
பேச்சி எதிரே கிடத்தப்பட்டிருந்த தனக்கு நெருக்கமான உடலை கண்கொட்டாமல் பார்த்தபடி உறைந்து அமர்ந்திருந்தாள்.
சுற்று 1 – 1963
“அம்பர் சர்க்கா சுத்த சொல்லித் தராங்களாம். நாங்க ரெண்டு பேரும் போயிட்டு வந்திடுறோம்த்த”
வள்ளி, பேச்சியின் அம்மாவை கரைத்துக் கொண்டிருந்தாள்.
அம்மாவின் விருப்பந்தான் தன் விருப்பம், தனக்கு இதில் தனிப்பட்ட ஆர்வங்கள் ஏதுமில்லை என்ற முகபாவத்தோடு பேச்சி நின்றுகொண்டிருந்தாலும் அம்மா ஒப்புக்கொண்டுவிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அவளது மனம் பூராவும் விரவிக் கிடந்தது.
“எங்க வச்சு சொல்லித் தராங்களாம்?”
அம்மா முட்டி வரையிலும் ஏற்றிவிடப்பட்டிருந்த சீலையோடு அம்மியின் இரண்டு பக்கமுமாக காலை நீட்டி அமர்ந்தபடி அம்மியின் நடுபாகத்தில் மஞ்சளை வைத்து நுணுக்கிக் கொண்டிருந்தாள்.
“நம்ம பழைய பள்ளிக்கூடத்தில வச்சுதான். நடேசன் மாமாதான் ஏற்பாடு பண்ணியிருக்காரு”
வள்ளியின் பதிலில் அம்மாவை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிடும் ஆர்வம் மேலோங்கி நின்றது.
நடேசன் மாமாவிற்கு காந்திய கொள்கைகளின்மீது பற்று அதிகம். காந்தி இல்லாமல் போய்விட்ட கணக்கெல்லாம் அவரிடம் கிடையாது. அவரைப் பொறுத்தவரையிலும் காந்திய கொள்கைகளில் காந்தி இன்னும் உயிரோடிருக்கிறார். அப்படியான பற்றினில் அவர் ஏற்பாடு செய்திருந்ததுதான் சர்க்காவை (நூற்பு ராட்டினத்தை) இயக்கக் கற்றுக்கொள்வதற்கான வகுப்பும்.
அம்மா சிறிதுநேரம் மெளனமாக இருந்தாள். கைகள் அம்மியில் அரைக்கும் வேலையில் மும்முரமாயிருந்தது. பேச்சியும் வள்ளியும் தங்களை ஏறிட்டுப் பார்க்காமல் அம்மியின் மீதே முழு கவனமாய் இருந்த அம்மாவைப் பார்த்தபடி எதிர்பார்ப்போடு நின்றுக்கொண்டிருந்தார்கள்.
“அது என்னட்டீ அம்பர் சர்க்கா? சர்க்காதான அதுக்கு பேரு?”
அம்மா நிமிர்ந்து வள்ளியைப் பார்த்தாள்.
“பேரா அத்த முக்கியம். கூட உள்ள குட்டிக அப்படி சொல்லுகாளுகோ நாங்களும் அப்படியே சொல்லிட்டுப் போறோமே”
“சொல்லுங்க சொல்லுங்க.. நல்லா சொல்லுங்க”
அம்மா தன் பார்வையை மீண்டும் அம்மிக்கு கொண்டு வந்தாள்.
“போனமா வந்தமான்னு இருக்கணும். அங்கன நின்னே.. இங்கன நின்னேன்னு எந்த பேச்சும் என் காதுக்கு வரக்கூடாது. மன்சிலாச்சா?”
அம்மிக்குழவியில் ஒட்டியிருந்த அரைப்பையும் சேர்த்து வழித்து உருண்டையாக்கி அம்மிக்கு வலப்பக்கமிருந்த வெற்றுக் கிண்ணத்தில் வைத்தாள்.
அம்மாவிற்கு தனது விஷயத்தில் அவசியத்திற்கும் அதிகமான கவனம் இருப்பதாக பேச்சிக்குத் தோன்றியது.
“சரிதான..? பதிலையே காணோம்”
அம்மா நிமிர்ந்து பார்த்தபோது பேச்சியும் வள்ளியும் கண்சிமிட்டலில் அவர்களுக்குள்ளாக புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.
“ஏய் குட்டிகளா.. சரிதான?”
அம்மா அதட்டலாகக் கேட்டாள். பெரிதான கண்டிப்பு ஒட்டிக் கொண்டிராத அதட்டல்.
“சரிங்கத்தே”
“சரிம்மா”
அம்மாவின் அதட்டலுக்கு இருவரிடமும் இருந்து ஒரே நேரத்தில் பதில் வந்தது. அம்மா கையிலேந்திய அரைப்புத்தட்டோடு அடுக்களைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
வள்ளியும் பேச்சியும் ஊரின் பழைய பள்ளிக்கூடத்திற்கு வந்து சேர்ந்தபோது சில பெண்கள் ஏற்கனவே அங்கு குழுமியிருந்தார்கள்.
