தாகம் தீர்க்கும் தாமிரபரணி,
சுவைக்கத் தூண்டும் அல்வா
புத்துணர்ச்சிக்கு குற்றாலக் குளியல்
எல்லாவற்றிற்கும் மேலாக
சிந்தை தூண்டிட சீரிய செழுந்தமிழ் இலக்கியச் சுரங்கம் என நிறைவான பூமி நெல்லைச்சீமை..
இளவல்களைப் போற்றும் இனியவராம் தி.க.சியின் பெருமை கூட்டும் சீராளன் கல்யாணசுந்தரம் (கல்யான்ஜி) என்கிற வண்ணதாசனுக்கு இன்று பிறந்தநாள்
என் வரையில் சிறுகதைகளும், நாவல்களுமே வாசிக்கும் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், எனது முப்பத்தைந்தாவது வயதில்தான் வண்ணதாசனின் “தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்” வாசிக்க நேர்ந்தது. அதன் கதை மாந்தர்கள் எனை ஈர்த்தனர். புனைவென தோன்றாது யதார்த்தமாய் நகர்ந்த கதையோட்டம் நெருக்கம் கொள்ள உதவியது. அப்பொழுதுகூட வண்ணதாசனும் கல்யாண்ஜியும் ஒருவரே என்று தெரிந்திருக்கவில்லை. ஏனென்றால் கவிதைக்கும் எனக்கும் அவ்வளவு தூரம்.
2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒருநாள் சோதனை முயற்சியாக நானும் கவிதை எழுதிப்பார்க்க முயன்றேன்.
ஊக்குவித்த கணவரும் என் பிள்ளைகளையும் தவிர யாரும் வாசிக்க வாய்க்காத நிலையில், நண்பர் ஒருவர் பரிசளித்த “கல்யாண்ஜி கவிதைகள்” வ ஊ சி பதிப்பகம் வெளியிட்டிருந்த தொகுப்புதான் நான் வாசித்த முதல் தொகுப்பு.
ஒரு கவிதை என்னவெல்லாம் செய்யும்”? உணர்ச்சி வசப்படுத்தும், பரவசப்படுத்தும், நெகிழ்த்தும், அன்பலரச்செய்யும், ரௌத்திரம் கூட்டும், சாந்தப்படுத்தும் இவற்றோடு ஏதும் செய்யாமலும் போகும்.
எதையெல்லாம் கவிதையில் வடிக்கலாம்?
பட்டியல் தயாரித்தால் ஒரு நூறு தேறலாம். ஆனால் நுண்ணுணர்வுடன் எதையும் கவிதையாக்க கைவரும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவர் நம் கல்யாண்ஜி.
இதைச் சொல்ல எனக்கான தகுதியை, நான் கலந்து கொள்ளும் கவிதை நிகழ்வுகள் புலப்படுத்தியிருக்கிறது.
பெண்ணின் உணர்வுகளை ஆடவரால் புரிந்துணர முடியாதென்பவர்கள் வண்ணதாசனிடம் தோற்றுத்தான் போவார்கள்.. ஏனெனில், யாதொரு மென்ணுணர்வுகளையும் அறிந்தும் புரிந்தும் கொள்வதோடு,அதை காற்று நுழைந்த மூங்கிலினின்று வெளியாகும் இசை போல வெளிப்படுத்தவும் முடியும்.
வெளியாகும் இசை பாமரனும் ரசிக்கக்கூடிய மண்ணின் இசை. எழுத்தின் கவர்ச்சியும், எழுத்தாளனின் அணுக்கமுமே எழுத்தாளனைக் கொண்டாடத் தூண்டும். அந்த வகையில் வாசகன்களோடு வாசகிகளையும் பெருமளவில் வாய்த்துக்கொண்ட வசீகரமான எழுத்தாளர் அவர்.
“எல்லார்க்கும் அன்புடன் ” படிக்க நேர்ந்ததில் எனக்கும் ஒரு கடிதம் கிடைக்கப்பெற்றால் என்று ஏக்கம் கொள்ள செய்தது.
வாழ்வில் புகார்கள் நிறைந்து உழலும் இச்சமூகத்தில் யாதொரு புகாருமற்றவராய் வாழும் இவரைக் கண்டு பொறாமை கொள்கிறேன்..
நேர்மறை சிந்தனைகளாலேயே நிரம்பியிருக்கும் மனதிற்கு வந்தனங்கள்.
அவரின் வரிகளிலேயே சொல்வதானால்,
//அதனதன் காரியங்களை
அது அது
அவரவர் காரியங்களை
அவரவர்
ஒப்பிட ஒன்றுமில்லை//
என எதையும் எளிதாகக் கடந்து செல்லும் மனோபாவம்…
ஒரு வீட்டில் ஒரே துறையில் பயணிப்பவர்கள் இருக்கலாம். ஆனால்
தந்தை வழி நின்று தமிழ்ப்பால் குடித்து சாகித்ய அகாதமி விருது பெறுமளவிற்கு வளர்ந்து தம் தந்தைக்கும் பெருமை சேர்த்த அவரின் மாண்பைக் கண்டு வியந்து நிற்கிறேன்.
இதயங்களை வசீகரிக்கும் எழுத்தாளக்கவிஞனான வண்ணதாசனாகிய கல்யாண்ஜிக்கு இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஆரோக்கியமும் ஆனந்தமும் நிறைந்த வாழ்வாங்கு வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துகள்…