
ஜுலை 1, நள்ளிரவு.
நன்கு தூங்கிக்கொண்டிருந்த நான் சட்டென்று கண் விழித்தேன். பேருந்து ஒரு பெட்ரோல் பங்க்கில் நின்றுகொண்டிருந்தது. ஜன்னல் வழியாக சிலுசிலுவென்று வீசிய காற்றிலிருந்து, பெங்களுருக்கு அருகில் எங்கோ இருக்கிறோம் என்று தோன்றியது. என் தோள் மீது தலை சாய்த்துத் தூங்கிக்கொண்டிருந்த என் மனைவியின் தலையை நகர்த்திவிட்டு, எழுந்து சுற்றிலும் பார்த்தேன். அனைவரும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
நாங்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்தில், எனது அலுவலக நண்பர்கள் பலரும் குடும்பத்துடன், 3 நாள் மைசூர் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருக்கிறோம். 3 நாள் பயண அசதியில் ஒருவர் கூட எழவில்லை. நான் மட்டும் எழுந்து பஸ்ஸிலிருந்து இறங்கினேன்.
மொபைலை எடுத்து மணி பார்த்தேன். நள்ளிரவு 2.30. டிரைவரிடம் சென்று, “எங்கிருக்கிறோம்?” என்றேன். “ஓசூர்… பெட்ரோல் போடணும். ரொம்ப நேரம் தேடி இப்பத்தான் பெட்ரோல் பங்க கண்டுபிடிச்சேன்” என்றபடி எங்கள் பேருந்துக்கு முன்பு டீசல் போட்டுக்கொண்டிருந்த லாரியைப் பார்த்தார்.
அப்போது பஸ்சிலிருந்து எனது நண்பன் சிவகுமார் இறங்கி வந்தான். என்னருகில் வந்தவன், “என்னா ஊரு?” என்றான் கண்ணாடியைத் துடைத்து அணிந்தபடி.
“ஓசூர்…”
இருவரும் நடந்து சாலைக்கு வந்தோம். அவ்வப்போது ‘சர் சர்‘ரென்று விரைந்த வாகனங்களைப் பார்த்தோம்.
சிவகுமார், “எல்லாரும் அடிச்சுப் போட்ட மாதிரி தூங்குறாங்க…” என்றான்.
“மூணு நாள் அலைச்சல்லடா…” என்றேன்.
சூப்பர் ட்ரிப்புப்பா. எல்லாரும் நல்லா எஞ்சாய் பண்ணாங்க. மைசூர், அருமையான நல்ல சுத்தமான ஊரு. நல்ல குளிர்ச்சி. பைக்ல பின்னாடி உக்காந்துட்டு போறவங்க கூட ஹெல்மெட் போட்டுருக்காங்க…”
“ஆமாம்…” என்ற நான் 3 நாட்களாக மனதில் ஓடிக்கொண்டிருந்த விஷயத்தை சிவகுமாரிடம் சொல்ல ஆரம்பித்தேன்.
“என் லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம் நான் வந்த டூரு மைசூர், பெங்களுர்தான். அப்ப நான் அரியலூர்ல எட்டாவது படிச்சுட்டிருந்தேன். அப்ப அந்த ஸ்கூல் டூருக்கு எம்பது ரூபாய் வாங்கினாங்க.” என்றவுடன் சிவகுமார் மெலிதாகச் சிரித்தான்.
“எங்கப்பா என்னை அதுவரைக்கும் எந்த டூருக்கும் அனுப்பினதில்ல. டூர்ல பையனுக்கு எதாச்சும் ஆச்சுன்னா என்ன பண்றதுன்னு பயம். ஆனா, இந்த டூருக்கு போயே ஆகணும்ன்னு நான் வீட்டுல பயங்கரமா அடம் பிடிச்சு அழுதேன். அப்ப எங்க லைன் வீட்ல குடியிருந்த, பட்டாணிக்காரம்மாவோட ரெண்டு பொம்பளை பிள்ளைங்களும் அதே டூருக்கு போறாங்க. பட்டாணிக்காரம்மா எங்க ஹெச்எம்கிட்ட பேசி, அவங்களும் பிள்ளைங்களோட மைசூர் டூர் வர்றதா இருந்தாங்க. அவங்க எங்கப்பாகிட்ட, “நானும் டூர் போறேன். நான் உங்க பையனப் பாத்துக்குறேன்”னு சொன்ன பிறகுதான் அரைகுறை மனசோட அப்பா அனுப்பினார். கைச்செலவுக்கு பத்து ரூபா கொடுத்தனுப்பினார்”
“பத்து ரூபாயா?”
