
தன்னந்தனியாக இந்த இடத்தில் என்னை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. நான் எப்படி இங்கு வந்தேன்? பிரமாண்டமான மாளிகை போல இருக்கிறது அவ்விடம். கண்ணைக் கவரும் விளக்குகள். இருவர் படுக்கும் மெத்தை. வெள்ளை நிறத்திலான விரிப்பு. சுவரெங்கும் ஓவியங்கள். ஒவ்வொரு ஓவியத்தையும் என்னால் வரையறுக்க முடியவில்லை. ஒவ்வொன்றும் ஏதோ ஒரு தத்துவார்த்தத்தை உணர்த்தி நிற்கின்றன. தரையெங்கும் பளிங்கு கற்கள். என் முகம் எனக்கு அழகாக காட்டியது. அதிநவீன வசதிகளுடன் குளியல் அறை. படுத்துக் கொண்டே குளிக்கலாம். அருகில் பீர் பாட்டில்கள் வைக்க விசேஷமான இடம். குளியலறையெங்கும் கண்ணாடிகள். என் பிம்பத்தை நானே பல கோணங்களிலிருந்து இரசித்துப் பார்த்தேன்.
படுக்கையறையையொட்டி நீச்சல் குளம். அருகில் உட்கார்ந்து பேச இருநாற்காலிகள். பட்டணத்தின் நடுவே விலைவுயர்ந்த ஹோட்டலில் நான். ஒரு நாள் வாடகை என் பத்து நாள்களின் உழைப்பு. மனம் சற்று யோசிக்கத் தான் செய்தது.
நான் எப்படி இந்த இரவில் இங்கு? கொண்டு வந்த கைப்பையை மெத்தையின் மீது கிடத்தினேன்.கண்ணாடியில் என் கண்களை உற்று நோக்கினேன். அங்கு தெரிந்தது தேடல். ஒரு கப் காப்பியில் தொடங்கிய என் தேடல்களில் நூல்களை விட்டு வெளி வர முடியாமல் ஆறிப்போன காப்பிகள் ஏராளம்.
“அபாங்….தே தாரிக் சத்து “
கைகளை உயர்த்தி கண்கள் விடாப்பிடியாக நூல்களை சங்கமித்த நாள்களும் ஏராளம்.
“ஹாங் மின்தா சூத்தி லாகி “
கடிந்து கொண்ட முதலாளிகளும் ஏராளம். ஆனால், என் தேடல்கள் குறைந்தப் பாடில்லை. மனம் நிறைவு கொள்ளாத தேடல்களில் சிந்தனைகள் சிதறிப் போய்விடும். தீராத தேடலில் மீண்டும் மீண்டும் என்னை நகர்த்திக் கொண்டே செல்வேன். அவரது இழப்புக்குப் பின் என் பேனா என் கண்ணீரை அதிகம் பேசிச் சென்றது.
நான் எப்படி இங்கு? நானாகத்தான் வந்தேன். என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, வற்புறுத்தவுமில்லை. இன்று என் தேடலின் உச்சக்கட்டமிது. தேடிப் பார்த்தால்தான் கண்முன்னே நிஜத்தை உணர முடியும். எண்ணங்கள் சிதறிய நிலையில் ஹோட்டல் அறையின் மணி ஒலித்தது.
நெற்றியில் வியர்வை ஒழுகியதை உணர்ந்தேன். கைக்குட்டையால் வியர்வையைத் துடைத்தேன். கைப்பையிலிருந்த வாசனைத் திரவியத்தை பூசிக் கொண்டேன். கைப்பையை மேசையின் மீது வைத்து விட்டு பெருமூச்சையும் விட்டு கதவருகில் நின்றேன். மீண்டும் மணியோசை எழவில்லை. இருந்தாலும் கதவைத் திறந்தேன்.
“வானத்திலிருந்து ஆணழகன் வந்து உன்னைப் புடிச்சுட்டு போவான் ஒரு நாளு….பாருடி…”
அப்பத்தா கிழவி சொன்னதை இன்று தான் உணர்ந்தேன். வெள்ளை நிற காலர் சட்டையில், கருநீல கால்சட்டையில் கட்டுக் கோப்பான உடல்வாகில் நின்றிருந்தான். அவனது வாசனைத் திரவியம் என் மூக்கைத் துளைத்தது. மலைத்து நின்றேன்.
