வாழ்க்கை வாழ்ந்து கொண்டே இருப்பதற்கு லாயக்கானதில்லை. நாம் இறந்த பிறகு நமக்கும் மற்றவர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது? காலம் என்பதை தீர்மானிப்பதெது? நாம் காலத்தின் மீது பயணிக்கிறோமா அல்லது காலம் நம் மீது பயணிக்கிறதா? உரையாடுவதற்கு யாருமே இல்லாமல் தனித்துவிடப்பட்டிருக்கும் ஒரு மனிதனுக்கு காலத்தைப் பற்றிய பிரக்ஞை இருக்குமா? பல சமயங்களில் மற்றவர்களாலும், சில சமயங்களில் தன்னாலுமே அந்நியனாக பார்க்கப்படுகிற மனிதனின் கதைதான் “அந்நியன்”.
இன்று அம்மா இறந்து விட்டாள். ஒருவேளை நேற்றாகவும் இருக்கலாம்: எனக்குத் தெரியாது. முதியோர் இல்லத்திலிருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது. “தாயார் மரணம். நாளை அடக்கம். ஆழ்ந்த அனுதாபங்கள்.” இதற்கு ஒன்றும் அர்த்தமில்லை. ஒருவேளை நேற்றாகவும் இருந்திருக்கலாம். இவைதான் இந்நாவலின் தொடக்க வரிகள். இறந்து விட்ட அம்மாவைப் பார்ப்பதற்கு “மெர்சோ” கிளம்புவதில் இருந்து கதை தொடங்குகிறது. இறந்த தாயின் உடல் சவப்பெட்டியில் மூடி வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு இருந்த பணியாளன் முகத்தைக் காண்பிக்கப் பெட்டியைத் திறக்க முயற்சி செய்கையில் மெர்சோ தடுத்து விடுகிறான். தாயின் இறந்த உடலுடன் தனித்து இருக்கையில் அவனுக்குப் புகை பிடிக்க வேண்டும் போல் இருக்கிறது. அம்மாவுக்கு முன்னாள் அவ்வாறு செய்யலாமா என்று தயக்கத்துடன் யோசிக்கிறான். அதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தோன்றாததால் அங்கு வந்த பணியாளனுக்கும் ஒரு சிகரெட் தந்து இவனும் புகைக்கிறான். இறுதிச் சடங்கில் அவன் தாயுடன் அந்த முதியோர் இல்லத்தில் தங்கி இருந்த நண்பர்கள் கலந்து கொண்டு, இறந்த தோழிக்காக கண்ணீர் வடிக்கிறார்கள். அவனுக்குத் தாய் மீது எந்தக் கோபமோ வருத்தமோ இல்லை. ஆனால் மெர்சோவுக்கு அழுகை வரவில்லை. ஏன் என்ற காரணமும் தெரியவில்லை. அம்மா இறந்து போகாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று மட்டும் நினைக்கிறான். அது எப்படி தாயின் சவத்திற்கு முன் ஒருவனால் அழாமல் இருக்க முடியும்? மகிழ்ச்சிக்கான சந்தர்ப்பம் வாய்த்தால் ஒழிய மகிழ்ச்சியுடன் இருப்பதை எப்படி சக மனிதர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாதோ, அதுபோல் துயரத்தின் போதும் துயரம் கொள்ளாதவர்களை சக மனிதர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
அம்மா இறந்ததற்கு அடுத்த நாள் தன் தோழி “மாரி”யுடன் கடற்கரையிலும், திரையரங்கிலும் பொழுதைக் கழிக்கிறான். தன்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று அவள் கேட்டதற்கு சம்மதம் தெரிவிக்கிறான். தன்னைக் காதலிக்கிறானா என்று கேட்டதற்கு இது போன்ற கேள்வி அர்த்தமற்றதென்றும், அவளைக் காதலிப்பதாக தனக்கு தோன்றவில்லையென்றும் பதிலளிக்கிறான். முதல் அத்தியாயத்தின் கடைசியில் தனக்கு எந்தவிதத்திலும் சம்மந்தமில்லாத ஒரு விஷயத்தில், நண்பனுக்காக ஒரு கொலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறான். தனிப்பட்ட முறையில் எந்தவித பகைமையும் இல்லாத ஒருவனைக் கொலை செய்கையில் முதல் குண்டுக்கும் இரண்டாம் குண்டுக்கும் நடுவில் சிறிது அவகாசம் எடுத்துக் கொள்கிறான். அம்மா இறப்பின் போது வராத கண்ணீருக்கும், மாரி மீது ஏற்படாத காதலுக்கும் எப்படி காரணம் தெரியவில்லையோ அது போல் சுடப்பட்ட தோட்டாக்களின் இடைவெளிக்கும் அவனுக்குக் காரணம் தெரியவில்லை.
