அம்மா மிளகு ரசத்துக்கு அம்மியில் தட்டி எடுத்துவிட்டாள் போலிருக்கிறது, ரசமே வைத்துவிட்டது போல் வீடெல்லாம் நிறைகிறது மணம். எவ்வளவு பெரிய நகரத்தில் குடியேறி, எத்தனை நட்சத்திரம் உள்ள உணவகத்தில் உண்டாலும், அம்மாவின் இந்த தட்டுரசத்துக்கு ஈடுஇணையே கிடையாது. வாசத்தால் இழுபட்டது போல் சமையலறைக்குப் போய் நின்றேன்.
“ஏம்டே! பசிக்கா? “
“எப்பப் பாரு பகாசூரன்னே நெனம்மா என்னைய… உங்கூட பேசலாமுன்னுதான் வந்தேன், நீதான் பொழுதன்னிக்கும் சாய்ப்புக்குள்ளயே என்னத்தவாச்சு கிண்டிக்கிட்டுக் கிடக்கியே, அதான் நானே இங்க வந்துட்டேன்”
“வருசத்துல ரெண்டு மூணுவாட்டி வர்ற, நீ வர்றப்பதாம்டே எனக்கே நானும் நல்லசோறு செஞ்சு சாப்ட்ட மாறி இருக்கு, அந்தப் பொடிச்சியையும் கூப்ட்டு வந்திருந்தா இன்னும் கலகலனுருந்திருக்கும்”
பேத்தி நினைப்பில் அம்மா முகம் சற்று ஒளியேறிக் குறைந்தது.
“அது சரி! சம்மந்தாருக்கும் இதே ஏக்கம் இருக்குமுல்லா… நாலு நாள் தாயும் மவளும் அங்கனயே இருந்துட்டு வரட்டும்”
தன்னைத்தானே சமாதானப்படுத்தியபடி, பிரண்டையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் அம்மா. மிளகு ரசம், பிரண்டைத் துவையல்… அதோடு சிறுகிழங்குப் பொரியல் அல்லது குட்டி உருளை பொடிமாஸ் என நிச்சயம் ஏதாவது ஏற்பாடு செய்திருப்பாள் அம்மா. இந்த சேர்மானத்தில் அம்மா கையால் சாப்பாடென்றால் அவ்வளவு உயிர் எனக்கு.
“ம்மா… ம்மா… அம்ம்ம்மா… உன்னாலதாம்மா முடியும், அத எப்டியாச்சு ஆனந்திகிட்டருந்து வாங்கிக் கொடும்மா”
“எத்தனவாட்டி நான் அவளுக்கு ஃபோன் போடறேன், அவ அப்பாதாம்டே எடுக்கார், என்னால அதலாம் தேட முடியாதுனு சொல்றார், நான் என்ன பண்ணித்தொலைய?”
“நீ வேணா… அவ வீட்டுக்குப் போய்த் தேடி எடுத்துட்டு வரியா…?”
கையிலிருந்த ரசக்கரைசலை அவசர அவசரமாய், அடுப்பிலிருந்த தாளிப்பில் ஊற்றிவிட்டு, ஓங்கி எறிந்தாள் பாத்திரத்தை. அதுபோய் நாலு குதி குதித்து டகடகவென வெண்கலக் குரலில் கத்தியடங்கியது அவளுக்குப் பதிலியாய்.
“நல்லா கோவப்பட்ட போ! அப்டியே ரசத்தோட தூக்கி எறிஞ்சிருந்தா அடுத்து புளி ஊறவச்சு… அதுக்கு சேவியம் பாத்து… சிந்துனதத் தொடச்சு… இவ்ளோ வேலைக்கு மாச்சப்பட்டு, கவனமா தாளிச்சுட்டு வெறுஞ்சட்டிய எறியுற பாத்தியா… அங்கன இருக்குமா ஒன்னோட சூச்சுமம்” என்றேன் குறுஞ்சிரிப்புடன்.
அம்மாவும் சிரித்துவிட்டாள். நானும் கூட ஆனந்தியிடம் இப்படி சில நிமிடங்கள் நிதானித்துக் கோபப்பட்டிருக்கலாம்… அல்லது ஆனந்தியாவது எனக்குப் புரிய வைப்பதற்கு முயற்சித்திருக்கலாம்.