“அப்ப பத்து ரூபாய் பெரிய அமௌன்ட்டுப்பா..அவசர செலவுக்குன்னு கொடுத்துவிட்டாரு. ஆனா, அதுல நான் என் ரெண்டு தம்பிங்களுக்கும் பைனாகுலர், கூலிங் க்ளாஸ்ன்னு நிறைய வாங்கிட்டேன். அதுல குழந்தைங்க யூஸ் பண்ற மாதிரி சின்னதா ஒரு பச்சைக் கலர் பூ போட்ட குடை. அப்ப அது ரெண்டு ரூபாய். என் சின்ன தம்பி முரளிக்கு அப்ப ஆறு வயசுதான். நான் ஊருக்கு வந்து குடையக் காமிச்சவுடனே அவனுக்கு அவ்ளோ சந்தோஷம். நல்ல சிவப்பா, கொழுகொழுன்னு அழகா இருப்பான். அந்தக் குடைய பிடிச்சுட்டு அவன் நடக்கிறப்ப அவ்ளோ அழகா இருக்கும். ரொம்ப வருஷம் அந்தக் குடைய எங்கம்மா பத்திரமா வச்சுருந்தாங்க….” என்றபோது சட்டென்று என் மனத்திற்குள் ஒரு துக்கம் கவிய ஆரம்பித்தது. அந்த இரவின் அமைதியில் சட்டென்று என் துக்கம் பன்மடங்காகப் பெருகியது.
தொடர்ந்து நான், “எங்கம்மா ஒவ்வொரு பொருளையும் அவ்வளவு பத்திரமா பாதுகாத்து வைப்பாங்க…” என்று சொல்லிக்கொண்டிருந்தபோதே சட்டென்று என்னை அறியாமலே, என் குரல் உடைந்து, துக்கம் தொண்டையை அடைத்தது.
ஐந்து மாதங்களுக்கு முன்புதான் என் அம்மா இறந்தார். நான்கு வருடங்களுக்கு முன்பு என் அப்பா இறந்தார். என் அம்மாவின் காரியத்தின் போது என் தாய்மாமனான ராமு மாமா, “அம்மாப்பா ரெண்டு பேருமே இல்லடா. நீதான் எல்லாத்தையும் பாத்துக்கணும்…” என்றார். அன்றிலிருந்து, “அம்மாப்பா ரெண்டு பேருமே இல்லடா…” என்று என் மாமா சொன்ன வார்த்தைகள், என்னை விடாது நிழல் போல் துரத்திக்கொண்டேயிருக்கிறது. அன்று அதை அவர் சொன்ன கணமே உடைந்து போய் அழுதேன். பின்பு எப்போதெல்லாம் அது நினைவிற்கு வருகிறதோ மனசு பாரமாகிவிடும். ஒரு மாதத்திற்கு முன்பு கூட, டாய்லெட்டில் அது ஞாபகம் வர… சத்தமின்றி அழுதுவிட்டு வந்தேன். இப்போதும் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வர… எனக்கு கண் கலங்கிவிட்டது. இதை சிவகுமார் கவனித்தானா என்று தெரியவில்லை. ஆனால், அப்போது என் தோளில் கைவைத்தான். நான் வெடித்து அழத் தயாரானபோது டிரைவர், “சார்… பெட்ரோல் போட்டாச்சு… வாங்க…” என்று என் துக்கத்தை சட்டென்று உடைத்தார்.
நான் மௌனமாக பஸ்சில் ஏறினேன். அனைவரும் ஒரு சிறிய சலனம் கூட இல்லாமல் உறங்கிக்கொண்டிருந்தார்கள். நான் எனது மனைவியின் பக்கத்தில் அமர்ந்தேன். பஸ் புறப்பட்டு சாலைக்கு வர…. காற்று படபடவென்று வீசியது. பேருந்திற்குள் எரிந்த நீல விளக்கின் வெளிச்சத்தில் மனம் அம்மாப்பாவையே சுற்றி சுற்றி வந்தது.
