
கலையின் கலைஞனும் கலைஞனின் கலையும்
AMADEUS / அமெரிக்கா / 1984
ஒரு மனிதன் அர்ப்பணிப்போடு கலையை அணுகும்போது கலைஞனாகிறான். அதேநேரத்தில் கலை ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனை கலைஞனாக்குகிறது. அவற்றின் வெளிப்பாடுதான் தனித்துவம். ’ONE FLEW OVER THE CUCKOO’S NEST’ எனும் திரைப்படத்திற்காக ஆஸ்கார் வென்ற மிலாஸ் பார்மேன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் அமேடியஸ் (AMADEUS). இப்படம் ஒரு இசைக்கலைஞனின் வாழ்வு மற்றும் மரணத்தை விவரிக்கிறது.ஒரு உன்னதமான இசை மூளையை புத்துணர்வு பெறச் செய்து உடலியக்கத்தைக் கிளர்ச்சியடையச் செய்கிறது. இதற்கு உதாரணம்தான் மியூசிக் தெரபி சிகிச்சை மூலம் பல வகையான நோய்களை குணப்படுத்துவது. மேலும் அன்றாட வாழ்க்கையில் இசை ஒரு முக்கிய உறுப்பாக செயல்படுவதுடன் மனித மேன்மையை அடையவும் துணைபுரிகிறது. ஆதியிலிருந்தே வெவ்வேறு வடிவங்களில் நம்முடன் பிண்ணிப் பிணைந்து பரிணாமம் அடைந்து வரும் இசைக்கு நமது சிந்தனையை நேரெதிராக மாற்றுமளவுக்கு சக்தி இருக்கிறது. இப்படி நமது எண்ணங்களைத் தீர்மானிக்கின்ற இசையைப் படைக்கும் கலைஞர்களில் பிரதான இடம் வகிப்பவர்தான் வொல்ப்காங் அமேடியஸ் மொசார்ட் (WOLFGANG AMADEUS MOZART). பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மொசார்ட் மற்றும் சமகாலத்தில் இயங்கிய மற்றுமொரு இசைக்கலைஞரான சாலியரி ஆகிய இருவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமே அமேடியஸ்.
இந்தப் படத்தைப் பற்றிச் சொல்வதற்கு முன் மொசார்ட்டை பற்றிய சிறு அறிமுகம் தேவைப்படுகிறது. மொசார்ட் 1756 ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று ஆஸ்திரியாவில் உள்ள சால்சுபெர்க் எனுமிடத்தில் பிறந்தார். தந்தை லியோபோல்ட் மொசார்ட். தாயார் அன்னா. ஏழு குழந்தைகளில் ஐந்து பேர் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர். மொசார்ட்டுக்கு ஒரே ஒரு அக்காதான், பெயர் அன்னா வால்பர்கா இக்னேசியா.
மொசார்ட்க்கு சிறுவயதிலே உருவான அதீத இசை ஆர்வத்தின் காரணமாக மூன்று வயதிலேயே பியானோ வாசிக்கத் துவங்கினார். ஏழாவது வயதிலே அரசவைக் குடும்பங்களில் இசை நிகழ்த்த ஆரம்பித்தார். அவரது அப்பா மொசார்ட்டின் தனித்துவ திறமையை புரிந்துகொண்டு தீவிர பயிற்சி கொடுத்தார். மொசார்ட்டுக்கு அப்பா தான் எல்லாமே.
இப்படி எந்நேரமும் இசைமீது கொண்ட பற்றால் மொசார்ட்டின் புகழ் வளரத்துவங்கியது. இதன் விளைவாக தனது பதினேழாவது வயதில் சால்ஸ்பெர்க் அரசவை இசைக்கலைஞராகப் பொறுப்பேற்றார். இருந்தாலும் இன்னும் பல நுணுக்கங்களைக் கண்டு அதன் உச்சத்தை அடைய வேண்டும் என்ற வேட்கை அவரை ஓரிடத்தில் இருக்க விடாமல் அலைக்கழித்தது. இசைக்கலைஞர்களாக உருவெடுப்பவர்கள் அனைவரும் அந்த காலத்தில் வியன்னாவுக்குச் செல்வது வழக்கம். அதேபோல மொசார்ட்டும் 1781 ஆம் ஆண்டு வியன்னாவுக்குச் சென்றார். அங்கு அவர் நிகழ்த்திய ORCHESTRA, OPERA, SYMPHONY மூலம் மொசார்ட்டின் புகழ் பரவத்தொடங்கியது. அங்கேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து குடியேறினார். இரண்டு மகன்கள் பிறந்தனர். வியன்னாவில் உள்ள அனைவரின் உதடுகளும் ‘மொசார்ட்’ என உச்சரிக்கத் தொடங்கின. இருப்பினும் பொருளாதர நெருக்கடி, அப்பாவுடனான மனக்கசப்பு, உடல் சம்பந்தமான நோய்கள், ஆஸ்திரியா – துருக்கி இடையேயான போர் ஆகியவை மொசார்ட்டுக்கு பெரும் தடையாக அமைந்தன. 600க்கும் மேற்பட்ட இசைவகைகளைப் படைத்தவர். தனது 35ஆம் வயதிலே மரணமடைந்தார். பீத்தோவன்கூட மொசார்ட்டின் பாணியில்தான் இசையை மேற்கொண்டார் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இப்போது அமேடியஸ் படத்தின் கதைக்கு வருவோம்,
இரவு நேரம், ஒரு அறைக்குள் ‘என்னை மன்னித்துவிடு மொசார்ட், நான்தான் உன்னைக் கொன்று விட்டேன்’’ என்று கதறி அழும் சத்தம் கேட்க ஆட்கள் விரைந்து வருகின்றனர். தற்கொலைக்கு முயன்ற வயதான ஒருவரின் கழுத்திலிருந்து ரத்தம் ஒழுகிக்கொண்டிருக்கிறது. சட்டென அவரை தூக்கிச் செல்கின்றனர்.