“எப்டிரா இனி அத வாங்க முடியும்? உனக்கு தனியா ஒரு கல்யாணம் ஆகிருச்சு, அவளுக்கும் தனியா ஒரு கல்யாணம் ஆகிருச்சு, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து குப்பகொட்னதே வெறும் பதினாறு நாளு! டிவோர்ஸ் வாங்கறதுக்கு முன்னாடி அந்த ஆல்பத்தை வாங்கித் தொலச்சிருக்கலாம்ல்ல?” என்ற அம்மாவிடம்,
“எனக்கு இருந்த டென்சன்ல மறந்துட்டேன், இந்தா கேட்கலாம் அந்தா கேட்கலாம்னு அது ஆகிருச்சு அஞ்சு வருசம்” என்றேன்.
அதாவது ஆனந்திக்கும் எனக்குமான திருமணவுறவு முறிபட்டு ஐந்து வருடமாகிறது. அம்மா சொன்ன மாதிரி பதினாறு நாட்களே எங்கள் வாழ்க்கை. தேநிலவு போய்த் திரும்பியவுடனேயே இருவரும் பிரிந்துவிட்டோம். அதன்பிறகு இருபுறத்துப் பெரியவர்களும் அறிவுரை கொடுத்து சேர்த்து வைக்க முயன்றதற்கும், சட்டப்படி பிரிவதற்கான நடைமுறைகளுக்குமே சிறிது காலம் எடுத்துக்கொண்டது.
நான் வேண்டும் வேண்டும் என அடித்துக்கொள்கிற அந்த ஆல்பம் எங்கள் திருமண ஆல்பம் அல்ல. என் திருமணத்துக்கு முந்தைய இருபத்தைந்து வருடங்களை வெறும் ஐம்பதே கவித்துவமான படங்களால் ஆல்பமாக்கி எனக்காக பிரத்யேகமாக என் அப்பா தயாரித்திருந்த திருமணப் பரிசு அது. தேனிலவுக்கு, ‘கூர்க்’ சென்றிருந்தபோதும் நான் என் ஆல்பத்தை விடாமல் கையோடு எடுத்துப் போயிருந்தேன். அவளிடம் காட்டுவதற்கு அதில் நிறைய இருப்பதாகத் தோன்றியது அப்போது. ஆனால் கடைசியில் ரொம்ப இலகுவாக என் வாழ்விலிருந்து அகன்றவள் ஆகிவிட்டாள் ஆனந்தி.
ரசம் கொதிவரவும் அம்மா, குழித்த உள்ளங்கை நிறைய நீரெடுத்து ரசத்தின் மீது ஒரு வட்டமாய் கைசுழற்றி நீர்விட்டு இறக்கினாள்.
“இதுமாதிரிதானமா நண்டுக்குழம்புக்கும் கடைசில தண்ணி விடுவ…?”
“அது வேற மாதிரிடா… தண்ணிய கைல தொட்டுத் தொட்டு சட்டி ஓரத்த ஈரக்கையால வழிச்சு குழம்புல விடனும்… அப்பதான் கொழம்பு நல்லா கொழுப்பு மொதக்க தளதளனு இருக்கும்…” என்றவள்,
“ஒனக்கு ஓர்மை இருக்கா வருணு! அப்பாவும் நீயும் பார்நண்டு கடிக்கிறோமுனு பல்லு ஒடச்சியளே?”
எனக்கு ஏழுவயது நடக்கும்போது நடந்த சம்பவத்தைக் குறிப்பிடுகிறாள் அம்மா. அன்று சமைத்திருந்தது, ஓடு மிகக் கடினமான பார்நண்டு. நண்டுக்கொடுக்கை உடைக்க அடுப்புக்கான ஊதாங்குழல் எடுத்துவந்து கொடுத்தபடி அப்பாவை அம்மா ஏதோ கிண்டல் செய்ய அவர், ‘பல்லாலேயே உடைக்கேம் பாரு’ என முயற்சி செய்ய, அவரது மேல்வரிசை கோரைப்பல் சின்னதாய் நொறுங்கி வந்துவிட்டது. நானும் வேறு சும்மா இருக்காமல் அந்த விளையாட்டில் இறங்க, என் ஆடிக் கொண்டிருந்த கீழ்ப்பல் கையோடு வந்தது. இருவரும் கையோடு, ‘பாப்பு ஸ்ட்டுடியோ’ போய், ஓட்டைப் பல்லைக் காட்டிக்கொண்டு எடுத்த புகைப்படத்தை அப்பா அந்த ஆல்பத்தில் சேர்த்திருந்தார்.
