
ஒரு தவறு…. அதுவும் மிகப் பெரிய தவறு… இந்தப் பிறப்புக்கே களங்கம் தெரிவிக்கும் ஒரு மாபெரும் தவறு… எல்லாம் முடிந்து தவறுகளின் உச்சம் தொட்டு… பின் சம நிலைக்கு வரும் மனதுக்குள் ஒரு போராட்டம் வருமே…. அதன் தொடர்ச்சியான அலசல்கள்… நியாய தீர்ப்புகள்…..என்று நீளுவதே இந்தப் படம்.
JUDGEMENT AT NUREMBERG-1961-இயக்கம் -ஸ்டான்லி கிராம்மர்
கேள்விகளின் வேகம்… பதில்களின் தாகம்.. என மாறி மாறி… ஆள்காட்டி விரல் முன்னே இருப்பவரை நோக்கி நீண்டு கொண்டே இருக்கின்றன படத்தின் காட்சிகள்.
ஒரு மனிதன் மட்டும் எப்படி அத்தனை கொலைகளை செய்து விட முடியும்? அது பரந்த திசை முழுக்க அவனாகும் சாத்தியம்! அவன் ஒவ்வொரு முறை வெற்றி கொள்ளும் போதும் ஆர்ப்பரித்துக் கொண்டாடிய அந்த மக்களும்தானே அவன்.
இன்றும் குமட்டிக் கொண்டு வரும் பெயராகவே ஹிட்லர் இருப்பதற்கு…. இந்தப் படத்தில் வரும் காட்சிகள் பல உதாரணம்.
நிர்வாண எலும்புக் கூடுகளின் வலி… ஒரு மரண போராட்டத்தின் சுவடாக குவிந்து கிடக்கையில் முட்டிக் கொண்டு வரும் அழுகையை அடக்கவே முடியவில்லை. யூத இனம்…. உலகிலேயே நிறைய விஞ்ஞானிகளைக் கொண்ட இனம்…. என்ன விதமான மன நிலையில் ஹிட்லரின் கோபம் ஆரம்பித்ததோ தெரியவில்லை…. அது வெறியாகி.. பசி கொண்ட மிருகமாகி.. இனம் என்னும்….. கோரத்தாண்டவத்தில் கொன்று குவித்தான்… இன்று வரை அழியவே முடியாத ரத்தசுவடாக மனதுக்குள் ரீங்காரித்துக் கொண்டிருக்கும் மரண ஓலத்தை இந்தப் படத்தில் கொண்ட வசனங்களில் மூலம் உணர முடிந்தது.. அல்லது ஏற்கனவே உணர்ந்ததை தீவிரமாக அசை போட முடிந்தது.
படம் முழுக்கவே கோர்ட் காட்சிகள் தான். வாதங்கள், பிரதி வாதங்கள், குற்ற சாட்டுகள்.ஹிட்லரின் மரணத்துக்கு பின் அமெரிக்கா நீதித்துறையின் சார்பில் “டான் ஹோவர்ட்” – நீதிபதி தலைமையில் நூரம்பெர்க் என்ற இடத்தில விசாரணை நடக்கிறது.
ஒரு ஆட்சியில் நடக்கும் குற்றங்களுக்கு அதை ஆணையிட்ட தலைவன் மட்டும் பொறுப்பா.. அல்லது அந்த ஆணையை நிறைவேற்றிய அரச ஊழியர்களும், அதிகாரிகளும் பொறுப்பா……? என்ற சிக்கலான ஆனால்… கேட்கப்பட வேண்டிய கேள்வியை நீதிமன்றம் முன் வைக்கிறது. ஹிட்லர் மிகப் பெரிய வன்முறையாளன் என்றால் அவனைக் கொண்டாடிய, போற்றிய மக்களும்தானே வன்முறையாளர்கள்.. அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே நல்ல குடிமக்கள் என்ன செய்திருக்க வேண்டும். தலைவன் தப்பானவனாக, கொடிய மனநோயாளியாக இருக்கிறான் என்பதை உணர்த்து அவனை ஆட்சியில் இருந்து கீழே இறக்க முயன்றிருக்க வேண்டும்.
ஆனால், சக மனிதன் அவன் யூதன் என்பதற்காக அவனை கல்லால் அடித்து… இருக்கும் உடைமைகளை பறித்துக் கொண்டும்…… இன்னும் எந்தெந்த வழிகளில் துன்புறுத்த முடியுமோ அத்தனையையும்… ஹிட்லரின் கீழ் இருக்கும் மக்களே செய்கிறார்கள் என்றால்…. அது கவலைப் பட வேண்டிய விஷயம்..(விலக்குகளும் உண்டு…) அது ஒரு வகை போதை மாற்றத்தின் விளைவு. ஹிட்லர் மிகச் சிறந்த பேச்சாளன் தான்…. அதற்காக அவன் பேசியதை எல்லாம் அச்சு பிசகாமல் உள் வாங்கி நடை முறைப் படுத்தப் படுகிறதென்றால் .. சுய அறிவு எங்கே போயிற்று? அப்படி என்றால், மனசாட்சியற்ற மக்கள்தானே அவர்கள்…. வளர்ந்த பாம்பு கொத்துதே என்றால் அதையும் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொள்வது சுயநினைவற்ற செயலாகத்தானே இருக்க முடியும்.
