இணைய இதழ்இணைய இதழ் 75குறுங்கதைகள்

குறுங்கதைகள்  – ஜீவ கரிகாலன் 

குறுங்கதைகள் | வாசகசாலை

பத்து நாள் புரட்சி

முதலில் ஒரேயொரு நாய்தான் கடலைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தது. அதுவரையிலும் அங்கு கடந்து செல்லும் யாவருக்கும் அது பைத்திய நாய்தான்அது குரைப்பதை வேடிக்கை பார்க்குமளவு வேலை இல்லாதவர்கள் கணிசமாகவே இருந்தாலும், அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்று கடந்து செல்வதுதானே வாடிக்கை. ஆனால், அந்த விடுமுறை நாளன்று யாரும் எதிர்பாராத காலை வேளையில்தான் இந்த காட்சி அசாதாரணமாகிப் போனது. அதுவும் அந்தக் கடற்கரையில் நடைபயிற்சிக்காக அமைச்சர் பவனி வரும் நேரம் பார்த்து..

வழக்கம்போல் காற்று வாங்க வந்த பதினேழு நாய்களும் சட்டென்று அந்த அமைச்சரைக் கண்டதும் எழுந்த உளக்கொதிப்பில் அந்தப் பழைய நாயுடன் சேர்ந்து கண்மூடித்தனமாக கடலைப் பார்த்து குரைக்க ஆரம்பித்தன. அமைச்சரின் மன அமைதியைக் குலைக்கும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டுமென விசுவாசம் கொண்ட காவலர்கள் அவற்றை அடித்து வெளியேற்ற தடிகளை ஓங்கினார்கள். அதற்குள் சுண்டல்காரனோடு இருந்த, படகிலே படுத்திருந்த, வயதானதால் வாழ்க்கையை வெறுத்த, இன்னும் சில நாட்களில் நான்கு குட்டிகளை பிரசவிக்க இருந்த நாய்களுடன், இன்னும் கலங்கரை விலக்கத்தின் பகுதியைச் சேர்ந்த கூட்டமும் என மேலும் இருபது முப்பது நாய்கள் அவர்களுடன் கலந்து கொண்டன. இந்த திடீர் நிகழ்வு அமைச்சரை ஸ்தம்பிக்கச் செய்து சட்டையின் உள்பனியன் தெரியுமளவு வியர்த்துக்கொட்ட வைத்தது.

அமைச்சருக்கு நேர்ந்த இந்த அச்சுறுத்தலை, அரசின் விளம்பரங்களைப் பெற்றிருந்த ஊடகங்களும், ஏற்கனவே அச்சுறுத்தப்பட்ட ஊடகங்களும் தலைப்புச் செய்தியாய் மாற்றிக்கொண்டிருந்தன. எதிர்க்கட்சி ஊடகங்களோ அல்லது வேறு யாருமோ கடற்கரைக்குள் வருவதைத் தடுக்க போதிய அளவு தடுப்புகள் கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டிருந்தன.

செய்தியறிந்த ஞமளிகள் எங்கெங்கோ இருந்து கூட்டத்தில் கலந்தவண்ணமிருந்தன. அவை மிகத் தீவிரமாக இரவு பகலாகத் தொடர்ந்து கடற்கரையைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தன. செல்போன் பயன்படுத்த முடியாத ஜாமர்களால் நாய்களின் தொடர்பு வசதிகளை அறுத்தெறிய முடியவில்லை. இரண்டாம் நாளிரவிலேயே நகரத்தின் எல்லா நாய்களும் கடற்கரையில் நீண்ட வரிசையில் குரைக்க ஆரம்பித்தன

இது குறித்து அமைச்சர் விளக்கம் தருவதற்காக தலைநகரை நோக்கிச் சென்றார். உலகளாவிய அளவில் அந்த நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு பயணிகள் செல்ல முடியாத வண்ணம் வெவ்வேறு நாடுகளும் தடை விதித்தன. இது குறித்து சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்  பல்வேறு வகையான அழிவுகளுக்கான சமிக்ஞைகளாக இது இருக்கக் கூடும் என்று அஞ்சினர். அரசின் உத்தரவின் பேரில் கடற்கரைக்கு செல்லும் தடைபட்ட சாலையில் பெரும் யாகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது, உலக நன்மை வேண்டி என்று பிரகடனப்படுத்தப்பட்டது

வெவ்வேறு ஊர்களிலிருந்தும் மாநகரம் நோக்கி நாய்கள் வந்து கொண்டிருந்தன. வரமுடியாத முதிர்ந்த நாய்கள் அவ்வூரின் நீர்நிலைகளுக்கு முன் நின்று குரைக்க ஆரம்பித்தன. ஏஜென்சிகள் திரட்டிய தகவலைக் கொண்டு தேசிய பாதுகாப்புப் படை அந்நகருக்கு விரைந்தது.