நானும் ஆனந்தியும் கூர்க் சென்றிருந்தபோது அந்தப் புகைப்படத்தால்தான் பிரச்சனையே ஆரம்பித்தது. அவளிடம் அந்தக் கதையைச் சொல்லி சிரிக்கலாம் என ஆல்பத்தை விரித்தேன்.
ஆனால் அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் ஆனந்தி சொன்ன வார்த்தைகள், “ஐய்… உங்கப்பா பல்லு மோகன் பல்லு மாதிரி இருக்கு”
“மோகனா…? எந்த மோகன்?”
“நடிகர் மோகன்… அவரோட தெத்துப்பல் அவ்ளோ அம்சமா இருக்கும்… ‘தென்றல் வந்து என்னைத்தொடும்…’ பாட்டு பாத்துருக்கீங்களா? பாட்டு ஸ்டார்ட்டிங் சீனே மோகன் சிரிக்கறதத்தான் காட்டுவாங்க, அந்தப் பல்வரிசை….. “
சொல்லிக்கொண்டே போனாள்…
அவளுக்கு மோகன் பற்றிச் சொல்ல நிறைய இருந்தது, எனக்கு அந்த புகைப்படம் பற்றிச் சொல்ல இருந்த விஷயங்கள் மோகனின் பிரமாண்டத்தில் சிறுத்துக்கொண்டே வந்தன.
“மக்கா, சாப்டுறியா? ” என்றபடி வடித்த சோற்றை நிமிர்த்திய அம்மாவின் குரலில், ஆனந்தி… ஆல்பம்… என எல்லா நினைவும் கலைந்து நிகழுக்கு வந்தேன், நல்ல காரஞ்சாரமாய் சமைத்திருந்தாள் அம்மா. காரத்தில் மூக்கு ஒழுக ஒழுகப் புறங்கையில் மூக்கைத் துடைத்தேன்,
“இந்த மூக்கத் தொடைக்கிய பழக்கம் போவுதா பாரு ஒனக்கு, கெர்ச்சீப்பு ஒன்னு சட்டப்பையில எப்பவும் போட்டுக்கன்னா கேக்குதானில்ல, சின்னப்பயலுவளுக்கு மாட்டுனமாதி ஒனக்கும் சட்டையில ஊக்குப் போட்டுதான் மாட்டனும்” சொன்னபடி அம்மா நிஜமாகவே கைக்குட்டையை சட்டையில் மாட்டிவிட்டாள்.
ஒன்றாம் வகுப்பு குழுப் புகைப்படத்தில் கூட எனக்கு இப்படித்தான் சட்டையில் கைக்குட்டை தொங்கும். ஆல்பத்தில் இருந்த அந்த புகைப்படத்தைப் பார்த்தபோது ஆனந்தியின் முகம் ஆச்சர்யத்தால் நிறைந்ததை உணர்ந்தேன். என் இளவயது முகம், அந்தக் கைக்குட்டை, அந்த வட்டக்கண்முழி என்று எது இவளை ஆச்சரியப்படுத்தியிருக்கும் என அவள் முகத்தையே பார்த்தபடி அவளது வார்த்தைக்காகக் காத்திருந்தேன்…
“உங்க கரஸ்பான்டன்ட் ஃபாதர் இதயகோவில் படத்துல மோகன் மாதிரி தாடி வச்சிருக்கார்”
என்று சொன்ன ஆனந்தி ஏமாற்றத்தில் என் முகம் சிறுத்துப்போனதைக் கூட அப்போது கவனிக்கவில்லை.