பூனைக் கண்ணுடையான். ஆறடி உயரம். சிவந்த உதடுகள். பட்டும் படாமலும் மீசை. வெளுத்த நிறம். நகர மறுத்த கண்களுக்கு ஒத்தாசையாயின கால்கள்.
“மிஸ்…”
“உள்ள வந்தப் பிறகு நீங்கள் என்னைப் பார்க்கலாம்…”
மறித்து நின்றிருந்த எனக்கு சற்று அவமானமாகத் தோன்றியது அவனது வார்த்தைகள். அவனுக்கு வழிவிட்டு நான் நகர்ந்தேன். கதவைத் தாளிட்டு காலணிகளைக் கழற்றினான்.அவனிடத்தில் எந்தவொரு அடையாளமுமில்லை. அவனது பின்புறம் நோட்டமிட்டேன். அங்கு மணிப்பை இல்லை.
இரு கைகளைக் கட்டி என்முன் நின்றிருந்தவனிடம் என்னால் எதுவும் பேச இயலவில்லை. தயங்கித் தயங்கி நாவிலிருந்து வார்த்தைகள் வெளி வர மறுத்து கொண்டிருந்தன.
“…நான்…அந்த…மாதிரி….”
“..மிஸ்..உங்களது நெற வேறாத ஆசைகள்…உங்கள் விருப்பங்கள்…அது. உங்களது தனிப்பட்ட உரிமை….நான் ஜஸ்ட் ஒரு கருவி…மிசின்…ஆல் ஸ் சீக்ரெட்… “
இராணுவ வீரனைப் போல் நின்று கொண்டு அவனது வார்த்தைகள் என்னை மிரள வைத்தன. என் உடலின் நடுக்கமும், வியர்வைத் துளிகளும் நான் இக்கட்டான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்த்தியது. வீர்கொண்டு நடந்தேன். மேசையின் மீதிருந்த நீர் புட்டியைத் திறந்து தொண்டைக்குள் இறக்கினேன். சட்டையும் நனைந்து போனது. அவனைத் திரும்பிப் பார்க்க கண்களின் நடுக்கம் தடுத்தது. ஓரக் கண்ணில் பார்த்தேன். மெத்தையின் மீதமர்ந்தான். எனக்குள்ளான நடுக்கம் கால்கள் வரை உணர வைத்தது.
“…மிஸ்…”
அவன் அழைத்த போது சட்டென்று திரும்பி என் பாதுகாப்பை உறுதிச் செய்து கொண்டேன். ஆனால், அவன் அமர்ந்தது நாற்காலியில் தான் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். புன்னகைத்தவாறு அமர்ந்திருந்தான். அவனது புன்னகையில் ஒரு கணம் தள்ளாடி நின்றேன்.
“…மிஸ்…நீங்க ரைட்டரா என்கிட்ட என்ன எதிர்பார்கறீங்க…?”
அவனது இந்த கேள்வியால் நான் உருக்குலைந்து தள்ளாடி மேசையின் அருகிலிருந்த நாற்காலியில் சாய்ந்தேன். அவனது கண்கள் என்னை நோக்கவில்லை. அங்கிருந்த வார இதழ்களின் மேல் படர்ந்திருந்தன. மனத்தில் தைரியத்தை வரவழைக்க மனப்போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
“…அவ்…”
என் கேள்விகளை முழுமையாக்கும் முன்னரே கழிவறையை நோக்கி நடந்தான். சிறிது நேரம் மௌனம் நிலவியது. அறையின் கதவைப் பார்த்தேன். எனக்காக திறப்பதை போலவே உணர்ந்தேன். கழிவறையின் நீரின் சத்தம் செவிகளில் விழ கண்கள் கழிவறையின் கதவையே பார்த்துக் கொண்டிருந்தன.வெளியே வந்தவன் என்னைக் கவனிக்காது, நீச்சல் குளத்தின் பக்கம் போய் நின்றான். வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்குள் உறையும் மௌனத்தில் நானும் உறைந்து போனேன். இருபது நிமிடங்கள் எங்களுக்குள் இடைவெளி தொடர்ந்தது.
“…யேன்…இந்த …”
என் கேள்வி முழுமைப் பெறாத நிலையில் அவனது மௌனம் ஆட்கொண்டது.