மறுநாள் மனநலக் காப்பகத்தில் தற்கொலைக்கு முயன்ற வயதானவர் தனது மனதின் காயத்துக்கு மருந்து தடவுவது போல பியானோ வாசித்துக் கொண்டிருக்க பாவ மன்னிப்பு வழங்குவதற்கு இளம் பாதிரியார் ஒருவர் அவரது முன்வந்து அமர்கிறார். அவரிடம் பியானோவில் ஒரு இசைக்குறிப்பை வாசித்து ‘இது என்னுடைய இசை… இந்த இசையைக் கேள்விபட்டிருக்கிறாயா” எனக் கேட்க பாதிரியார், “இல்லை” எனக்கூற அவரைக் கடிந்து கொள்கிறார். பாதிரியாருக்கு சங்கடமாகிறது. உடனே இன்னொரு இசைக்குறிப்பை வாசிக்க அதைக் கேட்ட பாதிரியாரின் கண்ணில் பரவசம், கூடவே அவரும் சேர்ந்து வாயில் முணுமுணுத்தவாறே… “எனக்கு மிகவும் பிடித்த இசை” எனப் புகழ்கிறார். வயதானவர் ஆழ்ந்த மௌனத்துடன் மெதுவான குரலில் ’’இது என்னுடைய இசை இல்லை… மொசார்ட்டுடையது’’ என்கிறார். ‘யார் அந்த மொசார்ட்?’ என்று பாதிரியாரின் கண்கள் வினவ சாலியரி விழிகளை மெதுவாக மூடுகிறார்.
சிறுவயது மொசார்ட், மூன்று வயதிலேயே கடினமான இசைக்குறிப்புகளை சாதரணமாக வாசிக்கிறார். அருகில் அவனின் ரசிகனாக அப்பா, மொசார்ட்டின் வளர்ச்சிக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறார். பேரரசர்களின் குடும்பங்கள், சர்ச், பணக்காரர்கள் ஆகியோரது வீடுகளில் இசைக் கச்சேரி நடத்த இச்சிறு வயதிலேயே இவ்வளவு ஞானமா என அனைவரும் ஆச்சர்யமடைகின்றனர்.
இன்னொருபுறம் சிறுவன் சாலியரி, ஆலயத்தில் ‘இசை ஞானத்தை எனக்கு அளித்தருள்வாயாக…. உனது நாமத்தைப் பரப்புவதே என் கடமையாக செய்வேன்” என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறார். ஆனால் அப்பாவுக்கோ சாலியரி இசைக்கலைஞன் ஆவதில் கொஞ்சமும் விருப்பமில்லை. அவனை கண்டிக்கிறார். வணிகம் செய்து பொருளாதரத்தை இரட்டிப்பாக்குவதிலேயே மும்முரமாக இருக்கிறார்.
சாலியரின் பிரார்த்தனை அப்பாவின் இறப்பின் மூலம் நிறைவேறுகிறது. தனது இசைவேட்கைக்குத் தடையாக இருந்த அப்பா இறந்துபோக கடவுளுக்கு நன்றி கூறி இசைப்பயணத்தை தொடங்குகிறார். தீவிர பயிற்சி மற்றும் உழைப்பின் மூலம் தனது 24ஆம் வயதில் புகழ்பெறத்துவங்கி வியன்னா அரசவையில் மன்னரின் விருப்பத்திற்குரிய தலைமை இசைக்கலைஞராக பணியமர்த்தப்படுகிறார். அரண்மனையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு இசை அமைப்பது, அரசகுல மக்களுக்கு இசை கற்றுத்தருவது, இசைக்கோர்ப்பு வாசிப்பது என்று வியன்னா மக்களிடையே பிரபலமாகிறார். ஆனால் இந்தப் புகழை முழுவதும் அனுபவிக்க ஒரு வார்த்தை தடையாக இருக்கிறது, அது மொசார்ட்.
மொசார்ட்டின் புகழ் மெல்லப் பரவி வந்த நிலையில் மொசார்ட் தன்னைவிட சிறந்தவனா என்ற கேள்வி சாலியரிக்கு அரிக்கத் தொடங்கியது. எப்படி இருப்பான் மொசார்ட், அப்படி என்ன புதுவிதமான இசையைக் கையாண்டிருப்பான் என்ற ஆவல் வளர்ந்துகொண்டே இருக்கிறது. அந்த எண்ணத்திற்கு வழிவகை செய்ய ஒருமுறை மொசார்ட் இசை நிகழ்ச்சி நடத்தும் இடத்திற்கே செல்கிறார்.