சாப்பிட்டுவிட்டு வெளியே கிளம்பலாமா என யோசித்தபடி நான் அப்பாவின் அறைக்கு வந்தேன். அப்பாவின் இன்மையிலும் அவரது இருப்பைப் போலவே அந்த அறையை வைத்திருந்தாள் அம்மா. பன்னீர் ரோஜா மாலையிட்ட அப்பாவின் புகைப்படத்திற்குக் கீழே அவரது குளிர்க்கண்ணாடிகளையும் கைக்கடிகாரங்களையும் அடுக்கும் சிறு மர அரங்கு. அப்பா விதவிதமாய் குளிர்க்கண்ணாடிகள் அணிவதில் ஆர்வமுடையவர். அவரது அரங்கிலிருந்து என் உடைக்குப் பொருத்தமான கண்ணாடி ஒன்றை எடுத்துக்கொண்டபோது அப்பா புகைப்படத்தில் என்னை முறைப்பது போலிருந்தது. நான் அவரது பல கண்ணாடிகளைத் தொலைத்திருக்கிறேன், அதனால் அவ்வளவு சுலபமாய் எனக்கு கண்ணாடி தரமாட்டார்.
அன்றும் அப்படித்தான், அப்பாவிடம் அடம்பிடித்து வாங்கிய ரே-பான் கண்ணாடியை கூர்க் அறையில் எங்கோ வைத்துவிட்டு தேடிக் கொண்டிருந்தேன். உடன் சேர்ந்து தேடிய ஆனந்தி,
“வருண்! ‘விதி’ படம் பார்த்திருக்கீங்களா?” என்றாள்.
“அப்டி ஒரு படமா…?” என்றேன்.
“ஆமாங்க, மோகன் நடிச்சது… அதுல அவரு கதாநாயகியை மொதமொதோ சந்திக்கற காட்சியில, ‘ட்டுடே இஸ் மை டே’னு சொல்லிக்கிட்டே கூலர்ஸ் போட்டுட்டு வெடுக்குனு திரும்புவாரு… அவ்ளோ ஸ்டைலிஷ்ஷா இருக்கும் தெரியுமா?” என்றாள்.
மிகவும் கடுப்பாகி,
“தெரியாது”
என ஒரே வார்த்தையில் பதிலளித்தேன். எனக்கு இவள் பொருந்தமாட்டாளோ என என் மூளையில், முன்னால் முன்னால் வந்து நின்ற கேள்வியை வலுக்கட்டாயமாய்ப் புறந்தள்ளிவிட்டு அவளுடன் ஊர் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டேன்.
யூகலிப்டஸ் மரம் ஒன்றின் மீது ஒயிலாக சாய்ந்து நின்று கொண்டிருந்தவளை,
“ஏய் இந்த ப்போஸ் நல்லாருக்கு, இரு ஃபோட்டோ எடுக்கறேன்…” என்றதும் இசைந்தாள்.
டிஜிட்டல் கேமராவின் திரையில் பார்த்தபடி, “வாவ்… செம்ம க்யூட் றி!” என்றேன்…
எதையோ நினைத்துக்கொண்டாற் போல் அப்படி ஒரு அழகான சிரிப்பு வந்தது, அவளிடமிருந்து. எடுத்த புகைப்படத்தை அவளிடம் காட்ட எத்தனிக்கையில் அவள்,
“இந்த மாதிரி ஒரு யூகலிப்டஸ் தோட்டத்துல வர்ற அந்தப் பாட்டு… சான்சே இல்ல தெரியுமா..?” என்றாள்.
குழப்பத்துடன், “எந்தப் பாட்டு…?” என்றேன்
“தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க…” என ஏதோ ஒரு பாடலைப் பாடினாள்.