அதற்குப் பிறகு சிறையிலும் நீதிமன்றத்திலும் அவனுக்குள் ஏற்படும் உரையாடல்களே கதையின் மையம். சிறை வாழ்க்கை முதலில் அவனுக்கு அலுப்புத் தட்டினாலும் பிறகு பழகி விடுகிறது. ஒருவன் வெளியுலகில் முழுமையாக ஒருநாள் வாழ்ந்திருந்தால் போதும், அவனால் நூறு வருடங்கள் கூட சிறையில் இருக்க முடியும். அலுப்புத் தட்டாமல் இருக்கப் போதுமான நினைவுகளே ஒரு சிறைவாசிக்கு தேவை என்கிறான். தனக்கு எதிராக வாதாடும் வக்கீல் மற்றும் நீதிபதிகளின் கேள்விகளை இவனால் எதிர் கொள்ள முடியவில்லை. இவன் கூறும் பதில்கள் அவர்களை இன்னும் அதிகமாக கோபப்படுத்துகிறது. அம்மாவின் சவத்தின் முன் அழாத, அம்மாவின் முகத்தைப் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டாத, அம்மாவின் வயது என்னவென்று தெரியாத, அமைதியாக காபி குடித்த, குற்றவுணர்வின்றி சிகரெட் பிடித்த, அடுத்த நாள் தன் காதலியுடன் உல்லாசமாக இருந்த, முதல் குண்டுக்கும் இரண்டாம் குண்டுக்கும் நடுவில் போதிய அவகாசம் எடுத்துக் கொண்ட ஒரு மனிதன், நிச்சயம் ஈவு இரக்கமற்றவனாகத்தான் இருப்பான். நிச்சயம் அவன் வாழ்வதற்குத் தகுதியற்றவன் என்பதுதான் எதிர் தரப்பு வக்கீலின் வாதம். மெர்சோவுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
தண்டனை அறிவித்த பிறகு மெர்சோவுக்கும் பாதிரியாருக்குமான உரையாடல் மிக சுவாரசியமான ஒன்று. பாதிரியார் அவன் பாவம் புரிந்தவன் என்று அதற்கான பாவ மன்னிப்புக்கு அவனை அணுகும்போது அவன் மிகத் தெளிவாகக் கூறுகிறான். இதில் ‘பாவம்’ என்ன இருந்ததென்று எனக்குப் புரியவில்லை. நான் குற்றம் புரிந்தவன் என்று மட்டும்தான் எனக்கு அறிவிக்கப்பட்டது. நான் குற்றவாளி, அதன் பலனை அனுபவித்தேன். அதற்கும் அப்பால் என்னிடமிருந்து எதுவும் எதிர்ப்பார்க்கக் கூடாது. குறைந்தபட்சம் அவனுக்குக் கடவுள் நம்பிக்கையை உண்டாக்கலாம் என்ற எண்ணமும் அவருக்குப் போய் விடுகிறது. பொதுவாக ஆத்திகர்கள் வைக்கும் வாதம், எப்படிப்பட்ட நாத்திகனும் இறக்கும் தருவாயில் கடவுளை வழிப்படுவான் என்பது. அதற்கு மாறாக மெர்சோ, “எனக்கு இன்னும் மீதமிருந்த நேரம் குறுகியதென்பதைத் தெரியப்படுத்த முற்பட்டேன். கடவுளைப் பற்றிய சர்ச்சையில் அந்த நேரத்தையும் இழக்க