“….மிஸ்…உங்க தேடலில் ஒரு பகுதியா மட்டும் தான் நான் இருக்க முடியும்…முழுசா உணர நெனச்சீங்கனா…சோறி…உங்கள இழக்க வேண்டி வரும்…”
தூக்கிவாரிப் போட்டது அவனது பதில். சில நிமிட மௌனத்திற்குள் பின்னர் தன்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தான். நீச்சல் குளத்தோரம் அமர்ந்து என்னைப் பேச அழைத்தான்.
“..உங்க பேனா என்ன எழுத நெனக்கல…ஜிகோலோ…அதான் உங்க தைரியம்…” புன்னகைத்தவாறு சிலுவார் முட்டி வரை இழுத்து தண்ணிரில் காலை விட்டான். நான் சம்மனங்காலிட்டு அமர்ந்து கொண்டேன்.
அவனது பேச்சில் பல அரசியல் திரைக்குப் பின்னால் செயல்பட்டுக் கொண்டிருக்கும் “ இந்த” சேவையைப் பற்றி பெருந்தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. அவனது மறைமுக பேச்சு என்னை திக்குமுக்காட வைத்தது.
“நீங்க பண்ணண்டாவது கஸ்டமர்…”
என்றவுடன் எனக்குள் மீண்டும் மூச்சு வாங்க ஆரம்பித்தது. என்னை சமாளித்துக் கொள்ள சற்று தள்ளியமர்ந்தேன். அவன் விருப்பப்பட்டு இத்தொழிலில் ஈடுபடவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். அவனது வாழ்க்கைச் சூழலும் முந்தித் தள்ளவில்லை என்பது அவனது பேச்சில் தெள்ளத் தெளிவானது.
அவனிடம் காட்டமான பேச்சுகள் இல்லை. மௌனம் அவனது தனிமையை அதிகம் புலப்படுத்தியது.
“அனுபவங்கள் அதிகரிக்க அதிகரிக்க உதடுகள் தன் பேச்சை நிறுத்திக் கொள்ளும்…”
எனும் யதார்த்தமான உண்மையை அவனிடத்தில் உணர்ந்தேன். அவ்வப்போது நிகழும் அவனது நீண்ட மௌனங்களை சமாளிக்க, என் பயத்தையும் போக்க சில கேள்விகளை முன் வைத்தேன். முன்முடிவுகளால் கட்டமைக்கப்பட்ட பல விடயங்களை அவனிடத்தில் பேச எங்கிருந்துதான் எனக்கு மனத் தைரியம் சூழ்ந்ததோ…தெரியவில்லை. எப்போதும் தேடலில் குறிப்பெடுத்துக் பழக்கப்பட்ட எனக்கு அன்றிரவு அனைத்தும் மனத்திரைகளாக நின்றன. விருப்பு வெறுப்பற்ற இயந்திரமாக இத்தொழிலைச் செய்வதாக ஆண்கள் மீது தீராத குற்றச்சாட்டினைக் கொண்டிருந்த எனக்கு அவனுடனான உரையாடல் வேறொரு தளத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. இந்தப் பெருநகர் கனவில் அவனது புரிதலையும் இசைவையும் அவன் சரியென வாதிடவேயில்லை. ஒரு பொய்யான பிம்பத்திற்குள் தன்னை உருமாற்றி இரசித்துப் பார்த்து விட்டு அவனால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை. மனம்தான் அதற்குத் தடையாக உள்ளது. பல சுவருகளுக்கு மத்தியில் மட்டுமே அவனைப் போன்றோர் வாழ்ந்து வருகின்றனர்.
அவனது பேச்சில் சட்டென்று ஞாபகம் ஒன்று சிதைத்தவளாய்,
“என்ன எப்படி…”
எப்படியும் என் கேள்வி நிறைவு பெறாது என்பதை உணர்ந்தவளாய் மௌனம் காத்தேன். சில நிமிட தீராத யோசனைகளுக்குப் பின் பேசலானான். அவனது பேச்சு அவன் இளம் வயது இளைஞன் என்பதை மறக்கச் செய்தது.