பள்ளிப்படிப்பை பெரிய மனுஷியாகிவிட்ட காரணத்திற்காக நிறுத்திவிட்டிருந்த பிறகு வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் அவர்கள் வழக்கமாகச் சந்தித்துக்கொண்டிருந்த ஒரே இடம் ஊரின் குளத்தங்கரை. சொல்லிக்கொள்ளும்படியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாமலேயே யார் யாரைச் சந்திக்க வேண்டுமென்கிற கணக்கை துல்லியமாகக் கணித்து குளத்துக்கரையில் பேசிக்கொள்வார்கள். கரையில் நின்றுகொண்டு துணிகளைத் துவைத்து அலசியபடியே அப்போதைய ஊரின் மொத்த நிலவரத்தையும் அலசி ஆராய்ந்துகொள்வார்கள். ஒருவருக்குத் தெரிந்த ஊரின் செய்தி மற்றவர்களுக்கு கடத்தப்படும்.
குளத்துக்கரைக்கு மாற்றாக சின்னப்பிள்ளையில் அடித்துத் திரிந்த தங்களின் பள்ளிக்கூட மைதானத்தில் ஒருவர் ஒருவரோடு உரையாடியபடி நின்றுகொண்டிருக்கிற எதிர்பாராத புது அனுபவத்தின் மகிழ்ச்சி அவர்களின் முகத்தில் ததும்பி நின்றது. பேச்சொலிகளும் வளையல்களில் உரசல்களுமாக அந்த இடம் நிரம்பியிருந்தது.
குழுமியிருந்த பெண்களைக் கடந்து இரண்டு இளைஞர்கள் பள்ளிக்கூடத்தின் பத்தாம் வகுப்பு அறைக்குள் நுழைந்தார்கள். ஒருவன் சிகப்பன். ஒல்லியான உடல்வாகு. இன்னொருவன் கருப்பட்டி நிறத்தில் குள்ளமாக நடுத்தர உடல்கட்டோடு இருந்தான். அங்கு நின்றுகொண்டிருந்த பெண்களின் கவனம் ஒரு நொடி அந்த இளைஞர்களின்மீது பட்டுத் திரும்பி மீண்டது. காந்தியின் நூற்பு ராட்டினத்தை இயக்குவதைப் பற்றியான வகுப்பை நடத்த வருகிறவர்களை தங்களின் மனதிற்குள்ளாக ஐம்பது வயதிற்கும் மேலான கற்பனை சித்திரங்களாக வரைந்திருந்தது சிதைந்து போனதின் ஆச்சரியம் அவர்களின் முகங்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. சிகப்பானவன் நடிகன் முத்துராமனின் சாயலில் இருப்பதாக அவர்களுக்குள்ளாக பேசிக்கொண்டார்கள்.
சற்று நேரத்திற்குப் பிறகு வகுப்பறைக்குள் நுழைந்தபோது டெஸ்க் பெஞ்ச் அமைப்புகள் மொத்தமாக மாற்றப்பட்டு தனித்தனியான மேஜைகளும் முக்காலிகளும் வரிசையில் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு மேஜையின்மீதும் சிறிய சர்க்கா ராட்டினம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இரு வாலிபர்களும் கரும்பலகையின் முன்னால் நின்றுகொண்டிருக்க, நடேசன் உற்சாகம் ததும்பிய கண்களோடு உடன் நின்றுகொண்டிருந்தார். கரும்பலகையின் முன்னால் நடுமத்தியமாக போடப்பட்டிருந்த மேஜையில் தனியாக ஒரு சர்க்கா வைக்கப்பட்டிருந்தது.
நேற்று வரையிலும் இப்படியான வகுப்பு நடக்கப் போவதற்கான எந்த சலனங்களும் ஊருக்குள் இல்லை. காலை எட்டு மணிக்கு மேல் காட்டுத் தீயைப் போல பரவ ஆரம்பித்து பத்து மணிக்குள் தங்களை இங்கு கொண்டு நிறுத்தியிருக்கும் ஒரு வகுப்பு இத்தனை கச்சிதமாக ஏற்பாடாகியிருக்கிறது என்பது அவர்களை அதிசயிக்க வைத்தது. ஆளுக்கொரு இடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்துக் கொண்டார்கள்.
“இந்த ரெண்டு தம்பிகளும்தான்.. சர்க்கா எப்படி உபயோகப்படுத்தணும்னு சொல்லித்தர வந்திருக்காங்க. கெட்டிக்காரப் பயலுக. நேர்த்தியா சொல்லித் தருவாங்க. எந்த சந்தேகம்னாலும் கேட்டு தெரிஞ்சுகிடுங்க”
நடேசன் மாமா கருப்பட்டியின் தோளில் லேசாகத் தட்டிக் கொடுத்துவிட்டு இரண்டடி நகர்ந்து நின்றுகொண்டார்.