அழும் என் தம்பியை உயர்த்திப் பிடித்தபடி, “ஏன் பிறந்தாய் மகனே…. ஏன் பிறந்தாயோ?” என்ற சோகமான பாடலை சிரிப்புடன் பாடும் எனது அப்பா நினைவிற்கு வந்தார்.
மனம் மீண்டும் அந்த பழைய மைசூர் சுற்றுலாவிற்குச் சென்றது. அந்த சுற்றுலாவின் மூன்றாம் நாள் இரவு மைசூரிலிருந்து கிளம்பி, மைசூருக்கு வெளியே ஏதோ ஒரு ஹோட்டலில் சாப்பிட நிறுத்தினார்கள். என்னிடம் காசு இல்லை என்பதால் நான் சாப்பிடப் போகாமல் இருந்தேன். பட்டாணிக்காரம்மா, “சுரேந்திரா… நீ சாப்பிட வரல?” என்றார்.
“இல்ல… எனக்கு பசிக்கல…”
“பொய் சொல்லாதடா… கைல காசு இல்லையா?” என்றதற்கு நான் பதில் சொல்லாமல் சிரித்தேன்.
“ஏன்டா… உங்கப்பாரு கொடுத்த காசுல பெரிய மனுஷன் மாதிரி தம்பிங்களுக்கு விளையாட்டு சாமான் வாங்கினா எப்படிரா காசு இருக்கும்? நீ வா. நான் வாங்கித் தரேன்…”
“இல்ல…. வேண்டாம். எங்கப்பாம்மா திட்டுவாங்க” என்றேன். அடுத்தவரிடம் ஏதும் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்று எனக்கு அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
“சரிடா… நான் வாங்கித் தரல. நான் ஒரு ரூபா கடனா தரேன். சாப்பிடு. ஊருக்கு வந்து காசக் கொடு”
“வேண்டாம். யாருகிட்டயும், எப்பவும் கடன் வாங்கக் கூடாதுன்னு அப்பா சொல்வாங்க…”
“அவசரத்துக்கு வாங்கலாம். தப்பில்ல…” என்ற பட்டாணிக்காரம்மா வலுக்கட்டாயமாக என் கையில் ஒரு ரூபாய் நோட்டைத் திணித்து, ஹோட்டலுக்குள் அழைத்துச் சென்றார்.

மறுநாள் காலை, மணி ஆறு. நான் அரியலூர் வந்து சேர்ந்தபோது வீட்டில் யாருமில்லை. ஏதோ திடீர் மரணம் என்று முந்தைய நாள் தஞ்சாவூர் சென்றிருந்தார்கள். காலை எட்டு மணி போல் வந்துவிடுவோம் என்று பக்கத்து வீட்டில் சாவி கொடுத்துவிட்டு சென்றிருந்தனர். எனக்கு பட்டாணிக்காரம்மாவிடம் ஒரு ரூபாய் கடன் வாங்கியது மனதை உறுத்திக்கொண்டேயிருந்தது. எனவே ஊருக்கு வந்த அடுத்த கணமே அந்தக் காசை கொடுத்துவிடவேண்டும் என்று இருந்தேன். எட்டு மணிக்கு என் அம்மாப்பா வரும் வரை கூட காத்திருக்க மனமில்லை. அதிகம் யோசிக்கவில்லை. என் அம்மா காசு சேர்த்து வைக்கும் மண் உண்டியலை உடைத்து, அதிலிருந்து ஒரு ரூபாய் எடுத்துச் சென்று பட்டாணிக்காரம்மாவிடம் கொடுத்தேன்.
“வீட்டுல யாருமில்லையே? ஏதுடா காசு?” என்றார்.
“உண்டியல உடைச்சுட்டேன்…”
“அப்படி என்னடா அவசரம்?நல்ல பயடா…” என்று சிரிப்புடன் காசை வாங்கிக்கொண்டார்.
