காலத்தால் சிதையாதது
கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து,
வேனில் ஆயின் மணி நிறங்கொள்ளும்
யாறு அணிந்தன்று நின் ஊரே,
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந, என் கண்ணே
ஐங்குறுநூறு: 45
பாடியவர்: ஓரம்போகியார்
திணை : மருதம்
தோழி கூற்று பாடல். [தலைவி கூற்றை தோழி கூறுவது. பரத்தை இல்லம் சென்று நீண்ட காலம் கழித்து திரும்பும் தலைவனுக்கு தோழி உரைத்தது]
காதலில் எப்போதும் ஒருவித பித்து நிலை உண்டு. உற்றவரைத் தவிர அது பலநேரங்களில் மற்றவருக்குப் புரிவதில்லை.
எங்கள் வீட்டிற்கு மூன்றாவது வீட்டில் உள்ள அம்மாவின் பெயர் பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. ’தங்கவேலு பெண்டாட்டி’ என்றே அழைப்பார்கள். அவரது மகன் வயதில் உள்ள நாங்கள், ’விஜயகுமார்அம்மா’ என்று சொல்வோம்.
விவரம் தெரிந்ததில் இருந்தே நான் தங்கவேலுவைப் பார்த்ததில்லை. அவர் பக்கத்து ஊரில் எங்கோ வேறொரு அம்மாவுடன் வாழ்ந்தார். விஜயகுமார்அம்மா தன் கணவரின் பரம்பரைச் சொத்தான ஒரு ஏக்கர் நிலத்தின் விவசாய வேலைகள் முழுவதையும் தனி ஒருவராகவே செய்வார். மற்றநாட்களில் கூலி வேலைக்குச் செல்வார். யாரிடமும் காரணம் இல்லாமல் நின்று பேசுபவரில்லை. இளமையிலேயே கணவன் விட்டுச்சென்றதால் அவர் எப்போதும் சிடுசிடுப்பாக மாறிவிட்டார் என்று அம்மா சொல்வார். அவருக்கு அம்மாவின் வயதுதான் இருக்கும். இயல்பாக பெண்கள் சூடிக்கொள்ளும் பொட்டு, பூ, கொலுசு போன்றவற்றை அணிந்து அவரைப் பார்த்ததில்லை. வரிந்து கட்டியசேலையும் கழுத்தில் ஒரு கருப்புக் கயிறுமாகவே எப்போதும் மாறாத ஓவியம் போல இருக்கிறார். ஊரில் உள்ள மிகச்சிறிய துணிக்கடையில்தான் தனக்கான ஆடைகளை வாங்குகிறார். அவர் தன் அன்றாடத்திற்கான பொருட்களை ஊருக்குள்ளேயே தேடிக்கொள்கிறார். வெளியூர்களுக்குச் சென்று பொருட்கள் வாங்கத் தெரியாதவர். காய்ந்த சோளத்தட்டை மாதிரி மிக ஒல்லியான தேகம்.
ஓயாது வேலை செய்பவர். காலை வேலைக்குச் சென்று மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்கு வருவார். வீட்டுவேலைகளை முடித்துவிட்டு மீண்டும் மூன்று மணிக்கு அந்தி வேலைக்குச் சென்றுவிடுவார். அவர் தண்ணீர் எடுக்கும் போது கூட நிதானமாக நடந்து பார்த்ததில்லை. எப்போதும் சாட்டையால் முடுக்கப்படும் சர்க்கஸ் விலங்கு மாதிரியான ஒரு பதற்றத்துடன் கூடிய வேகம் அவரிடம் இருக்கும்.
கடின உழைப்பால் மண்வீட்டை மாற்றி சமையல் அறையுடன் இணைந்த ஓரறை கொண்ட மாடி வீட்டைக் கட்டிக்கொண்டார். அண்மையில் தங்கவேலு இறந்துவிட்டார். தகவல் வந்ததும் சொந்தக்காரர்கள் கூடி என்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
வயலில் இருந்து வந்த அந்தஅம்மா வீட்டு வாசற்படியில் அமர்ந்திருந்தார். வழக்கமாக கணவன் இறந்ததும் மனைவிக்கு புதுப்புடவையும், வளையல்களும், பூவும் அளிக்கப்படும் சடங்கைப் பற்றிய பேச்சு வந்தது.