நிகழ்ச்சி இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பிக்க இருக்க மக்கள் கூட்டம் பரபரப்பாக இருக்கிறது. சாலியரின் கண்கள் இந்தக் கூட்டத்தில் யார் மொசார்ட் எனத் தேட அவர் அகப்படவில்லை. சிறப்பு அழைப்பாளர்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு அறையைப் பார்க்கிறார். இதற்குள் இருப்பானா என ரகசியமாக உள்நுழைந்து பார்க்க அங்குமில்லை.
இச்சமயத்தில் அந்த அறைக்குள் ஒரு இளம்பெண் சிரித்துக்கொண்டே ஓடிவர துடிப்பான இளைஞன் அவளைத் துரத்தியவாறே வர சாலியரி ஓரிடத்தில் மறைந்து கொள்கிறார். அவன் அப்பெண்ணை நெருங்கி வந்து தழுவி அவளது அழகைப் புகழ்ந்தாவாறு பேசி வித்தியாசமாக உச்ச தொனியில் சிரிக்கிறான். அந்த சிரிப்பும் அவர்களது உரையாடலும் சாலியருக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுக்கிறது. அப்போது பின்னணியில் இசை சப்தம் ஒலிக்க இளைஞன் அதிர்ச்சியாகி ’என் இசையை என் அனுமதியின்றி வாசிக்கிறார்கள்’ என அங்கிருந்து வேகமாக ஓடுகிறான். தேடிவந்த மொசார்ட்டே அவன்தான் எனத் தெரியவர சாலியருக்கு வியப்பு. மொசார்ட் இவ்வளவு சிறுபிள்ளைத்தனமானவனா, பெண்கள் பின்னால் சுற்றுபவனா என அவரது கண்கள் தடுமாறுகின்றன.
மொசார்ட் மேடையில் இசையை வாசித்துக்கொண்டிருக்க மக்கள் உணர்ச்சிப் பிளம்பாக மயக்கத்தில் இருக்கின்றனர். சாலியரின் காதில் அந்த இசை ஒவ்வொன்றாக விழ விழ ஒவ்வொரு கேள்விகளாக மனதில் எழும்பிக் கொண்டிருக்கிறது. தன்னை விட இதில் ஏதோ உன்னதம் இருக்கிறது என்பதை ஒருபக்கம் உணர… இல்லை அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என அவரை மனம் சமாதனப்படுத்துகிறது. தான் இறைவனின் தூதன்… இசையில் தான் மட்டும்தான்… என நினைத்து வந்த சாலியரின் எண்ணங்கள் அங்கேயே நொறுங்கி விழ ஆரம்பிக்கிறது.
மொசார்ட் அடுத்தகட்டமாக வியன்னாவிற்குச் சென்று இசைநிகழ்ச்சி நடத்தத் திட்டமிடுகிறார். இது மன்னருக்கு தெரிவிக்கப்படுகிறது. மொசார்ட் வியன்னா அரண்மனைக்குள் நுழைய மன்னர் பியானோவில் இசைத்து வரவேற்கிறார். மன்னர் மொசார்ட்டுக்கு சாலியரை அறிமுகம் செய்து வைத்து “இப்போது நான் இசைத்த குறிப்பு இவர் எழுதியதுதான்..’’ என்கிறார். மொசார்ட் தனக்கு ஏற்கனவே சாலியரை தெரியும்… அவரது இசை எனக்குப் பல வகைகளில் உதவியிருக்கிறது என சொல்கிறார். சாலியரி சந்தோசத்தை வடிகட்டிக்கொண்டு லேசாகப் புன்னகைக்கிறார். “ஆனால் அவையெல்லாம் அடிப்படையானவை. அவற்றிலிருந்து வேறுபட்ட புது பரிமாணமத்தை என்னால் உண்டாக்க முடியும்.” என மொசார்ட் கூற சாலியரால் அந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மொசார்ட் மன்னரிடம், “இப்போது நீங்கள் வாசித்த இசையை சில மாறுபாடுகள் செய்து புது வடிவத்தில் அமைக்கிறேன்” என பியானோ முன் அமர, மன்னர் இசைக்குறிப்பை நீட்ட, “ஒருமுறை கேட்டாலே போதும் உள்வாங்கிக் கொள்வேன்… குறிப்பு தேவையில்லை.” என வாசிக்கத் தொடங்குகிறார். சாலியருக்கு பெருத்த அவமானமும் பொறாமையின் முதல் படிமமும் எட்டிப்பார்க்க ஆரம்பிக்கிறது.
