
கடந்த பல ஆண்டுகளாகவே பாலியல் வன்புணர்வு செய்திகள் எக்கச்சக்கமாக வந்துக் கொண்டுதான் இருக்கிறது.அதற்கான சமூக கொந்தளிப்பு யாதெனில், அரபு நாட்டைப் போல் தலையை துண்டாக்கி இலவசமாக ஆணுறுப்பையும் வெட்டி வீச வேண்டும் என தங்கள் அதீத கோவத்தை சமூக வலைதளங்களில் கொட்டிவிட்டு தங்கள் வேலையை பார்க்க சென்று விடுவர். சில தரப்பினர் பெண்களுக்கான அறிவுரை சொல்கிறேன் என்ற பெயரில் மேம்போக்கான கருத்துரைகளை முன் வைப்பர். இந்த பிரச்சனைகளுக்கான வேர் எது? எங்கே செயலூக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் வெகு சொற்பம்.
பொதுவாக, இந்த சமூகத்திற்கென ஒரு தனித்துவ நிலை காணப்படுகிறது. அதில் ஆணிற்கான தனிப் பொது பிம்பமும் பெண்ணிற்கான பிம்பமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. போருக்கு செல்லும் கணவனை, தந்தையை, சகோதரனை வீரத்துடன் வழி அனுப்பிவிட்டு, வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் பெண்களின் மரபணுக்களே தலைமுறைகள் தாண்டியும் பெரும்பான்மையான பெண்களின் அல்லது சமூகத்தின் உளநிலையில் காணப்படுகிறது. அதை கலாச்சாரம் என்று காலம் காலமாக கடத்தி வந்ததின் எதிர்விளைவு தான் நாம் பார்க்கும் பிறழ் காரியங்கள். ஒரு ஆண் தைரியம் அற்றவனாக, கோழையாக இருப்பதை இந்த சமூகமும் எந்த பெண்ணும் விரும்புவதில்லை. இந்த நிலையிலிருந்து தான் இன்றைய பாலியல் பிறழ்விற்கான புள்ளியாக பார்க்கிறேன். ஆணிற்கான பிம்பம் ஒரு மாவீரன் என்று கட்டமைக்கப்பட்ட சாகச நிலைக்கு எதிர்பிம்பம் தான் பொள்ளாச்சி சம்பவம்.
இந்த சமூக அமைப்பில் வம்ச பெருமை, ஜாதிய பெருமை, பாலினப் பெருமை என நேரடியாக பேசாமல் சமூக அமைப்பின் நடைமுறையில் நிகழ்வதை உள் வாங்கும் இன்றைய ஆணிற்கு தன் சாகசம் ஒரு போதாமையாக உள்ளது. கடந்த காலங்களில் குற்றங்கள் என நம்பிய சில பழக்கங்கள் இன்றைக்கு ஒரு குற்றமல்ல அது ஒரு கொண்டாட்ட போக்கு என்ற நவீன பண்பாடு சரியான புரிதலின்றி சிதைவாக காணப்படுகிறது. காரணம் பழமையிலிருந்து எந்த அறிவு பயிற்சியின்றி பின் நவீனத்துவ நிலைக்கு மேற்கத்திய நாடுகளை போல் நகலெடுக்க முனைந்ததின் விளைவாக கூட இருக்கலாம். பழைய குற்றங்கள் இன்று இயல்பாக, ஒரு சாகச உளநிலைக்கு சாதாரண குற்றம் போதுமானதாக இல்லை.
அப்போது அந்த சாகச ஆணிற்கு தன் ஆண்மையை நிரூபிக்க பெருங்குற்றம் தேவைப்படுகிறது. அப்போது இந்த சமூகத்தில் மிகவும் பிற்போக்காக, பண்பாடு என்னும் போர்வையில் பெண்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் பெண்களில் உடல் ஒரு வடிகாலாக உள்ளது. இன்றைய தமிழ் ஆண்களின் மனதிற்கு பெண் உடல் ஒரு பெருங்கனவு, கடவுளை விட மேலானது. பெண்ணின் உடலுக்காக சொந்த பந்தங்கள், பணம், சொத்து, புகழ், ஆன்மிகம், தன் திறமைகள், சுய அடையாளம் என எதையும் இழக்க தயாராக இருக்கிறார்கள். அதற்கு பின் குற்ற உணர்வில் தற்கொலை செய்தாலும் தன் உடைமைகளை, திறமைகளை பெண்ணின் உடலுக்காக சுய அழித்தலை ஈடுபட எந்த ஆணும் தயங்குவதில்லை. ஆண் மனதின் வடிவமைப்பு அவ்வாறு தெளிவில்லாத பண்பாட்டினால் தகவமைக்கப்பட்டுள்ளது. பெண் உடலிலிருந்து ஒரு ஆண் விடுதலை அடையாமல் பெண் விடுதலை சாத்தியம் இல்லை.
பாலியலை ஆகப்பெரிய பிரமாண்டமாய் ஆக்கியதன் விளைவு தான் இது. இரவு உணவு உண்பது போன்ற ஒரு எளிய செயல் தானே பாலியல்? இவ்வளவு பிரமாண்டமாய் ஆக்கியதற்கு இங்குள்ள மனித உடல் சார்ந்த அறிவியலுக்கு எதிராக இயங்கும் அனைத்து மதங்கள் தொடங்கி சாதிய கட்டமைப்புகள், மனித நிலை அடுத்த நகர்விற்கு செல்லாமல் இருப்பதற்காக இயங்கும் வெற்று கேளிக்கை ஊடகங்கள், அது சார்ந்த போலிக் கலைகள். அதிலிருந்து வெளியேறும் விஷம கருத்துகள். புதிய சிந்தனைகளை நீர்த்து போக செய்யும் அடக்குமுறைகள். எந்தவொரு விவாதமற்ற அறிவிலி கூட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் சமூக வலைத்தளங்கள் என அனைத்துமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பாலியலை ஏன் கலாச்சார நடைமுறைகள் மூலமாக விஸ்தார படுத்துகிறீர்கள்?தெளிவற்ற பண்பாட்டு நகருதல் மூலம் அலைகழிக்கும் ஆணிற்கு அவனின் பலவீனமான மனத்தை மேலும் சந்தை பல்வேறு பிசாசுகளின் வழி அதீத பிறழ்விற்கு இட்டு செல்கிறது.
