![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/03/agarathi.jpg)
மிஸ் யூ
தனித்த மௌனத்தின் கதறலில்
நாசி கடந்த கனத்த மூச்சு
பியானோவின் கருப்பு விசையில்
விழுந்து ஒரு இசைத் துணுக்கை
எழுப்பிச் செல்கிறது. ..
அறையெங்கும் பரவிய அதிர்வினால்
கன்னம் பரவிய கண்ணீரின் சூட்டிற்குள்
உன் உட்கை வெப்பத்தின் இனிமை
இல்லை!
மீண்டும்
ஓடிவந்து உயிர் அணைக்கும்,
ஒரு வார்த்தையில் தலைவருடி கண் சிரிக்கும்
கரகரவென கம்பீரமாக எழுந்து நிற்கும்
என்னைப் பிடித்துக்கொள் நானிருக்கிறேன் என்று கூறும்
சற்று வார்த்தையில் நீண்டு வாஞ்சையில் வளரும்
அதிகாரம் செய்கிறேனென சிரிப்பு மூட்டும்,
குளிரச் செய்து வெப்பம் செய்யும்
மெல்லிய குரலில் ஆணுடையதும்,
முரட்டுக் குரலில் பெண்ணுடையதுமாக ….
அப்பப்பா இந்தக் குரல்கள்தான் எத்தனை !
ஏன்தான் இப்படிக் குரல் விரும்பி ஆனேனோ
அதீத ஆர்வத்தில் முழுகி
செவி சேர்க்கும் வார்த்தைகளின்
பொருளை விட்டு குரலுக்குள் பயணித்து விடுகிறேன் ..
அலோ என்ன ? எனும் போதுதான்
என்னவென கேட்கிறேன்.
அரைமணி நேரமாய்ப் பேசி முடித்ததை
முதலிலிருந்து ஆரம்பியுங்களென …
எனவே நீங்கள் பேசுகையில்
உங்கள் குரலுக்கான பிரதிபலனைத்தான்
என்னால் தர இயலுமே தவிர
உங்கள் வார்த்தைகளுக்கான
பொருளையோ பதிலையோ இல்லை.
அலோ என்ன ? என மீண்டும்
முதலிலிருந்தே ஆரம்பியுங்கள்
என் கவனம் வார்த்தைகளில்
போக பிரார்த்தித்தவாறு.
விசித்திரம்
தனிமை வனத்திற்குள்
தொலைந்து கொண்டிருந்தவளை
இழுத்து வந்து
அனல் காற்று அறையும் பாலைவனத்தில்
சிறகு பறிக்கப்பட்ட ஒற்றைப் பறவையாக
விட்டுச் செல்ல
‘எப்படி முடிந்தது உன்னால்’
என்னும் கேள்வி எனை
துளைத்துக் கூறு போட்டுப் பல
பரிமாணங்கள் எடுத்துக் கொண்டு இருப்பதை
நிறுத்த முடியா இயலாமையிலும்
என்
உயிர்
இருக்கிறது ! !!