வகுப்பு ஆரம்பமானபோதும் மாமா அங்கிருந்து நகரவில்லை. ராட்டினத்தை எப்படி கையாளுவது என்பதை கருப்பட்டி நான்கைந்து படிநிலைகளாக பிரித்து செயல்முறை விளக்கம் அளித்துக் கொண்டிருந்தான். முத்துராமன் வெறும் எடுபிடியாகவே நின்றுகொண்டிருந்தபோதும் பெரும்பாலான பெண்களுக்கு அவனையே பிடித்துப் போயிருந்தது.
பேச்சி, கருப்பட்டியின் பேச்சிலும் ராட்டினத்தைச் சுற்றும் அவனது கையின் லாகவத்திலும் லயித்துப் போய் பார்த்துக்கொண்டிருந்தாள். எல்லாவற்றிற்கும் நடப்பு சாட்சியாக நின்றுக்கொண்டிருந்த நடேசன் மாமாவின் முகத்தில் பூரிப்பு நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
“நாலு மணி நேரம்.. இன்னா புடின்னு ஓடிட்டுலா”
மூன்று நாள் வகுப்பின் முதல்நாள் சட்டென்று முடிந்து போய்விட்டதாக சிலர் அவர்களுக்குள்ளாக அலுத்துக்கொண்டார்கள்.
சிலர் அதனைப் பற்றிய எந்தக் கவலைகளுமின்றி இரண்டு இளைஞர்களையும் பற்றி ஆர்வத்தோடு பேசிக்கொண்டார்கள். இருவரின் நிஜப்பெயர்களும் தெரியாதபோதிலும் முத்துராமன், கருப்பட்டி என்கிற குறிப்புப் பெயர்களே அவர்களின் பேச்சுக்கு போதுமானதாக இருந்தன.
வள்ளி, முத்துராமனின் பார்வை, நடை, முடியின் முன் சிலுப்பல் என்று அடுக்கிக்கொண்டே போனாள். பேச்சியின் காதுகளில் எதுவும் நுழைந்து கொள்ளவில்லை. அவள் கருப்பட்டியின் செய்கைகளை மனதிற்குள் சுற்றி வந்தபடியிருந்தாள்.
இரண்டாம்நாள் வகுப்பில் அவர்கள் கூடுதல் ஆர்வத்தோடு குழுமியிருந்தார்கள். நடேசன் மாமா கதர் வேட்டியும் சட்டையுமாக, நெற்றி நிறைய தீட்டியிருந்த விபூதியோடு இருந்தார்.
பேச்சி. கருப்பட்டியுடன் பேசும் வாய்ப்பிற்காக சில சந்தேகங்களை வலிந்து இழுத்துக்கொண்டாள். நான்குமணி நேரத்தில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக அவன் அவளின் அருகிலேயே சந்தேகங்களை நிவர்த்தி செய்தபடி நின்றுகொண்டிருந்தான். மற்றவர்களுக்கு அதைப் பற்றிய எந்தக் கவலைகளுமில்லை. அவர்கள் முத்துராமனுக்காக அடித்துக்கொள்வதிலேயே குறியாக இருந்தார்கள். நடேசன் மாமா இடைப்பட்ட நேரத்தில் எங்கோ சென்று வந்தது அவர்களுக்கு இன்னும் வசதியாக இருந்தது. அவர் மீண்டும் வந்து நின்றுகொண்டபோது அனைவரும் உண்மையான சிரத்தையோடு சர்க்கா கற்றுக்கொள்பவர்களாக தங்களை மாற்றிக் கொண்டிருந்தார்கள்.
இரண்டாம்நாள் வகுப்பு முடிந்து கலைந்தபோது முத்துராமனின் நிஜப்பெயரைத் தெரிந்துக்கொண்டுவிடும் ஆர்வம் ஒருசிலரின் மனதில் எழும்பியிருந்தது. நடேசன் மாமாவின் தம்பியின் மகள் சுந்தரியும் அவர்களில் ஒருத்தியாக இருந்ததால் அவளிடமிருந்து ஏதேனும் திரட்டிக்கொள்ள முடிகிறதா என்று அவர்கள் முயற்சித்துப் பார்த்தார்கள். வந்திருக்கும் இருவரும் பக்கத்து ஊர் பையன்கள் என்பதைத் தாண்டி வேறெந்த தகவல்களும் அவளுக்கும் தெரிந்திருக்கவில்லை.
மூன்றாம்நாள் வகுப்பில் சர்க்காவிலிருந்து நூலினை நூர்த்து எடுக்கும் நேர்த்தி பேச்சிக்கு கச்சிதமாகக் கூடி வந்திருந்தது.
