
மணமுடித்த மறுமாதம் என்னைவிட்டு எல்லை சென்ற கணவர்
கனவில் மட்டும் கட்டித்தழுவி…
அவர் புகைப்படங்களை முந்தானையால் தினம் துடைத்து…
கோயில் குளமெனக் கைகோர்த்துச் செல்லாமல்…
கருவுற்ற செய்தியை கண்பார்த்துச் சொல்லாமல்….
தொலைப்பேசி திரையில் தெரியும்
அவர் பெயருக்காகத்தான் என் ஒவ்வொரு நாளும் விடிகிறது,
பெயர் தெரியா நாட்களும் உண்டு,
அந்நாட்களை எந்நாட்காட்டியில் நான் சேர்ப்பதில்லை.
ஏழு மணி செய்திகளில் காஷ்மீர் துப்பாக்கிச் சூடு காணொளி…
அடுத்த அழைப்பு வரும்வரை
கதிகலங்கி பித்தாகிப்போகும் மனது…
என் உப்பிய வயிற்றை உற்று உற்றுத்தான் பார்க்கிறார் –
video call களில்…
தொட்டுத் தழுவ தவறியவர்.
உலகமே,
உங்கள் வீரிய விஞ்ஞான வளர்ச்சியால்
சிலநாட்கள் தீவிரவாதம் நிறுத்துங்கள்,
பிள்ளை பெற்றெடுத்துப் பெயர்சூட்டியபின் கணவரை மீண்டும் அனுப்புகிறேன்..,
சில ஆண்டுகளில் பிள்ளையையும் அனுப்புகிறேன்.
இப்படிக்கு
பட்டாளத்தான் மனைவி
Super kavidhai