மனத்தை உலுக்கும் கேள்விகளும்… மௌனம் கலைக்கும் பதில்களும்.. ஹிட்லரின் மரணத்துக்கு பின் அந்த கோர்ட்டுக்குள் அலை அடிக்கும் போது கனத்த மௌனத்தோடுதான் நாம் படத்தை கடந்து போக வேண்டி இருக்கிறது. இனத்தின் பெயரால் ஒருவன் மூடத்தனமாக கொன்று குவிக்கும் செயலை எப்படி எடுத்துக் கொள்வது யூதப் படுகொலையை அந்தச் சூழல் எட்டும் வரை விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த உலக நாடுகளின் மனநிலையை எதில் வைத்து நிறுப்பது?. அரசு என்பது வானத்தில் இருந்து குதித்து வந்து விட்ட ஒன்று அல்ல. அது மக்களுக்காக ஏற்படுத்தப் பட்ட ஒரு குழுமம்தான். அதிகாரிகளும்.. ஊழியர்களும்.. அவர்களை வழி நடத்தும் தலைவர்களும்தான் அரசு… இதில் தலைவன் என்பதற்காக அவன் செய்யும் அநீதிகளைக் கண்டும் காணாமலும்.. அல்லது அதற்கு துணை போகும் அதிகாரிகளும்.. ஊழியர்களும்தான் அத்தனை தவறுகளுக்கும் பொறுப்பு… மனித உயிர் எத்தனை மகத்தானது… அதை, இனத்தைக் காரணம் காட்டி……அல்லது எதைக் காரணம் காட்டியும் வித விதமான கொடூர முறையில் கொல்வது என்பது மனநிலை பிறழ்ந்த செயல்.. ஹிட்லர் மிகப் பெரிய புத்திசாலியான மன நோயாளி… ஹிட்லருக்கு பொருள் உதவி.. பண உதவி கொடுத்த தொழில் அதிபர்களும்.. குற்றவாளிகளே தண்டிக்கப் பட வேண்டியவர்களே என்று நீதி அரசர் தீர்ப்பளிக்கும் போது பாதிக்கப்பட்ட யூத மக்களில் சிலர் கோர்ட்டுக்குள் மிரண்டு தேக்கி வைத்து நடுங்கும் கடந்த கால நினைவுகளில் மனசாட்சி ஓங்கி ஓலமிடுவதை மிரண்ட விழிகளோடு கண்டேன்.
யாரின் கேள்விக்கும் அதிராத மனம் தன் சொந்த மனதின் கேள்விக்கு அதிரும். படம் முழுக்க ஹிட்லருக்கு கீழ் வேலை பார்த்த அதிகாரிகளின் மனம்.. எதிர்வாதம் வைத்தாலும்.. உடலுக்குள் உயிர் அதிர்வதை உணர முடிந்தது. படம் முழுக்க ஒரே இடத்தில். ஆனால், எந்த இடத்திலும் சலிப்பு தட்டாத திரைக்கதை.. அது திரை- கதை மட்டும் அல்ல… ஒரு மிருகத்தின் ரத்த வெறியை வெளி எங்கும் படர விட்டு ஒரு இனத்தின் வாழ்வின் ஆதாரத்தையே அழித்த பைத்தியகாரக் கதை பார்க்க பார்க்க பரிதவிப்பில் ஸ்தம்பித்து செய்வதறியாது திரையையே வெறித்து நின்ற போது ராஜபக்சே நினைவுக்கு வந்தான்.
ஹிட்லர் மீண்டும் பிறந்திருக்கிறான். நல்ல ஆத்மாக்கள் எப்படி மீண்டும் பிறக்கின்றனவோ…. அப்படி தீய ஆத்மாக்களும் பிறக்கத்தான் செய்கின்றன. என்ன செய்ய..? வாழ்வின் முனைகள் அப்படி காலங்களின் நடத்தையை யாரும் கணிக்க முடியாத துவக்கத்தில் இருந்தே கணிக்கக் கூடிய புள்ளி ஆரம்பம் ஆகிறது. ஒரு கூறிய விழிகளோடு அல்லது அன்பின் சுவடுகளோடு.
JUDGEMENT AT NUREMBERG என்பது போல மீண்டும் ஒரு JUDGEMENT AT EELAM என்று வரும் நாளை எதிர் நோக்கி காத்திருக்க செய்யும் மனதில் சொட்டிக் கொண்டே இருக்கும் குருதியில் தோய்ந்த சுவடுகளாக இந்தப் படம்……….. ! படம் என்று கூறி வட்ட சதுரத்துக்குள் அடைத்து விட முடியாது. அது நிஜம். சுட்டாலும் நிஜம் சொல்லும் தத்துவத்தை எவனாலும் மறைக்க முடியாது. எமனாலும்.