“ரொம்பவும் நேர்த்தியா பண்றீங்க பேச்சீ”
கருப்பட்டி லேசான புன்னகையோடு அடுத்த மேஜைக்கு நகர்ந்து போனான்.
பேச்சியின் மனம் பூரித்துப் போனது.
அன்றைய நான்குமணி நேரம் மிகவும் வேகமாக ஓடி முடிந்துவிட்ட கவலையில் அவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
பேச்சிக்குள் பெரும் வருத்தம் குடிக்கொண்டிருந்தது. இனி கருப்பட்டியை எங்கு சென்று பார்ப்பது. பக்கத்து ஊர்க்காரன் என்கிற தகவல் தெரியும். அதற்காகப் போய் பார்த்துவிடவா முடியும். மூன்று வீட்டு தொலைவிலிருக்கும் வள்ளியின் வீட்டிற்கு ஒருமணி நேரம் போய் உட்கார்ந்து பேசிவிட்டு வரலாமென்று ஆசைப்பட்டாலே அம்மாவிடம் நாக்கு வரளப் பேசி சம்மதம் வாங்க வேண்டும். இந்த லட்சணத்தில் பக்கத்து ஊர்க்காரனை பார்த்துவிட வேண்டுமென்ற நினைப்பெல்லாம் கனவிற்கும் அப்பாற்பட்டது. குறைந்தபட்சம் அவனது பெயராவது தெரிந்துக் கொண்டிருந்தால் கொஞ்சம் சமாதானமாக இருந்திருக்கும்.
“பழனி கொஞ்சம் இங்கன வாப்பா”
மரத்தடியில் நின்றிருந்த நடேசன் மாமா வகுப்பிற்குள் பார்த்தபடி உரத்த குரலில் கூப்பிட்டார்.
பேச்சியின் முகம் மலர்ந்தது. முத்துராமனின் பெயரைத் தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தோடு இருந்தவர்களும் உஷாரானார்கள். சில கண்கள் நேரடியாகவும் சில மறைமுகமாகவும் நோட்டம்விட ஆரம்பித்திருந்தன. அவர்களைக் கடந்து மரத்தடியில் நின்றுக்கொண்டிருந்த நடேசன் மாமாவை நோக்கி நடந்து போனது முத்துராமன்.
சுற்று 2 – 1965
வலிப்பில் இழுத்துக்கொண்டிருந்த தனது கணவனை மடியில் கிடத்தியபடி அமர்ந்திருந்த பேச்சியின் மனதில் பெரிதாக எந்த பதைபதைப்பும் இல்லை. அவனை மடியில் கிடத்தயிருந்தை வெறும் சம்பிரதாயத்திற்கு உட்பட்டதாகவே அவள் நினைத்தாள். ஒரு பெண்ணுக்கு விருப்பமில்லாத விஷயங்களைக் கூட ஊரின் ‘என்ன பொம்பளை அவ’ என்கிற வார்த்தை அசால்டாக செய்யவைத்துப் பார்த்துவிடும். பெண்ணாய் பிறந்தவள் தனது வாழ்நாள் முழுவதும்.. தான் பெண்தான் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது என்பதை நினைத்து பேச்சி பெருமூச்செறிந்தாள்.
பேச்சிக்கும் முத்துவிற்கும் வரன் பேசி முடித்துவிட்டு கல்யாணத் தேதியை அம்மா அவளிடம் சொன்னது வெறும் அறிவிப்பு மட்டுமே. அது பேச்சியின் விருப்பு வெறுப்புகளை அறிந்துகொள்வதற்கான முயற்சி அல்ல என்பதனை நன்கு அறிந்திருந்தாள். சர்க்கா வகுப்பு முடிந்திருந்த மூன்றாம் மாதத்தில் கல்யாணம் முடிந்திருந்த வள்ளிக்கு ஆறுமாத குழந்தையும் இருக்கிறது என்பதும் பேச்சியின் திருமணத்தைப் பற்றிய அம்மாவின் கூடுதல் பதட்டத்திற்குக் காரணமாக இருந்தது. பேச்சியின் மனதிற்குள் சுழன்று கொண்டிருக்கும் அம்பர் சர்க்காவைப் பற்றி யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள முடியாதென்கிற உண்மைக்காகவோ, யார் யாரோ நிர்ணயித்த கல்யாணம் நடக்க போகிறதென்பதற்காகவோ மனதிற்குள் சுற்றிக் கொண்டிருக்கும் அம்பர் சர்க்காவை நிறுத்தி வைக்கவேண்டுமென்ற எந்த அவசியமுமில்லை என்று அவளுக்குத் தோன்றியது.