யார் முதலில் குரைத்தது?” என்று அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்த அண்டை மாநிலத்தில் பிறந்த அந்த அதிகாரி. பலவந்தமாகப் பல நாய்களையும் கடத்தி வந்து மூர்க்கமாக விசார்த்தார். எல்லோரும் சொன்ன ஒரே பதில்உர்ர்ர்லொள்

அதே சமயம் இந்தத் தகவல்கள் எப்படியோ பரவ ஆரம்பிக்க, உலகம் முழுக்க இருக்கின்ற கடற்கரைகளிலும் இதே காட்சிகள் தொடர ஆரம்பித்தன. உலகம் முழுக்க ஆங்காங்கே நாய்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, தடியடி, கண்ணீர்புகைக் குண்டு, ரப்பர் குண்டு, அசலான துப்பாக்கிச்சூடு ஆகியவை தீவிரமடைந்தன. சமூக ஊடகங்களை பல நாடுகள் ஏற்கனவே முடக்கிவிட்டதால், பங்குச் சந்தைப் பட்டியலில் இருந்த முக்கிய நிறுவனங்களின் பங்குவிலைகள் சரிய ஆரம்பித்தன. உலகெங்கும் நடந்த விசாரணையில் கிடைத்த பதிலும்உர்ர்ர்..லொள்என்றே இருப்பதாகவும், அதற்குக் காரணமான இந்த நாடே இந்த மனிதகுலத்தின் அச்சத்தைப் போக்க வேண்டுமென்றும், உலக மனிதக் கவுன்சிலின் பிரதிநிதிகள் திட்டவட்டமாக அரசிடம் சொன்னார்கள்

செயற்கைகோள் படங்களின் உதவி கொண்டு இந்த மொத்த களேபரங்களுக்கும் காரணமெனசரியே நடக்கக் கூட இயலாத, ஒரு கால் பலமாக அடிபட்டிருந்த ஒரு நாயைப் பிடித்து வந்தபோதும் அது அவ்வாறே சொன்னது. அதைக் கைது பண்ணி வைத்த இடம் ரகசியமாக காவலில் வைக்கப்பட்டது. பத்து நாட்களுக்குப் பின்னர் ஒவ்வொரு நாடாக நாய்கள் கடற்கரையைவிட்டுத் தத்தமது இடத்திற்குத் திரும்ப ஆரம்பித்தன. உள்ளூரிலும் அதுவே நடக்க ஆரம்பித்தது. கடற்கரையில் சில நாய்கள் இறந்து போனாலும் அது செய்திகளாக்கப்படவில்லை (குரைத்தால் தானே செய்தி). அந்த பத்து நாட்களில் நாய்க்கூட்டங்களை தலைமையேற்று நடத்திய நூற்றுக்கணக்கான நாய்களுக்கு RFID பொருத்திய காலர்கள் அணிவிக்கப்பட்டன சில நாடுகளில் அது டாட்டூவாக்கப்பட்டது. ரகசியமாகக் காவலில் வைக்கப்பட்ட நாயை மட்டும் தூக்கில் போடுவதற்கு உத்தேசித்திருந்தனர்

இயந்திரத்தின் ஒழுங்கில் எதுவும் மாறாததால் தூக்கில் போடுவதற்கு முந்தைய நாளன்று, அந்த மூத்த நாயிடம் தனிப்பட்ட முறையில் சென்று, “நீங்கள் ஏதாவது சொல்ல வருகிறீர்களா?” என்ற போது, அதுவும் கொஞ்சம் கூட யோசிக்காமல் மீண்டும் அதையே சொன்னது.