நான் விரும்பவில்லை” என்கிறான். மெர்சோவின் இந்த சமரசமற்ற தன்மை எனக்கு மாவீரன் பகத்சிங்கை நினைவூட்டியது. அவரின் மரணதண்டனைக்கு சில நாட்களுக்கு முன், சிறைக் காவலர்கள் பகத்சிங்கிடம் இரண்டு வேளையும் கடவுளை பிரார்த்தனை செய்யும்படி தூண்ட ஆரம்பிக்கிறார்கள். அதற்கு நாத்திகனான பகத்சிங், “அமைதியான மகிழ்ச்சியான தருணங்களில் மட்டும் நான் நாத்திகக் கொள்கையில் விடாப்பிடியாக ஒட்டிக் கொண்டிருக்கிறேனோ என்ற கேள்வி எழுந்தது. நீண்ட நேரம் யோசித்தபின் கடவுளை நம்பி பிரார்த்தனை செய்யும்படி என் மனதைத் தூண்டக் கூடாதென முடிவு கட்டினேன். அம்முடிவின்படி நான் எவ்வித பிரார்த்தனையும் செய்யவில்லை . எனது உண்மையான சோதனை அதுதான். நான் அதில் வெற்றி சூடினேன்” என்கிறார்.
நாவலின் கடைசி பக்கங்கள் என்னை முழுமையாக ஆட்கொண்டன. மெர்சோ மரணத்திற்கு தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறான். இறந்த தாயை பார்ப்பதற்கு முதியோர் இல்லத்திற்கு செல்கையில், இல்லத்தின் நிர்வாகி அங்கு இருந்த ஒரு வயதான மனிதனைக் காட்டி இவர்தான் உங்கள் தாயின் நெருங்கிய நண்பர். உங்கள் தாயும் இவரும் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்பார்கள். இங்கு இருப்பவர்கள் இவர்களைக் காதலர்கள் என்று கிண்டல் செய்வார்கள் என்று கூறியது அவன் ஞாபகத்திற்கு வருகிறது. இப்போது அவன் தன் அம்மாவை நினைத்துக் கொள்கிறான். “தன் வாழ்க்கையின் கடைசி நாட்களில் அவள் ஏன் தனக்கொரு ஆண் துணையைத் தேடிக் கொண்டாள் என்பது எனக்குப் புரிந்தது போல் தோன்றியது. மறுபடியும் ஆரம்பிப்பது போல் ஏன் அப்படிச் செய்தாள் என்பதைப் புரிந்து கொண்டேன். இங்கு போலவே அங்கேயும், வாழ்க்கைச் சுடர்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணைந்து கொண்டிருந்த அந்த முதியோர் இல்லத்திலும் அந்தப் பொழுது ஒரு சோகமான இளைப்பாறல் போல் இருந்தது. மரணத்திற்கு அவ்வளவு அருகில் இருந்த அம்மா, விடுதலை பெற்று ஒரு புதிய வாழ்வைத் தொடங்குபவள் போல் உணர்ந்திருக்க வேண்டும். அவளுக்காக அழுவதற்கு யாருக்குமே உரிமை இருந்திருக்கவில்லை. ஆம், யாருக்குமேதான். நானும் ஒரு புதுவாழ்க்கை தொடங்கத் தயாராக இருப்பதுபோல் உணர்ந்தேன்” என்கிறான்.