இதைத் தொடர்ந்து சாலியரியின் காதலியான பாடகி மொசார்ட்டின் இசைக்கு அடிமையாகி அவனைப் புகழ்ந்து தள்ளுகிறாள். அந்த நிராகரிப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் உடைந்து போகிறார். மொசார்ட்டின் ‘ஒபேரா’ நிகழ்ச்சி நடக்கிறது. இதுவரை கேட்டிராத இசை வடிவத்தால் அனைவரும் புது அனுபவத்தை உணர்கின்றனர். அரசர் மொசார்ட்டை பாராட்டுகிறார். அனைவரது கைதட்டலும் கூச்சலும் சாலியருக்கு தன்னை அவமானபடுத்துவதைப் போலவே தோன்றுகிறது. அந்த மேடையில் ஒரு அம்மா தனது மகளை மொசார்ட்டுக்கு திருமணம் முடித்துத் தருவதாக அறிவிக்கிறாள்.
மொசார்ட்டுக்கு திருமணம் நடக்கிறது. அங்கேயே குடியமர முடிவெடுக்கிறார். மொசார்ட் வந்ததும் தான் ஓரம்கட்டப்பட்டுவிட்டோமோ என்ற சிந்தனை சாலியரின் மையத்தில் அமர்ந்துகொள்கிறது. இச்சமயத்தில் மன்னரின் மகள் தனக்கு இசை கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறது, மொசார்ட்டை ஆசிரியராக தேர்ந்தெடுக்கப் போகிறேன் என சாலியரிடம் கூறுகிறாள். என்ன சொல்வதெனத் தெரியாமல் சாலியரின் உதடு தவிக்கிறது. அதை நடக்கவிடாமல் செய்கிறார். மொசார்ட்டுக்கு நிதிப் பிரச்சனை ஏற்பட அரண்மனையில் வேலைக்கு சேர முடிவெடுத்து விண்ணப்பிக்கிறார். தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்டவர் சாலியரி. எனவே மொசார்ட்டின் வின்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. இது தெரிந்த மொசார்ட் அரண்மனை அதிகாரியிடம் தனக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை எனக் கேட்க “வியன்னாவில் நிறைய இசைக்கலைஞர்கள் இருக்கிறார்கள்… நீ ஒரு ஆள் மட்டும் அல்ல” என்கிறார். “ஆனால் இங்கிருக்கும் அனைவரையும் விட நான்தான் சிறந்த கலைஞன் ” என்று கூறி கோபத்துடன் செல்கிறார்.
சிறுவயதிலிருந்தே மொசார்ட்டுக்கு இசை, வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் அனைத்திலுமே வழிகாட்டியாக இருந்தவர் அவரது தந்தை. ஆனால் முதன்முறையாக தந்தையின் அனுமதியின்றி திருமணம் செய்துகொண்டார். இதைக் கடிதம் மூலம் தெரிவிக்க, அப்பாவுக்கு மிகுந்த கோபம் உண்டாகிறது. அப்பா மொசார்ட் வீட்டிற்கு வருகிறார். குடும்ப நிலமையையும் இசை வாழ்க்கையையும் பற்றியும் விசாரிக்கிறார்.
தனது தந்தை வந்த சந்தோசத்தில் மூவரும் ஒரு கேளிக்கை விடுதிக்குச் செல்கின்றனர். நடனம், இசை என ஆரவாரமாக களிக்கின்றனர். அப்போது அங்குள்ள பியானோ ஒன்றை மொசார்ட் இசைக்கத் துவங்க…. கூட்டம் கூடுகிறது. அனைவரும் ஒவ்வொரு இசைக்கலைஞன் பெயரைச் சொல்லி அவரைப் போல் வாசிக்க சொல்ல சற்றும் தாமதிக்காமல் அவர்கள் போல பாவனை செய்துகொண்டு வாசித்து அசத்துகிறார். அந்தக் கூட்டத்தில் இருக்கும் சாலியரி இதை கவனித்துக் கொண்டிருக்கிறார். தனது பெயரையே மறைந்திருந்து சொல்கிறார். சொல்வது யார் என்பதைப் பார்க்காத மொசார்ட் சாலியரை உருவக்கேலி செய்து கொச்சைப்படுத்துகிறார். அனைவரும் சிரிக்கின்றனர். சாலியரி அவமானத்தால் தலைகுனிகிறார். மனதில் சப்தமிடும் மொசார்ட் என்ற வார்த்தையை அமைதியுற செய்யாமல் சாலியருக்கு உறக்கமேதுமில்லை. அழிக்கும் எண்ணம் தலைதூக்குகிறது.
அவனைப் பற்றியும் இசைக் குறிப்புகளை அவன் எப்படி உருவாக்குகிறான் என்பது பற்றியும் தெரிந்துகொள்ள மும்முரமாகிறார். ஒரு வேலைக்காரப் பெண்ணுக்கு பணம் கொடுத்து மொசார்ட் வீட்டில் சம்பளமில்லா வேலையாளாக சேர சொல்ல அவளும் அதேபோல செய்கிறாள். மொசார்ட்டின் அப்பா, “தெரியாத ஆளை வேலைக்கு சேர்ப்பது நல்லதல்ல.” என எச்சரிக்கிறார். அப்போது வீட்டில் பொருளாதர நெருக்கடி வேறு, இதை வைத்து மொசார்ட் மனைவிக்கும் அப்பாவுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்பா வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.