முத்துவுடன் வாழ்ந்திருந்த ஒருவருட வாழ்க்கையில் எதுவும் தனக்கு பெரிதாக வாய்த்துவிடவில்லை என்கிற வருத்தமெல்லாம் அவளுக்கு ஒருநாளும் இருந்ததில்லை. அவள் விரும்பிய மனம் அவனில்லை என்றிருக்கிறபோது எதிர்பார்ப்புகள் நியாயமற்றது என்றே நினைத்தாள். அவளைப் பொருத்தவரை நகர்ந்துக்கொண்டிருந்த வாழ்க்கை வெறும் சம்பிரதாயம். வேறு எந்த மாயவலைகளையும் அதன்மீது அவள் பின்னிக் கொண்டிருக்கவில்லை.
“காடு கரை நெறைய உள்ள இடம். ஒத்தப்பையன். பதினஞ்சு வருஷம் தவமிருந்து பொறந்த எளவரசி நீன்னா.. அங்க அவனும் அவன் வீட்டில பத்து வருஷத்துக்கு பொறகு பிறந்தவந்தான். அவன்தான் அந்த வீட்டு மகராசன். நீ போனா மகாராணியாட்டம் வாழலாம். நல்ல ஜோடி பொருத்தம்டீ”
கல்யாணம் முடிவாகியிருந்ததை விசாரித்துப் போவதற்காக வந்திருந்த அத்தை, வீட்டு முற்றத்தில் அமர்ந்தபடி இப்படி சொல்லிக் கொண்டிருந்தாள். அவளைப் பொறுத்தவரையிலான ஜோடி பொருத்தம் என்பது அவ்வளவுதான்.
“சொத்து வீடு வாசல்ன்னு கிடந்தும் இந்தப்பய இப்படி உசுரத்தவனாவே எந்நேரமும் திரியுறானேனு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிட்டா எல்லாமும் சரியாகியிரும்ன்னு நினைச்சு உன்னையும் உள்ள இழுத்துவிட்டுட்டோம். நாங்க நினைச்சபடி நடக்காம இவன் பிறவி இவ்வளவுதான்னு ஆகிப்போச்சு. இனிமே நீதான் எல்லாத்தையும் கெட்டி காப்பாத்தி அவனையும் பிள்ளப்போல பத்திரமா பார்த்துக்கிடணும்”
பேச்சியின் மாமியார் விசுவிசும்பி பேசிக்கொண்டிருக்க.. பேச்சி எந்த உணர்வுகளுமின்றி வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தாள்.
“கெட்டியாச்சு இனி மாத்தவா முடியும். வாங்கிட்டு வந்த வரம் அம்புட்டுதான்னு சத்தமில்லாம வாழ்ந்து கடந்துகிட வேண்டியதான். வாழாம நிக்க பொட்டச்சி ஊர் வாய்க்கு பச்சரிசி. நினைப்புல வச்சுக்கோ”
அம்மா இதனைச் சொன்னபோது இருந்த கடுகடுப்போடு ஒப்பிட்டுப் பார்க்கையில் மாமியாரின் பேச்சிலிருந்த கனிவு எவ்வளவோ மேலென்று பேச்சிக்குப் பட்டது.
ஒரு வாரமாகக் காய்ச்சலில் உழன்றுக்கொண்டிருந்த முத்துவை பேச்சி எந்தக் குறையுமில்லாமல் பார்த்துக்கொண்டாள். அவளைப் பொறுத்தவரையில் எல்லாமும் ஊரும் உறவும் சொல்லும் சம்பிரதாயத்தில் சேர்த்தியானதாக மட்டுமே இருந்தது. இப்போது வலிப்பில் ஒருபக்கமாக இழுத்துக்கொண்டிருக்கும் அவனது தலையை அணைப்பாய் பொத்தி தனது மடியில் அவளே கிடத்திக்கொண்டது வரையிலும் அப்படித்தான். அவனுக்கு வரும் காய்ச்சல்கள் இப்படி வலிப்பில் முடிபவை என்பதைப் பற்றி மாமியார் ஏற்கனவே எச்சரித்திருந்தாள். முத்துவிற்கு காய்ச்சல் கொள்வது அரிது. ஆனால், முடியும் இடம் எப்போதும் வலிப்பாகவே இருந்திருக்கிறது என்றிருந்தாள். வலிப்பில் இழுத்துக்கொண்டிருந்த அவனது கைகள் அவன் உடுத்தியிருந்த இடுப்பு வேட்டியின் பிரிந்து நின்ற நூலினை இறுக்கமாக பற்றிக்கொண்டு இழுத்ததில் நூல் அறுந்து அவனுடைய இடது ஆள்காட்டி விரலின் நகத்தோடு சிக்கியிருந்தது.