அவரது அண்ணன் முறைக்காரர் பொதுவாகக் கூட்டத்தைப் பார்த்து , “என்னைக்கு அது மலர்ச்சியா இருந்துருக்கு..? ஒரு எழவும் இங்க செய்யக்கூடாது,” என்றார்.
அந்த வீட்டில் இருந்து மூன்று ஆட்கள் மட்டும் ஒரு மாட்டு வண்டியில் தங்கவேலு உடலைக் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றார்கள். திருமணம் செய்து கொள்ளாத உறவு என்பதால் அவர்களின் உறவினர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
மாட்டுவண்டியைப் பார்த்ததும் விஜயகுமார் அம்மாவின் கேவல் சத்தம் மட்டும் தனியாகக் கேட்டது. எத்தனை நாள் இரவும், பகலும், அந்தியும், இரவும் இந்த விழிகள் அவருக்காக இதே இடத்தில் அமர்ந்து வழியைப் பார்த்திருக்கும். ஒரு சிறு உதவிக்குக் கூட ஆளில்லாமல் இந்தக் கண்கள் பரிதவித்திருக்கும். மனதில் இருக்கும் ஒன்றைப் பகிர ஆளில்லாத வாழ்க்கை. எங்கு சென்று நின்றாலும் புறணிகளால் ஆன பெண் உலகத்தை, ஒரு பெண் பேசினால்.. .ஒரு உதவி கேட்டால்… சரியான பொருளில் புரிந்து கொள்ளாத ஆண் உலகத்தை எந்தப் பிடிமானத்தில் கடந்திருப்பார்? தங்கவேலு மட்டுமே தன் வாழ்வில் இருக்க வேண்டும் வைராக்கியம் அது. தன் வறுமையை மற்றவர் சாதகமாக ஆக்கிக் கொள்ளவிடாத ஆன்மசாதகம் போன்ற ஒரு வாழ்க்கை. வீசி எறியப்பட்ட ஒரு மலர் , நதி நீரில் விரும்பி விழுந்ததைப் போன்ற ஒன்று அது.
அம்மா என்னிடம், “கல்யாணம் ஆகி இங்க வரப்ப இந்த அக்கா மாசமா இருந்துச்சு…அவரு ஆளு எப்படி இருப்பாரு தெரியுமா? ஒரு பொண்ணப் பிடிக்கலேன்னா கல்யாணதப்பவே சொல்லனும். இப்பிடி சிரிக்கவுடாம, பேசவுடாம ஒரு பொம்பளை வாழ்கையையே ஒன்னுமில்லாம ஆக்கிட்டாரே,” என்று பெருமூச்சு விட்டார்.
மாட்டுவண்டியில் இருந்து இறக்கிய அவர் உடலைக் கண்டு அந்தஅம்மா தன் நரம்போடிய கைகளால் ஒட்டிய மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளத் தொடங்கினார். விஜயகுமார் கோபத்தில், ”அந்த ஆளுக்காக யாரும் இங்க அழுகக்கூடாது” என்று கத்தினான்.
அனைத்து சடங்குகளையும் ஒருநாளில் முடித்து விட்டு சொந்தங்கள் கிளம்பிவிட்டார்கள். தெரு சிலமணி நேரங்களில் இயல்பாகி விட்டது. அடுத்தநாள் அதிகாலையில் விஜயகுமார் அம்மாவின் அழுகுரல் தெருவை எழுப்பியது. அதிகாலையில் கேட்கும் அழுகுரல் நம்மை மிகவும் தொந்தரவு செய்யக்கூடியது. தெருவே விழித்துக்கொண்டது. அம்மாக்கள் எழுந்து அவர் வீட்டிற்குச் சென்றார்கள். அய்யாக்கள் கைலியும் துண்டுமாக அங்கங்கே கூடி நின்று பேசத் தொடங்கினார்கள்.