ஒருமுறை மொசார்ட் வீட்டில் யாருமில்லாத சமயத்தில் சாலியரி வேலைக்காரி உதவியுடன் அங்கு செல்கிறார். மொசார்ட்டின் மேசையில் கடைசியாக அவர் எழுதிக்கொண்டிருக்கும் இசைகுறிப்புகளைப் பார்க்கிறார். அந்த இசை வியன்னா மன்னர் தடை செய்த ’THE MARRIAGE OF FIGARO’ எனும் நாடகத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது. சாலியரி இதை மன்னரிடம் பற்றவைக்க, மறுநாள் மொசார்ட்டை வரச்சொல்லி விசாரணை நடக்கிறது. அந்த நாடகத்தை புதுவிதமாகக் கையாண்டிருப்பதாக தன்பக்கம் உள்ள நியாயத்தை மொசார்ட்கூறுகிறார். நாடகம் நடத்திக் காட்ட சொல்லி ஒப்புதல் வழங்கப்படுகிறது. அரங்கத்தில் ஏதோ மாயம் நடப்பது போல் சாலியருக்கு தோன்றுகிறது. தான் தீட்டிய திட்டம் பயன்பெறாதோ… மன்னர் நன்றாக இருக்கிறது என சொல்லிவிடுவாரோ என எண்ணிகொண்டிருக்க மன்னர் அந்த நாடகம் சுத்தமாக பிடிக்கவில்லை எனக் கூறுகிறார். காலங்காலமாக தடை செய்யப்பட்ட நாடகம்தான் அதற்கு காரணம்.
அதன்பின் மன்னர் சாலியரின் நாடகத்தை அரங்கேற்ற சொல்கிறார். அனைவரும் ரசிக்கின்றனர். சாலியரின் மனம் நிம்மதி அடையத் தொடங்க மொசார்ட்டின் வாழ்வோ படிபடியாக பாதாளத்திற்குச் செல்ல ஆரம்பிக்கிறது. நிகழ்ச்சி முடிந்து மொசார்ட் வீட்டிற்குச் செல்ல அப்பா இறந்துவிட்டதாக செய்தி வருகிறது. மனம் ஏற்காது கதிகலங்குகிறார்.
மொசார்ட்டை உளவியல்ரீதியாக துன்பபடுத்த மேலும் சில திட்டங்களை செயல்படுத்துகிறார் சாலியரி. தூங்காத கண்கள், தொடர் போதை இவற்றுடன் ஒருநாள் இரவு மொசார்ட் எழுதிக்கொண்டிருக்க கதவு தட்டபடும் சத்தம் கேட்கிறது. திறந்து பார்க்க அதிர்ச்சியளிக்கும் உருவம், கருப்புநிற முகமூடி உடல்முழுவதும் சூழப்பட்டுள்ள மர்ம உடை, அவர் பணப்பை ஒன்றை க் கொடுத்து “உயிர்விடப் போகும் ஒருவனுக்கு இறுதிச் சடங்கில் வாசிக்கும் இரங்கற்பா இசை ஒன்று வேண்டும்” என சொல்லி சட்டென செல்கிறார்.
அந்த முகமூடி கடைசியாக அப்பாவுடன் கேளிக்கை விடுதி சென்ற போது அவர் அணிந்திருந்தது. அவர்தான் என்னை எழுதச் சொல்கிறார் என்ற கற்பனை மொசார்ட்டின் மனத்தில் நிஜக்கோடாக அழுத்துகிறது. அது சாலியரி என அவர் அறிந்திருக்கவில்லை. மனைவியிடம் இதுபற்றி சொல்லி, “அப்பாவை நான் சரியாக கவனிக்கவில்லை” எனக் குற்ற உணர்வோடு அழுக மனைவி “அது அப்பாவாக இருக்காது” என சமாதனப்படுத்துகிறார். இடைவெளியின்று இரங்கற்பாவை எழுத முயற்சி செய்கிறார். ஆனால் அந்த மர்ம உருவம் மனதுக்குள் இடையூறு செய்ய தொடர முடியாமல் தவிக்கிறார்.
வருமானம் எதுவும் இல்லாத சூழலில் மொசார்ட் எந்நேரமும் குடித்துக் கொண்டிருக்க மனைவி சண்டையிட்டு குழந்தைகளுடன் அவளது தாய்வீட்டுக்குச் செல்கிறார். இப்படி ஒருபக்கம் அப்பாவின் நினைப்பு மனதை வாட்ட இன்னொரு பக்கம் வறுமை. என்ன செய்வதெனத் தெரியாமல் ஒரு இசை அரங்கேற்றத்துக்கு ஒத்துக்கொண்டு பங்கேற்கிறார். பாதி நிகழ்விலேயே மயங்கி விழுகிறார். இதைப் பார்த்த சாலியரி மொசார்ட்டின் வீட்டிற்கு அவரைக் கொண்டு செல்கிறார்.