வீட்டுக்கு வந்த நான் திக்திக்கென்று உட்கார்ந்திருந்தேன். உண்டியலை உடைத்ததற்காக அம்மாவும், அப்பாவும் திட்டப்போவதை நினைத்தால் பயமாக இருந்தது. எட்டு மணிக்கு மேல் வெளியே அம்மாப்பாவின் குரல் கேட்டது. பட்டாணிக்காரம்மாவிடம்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“சுரேந்திரம்மா… நேத்து ராத்திரி சாப்பிட உங்க பையனுக்கு ஒரு ரூபாய் கொடுத்தேன். காலைல இங்க வந்தவுடனே உண்டியல உடைச்சு காச கொண்டு வந்து கொடுத்துட்டான். என்ன பையனோ போங்க…” என்று சொல்வது காதில் விழ… எனது திகில் அதிகரித்தது.
அம்மாப்பா உள்ளே கோபத்துடன் நுழைந்து அடிக்கப்போகிறார்கள் என்று வேகமாக ஒரு பாடப்புத்தகத்தை பிரித்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன். ஆனால், நான் எதிர்பார்த்ததிற்கு மாறாக அம்மாவும், அப்பாவும் சிரிப்புடன் வீட்டிற்குள் நுழைய… எனக்கு குழப்பமாக இருந்தது. நான் இரண்டு தவறுகள் செய்திருக்கிறேன். ஒன்று… நான் கடன் வாங்கியிருக்கிறேன். இரண்டு… உண்டியலை உடைத்திருக்கிறேன். இவர்கள் ஏன் சிரிப்புடன் வருகிறார்கள்?
“என்னடா… உண்டியல உடைச்சு பட்டாணிக்காரம்மாகிட்ட காசு கொடுத்தியா?” என்றார் என் அம்மா அன்புடன் என் தலையைக் கோதியபடி.
“நாங்கதான் வந்துருவோம்ல்ல?அதுக்குள்ள என்ன அவசரம்?” என்று அப்பா கேட்டதற்கு எனக்கு பதில் தெரியவில்லை.
“பத்து ரூபாய் கொடுத்தேனே… அவ்வளவு காசையும் என்னடா பண்ணுன?”
“தம்பிங்களுக்கு விளையாட்டுச் சாமான் வாங்கிட்டு வந்தேன்…” என்று பேகிலிருந்து பொருட்களை எடுத்துக் காட்ட…. அம்மா பெருமையுடன் அப்பாவிடம், “ஊருக்கு போனா தம்பிங்களுக்கு ஏதும் வாங்கிட்டு வரணும்ன்னு தோணியிருக்கு பாருங்களேன்…” என்றார். என்னை சில வினாடிகள் பிரியமாக பார்த்த என் அப்பா, அப்போது 13 வயதிலிருந்த என்னை சிரமத்துடன் தூக்கி முத்தம் கொடுத்த காலை நினைவுக்கு வர…. நெஞ்சில் பெரிய துக்கம் அலையடித்தது.
ஏன் என்று தெரியவில்லை? என் அப்பா எனது தம்பிகளை விட… என்னை மிகவும் டிஸிப்ளினாக வளர்த்தார் (இதை என் நெருங்கிய நண்பன் காதரிடம் சொல்லும்போதெல்லாம் அவன் விழுந்து விழுந்து சிரிப்பான்). அப்பா அடிக்கடி என்னிடம், “காலைல ஆறு மணிக்கு எந்திரிச்சு படிக்கணும். பொய் சொல்லக்கூடாது. திருடக்கூடாது. கடன் வாங்கக்கூடாது. அடுத்தவங்க மேல பொறாமைப்படக்கூடாது….” என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். நிறைய நீதி போதனைப் புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள் என்று வாங்கிக் கொடுப்பார்.
நான் புத்தகங்கள் ஆர்வமாக படிப்பதை பார்த்துவிட்டு, நான் ஏழாவது படிக்கும்போதே என்னை அரியலூர் நூலகத்திற்கு அழைத்துச் சென்று தனது அட்டையை லைப்ரரியனிடம் நீட்டி, “இனிமே என் பையன்தான் என் கார்டுல புத்தகம் எடுப்பான்…” என்றார். அன்றிலிருந்து தினம் ஒரு புத்தகம் எடுத்து வந்து படிப்பேன்.