வலிப்பின் தீவிரம் இந்தமுறை அவனைப் பிணமாக திருப்பிக் கொடுக்கும் என்பதனை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
இறுதிச் சடங்கிற்கு வந்திருந்தவர்கள் தனது ஆற்றாமைகளை ஒப்பாரிகளாக தீர்த்துவிட்டுப் போயிருந்தார்கள். பெரும்பாலான ஆற்றாமைகள் ஒரே வருடத்தில் கணவனை இழந்து நிற்கும் பேச்சியின் மீதானதாக இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் அவளுக்கான வெறும் ஆற்றாமைகள் கொட்டிக் கிடந்ததே தவிர தீர்வுகளைத் துளியேனும் காணமுடியவில்லை. ஆணின் துணையிழப்பின் பதினாறாவது நாள் காரியத்திற்குள்ளாகவே அவனது மிச்ச வாழ்க்கையின் கரிசனத்தின்மீது எடுக்கப்படும் எந்தத் தீர்வுகளும் பெண்ணின் துணையிழப்பிற்கு நிகழ்த்தப்படுவதில்லை. அவளது இழப்பு விதியின் பழி.
பேச்சி தன்னை நினைத்தோ தனது நிலையை நினைத்தோ சிறிதேனும் நொந்துக்கொள்ளவில்லை. ‘விதி’ என்ற இரண்டெழுத்தின் விநோத விளையாட்டை நினைத்து மனதிற்குள் ஏளனமாகச் சிரித்துக்கொண்டாள்.
முத்துவினுடைய சொத்தின் ஒரு பகுதியை பேச்சியின் பெயருக்கு எழுதி வைத்து அவளைப் பிறந்த வீட்டோடு ஒப்படைப்பதென்று தீர்மானமாகியிருந்தது. அவளைப் பெற்றவர்களும் அதற்கு மனப்பூர்வமாக சம்மதித்திருந்தார்கள்.
பதினெட்டாவது வயதில் வாழ்க்கையை இழந்து நிற்பது பெரும்வலி என்றபோதிலும் தனது மிச்ச வாழ்க்கையை விதியை நொந்துகொண்டு நகர்த்துவது மட்டுமே மகளுக்கான ஒரே சாத்தியமான தீர்வு என்பதை அவர்கள் முழுவதுமாக நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கையை அப்படியே காப்பாற்றுவது மட்டுமே தனது வாழ்க்கையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அடுத்த சம்பிரதாயம் என்கிற முடிவை பேச்சியும் எட்டியிருந்தாள்.
சுற்று 3 – 2008
அம்மா அப்பா இருவரையும் இழந்துவிட்ட பேச்சிக்கு அதற்குமேல் ஊரில் இருப்புக் கொள்ளவில்லை. அறுபத்தியொரு வயதில் தனியாளாக நின்றுக்கொண்டிருக்கும் பெண்ணொருத்திக்கு கட்டை ஏறப்போகும் நாளுக்கான எதிர்பார்ப்பைத் தவிர வேறென்ன வேண்டிக் கிடக்கிறது என்பதாகச் சுற்றியுள்ளவர்கள் நினைக்கலாம். ஆனால், தனக்குள் ஏதோ தேடலும் தேவையும் மிச்சமிருப்பதாகவே பேச்சி உணர்ந்தாள்.
முன்னதாக அம்மா தவறிய பிறகு, பன்னிரண்டு வருடமாக பக்கவாத படுக்கையில் கிடந்த அப்பாவைக் கவனித்துக்கொள்வதே வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாக நகர்ந்திருந்தது. இப்போது எவருமில்லையென்றாகி போன பிறகு பெரும் வெறுமை அவளைச் சூழ்ந்து கொண்டிருந்தது. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் நகர்த்திக்கொள்ள மனப்பூர்வமாகவோ குறைந்தபட்சம் சம்பிரதாயமாகவோ ஒரு குறிக்கோள் தேவையாகத்தானே இருக்கிறது. வெறும் மரணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எப்படி ஓர் உயிர் நகர்ந்துவிட முடியும்?
தனக்கான தேவையையும் தேடலையும் புரிந்துகொள்ள பேச்சி தனக்குள்ளே இன்னும் இன்னுமென ஊடுருவி போய்க்கொண்டிருந்தாள். எதுவும் புலப்படவில்லை. இத்தனைக் காலங்கள் மரத்துப்போன பிறகு தனக்குள் துளிர்விட்டிருக்கும் இந்தத் தேடல் வெறும் பைத்தியக்காரத்தனமோ என்றும்கூடத் தோன்றியது. ஆனாலும் அதிலிருந்து வெளிவர முடியவில்லை.