படுத்த படுக்கையாக இருக்கும் மொசார்ட் சாலியரியிடம், “ஒரு உதவி …நான் அவசரமாக ஒரு இரங்கற்பா எழுத வேண்டும்… நான் சொல்ல சொல்ல எழுதுகிறீர்களா.. என்னால் முடியவில்லை’” எனக் கேட்க அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது. மொசார்ட் பதற்றத்துடன், “அவராகதான் இருக்கும்.. வேகமாக இரங்கல் இசை எழுத வேண்டும்” எனப் புலம்ப சாலியரி கதவைத் திறந்து பார்க்க, அது இசை அரங்கேற்றம் ஏற்பாடு செய்த குழுவினர். மொசார்ட்டுக்கு சேர வேண்டிய பணத்தைக் கொடுக்கின்றனர். வந்தது யார் என சொல்லாது மௌனமாக மொசார்ட் முன் அந்த பணப்பையை வைக்கிறார்.
இரவு முழுவதும் மொசார்ட் சொல்லச் சொல்ல சாலியரி எழுதுகிறார். அனிச்சையாக நொடி நேரத்தில் எப்படி இவனுக்குள்ளிருந்து இந்தக் குறிப்புகள் தோன்றுகிறது என்ற யோசனை எழுதுவதற்குத் தடையாக இருக்கிறது. அதைத் தாண்டி இரங்கற்பா எழுதி முடிக்கப்படுகிறது. இருவரும் களைப்பால் உறங்கச் செல்கின்றனர். பிரிந்து சென்ற மனைவி மீண்டும் குழந்தைகளுடன் விடியற்காலை வீட்டிற்கு வருகிறார். மொசார்ட்டின் மோசமான உடல் சூழலைக் கண்டு அரவணைத்து மன்னிப்பு கேட்கிறாள். பேச முடியாத நிலையில் தன் குழந்தையை ஏக்கத்தோடு பார்க்கிறார். அருகில் இருந்த இசைக்குறிப்பில் வேறு ஒருவரின் கையெழுத்து பதிவாகியிருப்பதை பார்க்கிறாள். சாலியரி அங்கிருப்பதைப் பார்த்து அவருடன் சண்டையிடுகிறாள். அந்த சில நொடிகளில் மொசார்ட்டின் உயிர் பிரிந்து விடுகிறது.
ஒருசில பேருடன் அடைமழையில் மொசார்ட் அடக்கம் செய்யப்படுகிறார்.
இந்தக் கதையை இவ்வளவு நேரம் கேட்டுக்கொண்டிருந்த பாதிரியாரின் கண்களில் நீர் வழிகிறது. சாலியரி ஆழ்ந்த அமைதிக்குச் செல்கிறார். மொசார்ட் அடிக்கடி வித்தியாசமாக உச்ச தொனியில் சிரிக்கும் சிரிப்பு சத்தம் பின்னணியில் ஒலிக்க படம் நிறைவுறுகிறது.
கலை தேர்ந்தெடுத்த கலைஞன் மொசார்ட். கலைமீது அர்பணிப்பு கொண்டு கலைஞனானவர் சாலியரி. இன்றுவரை மொசார்ட்டின் இறப்பு மர்மமாகதான் இருக்கிறது. சாலியரி விஷம் வைத்துக் கொன்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை. இந்தப் படத்தில் கூட சாலியரி மொசார்ட்டைக் கொல்லுவதற்கு திட்டம் தீட்டுகிறாரே தவிர கொன்றதாக காட்சிப்படுத்தவில்லை. ஆனால் மொசார்ட் தனது தந்தைக்கு எழுதும் கடிதத்தில் சாலியரி தனக்கு எதிராக சதித் திட்டங்களை தீட்டுகிறார் எனக் குறிப்பிடுகிறார். மொசார்ட்டின் இளவயது மரணம் வான்கோவை ஞாபகப்படுத்துகிறது. இருவருமே தங்களை பிற்காலத்தில் மேதைகளாகக் கொண்டாடுவார்கள் என்பதை அறியாமல் இளம் வயதிலேயே உயிரை விட்டவர்கள்.
மொசார்ட் மற்றும் சாலியரின் வாழ்க்கையை சிறிது கற்பனை கலந்து 1830 ஆண்டு எழுதப்பட்ட நாடகம்தான் ‘மொசார்ட் அண்ட் சலியேர்’. இதை எழுதியவர் ரஷ்யக் கவிஞரும் எழுத்தாளருமான அலெக்சாண்டர் புஷ்கின். இந்த நாடகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான் ‘அமேடியஸ்’.
திரைக்கதைக் கட்டமைப்பு, தொழில்நுட்ப யதார்த்தம், ஆழமான நடிப்பு, இவைதான் இப்படம் இன்றுவரை கொண்டாடப்படுவதற்கான காரணம். படத்திற்கு திரைக்கதை ஆசிரியர் PETER SHAFFER. மிகவும் எளிமையான திரைக்கதைதான். ஆனால் அந்த எளிமையைக் கண்டடைய தீரா மெனக்கெடல் அவசியம்.
