர்வினையை எழுத்தாளன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்படி நடப்பது இதுவே முதல்முறை! இத்தனை நாட்களாய்த் தான் கவனிக்காதபோது தன் விருப்பத்திற்கேற்ப செயல்பட்ட கதாபாத்திரங்கள், இன்று எழுதிக்கொண்டிருக்கும் போதே நேருக்குநேர் தன் எதிர்ப்பை பதிவு செய்யவும் எழுத்தாளன் சற்று அதிர்ந்துதான் போனான். இதுக்குதான் தேவையில்லாமல் அதிகம் படித்த கதாபாத்திரங்களை உருவாக்கக்கூடாது.
“கேள்விக்கு பதில் சொல்லுங்க…. நேரத்தக் கடத்தி சமாளிக்க முடியாது.”
வெற்றுத்தாளில் உருவமும் உயிரும் கொடுப்பவனுக்கு சுதாரித்துக் கொள்ளச் சில விநாடிகளே தேவைப்பட்டன.
“இசை எங்கும் மறைந்து போகவில்லை. நீங்கள்தான் அதைக் கேட்கும் திறனை இழந்து விட்டீர்கள்… உங்கள் செவிகள் இசைக்கு மரத்துப்போய் விட்டன…”
எழுத்தாளன் அப்படிக் குறிப்பிட்ட பின்தான் தங்களைச் சுற்றி கவனித்தனர். பறவைகள் விலங்குகளின் நடவடிக்கையிலும் எந்தவொரு மாற்றமோ சலனமோ இல்லை! கதைநெடுகிலும் மரங்கள் காற்றின் இசைக்குத் தலையாட்டியபடி தான் இருக்கின்றன. கணியனின் நாய் கூட கேட்காத வயலின் இசைக்கு எப்போதும்போல் வாலாட்டிக் கொண்டு தான் உட்கார்ந்திருக்கிறது. தாங்கள் மட்டுமே வஞ்சிக்கப்பட்டதை உணர்ந்தபோது முதல்முறை அச்சம் மேலிட்டது.
இப்படியே போனால்… திடீரென்று ஒருநாள் மொழியும் காற்றில் கரைந்து போய்விட்டால்…? சிரிப்பொலி மறைந்துவிட்டால்…?
கணியன் மயிலிறகைப் போல் வயலினை மெல்ல வருடிவிட்டு மீண்டும் இசைத்துப் பார்த்தான். எந்த மாற்றமும் இல்லை. மௌனித்துப்போன வயலினை வாசிக்க முயல்பவனைப் பார்த்து கூட்டம் சிரித்தபடி கடந்துபோனது. கடைவாசலில் இருந்து விரட்டப்பட்டதும், ஆற்றாமையில் வயலின் நரம்புகள் அறுந்து விழுமளவு வேகமாய் வாசித்தான். சிவந்த கைவிரல்களையும் ஊமையான வயலினையும் மாறிமாறி பார்த்துக் கொண்டிருந்தவன், தன் கருப்புக் கண்ணாடியைத் தூக்கி எறிந்து வேஷத்தைக் கலைத்துவிட்டு சாலையே அலறும்படி கத்தவும் வளர்ப்புநாய் பயத்தில் குரைத்தது…
பிரபல பியானோ இசைக் கலைஞன் என்ற அடையாளத்தையும் நல்ல சம்பாதியத்தையும் இழந்துவிட்ட டேவிட், யாரையும் சந்திக்க விரும்பாமல் வெளியுலகிடமிருந்து தன்னை துண்டித்துக்கொண்டான். தனியாக பூட்டிய அறைக்குள் கின்னரப்பெட்டியோடு மட்டுமே பேசிக் கொண்டிருந்தான். சிலநேரங்களில் அழுகையும் சிரிப்பொலியும் வெளியே கேட்கும். ஆனால் இசை மட்டும் வெளிவராது.
“இசையை கேட்கும் திறனை இழந்து விட்டதைப் போல் தாகமும் பசியும் கூட உணரமுடியாத நாள் வரலாம்…” என்று எழுத்தாளன் தன் ஆதங்கத்தை பதிவு செய்தபோது காற்றில் காகிதங்கள் சலசலத்தன.
“யோவ் ரைட்டரு! இதோட ஒன் கோட்டித்தனத்த நிறுத்திக்க…. இல்ல அவ்வளவுதான்…”
அதிகாலையிலேயே எழுந்து நடைபயிற்சி முடித்துவிட்டு காலைநேர சுறுசுறுப்போடு எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளன், தன் கதைக்குள் இருந்து தனக்கு விடப்பட்ட மறைமுக எச்சரிக்கையை நக்கலாக சிரித்து கடந்துவிட்டு மீண்டும் எழுதத் தொடங்கினான்… ஆனால் எழுதஎழுத முந்தைய அத்தியாயங்களிலிருந்து முற்றிலும் தொடர்பற்றவனாக உணர்ந்தான். டீ குடித்து வந்து எழுதிப் பார்த்தும் ஒன்றும் பிடிபடவில்லை. பேனா எப்படிக் கூப்பிட்டும் கதாபாத்திரங்கள் எதுவும் ஆஜராகவில்லை. புது அத்தியாயம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று கதைமாந்தர்களுக்கும் தனக்குமான தொப்புள்கொடி அறுந்துவிட்டதாகத் தோன்றியது.
கதையின் முதல் அத்தியாயத்திலிருந்து இறுதி அத்தியாயம் வரை உலாவரும் சிறுகுறு கதாபாத்திரங்கள் முதல் கதாநாயகன் உட்பட அத்தனை பாத்திரங்களும் ஒட்டுமொத்தமாய் கதைப்போக்கிலிருந்து முற்றிலும் விலகியிருந்தன.
