Bad news sells papers. It also sells market research.”
– Byron Sharp
மேற்கல்வியில் பட்டம் பெறுவதற்கு ஆய்வும் ஆய்வறிக்கையும் மிக முக்கியமானதாக உள்ளது. உலக அளவில் ஒவ்வொரு துறை சார்ந்த ஆய்வும் அவற்றினை வெளியிடும் இதழ்களும் அதற்கான தரவரிசையின் அடிப்படையில் ஆய்வின் தரத்தை வகைப்படுத்துகின்றனர். அந்தவகையில் Peer reviewed Journal, Impact Factor, h- index / Scopus, UGC approved Journal என இன்னும் பல தன்மைகளில் தரம் பெற்ற ஆய்வு கட்டுரையை வெளியிடும் இதழ்கள் எல்லாத்துறைகளிலும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இவை ஒருபக்கம் இருந்தாலும் அடிப்படையான தரத்தின் அளவீடுகளையும் பெறாமல் பல்லாயிரக்கணக்கான ஆய்விதழ்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதும். குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுவதற்கு முன் எதாவது ஒரு “Plagiarism Checker” சாப்ட்வேரில் அக்கட்டுரையை அப்லோட் செய்து அக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் வார்த்தைகள் ஏற்கனவே வெளிவந்த ஆய்வுக்கட்டுரைகளில் இருந்து அப்படியே எடுத்து இப்புதிய கட்டுரையில் பயன்படுத்தி உள்ளார்களா என்று ஆராய வேண்டும். அப்படி செய்யும் போது ஏற்கனவே வெளிவந்த கட்டுரையில் இருந்து கையாளப்பட்டிருக்கும் வார்த்தைகள் எவ்வளவு சதவிகிதம் இப்புதிய கட்டுரையில் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதன் அடிப்படையில் அவற்றை வெளியிடலாமா? வேண்டாமா? என்று முடிவெடுப்பார்கள்.
இப்படியான பணிகளை எல்லாம் தனித்தனியாகவும் மொத்தமாகவும் செய்து கொடுக்கும் வேலை ஒரு தொழிலாகவே மாறிவிட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஒருதலைப்பைச் சொல்லி அதில் ஆய்வையும் மேற்கொண்டு அதற்கான ஆய்வுக்கட்டுரையையும் எழுதி வெளியிட்டுத் தரும் பணியையும் செய்து வருகின்றனர். மேற்கல்வியை பெறுவதற்கு ஆய்வறிக்கையும் ஆய்வு ஏட்டில் வெளிவந்த இதழ்களும் மிகவும் இன்றியமையாததாகும். பட்டம் பெறுபவர் செய்ய வேண்டிய பணியை பணம் கொடுத்து முடிக்கும் போக்கு ஆரோக்கியமானதில்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுகள் வெறும் ஆய்வறிக்கையுடன் நின்றுவிடுகின்றன. உதாரணமாக ஒரு தாவரத்தில் புற்றுநோயைக் குணப்படுத்தும் வேதிப்பொருள் இருப்பதாக ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருப்பார்கள். அதற்கடுத்து, அந்த வேதிப்பொருளை அடுத்தகட்டமாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததா என்றால் அவை மிகப்பெரிய கேள்விக்குறியே? வெறும் சடங்காக நடைபெறும் ஆய்வும் ஆய்வறிக்கைகளுக்கு மத்தியில் மிகவும் சொற்பமாக சில ஆய்வுகள் மட்டும் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
பொதுவாக ஒரு ஆய்வு என்பது என்ன? ஆய்வின் தேவை என்ன ? அதன் அவசியம் என்ன என்பதை வெறும் கல்விப்புலத்தின் வரையரையாக மட்டும் அணுகாமல் கடந்தகாலத்தின் அனுபவத்தினை அலசி ஆராய்ந்து நடைமுறையில்/ எதிர்காலத்தின் தேவை கருதியும் அவற்றை முனைப்புடன் முறைப்படுத்தி புரிந்து கொண்டு இயங்க வேண்டியிருக்கிறது.