நவீன மனநிலைக்கான பயிற்சி சரியான விகிதத்தில் சம நிலையில் ஒவ்வொரு காலகட்டங்களாக நகர்ந்து வந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே உயர்தர நவீன கலைகள் மண்ணிற்கு அடியில் உயிர் வாழ்வதால் வெகுஜன உளநிலையை வந்தடையவில்லை. சரியான நகர்வினால் நவீன மனநிலையை அடையும் மனிதனால் பிறழ்வு நிகழாது. அவன் முன்னேற்றத்திலும் எந்த பிசகும் இராது. அவனிடம் “அவனா..? அவன் பொம்பள பித்து பிடிச்சு அழிஞ்சு போனான்” என்ற வாசகங்கள் கேட்க முடியாது. சரியான நகர்வில் நவீன உளநிலைக்கு வரும் மனிதன் தன் சுதந்திரத்தைப் போன்று அடுத்தவர் விடுதலையையும் அங்கீகரிப்பான். வலுக்கட்டாயம், துன்பபடுத்துதல் போன்ற பிறழ் நிலைக்கும் தள்ள மாட்டான். கலாச்சாரம் என்று மீண்டும் பெண்களை சமையல் கட்டிற்கு தள்ளும் முடிவை இந்த சமூகம் நிகழ்த்த துடிக்குமாயின் விளைவுகள் மிக பயங்கரமாக ஆண்களால் பெண்களுக்கு நிகழும். பின்னோக்கி நகரும் பழமைவாதியினால் உருவாக்கப்படும் உளநிலை மற்றும் பாஸ்ட்ஃபுட் போன்று உடனடி மாற்றங்கள் நிகழ வேண்டும் என நினைக்கிற பெண்ணியவாதிகள் செய்யும் தீவிர நவீன வாதம் சார்ந்த உளநிலையும் ஒன்றுகொன்று மோதி ஒன்றுமில்லாமல் தான் போய்க் கொண்டிருக்கிறது.
நவீனமும், மரபும் ஒன்றுக்கொன்று மொக்கையாக மோதி ஒரு மொண்ணையான நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலையிலிருந்து இனி என்னவிதமாக சமூகத்தை நகர்த்த வேண்டும் என அறிவாளர்களும் அரசியலாளர்களும் ஆராய வேண்டும். ஒரு ஆண் இரவில் ஹோட்டல் சென்று பிரியாணி சாப்பிட வேண்டும் என்றால் நடந்துவிடும். ஆனால் இன்றிரவு வெளியே கலவி புரிய வேண்டும் எனில் உடனடி சாத்தியம் அற்ற சமூகம். அதற்கான நடைமுறை சிக்கல்களும் எக்கச்சக்கம். எனக்கு பாலியல் உணர்வு மிகுதியாய் பீச்சிடுகிறது. நான் சுய இன்பம் செய்து வருகிறேன் என இருபாலாரும் வீடுகளில் வெளிப்படையாக சொல்லும் சூழல் உருவாகாத வரை எதுவும் மாறப்போவதில்லை.
சமீப காலங்களில் ஒரு பிறழ் நிகழ்வு நடந்து அதன் பரபரப்பு அதீதமாகி, சில நாட்களிலோ அல்லது சில மணி நேரங்களிலோ அடுத்ததாக நிகழும் ஒரு நிகழ்வில் மனம் குவிக்க துவங்கி முந்தைய நிகழ்வு நீர்க்க மனம் பயிற்சி அடைந்திருந்தது. அதில் பொள்ளாச்சி சம்பவத்தை அணுகிய விதம் சற்று மாற்றுவிதமாகவே தோன்றியது. அதற்கு காரணம் பாலியல் பிறழ்வின் அதீதத்தினால் உருவாகிய கவர்ச்சி என்றே கருதுகிறேன். இதே நிகழ்விற்கான செய்தி கடந்த வாரத்திலிருந்து வந்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால் வீடியோ வெளிவந்தபின் தான் தமிழ் சமூகம் விழித்துக்கொண்டு எதிர்வினைகள் புரிகிறது. எதிர்வினை புரிந்தவர்களில் ஆண்கள் தான் பெண்களை விட அதிகம். இந்த ஆண்கள் எதிர்வினை புரிவதின் வழியாக, மனமுடைந்து அந்த மகளிர்காக அழுவதின் வழியாக தன்னிடமிருக்கும் வன்மங்களையும் இச்சைகளையும் துடைத்தெறிய முயல்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். இத்தகைய கலாச்சாரத்திற்குள் வாழும் ஆண்கள் தான் இங்கு அதிகம். கலாசாரத்தை துறந்து சமூகத்தோடு முரண்பட்டு மாற்று பயிற்சி அடைந்தவர்கள் வெகு சிலர்தான். இங்கே மாற வேண்டியது பெண்கள் அல்ல, ஆண்களும் அல்ல. தூய்மையான நம் கலாச்சாரம் தான். கலாச்சாரம் மட்டும் தான்.