நான் மலங்க மலங்க விழித்தேன்…
“அட… தெரியாதா? மோகன் பாட்டு… ‘மெல்லத்திறந்தது கதவு’ படத்துல வருமே… அந்தப் பாட்டுல ‘தேடித் தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே’ வரி முடிஞ்சு… ‘வாராமலே என்னாகுமோ’னு அடுத்த வரி ஆரம்பிக்கற இடத்துல மோகன் தன்னோட உடலை ஒரு உலுக்கு உலுக்குவாரு பாருங்க… அடடா… அடடா…”
மறுபடி அறைக்கு வந்த பிறகு ஆனந்தி உடை மாற்றுவதற்குள் எனக்கு நானே ஒரு ஆரூடம் சொல்லிக்கொண்டேன்… ‘இப்போதும் நான் என் ஆல்பத்தை எடுத்து அவளிடம் காட்டுவேன், இப்போதும் அவள் மோகன் கதையே சொன்னால் நாங்கள் பிரியப்போவது உறுதி…’ ஆல்பத்தைப் புரட்டியதும் வந்த புகைப்படத்தைக் காட்டி,
“ஆனந்தி இதப் பாரு! இதுவும் பாப்பு ஸ்டுடியோவில் எடுத்தது… இத எடுத்த அங்க்கிள் என்கிட்ட, ‘மாமா ஸ்மைல் ப்ளீஸ் சொல்லுவேனாம்… உடனே நீ சிரிச்சா இந்த கண்ணாடில கொக்கு தெரியும் பாரேன்’ னு சொன்னதை நம்பி நான் கேமராவையே பாத்துட்ருந்தேன்… எவ்ளோ அஷ்டகோணலா சிரிச்சிருக்கேன் பாரு… ஆனா படம் எடுத்து முடிச்சதும் கொக்கும் தெரியல, குருவியும் தெரியலை… வச்சேன் பாரு ஒரு அழுகை…” என நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஆரம்பித்தாள் ஆனந்தி,
“அந்த, ‘ஸ்மைல் ப்ளீஸ்’னு ஒரு மோகன் பாட்டு உண்டே… அது பாத்திருக்கீங்களா…? சும்மா துறுதுறுனு இருப்பாரு மோகன் அதுல”
கண்களில் கற்பனை மிதக்க பாடத் தொடங்கினாள்… “கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்…”
இவளது உலகம் வேறு மாதிரி இருக்கிறது, இதற்குள் வசிக்க எனக்குக் கொஞ்சமும் இடமில்லாத மாதிரி தெரிகிறது.
“அது என்னடி? நாம் பிறக்கும் முன்னயே ஹிட்டடிச்சு இப்ப அவ்ளவா நடிக்காத நடிகன உனக்கு எப்டி இவ்ளோ பிடிக்குது?” என்றேன்.
“அது அப்படித்தான்… சில தலையசைப்புகள்… சில முகவெட்டுகள்… சில நடையுடை பாவனைகள், நம்ம உள்மனசுல கிடக்கிற யாரோடயாவது மனசு ஒப்பிட்டு வச்சுக்கும்… அவங்களப் பிடிக்க பெருசா காரணமெல்லாம் தேவையில்லை” என்றாள்.
எனில்… ஆனந்தியின் உள்மனது யாரோடு ஒப்பிட்டு மோகனை அவளுக்குப் பிடிக்க வைக்கிறது… அது யாராய் இருக்கும்… என அந்த நொடியிலிருந்து பிறாண்டத் துவங்கியது என் மனது.
ஆனந்தி குளியலறைக்குச் செல்வதற்காகக் காத்திருந்து அவளது அலைபேசியை எடுத்து மோகன் என்ற பெயரில் அவளுக்கு நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா எனத் தேடினேன். அப்படி ஒருவரும் இல்லை. திடீரென நினைவு வந்து அலைபேசியின் ஒளிப்படங்கள் தொகுப்பைத் தேடினேன்,
‘அவளது கல்லூரி நண்பர்கள் நிறைய பேர் எங்கள் திருமணத்திற்கு வந்திருந்தார்களே, அதில் மோகன் போன்ற தோற்றமுடைய யாராவது இருக்கிறார்களா… இருக்கிறார்களா..?’
தேடிக் கொண்டிருந்ததில் ஆனந்தி வந்ததைக் கவனிக்கவில்லை நான், திடுமென என் முன் தலை துவட்டியபடியே இயல்பாய் வந்து நின்றவளைப் பார்த்து எனக்குதான் வியர்த்துவிட்டது.
“கேலரி பாக்குறீங்களா வருண்? ஓ… இந்தப் படமா… எங்க காலேஜ் வானரக் கூட்டம்… அமர்களப்படுத்திட்டாங்கல்ல நம்ம கல்யாணத்துல…?”