ஒரு படத்தின் கதைசொல்லல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். அதற்குத் தகுந்தாற்போல எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது. வில்லன் பாத்திரமாக காட்டப்படும் சாலியரின் கோணத்தில் இருந்து மொசார்ட்டைப் பற்றி விவரிப்பதும் புகழ்பாடுவதும் மாறுபட்ட எழுத்து. இப்படம் மொழி, கலாச்சாரம் இவற்றைத் தாண்டி வெகு எளிதாக பார்வையாளனுக்குள் நுழைந்து கொள்கிறது.
பதினெட்டாம் நூற்றாண்டின் தெருக்கள், அரண்மனைகள், இசை அரங்கங்கள், சர்ச் என பிரமாண்டமான வடிவமைப்பு கலையின் நுணுக்கத்தை வெளிப்படுத்துகிறது. மிரோஸ்லாவ் குறிப்பிட்ட சில படங்களுக்கே ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அதில் இந்தப் படமும் ஒன்று. ஏறக்குறைய பதினெட்டாம் நூற்றாண்டின் வியன்னாவுக்குள்ளே நம்மை மருவச் செய்கிறார். சுயசரிதை மற்றும் வரலாறு சார்ந்த படங்களுக்கு இப்படத்தின் ஒளிப்பதிவு முன்னுதாரணம். சாலியரின் கதை சொல்லலுக்கு ஏற்றவாறு காமிரா நகர்வு பொருத்தமாக இருக்கிறது. அடிக்கடி காட்டப்படும் பனிபொழியும் இரவுகள் நிச்சயம் நம்மை உள்ளிழுத்து மாற்றும்.
மொசார்ட்டின் இசை, சாலியரின் இசை என இரண்டு இசைகளுமே படத்தில் இரு பாத்திரமாகதான் செயல்படுகிறது. நமக்கு இசை அறிவு எல்லாம் தேவை இல்லை. ஒரு எளிமையான பார்வையோடு இதை அணுகினாலே போதும், அத்தனை உட்சாரமும் புரிபடும். SOUND OVER நுட்பமாக பயன்படுத்தட்டுள்ளது, வயதான சாலியரி பாதிரியாரிடம் மொசார்ட் வராததற்கு முன் தான் எப்படிபட்ட புகழோடு இருந்தேன் என்பதை விளக்க அவர் கண்களை மூட அவரின் இசைக்கு ரசிகர்கள் எழுப்பும் கைதட்டல் ஒலியை வடிகட்டி அனுபவிப்பார். இதுபோல் நிறைய உண்டு.
பாத்திரத்தின் அகத்தை நுட்பமாக வெளிப்படுத்தும் காட்சிகள் நிறைய இருக்கிறது.
மொசார்ட் எந்த அளவிற்கு இசையில் தேர்ச்சி பெற்றவன் என்பதை விளக்க, சிறுவயது மொசார்ட்டின் கைகள் பியானோவில் சர்வசாதரணமாக செயல்பட காமிரா பேன் ஆக அவனது கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும். பார்க்காமலே வாசிப்பதற்கு அப்பாவின் பயிற்சி அது. மொசார்ட்டிற்கு வேலைக்கு சிபாரிசு செய்ய வேண்டி மனைவி மறைமுகமாக இசைக்குறிப்பை எடுத்து சாலியரிடம் கொடுக்க வருவாள், சாலியரி அதை ஒவ்வொரு பக்கமாக பார்க்கையில் கடவுளிடம் முழு ஆசிபெற்ற ஓருவனது இசையாக உணர்கிறார். பின்னணியில் அந்த இசை ஒலிக்க மெய்மறந்து கண்கலங்கி ஏடுகளைக் கீழே போடுகிறார். அடுத்த நொடியே தான் இதுவரை வழிபட்டு வந்த இயேசுவை சிலுவையோடு எரிக்கிறார். அங்கிருந்துதான் அவருக்கு பழிவாங்கும் வன்மமும் உதயமாகிறது.
தோற்றம் பற்றியான அரசியலையும் இப்படம் பேசுகிறது. சாலியரி மிடுக்கான உடையுடனும் ஆழமான பார்வையுடன் அமைதியாக இருக்கிறார். அப்படித்தான் ஒரு இசைக்கலைஞன் இருக்க வேண்டும் என அனைவரும் எண்ணுகிறார்கள். மொசார்ட் அதற்கு நேர்மாறாக உடைகள் பற்றிய கவனமில்லாது ஒழுங்கற்ற தன்மையுடன் பெண்களுடன் சுற்றுவது, மது அருந்துவது என்றவாறு இருக்கிறார். இப்படிப்பட்டவனிடமிருந்தா இவ்வளவு அருமையான இசை என்ற கேள்வி வியன்னா மக்கள் அனைவரின் முகத்திலும் வெளிப்படுகிறது. இதற்கு பதிலாக இறுதிக்காட்சியில் மனைவியின் அம்மா மொசார்ட்டை “நீ மோசமானவன்… அழுக்கானவன்.. குடிகாரன்” எனத் திட்ட அதற்கு மொசார்ட் “ஆம்… நான் மோசமானவன்தான்… ஆனால் என் இசை அப்படிப்பட்டதல்ல” என்கிறார். இந்த ஒருவசனம் நமக்குள் பேருணர்வை ஏற்படுத்துகிறது.