தொலைக்காட்சி பெட்டியில் சேனல்களை மாற்றியபடி அமர்ந்திருந்தாள். ஐடி நிறுவனங்களின் பரவல் பற்றிய சிறு செய்திக் குறிப்பு ஓடிக்கொண்டிருந்தது. அனைத்தும் பெரும் நிறுவனங்கள். தமிழ்நாட்டில் அதற்கான நகரமாகத் தேர்வாகியிருப்பது சென்னை என்றும், வேற்று ஊர்க்காரர்கள் அந்த வேலைக்காக சென்னையில் சென்று தஞ்சமடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வரையிலும் அவளுக்கு விளங்கியது. கூடவே தானும் ஏன் சென்னைக்குக் கிளம்பிச் செல்லக்கூடாதென்கிற கேள்வியும் எழுந்தது. அக்கேள்வியின் அபத்தத்தை நினைத்து தன்னை தானே வியந்து பார்த்தாள். அடுத்த நொடி, அதிலென்ன தவறிருக்கிறது என்பதாக மனம் இன்னொரு கேள்வியை எழுப்பியது. புத்தியை எப்படியெல்லாமோ அடக்கிப் பார்த்தும் மனம் கேட்கவில்லை.
மனதிற்கு இத்தனைப் பிடிவாதமென்றான பின்பு.. செய்து பார்ப்பதென முடிவெடுத்தாள். தனது பெயரில் உள்ள சொத்துக்கள் எப்போது தங்களுக்கான பங்காக மாறுமென்கிற எதிர்பார்ப்போடு காத்துக் கிடக்கும் சொந்தங்களிடம் சொல்லிக்கொள்ள எந்த அவசியமுமில்லையென்று நினைத்தவள், யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் நான்கைந்து நூல் புடவைகளோடும் கையில் கொஞ்சம் பணத்தோடும் ரயிலேறி வந்திருந்தாள்.
கடந்து போகிற முகங்களைப் பார்த்தபடி.. இறக்கிவிடப்பட்டிருந்த ரயில் பிளாட்பாரத்தின் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தாள். அடுத்து எங்கு போவது என்ன செய்வது என்றான கேள்விகள் உள்ளுக்குள் வேகமாக வரிசைக்கட்டிக் கொண்டிருந்தன. தூரத்தில் நடந்து வந்துக்கொண்டிருந்த முகத்தின் மங்கிப்போன பரிச்சயம் அவளை மெல்ல ஆட்கொண்டது. இவள் அதன் பரிச்சயத்தில் ஊடுருவிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தபோதே அந்த முகத்தின் பார்வையும் சட்டென பேச்சியின் பக்கம் திரும்பியது. பரிச்சய முகத்தின் நடை இன்னும் நான்கடி முன்னகர்ந்தபோது அவளுக்குள்ளிருந்த மங்கலான நினைவுகள் பளிச்சென்று தம்மை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
வரும் முகத்திற்கு தன்னை அடையாளம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை அவள் தீவிரமாக நம்பிக்கொண்டிருந்ததை உடைக்கும்விதமாக அம்முகம் கடந்து போகாமல் அவளின் முன்னால் வந்து நின்றுகொண்டது.
‘கருப்பட்டி’ வயதின் சுருக்கங்கள் பெரிதும் ஒட்டிக்கொண்டிராமல் கதர் வேட்டிச்சட்டையில் மிடுக்காக எதிரில் நின்றுகொண்டிருந்தான். அவன் அணிந்திருந்தது வெறும் வெளி மிடுக்கு. உள்ளுக்குள் சகலமும் சரிந்து போயிருந்தது என்பதை.. பேச்சியைப் போல ஊடுருவிப் பார்ப்பவர்களால் மட்டுமே தெரிந்துக்கொள்ள முடியும்.
“பேச்சீ..?”
அவனது முகம் முழுவதும் சந்தேகத்தின் ரேகைகள் ஓடத் தொடங்கியிருந்தன.
அவள் ஆமாம் என்பதாக மெல்ல தலையசைத்தாள்.
“சங்கரன்.. உங்க ஊருக்கு ஒரு தடவை சர்க்கா சொல்லித்தர வந்திருந்தேன்.. உங்களுக்கு ஞாபகம் இருக்கா..?”
அவனுக்கு தனது பெயர் இன்னமும் எப்படி நினைப்பில் இருக்கிறது என்கிற ஆச்சரியத்திலிருந்து அவள் மீண்டு வருவதற்கு முன்பாகவே அவன் அவளது நினைவுகளை மீட்டுவிடும் முயற்சியில் இறங்கியிருந்தான்.
“சங்கரன்..”
தனக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டாள். எத்தனையோ வருடங்களுக்கு முன்னதாகவே தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டிருந்த பெயர்.
சுற்று 4 – 2015
காலையின் அன்றாட பரபரப்பிலிருந்து விலகி சங்கரனின் அறைக்கு முன்னால் சில பெண்கள் கூடி நின்றுகொண்டிருந்தார்கள்.
ரயில் நிலையத்திலிருந்து சங்கரன், பேச்சியை கையோடு தனது வீட்டிற்கே அழைத்தபோது பேச்சி மறுத்தாள். அவன் விடாப்பிடியாகப் பேசி அவளைத் தன்னோடு அழைத்துப் போய்விட்டான். அவனது வீட்டில் உடன் யாரும் தங்கியிருக்கவில்லை. இரண்டு ஆண் பிள்ளைகளும் மனைவியும் வேறு பகுதியில் தனியாக வசிப்பதாகச் சொன்னான்.