குளித்ததும் ஈரநெற்றியில் விபூதி இட்டிருந்தாள், வழக்கத்தை விட பேரழகியாய்த் தெரிந்தாள். ஒவ்வொரு படமாய் விரலால் தள்ளிக்கொண்டே வந்த நான் ஒரு படத்தில் நிதானித்தேன். அதிலிருந்தவன் கிட்டத்தட்ட மோகன் மாதிரி இருந்தான்.
அவனாய் இருக்குமோ என்று எண்ணியபடி ஆனந்தியைப் பார்த்தேன், ஏதோ பாடலை முணுமுணுத்தபடி உதட்டில் சின்னச் சிரிப்புடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இவனா…?” என்றேன்,
“எவனா…?” என்றபடி என் கன்னத்தோடு குளிர்க் கன்னத்தை இழைத்தபடி அலைபேசித் திரையை எட்டிப் பார்த்து,
“இவன் நவீன்… இவனுக்கென்ன?” என்றாள்.
“இல்ல… சிலரோட தலையசைப்பு, பாவனை, நடையுடையெல்லாம் நம்ம உள் மனசுல கிடக்கிற யாரோடயாவது மனசு ஒப்பிட்டு வச்சுக்கும்னு சொன்னியே…”
“ம்…? ” என்றபடி சற்று விலகினாள்.
அருகில் அமர்ந்து இருந்தவள், எழுந்து எதிரில் நின்றாள்.
“எப்பப் பாரு மோகன்… மோகன்றல்ல… அந்த மோகன் இந்த நவீன் ஜாடைல இருக்கதாலதான் பிடிக்குதா…?”
அவள் நெற்றியில் இட்டிருந்த விபூதி சுருங்கி விரிந்ததைப் பார்க்க, ஒரு பறவை கிளையிலிருந்து உந்தி பட்டெனப் பறப்பது போல் இருந்தது. அவ்வளவுதான்… எல்லாம் முடிந்தது.
அதன் பிறகு கடந்துவிட்ட ஐந்து வருடம் சில நிமிடங்களில் கண் முன் ஓடி மறைந்ததைப் போலிருக்கிறது எனக்கு. இந்த நினைவுகளையும், அவளிடமே தங்கிவிட்ட அந்த ஆல்பத்தைப் பெற வேண்டும் என்ற தவிப்புதான் இன்னும் காயவிடாமல் வைத்திருக்கிறதுபோலும்.
அப்பா படத்துக்குக் கீழே அம்மாவின் அலைபேசி இருந்தது. அதிலிருந்து ஆனந்தியின் தொடர்பு எண்ணை எடுத்தேன்.
‘ஏன் நான் பேசிப் பார்க்கக் கூடாது ஆனந்தியிடம்…?’
‘அவளது பழைய எண் அவள் அப்பாவிடம் இருக்கிறது. என் அம்மா சொன்னபடி அதில் அழைப்பது வீண் வேலைதான்…’
‘வேறு எப்படி…?’
யோசித்தபடியே அந்த எண்ணை என் அலைபேசியில் சேமித்துக்கொண்டேன், அந்த எண்ணுக்கு வாட்சப் பகிரி இருப்பதாய் காட்டியது, வாட்சப்பை திறந்து பார்த்தால் ஆனந்தியின் முகம், அதே விபூதியிட்ட வட்ட முகம்.
‘ஒருவேளை… இந்த எண்ணுக்கான வாட்சப் ஆனந்தியிடம்தான் இருக்குமோ…?’
‘அழைக்கலாமா..?’
அழைத்தேவிட்டேன்…. அழைப்பு செல்கையில் திரையில் ஆக்ரமித்திருந்த முகத்தைப் பார்க்கும்போது குற்றவுணர்வு எழுந்தது.
அழைப்பு எடுக்கப்படவில்லை…
‘தொந்தரவு செய்றோமோ…’
‘இதுக்குக் கூட உரிமையில்லையா எனக்கு…’
‘உரிமையா…’ பெருமூச்செழுந்தது தானாய்.
மற்றுமொரு அழைப்பு… இந்தமுறை எடுத்துவிட்டாள்…
“ஹலோ…”
“சொல்லுங்க வருண்! நல்லாருக்கீங்களா…?”
“ம்… நீ… சாரி… நீங்க…?”