சாலியருக்குள் மொசார்ட் மீது வன்மம் ஏற்பட ஒரே காரணம் கடவுள்தான். சிறுவனாக இருக்கும்போது கடவுளிடம் தன்னை ஒரு இசைக் கலைஞனாக ஆக்கும்படியும், “உனது நாமத்தை பரப்புவதே என் கடமையாக இருக்கும்” எனவும் மன்றாடுகிறார். அதன் விளைவாகவே அவரது அப்பா இறந்து போக, படிப்படியாக அவர் இசைக்கலைஞனாக உருவாகிறார். தான் இறைவனின் பிள்ளை… அவரது முழு ஆசியும் என் இசைக்கு உண்டு என தன்னையே ஆராதிக்கும் சமயத்தில்தான் தன்னைவிட அபரித ஆற்றல் படைத்த மொசார்டைப் பார்க்கிறார். மொசார்ட்டிடம் நான் தோற்க வேண்டுமாயின் ஏன் என்னை வளர்த்தெடுத்தாய்… ஏன் உன் பிள்ளை என என்னை உணரவைத்தாய் என கடவுள் மீது எழும்பும் கேள்விதான் சாரம். இந்த உணர்வின் வெளிப்பாடுதான் ஒவ்வொரு காட்சியிலும் சாலியரி முகத்தில் தோன்றுகிறது. அண்டேனியோ சாலியரி சாகும் வரைக்கும் அந்தக் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. இந்த தத்துவ கேள்வியின் மூலம் சாலியரின் மாற்றத்திற்கான நியாயத்தையும் பார்வையாளனால் உணரமுடிகிறது.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை மொசார்ட்டை விட மிகவும் ரசிக்கும்படியாகவும் அபரிதமாகவும் இருந்தது சாலியரின் பாத்திரத்தில் நடித்த முர்ரே ஆபிரகாம். தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத நிலை, மொசார்ட்டைக் கொல்ல வேண்டும் என்ற வன்மம், குற்ற உணர்ச்சி, கடவுள் மீது ஏற்படும் கோபம் என மாற்றமடையும் படிநிலைகளை கண்களில் இழுத்து உடல் அசைவுகளில் வெளிபடுத்தியிருப்பார். படம் பார்த்து முடித்ததும் இவரது தொற்று இல்லாமல் இருக்காது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதையும் பெற்றார்.
இப்படத்தில் சாலியரியைப் பற்றி சில தவறான கருத்துகளும் புனையப்பட்டுள்ளது என்ற விமர்சனங்களை ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். இப்படம் ஆஸ்கர் விழாவில் 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு 8 பிரிவுகளில் விருது பெற்றதோடு மட்டுமில்லாமல் 40 சர்வதேச விருதுகளையும் வென்றது.
இப்படத்தின் கரு, இசைத்துறையில் தன்னை விட இன்னொரு கலைஞனுக்குக் கிடைக்கும் புகழால் அவனது உயிரை எடுக்க நினைப்பது. இந்தப் படத்தின் கருவை ஒத்து வெவ்வேறு வடிவங்களில் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரிந்த இரு திரைப்படங்கள். ஒன்று 1991ஆம் ஆண்டு தோப்பில் அஜயன் இயக்கத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் வெளிவந்த ‘பெருந்தச்சன்” எனும் மலையாள திரைப்படம். இப்படத்தில் அப்பாவை விட கட்டிடம் மற்றும் சிற்பக் கலையில் மகன் தேர்ச்சி பெற்று புகழ்பெற, அதைத் தாங்கிகொள்ள முடியாமல் உயிரை பறிக்க காரணமாக இருப்பார் அப்பா. மற்றொன்று 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ’ஆடுகளம்’. இதில் தன்னுடைய சிஷ்யன் சேவல் பந்தயத்தில் தனக்கு மேலாக பேர் புகழடைய, அவனைக் கொலை செய்யுமளவுக்கு திட்டம் தீட்டுவார் குரு. மேற்சொன்ன மூன்று படத்திலும் பொதுவான ஒன்று, எதிர்ப்பவர்கள் வன்மத்தை நேரிடையாக வெளிகாட்ட மாட்டார்கள். அதற்கு கையாளப்படும் முறை, நம்பிக்கையை ஏற்படுத்தி பின் துரோகம் செய்வது.
இதைத் தவிர எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த ’இசை’, வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த ‘காவியத்தலைவன்’ திரைப்படங்களும்… இதெல்லாம் ஒரே வகை படங்கள் என ஆய்வுபடுத்துகிறனே தவிர தழுவல் எனத் தவறாக நினைக்க வேண்டாம்.
அமேடியஸ் திரைப்படத்தை இசைஞானி இளையராஜா அவர்கள் ’இருபது தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்று வரை பள்ளிகூடங்களில் ஒலிக்கும் “TWINKLE… TWINKLE… LITTLE STAR” என்ற பாடலின் இசைவடிவம் மொசார்ட்டுடையதே.
இன்று வரை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இப்படத்தை பார்த்து முடிக்கையில் நம் மனம் முழுக்க மொசார்ட் என்கிற மாபெரும் இசைக் கலைஞன் நிறைவது நிச்சயம்.