தனது குடும்பத்தைப் பற்றிய எந்த புகார்களையும் சங்கரன் முன்வைக்கவில்லை என்றபோதிலும் அவர்களின் பணத்தேவையை நிறைவேற்றி வைக்க மட்டுமே அவனை அவர்களின் வாழ்வின் சிறு எல்லை வரை அனுமதித்திருக்கிறார்கள் என்பதை நாட்கள் செல்லும்போது பேச்சியால் தெளிவாகப் புரிந்துக்கொள்ள முடிந்தது.
சங்கரனும் பேச்சியும் தங்களுக்காக நகர்த்தத் தொடங்கியிருந்த வாழ்க்கையில் அவர்களுக்கான கூடுதல் பிடிமானமாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதி ஒன்றினை நடத்த ஆரம்பித்திருந்தார்கள். சமையலுக்கென்று தனியாக இரண்டு பெண்களை வேலைக்கு அமர்த்தியிருந்தார்கள். மேற்பார்வையை சங்கரனும் பேச்சியும் இணைந்து பார்த்துக்கொண்டார்கள். விடுதியின் கீழ்த்தளத்தில் அவர்களிருவருக்கும் தனித்தனி அறைகள் இருந்தன. அங்கேயே தங்கிக்கொண்டார்கள்.
சுற்றுவட்டாரப் பகுதியில் வசதியிலும் உணவிலும் எந்தக் குறையுமில்லாத விடுதி என்கிற பெயரை அவர்களின் விடுதி மூன்று ஆண்டுகளின் செயல்பாட்டில் ஸ்திரமாக அடைந்திருந்தது.
காலையில் சமையலறையில் உணவு தயாரிப்பையும் சாப்பிட வரும் பிள்ளைகளுக்கு சரியான உணவு பரிமாறப்படுகிறதா என்பதையும் பேச்சி மேற்பார்வை பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், சங்கரன் தனது அறைக்கு வெளியே கிடக்கும் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து அலுவலகத்திற்குக் கிளம்பிப் போகும் பெண்களை வேடிக்கைப் பார்த்தபடியே தினசரியை வாசித்துக் கொண்டிருப்பார்.
எத்தனை அவசரத்தில் இறங்கி ஓடினாலும் லேசான புன்னகையை அவருக்குக் கடத்திவிட்டு போகிறவர்களாகவே பெரும்பாலான பெண்கள் இருந்தார்கள். சங்கரனும் பேச்சியும் அங்கு தங்கியிருந்தவர்களின்மீது எடுத்துக்கொண்டிருந்த அக்கறைக்கான கைமாற்று புன்னகை என்றே அதனைச் சொல்ல வேண்டும்.
இப்படியாக நகர்ந்துக்கொண்டிருந்த அன்றாடம் சங்கரனின் மரணத்தோடு ஒருநாள் விடியும் என்பதனை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. உறக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்திருந்தது. சமையல் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பெண்கள் பேச்சியின் கட்டளைப்படி அன்றைக்கான சமையலை முடித்திருந்தார்கள். சங்கரனின் இழப்பு வேலைக்குப் போகும் எந்தப் பெண்களுக்கும் இடையூறாக அமைந்து விடக்கூடாதென்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.
“தீன்னு சொன்னா நாக்கு வெந்தா போயிரும். உன்ன நான் முந்திகிடுற பட்சத்தில் நீயே எல்லாத்தையும் பாத்து முடிச்சிடு. யாருக்கும் சொல்லி அனுப்பணும்ன்னு இல்ல. அவங்களுக்கு அது தேவையாவும் இருக்காது. அவங்களுக்கு தேவையானதெல்லாம் செஞ்சு முடிச்சாச்சு”
விடுதியைத் தவிர்த்து தனது பெயரில் இருந்த மற்ற சொத்துக்களை இரு மகன்களுக்கும் மனைவிக்கும் மூன்று பகுதிகளாக எழுதி வைத்துவிட்டு வந்திருந்த இரவின் பேச்சில் சங்கரன் சொன்னதை பேச்சி தனக்குள்ளே சுழற்றிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
கண் முன்னே படுக்கையில் நிச்சலனமாய் கிடக்கும் சங்கரனின் கதர் சட்டையிலிருந்து ஒற்றை நூலை உருவி தனது இடது ஆள்காட்டி விரலில் சுற்றியபடியே நாற்காலியில் இருந்து எழுந்து கொண்டாள்.
********
ஆற்றொழுக்காக ஆரம்பிக்கிறது சிறுகதை. நல்ல எழுத்துவளம். வாழ்த்துகள்!