“யா… ஃபைன்… தென்?”
“அந்த ஆல்பம்…”
மறுமுனை அமைதியாய் இருந்தது…
“என் ஆல்பம் நினைவிருக்கா ஆனந்தி… அது இன்னும் இருக்கா? அல்லது டிஸ்ப்போஸ் பண்ணிட்டீங்களா?”
“இருக்கு”
“வாவ்… மை குட்நெஸ்… நான் நம்பினேன் ஆனந்தி, நீ அப்டி அதைத் தூக்கி எறிஞ்சுடமாட்டேனு எனக்குத்தெரியும்”
“த்தாங்க்ஸ்… “
“எதுக்கு? “
“நம்பினதுக்கு”
இப்போது நான் அமைதியானேன், இருவரின் மௌனமும் உரையாடிக் கொண்டிருந்தது. பேசினால் குற்றவுணர்வில் அழுதுவிடுவேனோ என பயமாய் இருந்தது. அழுதால்தான் என்ன தவறு இவளிடம்… என் கதறலைக் கேட்குமளவு முழுத்தகுதியும் உடையவை, இவளது ஆத்மாவின் செவிகள்.
“ஆனந்தி… அந்த ஆல்பம் கிடைக்குமா…?”
“நோ… “
“ஏன்…?”
“உங்களுக்கு வேணும்னா அந்த ஒவ்வொரு ஃபோட்டோவும் ஸ்கேன் பண்ணி அனுப்புறேன் வருண்… ஆனா அந்த ஆல்பம் தரமாட்டேன்… “
“ஏன்… ஆனந்தி?”
“உங்களுக்குத் தெரியுமா வருண்… நான் அந்த நிகழ்வுக்கப்றம், மோகன் பாட்டு பாடுறதே இல்ல… மோகன் பத்தி யார்கிட்டயும் பேசுறதும் இல்ல…”
“…”
“என்னப் பொருத்தவரைக்கும்… தன்னோட ரசனைகளைத் தன் சுயவுணர்வின் கட்டுப்பாடு தாண்டி யார்கிட்ட ஒரு பெண் ஒப்பிக்கிறாளோ, அவங்ககிட்ட அவ நேர்மையா இருக்கானு அர்த்தம்… அப்டி ஒரு நேர்மையோட, உங்களுக்கப்புறம் என்னால வேற யார்கிட்டயும் இருக்க முடியல… எஸ் அஃப்கோர்ஸ்… நல்லாருக்கேன்… வசதியாருக்கேன்… ஆனா வாழ்றதுக்கும், வாழப் பழகிட்டு வாழ்றதுக்குமான வித்தியாசம்னு ஒன்னு இருக்கில்ல… அடிபட்டுப்போன அந்த வெகுளித்தனம், இனி எவ்ளோ முயன்றாலும் வராது வருண்… அந்த வெகுளித்தனத்தோட சாட்சி, அந்த ஆல்பம். அந்தப் புகைப்படங்கள்ல கண்ணுக்குத் தெரியாம நானும் இருக்கேன் வருண்… என் முதல் வசந்தகாலம் அது… அந்த நினைவுகள் வேணும் வருண் எனக்கு….”
“புரியுது ஆனந்தி…”
“காட்டுல வேட்டைக்குத் தப்பிச்ச மிருகம் விடுற பெருமூச்சும், தினந்தினம் சர்க்கஸ்ல சாகசம் பண்ணிட்டுவர்ற மிருகம் விடுற பெருமூச்சும் ஒன்னு கிடையாது வருண்…”
“ஆனந்தி!”
“ம்…?
“நான் இப்ப நிறைய மோகன் பாட்டு பாடுறேன் தெரியுமா…?”
“….”
“பாடட்டுமா…?”
“ம்… “
“மாணிக்கத்தீவே… மாலைப்பூவே…! காணக் கண்கோடி வேண்டும் தாயே…!”
“…”
“சாரி ஆனந்தி”
“இது ரொம்ப லேட் வருண்… “
*********
சில கணங்கள் நெடிகலாக
சில நெடில்கள் தருணமாக
பிறளும் மனங்கள்
மறவாக் குணங்கள்
மறந்தும் விம்முது
மறுதலிக்குது.