“ஒரு பொண்ணு தன் பக்க நியாயங்களைப் பேச உலகத்தையே கட்டியிழுத்தாலும் அது நடக்க கஷ்டம்…ஆனால், ஒரு ஆம்பள மௌனமா கடந்துட்டுப் போனாலும் ஏன்னு கேள்வி கேட்க ஒரு பொம்பள தான் வருவா…ஆம்பள இல்லை…”
அவனது பேச்சில் உண்மைதான் வெளிப்பட்டது. பெருங்கொடுமையான வாழ்வாதாரத்தில் பெண்ணின் உணர்வுகள் பேரம் பேசப்படும் நிலையில் ஆணொருவன் பெருநகர் கனவுகளைச் சுமக்க தன் வாழ்வாதாரத்தில் ஒரு அடி முன்நகர்த்தியது பெரும் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. உடல் சந்தையில் பணத் தேவை இன ரீதியாக பார்க்கப்படும் கோணம் பெண்களை இன்னும் இழிவு நிலைக்கே தள்ளப்படுகிறது.
அவன் எவ்வளவு பேசினாலும் “ ஜிகோலோ” வின் செயல்பாடுகள் மற்றும் அதன் பின்னனியிலுள்ள அரசியல் தாக்கங்களைப் பற்றிய பேசுவதில் பல தயக்கங்களைக் காட்டினான். நான் எதிர்பார்த்த பல விடயங்கள் மூடிமறைக்கப்பட்டுக் கொண்டே போனது.
“…மிஸ்…நீங்கள் யாருன்னு தெரிஞ்சு வந்தேன்னா அதுக்கு காரணம் எனக்குள்ள உள்ள ஒரு குற்றவுணர்வுதான்… இதுக்கு மேல நீங்கள் தெரிஞ்சிக்க நெனச்ச விஷயங்கள் என்கிட்ட தேடாதீங்க… வாழ்க்கை அத்தன எளிமையானது அல்ல…கொடூரங்க மீதுதான் நடக்குது…”
இனியும் அவனிடம் நான் எதிர்பார்த்து ஒன்றுமில்லை. அவனைச் சுற்றியுள்ள சிக்கல்களை உணர முடிந்தது. அவனிடத்தில் வேறு யாராக இருந்திருந்தாலும் என் தேடலில் முடக்கம் தான் ஏற்பட்டிற்கும். ஆன்லைனில் அவனிடம் பேசிய பணத்தைக் கொடுத்தேன். எந்தவொரு மறுப்பதில்லாமல் பெற்றுக் கொண்டு சட்டென்று காணாது போனான்.
அவனது புன்னகையில் மயங்கித்தான் போயிருந்தேன். வழியனுப்பி விட்டுக் கதவோரம் சாய்ந்து விடிய விடிய என்னதான் பேசினோம் என்பதை அசை போட்டுப் பார்த்தேன். என் தேடலில் முதல் அடியில் மட்டுமே இருப்பதை உணர்ந்தேன். என் சிந்தனையைக் தடுப்பது போன்று ஒரு கைப்பேசி அழைப்பு. யாரென்று பார்த்தேன்.
அதிகாலை மணி நான்குக்கு “ பிரைவட் நம்பர் “. மனத்தில் அச்சம் லேசாக மேலிட்டது.
“…ஹாலோ….”
“…வார்னிங்…”
ஆங்காரமான,அழுத்தமான, கராரான குரலது. கைப்பேசியை மெத்தையில் வீசியெறிந்தேன். வெளியே போன அவனை நினைத்து என் கால்கள் வேகமாக ஓடின. அந்த நீண்ட தூர வளாகத்தில் அவனைக் காணவில்லை. அங்கு நடமாட்டங்கள் இருந்தும் அந்தவொரு உருவம் மட்டும் என்னைக் கோரமாகப் பார்த்து சென்றது.
நடுக்கத்தில் நின்ற என் கால்கள் நகரவேயில்லை.
*********
இந்தக் கருவை மையமாக வைத்துக் கதை எழுத உள்ளபடியே துணிச்சல் வேண்டும். அதுவும் ஒரி பெண்ணுக்கு!அந்த அழகிய ஆண் பாத்திரம் கனவுலகில் வருவதுபோல வருகிறார். ஆனால் அது கனவு அல்ல நனவில் வரும் உண்மைப் பாத்திரம். ஏன் பெண்கள் மட்டும்தான் அந்த ரகசிய தொழிலைச் செய்ய்வேண்டுமா என்ன? ஆண்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்தக் கதை விவரணையை வெளிப்படையாகச் சொல்லாமல் சற்றே மீ மொழியில் சொல்லிச் செல்கிறார். அதனால் விரசமாக இல்லை. அதுவே சிறப்பு,