புதுவிதமான தொழில்நுட்பங்களைக் கொண்டு நேரத்தையும் பணத்தையும் ஆற்றலையும் செலவு செய்து நாம் கண்டுபிடிக்கும் ஒரு கண்டுபிடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் ஒரு ஆய்வின் முடிவு பாசிடிவ் தன்மையிலே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அவைதான் கண்டுபிடிப்பாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஒரு தாவரத்தை புற்றுநோயைக் குணப்படுத்துமா என்பதை கண்டறியும் ஆய்வுக்கு உட்படுத்தி அதன் முடிவு குணப்படுத்தும் என்று இருந்தால் மட்டுமே அந்த ஆய்வு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒருவேளை அந்த தாவரம் புற்றுநோயை குணப்படுத்தாது என்று ஆய்வு முடிவு கிடைத்தால் அவை ஏற்றுக் கொள்ளப்படாது. இதிலிருந்து ஒன்றை நாம் புரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த தாவரம் புற்றுநோயை குணப்படுத்தும் என்பது எப்படி கண்டுபிடிப்பாகுமோ அதேபோல அத்தாவரம் புற்றுநோய்க்கு மருந்தில்லை என்பதும் கண்டுபிடிப்பே!
இப்படித்தான் நாம் பயன்படுத்தும் எல்லாவற்றையும் கண்டுபிடித்தார்கள். அப்போது இரண்டு முடிவுகளும் அவசியமானதாக இருந்தது. உணவிலே எடுத்துக் கொள்வோம் இவற்றை எல்லாம் உணவாக எடுத்துக் கொள்ளலாம் இவை எல்லாம் உண்டால் நம் உயிருக்குத் தீங்கு என்று ஞான திருஷ்டியில் தொன்றியவையா இல்லை பலகோணங்களில் ஆய்வுக்குட்படுத்தி அதில் பலகோடி மரணங்களுக்கு பிறகு தான் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது. கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த மனித இரத்த வகைப்பாட்டியல் இன்று எவ்வளவு சுலபமாக இரத்த வகையை அறிந்து மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. ஆனால் அவற்றை கண்டுபிடிக்க எத்தனை வகையான போராட்டங்கள். எத்தனை மரணங்கள். அப்போது நம்மிடம் பிரச்சனை இருந்தது இரண்டாம் உலகப்போரின் போது கொத்துக்கொத்தாக மடியும் மனிதர்களும், உயிருக்குப் போராடும் மனிதர்களும், என இரத்த வகையைப் பற்றி அறிந்து இரத்தம் கொடுத்து உதவவேண்டிய சூழல் அழுத்தமும் தேவையும் இருந்தது. எந்த ஆய்வறிக்கையிலும் வெளியிட வேண்டிய அவசியம் அப்போது இருந்ததில்லை. சார்லஸ் டார்வினுக்குகூட ஆரம்பத்தில் அந்த அழுத்தமில்லை பிறகு தான் கண்டுபிடித்ததை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தன் வாழ்வின் பிந்தைய காலங்களின் வந்த பிறகே தனது “origin of species” என்ற நூலை வெளியிடுகிறார்.
ஆனால் இன்று ஆய்வறிக்கைகள் நாளுக்கு நாள் குவிந்து கொண்டே இருக்கின்றன. அதில் எத்தனை மனித பயன்பாட்டிற்கு வந்திருக்கும். ஏன் என்றால் அவை எல்லாம் கல்விப்புலத்தோடு நின்றுவிடுகின்றன. பல்கலைக்கழகத்திற்கும் தொழிற்சாலைக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் அவசியமாகிறது பல்கலைக்கழகத்தில் ஆய்வில் கண்டுபிடிக்கும் ஒரு பொருளை தொழிற்சாலையில் அதிகப்படியான உற்பத்திக்கு உட்படுத்தி அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் போது நாட்டின் பொருளாதரமும் தனிமனித வளர்ச்சியும் மேன்மையடையும். இப்படியான செயல்பாடுகள் இதுவரையில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கு தான் இருக்கின்றன. இவற்றை உயர்த்தும் நோக்குடன் ஆய்வுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
*****