அரசு கல்வித் துறையில் பணிபுரிந்த எனது தந்தை, ஒரு முறை சுதந்திர தின இருபத்தைந்தாவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, மத்திய அரசு நிதி உதவியில் தமிழில் பதிப்பித்திருந்த 25 தேசத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களை மொத்தமாக கொண்டு வந்து கொடுத்தார். 70, 80 பக்கங்கள் இருக்கும், சிறுவர்களுக்கான சிறிய புத்தகங்கள் அவை. காந்தி, கோபாலகிருஷ்ண கோகலே, நேரு, திலகர்… போன்றோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை ஒரே வாரத்திற்குள் படித்து முடித்தேன். அந்த சிறு வயதில் அந்தப் புத்தகங்கள் என்னிடம் செலுத்திய செல்வாக்கு மறக்கமுடியாதது.
நான் படிக்க, படிக்க… என் தந்தை ஆய்வுக்குச் செல்லும் பல்வேறு பள்ளி நூலகங்களிலிருந்தும் ஏராளமான புத்தகங்களை அள்ளிக்கொண்டு வருவார். அனைத்தையும் உடனே படித்து முடித்து விடுவேன். பின்னர் அது கதைகள், நாவல்கள் என்று விரிந்து, ஏராளமாகப் படித்து, 23 வயதில் எழுத்தாளராகி, புத்தகங்களில் எனது கதைகள் பிரசுரமானபோது என் தந்தைப் போன்று சந்தோஷப்பட்டவர் வேறு யாருமில்லை. எந்தக் கதை வந்தாலும், உடனே படித்துவிட்டு காலையிலேயே ஃபோனில் அழைத்து சந்தோஷமாகப் பேசுவார் (அதே போல் கவிஞர் நா. முத்துக்குமாரும் விகடனில் எனது கதை வந்தால் காலையிலேயே அழைத்துப் பேசுவார். இருவரும் இப்போது இல்லை).
எனது தந்தை இறந்த பிறகு, அவரது செல்ஃ.பை குடைந்தபோது எனது கதைகள் வந்த பல பழைய விகடன் மற்றும் கல்கி வார இதழ்களை பத்திரமாக வைத்திருந்தார். அதில் ஒரு விகடன் இதழைப் பிரித்தேன். அதில் விகடனில் நான் முதன்முதலாக எழுதிய, 1997-ல் வெளிவந்த, எனது ‘இருட்டில் சில இந்தியர்கள்’ சிறுகதை பிரசுரமாகியிருந்தது. அதில் எனது பெயருக்கு கீழே என் அப்பா பேனாவால் ‘S/O D. கோவிந்தராஜன்’ என்று ன்ற எழுதியிருந்ததைப் பார்த்தேன். சட்டென்று உடைந்துபோய் அழுதேன். ஏற்கனவே அதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அப்பா இறந்த பிறகு அதைப் பார்த்தபோது அது அளித்த மகா துக்கத்தை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை.
அதை நான்கு வருடங்களுக்குப் பிறகு, இப்போது நினைக்கும் போதும் மாபெரும் துக்கம் பொங்கி வழிந்தது. சட்டென்று எனக்கு அழுகை வரப் பார்த்தது. கஷ்டப்பட்டு அழுகையை அடக்கினேன். சமீபத்தில் எனது எழுத்துப் பங்களிப்புடன் ‘தீராக்காதல்’ திரைப்படம் வந்தபோது, மிகுந்த திரைப்பட பிரியரான எனது தந்தை உயிரோடு இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பார் என்று நினைத்தபோது தாங்க முடியவில்லை. அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
அப்போது திடீரென்று, ஒரு வாரத்திற்கு முன்பு என் நெருங்கிய நண்பன் காதர் அழுதது நினைவிற்கு வந்தது. தினந்தோறும் அலுவலகம் முடிந்து, நாங்கள் நண்பர்கள் ஏழெட்டு பேர் ஒன்றாக தேநீர் அருந்திவிட்டு, அரைமணி நேரம் அரட்டை அடித்துவிட்டுத்தான் வீட்டுக்குத் திரும்புவோம். அன்றும் அவ்வாறுதான் பேசிக்கொண்டிருந்தோம். காதர் சற்று தள்ளி யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தான். திடீரென்று காதர் அழும் சத்தம் கேட்க… வேகமாக திரும்பிப் பார்த்தோம். அந்த அரையிருட்டில் காதர் ஒரு காரில் சாய்ந்தபடி சத்தமாக அழுதுக்கொண்டிருந்தான்.