விடிந்து திரும்பி வந்த அம்மாவிடம், “ஏம்மா இப்படி பண்றாங்க…அவருக்காக எதுக்கு இவங்க இப்படி அழறாங்க,” என்று சலித்துக் கொண்டேன்.
அம்மா அமைதியாகப் படுத்தார். மறுபடி நான், “எரிச்சலா வருதும்மா…இவங்க ஏன் இவ்வளவு கஸ்ட்டப்படுறாங்க,”என்றேன்.
“மனசு அப்படி..வாழ்ந்து தீத்திருந்தாக் கூட தீந்து போயிருக்கும். இந்த அக்கா அவரை நெனச்சே காலத்தை ஓட்டிருக்குல்ல..” என்றபடி திரும்பிப் படுத்தார். நான் எழுந்து சன்னலைத் திறந்து பார்த்தேன். வாசற்படியில் தேம்பியபடி அந்த அம்மா அமர்ந்திருந்தார். அழுகை நின்றிருந்தது. சின்னப்பிள்ளையைப் போன்ற நிற்காத அமைதியான விசும்பலால் மூச்சு ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.
அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். வரப்பு பிரச்சனையின்போது இந்தஅம்மா பக்கத்து வயல்காரரிடம், ”எந்த பஞ்சாயத்துக்கு வரனுன்னு சொல்லுண்ணே” என்று கேட்ட நிகழ்வு என் சிறுவயது நினைவாக மனதில் இருந்து எழுந்து வந்தது. மிரட்டலுக்கோ, ஏச்சு பேச்சுகளுக்கோ பணியாத குணம் அவரிடம் எப்போதும் இருந்தது.
திருவிழாவில் தவறாமல் அக்னிசட்டி ஏந்தி நேர்த்திக்கடன் முடிப்பார். கார்த்திகை மாதம் ஊரைச் சுற்றி உள்ள சிறு தெய்வங்களுக்கான பொங்கல் வழிபாடு நடக்கும். அவர் வயலின் அருகில் உள்ள ஊமைப்பிடாரிக்கு தவறாமல் பொங்கல் வைப்பார். இதில் அவருக்கு எந்த சலிப்பும் இல்லை. அந்த சமயத்தில் உற்சாகமாகவும் இருப்பார். மற்றபடி கோயிலுக்குச் செல்லும் வழக்கம் அவருக்கு இல்லை. அவருக்குள் நாமறியாத நிறைவு உண்டு என்று நினைக்கிறேன்.
’அகமும் புறமும்’ தொடரை எழுதத்தொடங்கிய பின்புதான் இது நடந்தது. இந்தப் பாடலை தொடக்கத்தில் வாசித்தபோது ஒன்றுமில்லை என்று கடந்து வந்திருந்தேன். விஜயகுமார் அம்மாவை எழுத வேண்டும் என்று தோன்றியதும் இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது.
எளிய உணர்வு என்றோ, எளிய அன்பு என்றோ,எளிய கவிதை என்றோ எதுவும் இல்லையோ? ஒவ்வொரு சங்கக் கவிதையும் தன்னுள் ஒரு அசலான வாழ்வை வைத்திருக்கிறதா? அன்பை எளிது எளிது என்று அன்றாடம் சொல்லும்போது, அரிது அரிது என்றே ஒரு முழு வாழ்க்கை சொல்கிறது. இறக்கங்களால் ஆன ஒரு முழு வாழ்வில் மாறாத அன்பு அரிதே. அதற்கு உரியவர் இருக்க வேண்டும் என்பது கூட தேவை இல்லை போலும். ஒரு பெண் மனதின் மாறாத பேரன்பை இந்தப் பாடலில் காணலாம்.
குளிர்காலத்தில்
கலங்கிய நீரும்,
கோடைகாலத்தில்
தெளிந்த நீரும் பெருக்கும்
ஆற்றை உடையது
உன் ஊர்.
உன் வருகையால்
எமக்கு
மகிழ்ச்சி அளிப்பவனே…
இந்த எல்லா காலத்திலும்
நீயில்லாததால்…
என் கண்கள்
பசலையை மட்டுமே
அணிந்தன.
(தொடரும்…)