இதுபோக டேவிடுக்கு நெருக்கமான பாதிரியார் துதியின் கோட்டையில் எழுத்தாளனுக்கு எதிராய் உணர்ச்சிப்பொங்கப் பேசவும் கதைக்களம் சுத்தமாய் வெறிச்சோடியது…
“கடவுளைத் துதிக்கும் பரிசுத்த இசையை நம்மிடமிருந்து பரித்தவன் வேறு யாராக இருக்க முடியும்? அவன் ஒரு சாத்தான்… அவனது எழுத்துக்கள் சாத்தானின் வார்த்தைகள்….”
பாத்திரங்கள் எதுவும் தன் அத்தியாயத்தை விட்டு வெளியே எட்டிப்பார்க்கவில்லை. எழுத்தாளனின் பேனா கெஞ்சியும் கொஞ்சியும் மிரட்டியும், பாரம் தாங்காத மாட்டுவண்டியைப்போல் கதையோட்டம் அதே இடத்தில் அப்படியே நின்றுவிட்டது. துளியும் நகரவில்லை.
அடுத்தடுத்த நாட்களும் இதுவே தொடரவும் எழுத்தாளன் சோர்ந்து போனான். ஒருபக்கமாய்த் தலை வலித்தது. மீண்டும் பழைய ஜிப்பா! கைமணிக்கட்டு வரை பொங்கி நிற்கும் வார்த்தைகளை கதையாக்க முடியாமல் தூக்கமிழந்து நடுஜாமத்திலும் தெருவிளக்கு வெளிச்சத்தில் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்.
“எங்க போக்குல முன்ன மாதிரி எங்கள விட்டுட்டா நாங்களும் ஒன்னைய தொல்லை பண்ண மாட்டோம்… நீ ஒன் பாட்டுக்கு எழுது… புக் போடு… பாராட்டு வாங்கிக்க… யாரு வேணாம்னா… ஆனா எங்கள கண்டுக்காத….என்ன ரைட்டரு ஒகேவா…?”
கதாபாத்திரங்களின் சார்பில் கணியன் பேச வந்ததை கூட எழுத்தாளன் மன்னித்திருப்பான் ஆனால் படைத்தவன் முன்னால் பேசுகிறோம் என்ற எண்ணம் துளியுமில்லாமல், குடித்துவிட்டு ஒருமையில் தெனாவட்டாய்ப் பேசவும் எழுத்தாளனுக்குப் பொசுக்கென்று கோபம் தலைக்கேறியது.
“மொத்தமா செத்து ஒழிங்க….” உரக்கக் கத்தியவன் அதே வேகத்தில் எழுதிய தாள்களைச் சுக்குநூறாய்க் கிழிக்கத் தொடங்கினான்…
“யோவ் லூசு ரைட்டரு….”
“மன்னிச்சுரு சாமி…”
“நான் உங்க கட்சிதான். என்ன மட்டுமாவது விட்டுருங்க…
“என் தப்ப உணர்ந்துட்டேன்…”
கதாபாத்திரங்களின் எந்தவொரு குரலுக்கும் செவிசாய்க்கவில்லை. கொஞ்சமும் இரக்கமில்லாமல் கிழித்து வீசினான். எழுத்தாளனுள் எழுந்த கோப ஆழிப்பேரலை, சிருஷ்டித்த உலகை மொத்தமாய் அடித்துக்கொண்டு போனது. காகிதத் துகள்களை அள்ளி வீட்டு வாசலில் இருக்கும் மாநகராட்சி குப்பைத்தொட்டியில் கொட்டிவிட்டு படுக்கையில் விழுந்தவன் பல நாட்களுக்குப் பின் நிம்மதியாய் உறங்கினான்.
அடுத்த ஒரு வாரத்திலேயே எழத்தாளனுக்குப் புது கதைக்கரு உண்டாகியிருந்தது. இந்தமுறை விபூதிப் பட்டை அடித்துக்கொண்டு, காகிதத்தின் வலதுபக்கம் மார்ஜின் மடித்துவிட்டு எழுத உட்கார்ந்தான். இனி வாழ்க்கையில் ஒருபோதும் இத்தனை கதாபாத்திரங்ளை வைத்து கதை நகரத்துவதில்லை, ஒரேவொரு கதைசொல்லி மட்டுமே போதும் என்று முடிவெடுத்திருந்தான். அதுதான் சரி!
பயபக்தியோடு பிள்ளையார்சுழி போட்டுவிட்டு கதையைத் தொடங்கினான். என்னவொரு வேகம் பேனாவுக்கு… பசித்த மாடு புல்வெளியைப் பார்த்த மாதிரி. வெள்ளைக் காகிதத்தில் வார்த்தைகள் வெண்ணெய் போல் வழுக்கிக்கொண்டு வந்தன. துளியும் பிசிறில்லை. அரைமணி நேரத்தில் நான்கைந்து பக்கங்களைக் கடந்த பின் ஏதோ சப்தம் கேட்கவும் படபடவென்று திருப்பிப் பார்த்தான். முதல் பக்கத்திலே கதைசொல்லி குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருக்கவும் பேனாவை மூடி வைத்தான்.
புனைவின் மிகநுணுக்கமான வெளிகளுக்குள் நுழைந்தும் வெளியேறியும் விளையாடிப் பார்த்திருக்கிறீர்கள். ஆரம்பத்தில் தொய்வாகச் செல்வதுபோலத் தெரிந்தாலும் இசை இயங்க மறுக்கும் புள்ளியில் இருந்து கதை எடுக்கும் வடிவம் பிரமாதமாக அமைந்துவிடுகிறது. வாழ்த்துகள்.