அந்நியன் வாசிக்கும் போது எனக்கு நெருக்கமாய் தோன்றிய இன்னொரு நாவல் தஸ்தயேவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்”. குற்றமும் தண்டனையும் நாவலில் வருகிற ரஸ்கோல்னிகோவும், அந்நியனில் வருகிற மெர்சொவும் குணாதிசயங்களில் ஒத்த கருத்தை உடையவர்களாய் இருக்கின்றனர். எந்த ஒரு பெரிய முன்பகையும் இல்லாத, தங்களுக்கான எதிரிகள் என்று தீர்மானிக்க முடியாத மனிதர்களைக் கொல்கின்றனர். இருவருக்கும் அந்த கொலையைச் செய்ததில் பெரிய வருத்தமோ குற்றவுணர்வோ இல்லை. மெர்சோவின் எதிர்தரப்பு வக்கீல் ‘தங்களின் செய்கைக்கு நீங்கள் வருந்துகிறீர்களா?’ என்று கேட்டதற்கு, ‘உண்மையில் வருத்தம் என்று சொல்ல முடியாது. ஒரு வகை மனச்சங்கடம் அடைந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.’ என்கிறான் மெர்சோ. இது அப்படியே ரஸ்கோல்னிகோவுக்கும் பொருந்துகிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது! எவன் ஒருவன், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதில் வெற்றி அடைகிறானோ அவனுக்குத்தான் குதூகலமான வாழ்க்கை சாத்தியம் ஆகிறது! என்று “குற்றமும் தண்டனையும்” நாவலில் ஒரு இடத்தில் வரும். இது அப்படியே மெர்சோவுக்குப் பொருந்துகிறது. தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ள முடியாத மனிதர்கள்தான் ரஸ்கோல்னிகோவும் மெர்சோவும். இருவருக்குமான மற்றொரு பெரிய ஒற்றுமை ரஸ்கோல்னிகோவ் மற்றும் மெர்சொவை நேசிக்கிற பெண்கள். தாம் நேசிக்கிற அளவிற்கு தங்கள் காதலர்களால் நேசிக்கப்படவில்லை என்பது தெரிந்திருந்தும், எந்த எதிர்பார்ப்புமின்றி தங்களின் அன்பைத் தருகின்றனர்.
பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட இந்நாவலை நேரடியாக வெ.ஸ்ரீராம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இது போன்ற தத்துவ விசாரணைகளை மேற்கொள்ளும் நாவல்கள், பல சமயங்களில் மிகவும் கடினமான மொழியைக் கொண்டிருக்கும். ஆனால் இந்நாவல் மிக இலகுவான மொழியைக் கொண்டிருக்கிறது. ஆங்கில மொழிபெயர்ப்பை விட தமிழ் மொழிபெயர்ப்பு இன்னும் சிறப்பானதாய் இருக்கிறது. இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு இடத்தில் “the smell of flowers on the night air was coming through the open door” என்று வரும். இதைத் தமிழில் “திறந்த கதவின் வழியே மிதந்து வந்த இரவின் மனம், மலர்களின் சுகந்தம்” என்று மொழிபெயர்த்திருக்கிறார். “இரவின் மனம்” என்ற வார்த்தைகள் இவ்வரிகளை இன்னும் அழகானதாய் ஆக்கி விடுகின்றன.
இந்நாவல் 1967ஆம் வருடம் “The Stranger” என்ற பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்தது.
புற அந்நியன்களை விட அக அந்நியன்களே கவனிக்கப்பட வேண்டியவர்கள். வெளியில் இருக்கும் அந்நியன்கள் என்ன செய்வார்கள் என்பதைக்கூட யூகித்து விட முடியும். நமக்குள் இருக்கும் அந்நியன்களை யூகிப்பதுதான் பல சமயங்களில் கடினமானதாய் இருக்கிறது. நெருங்கியவர்களைவிட அந்நியன்களே பல தருணங்களில் சுவாரசியமான அனுபவங்களைத் தருகிறவர்களாய் இருக்கின்றனர். உங்கள் மனசாட்சியுடன் நீங்கள் உரையாடியிருப்பீர்கள். உங்களுக்கும் மனசாட்சிக்குமான உரையாடலை விலகி இருந்து ஒரு அந்நியனை போல் கேட்டதுண்டா? கேட்பதற்கு அந்நியனை வாசியுங்கள்.
அந்நியன் (The Stranger)
நூல் ஆசிரியர்: ஆல்பெர் காம்யு (Albert Camus)
தமிழில்: வெ.ஸ்ரீராம்
பதிப்பகம்: க்ரியா