*****

__________ குறித்து _______-இடம் அர்விந்த் சொன்ன கதை

ந்த கடலோர நகரத்தின் _______ தெரு வழக்கமான நெரிசலோடும் பதட்டத்திற்குத் தயாராகவே இருக்கின்ற தடயங்களோடே இருக்கும். ______ நிற போஸ்டர்களைக் கிழித்து ________ நிற போஸ்டர்கள் ஒட்டும் பெரும்பான்மையினர் வசிக்கின்ற தெருவில், புதிதாய் ஆஸ்பெஸ்டாஸ் கூரையமைத்த வீட்டில் வசிக்கும் ________ ஒரு பட்டதாரி.

கல்லூரி முடித்ததும் கேம்பஸில் கிடைத்த வேலை ஒரு கண்துடைப்பு என்றறிந்ததும் அங்கேயே அந்த வேலையை நிராகரித்தான். நிர்வாகம் அவன் எதிர்ப்பிற்கு கரும்புள்ளி வைத்தது. அவன் நிறைய பணியிடங்களுக்கு விண்ணப்பித்தான். இறுதியாக அருகே வந்த ஒரு வேலை வாய்ப்பும் பறிபோனது

இறுதியில் யார்தான் உதவுவார்கள் என்று நினைக்கும்போதே, அவனுக்குள்இறுதி என்ற ஒன்று மட்டுமே உதவும்என்று மிரட்டியது.

வாழ்க்கையின் வெறுமை தோய்ந்த நடையில் எங்கு போவதெனத் தெரியாமல், எப்போதும் ________ பாடலை ஒலிக்க விடும் புராதான வழிபாட்டு ஸ்தலத்திற்கு பாத்தியப்பட்ட ______ வண்ண கட்டடத்தில் அமைந்திருக்கும் _____ வண்ண போர்டில் எழுதப்பட்டிருக்கும் தேநீர் விடுதி என்கிற பிரசித்தி பெற்ற விடுதியில் தனியாகப் போய் அமர்ந்தான் ________. கிழித்தெறியத் தயாராக இருக்கும் கோப்புகளை இறுகப் பற்றியிருந்தது ________ அவனது கரங்கள்.

_______ கையிலிருந்த கோப்புகளின் என்னவெல்லாம் இருக்கும் என்றறிந்த இருவர்களில் ஒருவன் பார்ப்பதற்கு ______ போலவே தெரிந்தான்.

இரண்டு ஜோடிக்கால்களும் அந்த தேநீர் விடுதியில் _____ நோக்கி வந்தன.

நீங்க ____ தான?”

ஏன் அப்படி கேக்கறிங்க?”

நீங்க அப்படி இல்லன்னுதான் கேக்கறேன்“.

ஏன் உங்களுக்கு நான் ______ இருக்கறதால என்ன ப்ரச்சன? “

உனக்கு என்ன ப்ரச்சன என்று எங்களுக்குத் தெரியும்

 “என்ன சொல்றிங்க

உனக்கு உதவலாம்னு தான் வந்தேன்.”

நாங்க சொல்ற வேலைய இரண்டு தடவை மட்டும் கைமாத்துனா போதும். உனக்கும் சட்டுன்னு வேலை முடிஞ்சிடும்.. கையிலயும் கொஞ்சம் பணம் சேரும்.”

ஆனா நீங்க” 

ஷ்ஷ்.. மேல ஒன்னும் சொல்லாத. இத கட்டாயம் செய்யனும்னு அவசியமில்லை, நாங்க ரொம்ப வற்புறுத்த மாட்டோம். உன் வீட்டு நெலமைய தெரிஞ்சவங்க நாங்க.ஒரு வாய்ப்பு கொடுக்கறோம். எந்த ப்ரச்சனயும் வராது.. பயப்படாம இரு

தயக்கம் நீங்கியது போலத் தோன்றியது

தன்னைத்  தயார்படுத்திக் கொண்டு, அவர்களிடம் _______ அவன் ஒத்துக்கொண்டான். அவன் ஒத்துக்கொண்டதை _____ நிற சட்டை அணிந்தவன் ஓரக்கண்களால் பார்த்துக் கொண்டிருந்தான்.

யாரும் எதிர்பாராவண்ணம் அந்த காட்சிகளையே வாசித்தது போலே ______ பாடிய பாடலொன்றை அங்கிருந்த ஸ்பீக்கர் அலற விட்டது

*********

kaalidossan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button