“டேய்… என்னடா ஆச்சு?” என்று வேகமாக காதர் அருகில் நெருங்கினேன்.
அப்போது காதருடன் இருந்தவர், “ஒண்ணுமில்ல சார். காதர் அப்பா இறந்தது எனக்குத் தெரியாது. நான் எப்பவும் மாதிரி அப்பா உடம்பு எப்படியிருக்குன்னு கேட்டுட்டேன். அப்பதான் அவங்கப்பா செத்துப் போன சேதிய சொன்னாரு. திடீர்னு அழுதுட்டாரு….” என்றார். நான் ஆறுதலுடன் காதரின் தோளைத் தொட… அவன் மேலும் அழுதபடி எனது தோளில் சாய்ந்துகொண்டான். காதரின் அப்பா இறந்து நான்கு மாதங்களாகிறது. இன்னும் அவனால் அந்த துக்கத்தை கடக்க முடியவில்லையா?” என்று அப்போது ஆச்சர்யப்பட்டேன். ஆனால், இப்போது, இந்த நள்ளிரவில் ஓசூரைக் கடந்து சென்றுகொண்டிருக்கையில் என் அம்மாப்பா நினைவில் எனக்கு பொங்கி பொங்கி அழுகை வர… அழுதேவிட்டேன். பஸ்சில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்ததால் வாயைப் பொத்திக்கொண்டு சத்தமின்றி அழுதேன். அப்போது, “அம்மாப்பா ரெண்டு பேரும் இல்லடா…” என்று என்று என் மாமா சொன்னது நினைவிற்கு வர… அழுகையின் சத்தம் அதிகரித்தது (இதை எழுதும்போதும் நான் கண் கலங்கியபடிதான் எழுதுகிறேன்). அழுகைச் சத்தத்தில் விழித்த என் மனைவி நான் அழுவதைப் பார்த்துவிட்டு பதறிப்போய், “என்னாச்சுங்க… ஏன் அழறீங்க?” என்று தூக்கக் கலக்கத்துடன் சுற்றிலும் பார்த்தார். நான் ஒன்றும் சொல்லாமல் சத்தமின்றி அழுதேன்.
“அய்யோ… ஏன் அழறீங்க? யாராச்சும் எதாச்சும் சொன்னாங்களா?” என்றதற்கு நான் விசும்பலுடன், “இல்ல… சிவகுமார்கிட்ட பேசிட்டிருந்தேன். ஒவ்வொரு பொருளையும் எங்கம்மா பாத்து பாத்து பத்திரமா வச்சுப்பாங்கன்னு சொல்லிட்டிருந்தேன். அப்படியே….” என்ற நான் மேற்கொண்டு பேசமுடியாமல் அப்படியே என் மனைவியின் தோளில் சாய்ந்து அழுதேன்.
எனது மனைவி, “அய்யோ… என்னங்க இது? பஸ்சுல நடுராத்திரி அழுதுகிட்டு… யாராச்சும் பாத்தா என்ன நினைப்பாங்க? 52 வயசு ஆவுது. இன்னும் சின்ன பிள்ள மாதிரி அழுதுகிட்டு…” என்றார் என் மனைவி.
என் நண்பன் காதருக்கு 45 வயதிலும் அப்பா தேவைப்படுகிறார். எனக்கு 52 வயதிலும் அம்மாப்பா தேவைப்படுகிறார்கள். வேறு சிலருக்கு 70 வயதிலும் அம்மாப்பா தேவைப்படக்கூடும். அப்போது அவர்கள் அழும்போது, நான் காதரின் அழுகைக்கு தோள் தந்தது போல், என் மனைவி எனது அழுகைக்கு தோள் தந்தது போல், நான் அவர்கள் சாய்ந்து அழுவதற்கு எனது தோளைத் தரவேண்டும்.
*********
எழுதும் போது கண்ணீர் வந்ததென எழுதியுள்ளீர்கள். வாசிக்கும் போது பொங்கி எழும் கண்ணீர் துடைத்து மங்கிய எழுத்துக்களை வாசித்து முடித்தேன். அம்மாப்பா என்று அம்மாவையும் அப்பாவையும் ஒரு ஆளாக ஆக்கிவிட்டீர்கள். மிக எமோஷலான நினைவுக்குறிப்பு / பதிவு/ கட்டுரை. அருமை.