
கனங்கள்
ஏன் இந்த கனங்கள்
இருத்தலின் நிறைவில்
கூடிப்போன கனங்களில்
களித்துப் பழகிய பின்
இல்லாது இருத்தலால்
ஏற்பட்ட வெற்றிடத்தால்
குறைந்த கனங்களை
இலகுவாகச் சுமந்திருக்க வேண்டும்
இருத்தலின் உச்சபட்ச கனத்தை
இலகுவாகச் சுமந்துவிட்டு
இல்லாது இருத்தலின் கனத்தை
சுமக்க முடியாமல் விழிக்கிறேன்
இல்லாது இருத்தலின்
இலகுவான கனத்தை
மெனக்கெட்டுத் தூக்கிப்
பழக வேண்டும்
இருத்தலை விட
இல்லாதிருத்தல் அதிகமாகிறது
வர வர
நானும் கொஞ்சம்
இல்லாமல் இருந்துகொள்கிறேன்…
***
மொட்டைமாடி
ஒரே ஊரின்
எல்லா மொட்டைமாடிகளிலும்
தெரிகிறது
வேறு வேறு ஊர்.
மொட்டைமாடிப் பட்டம்
போடும் வட்டம்
கட்டிடத்தை உள்வாங்கிக் கொள்கிறது.
அக்கா மகன் விட்ட
குட்டி விமானம்
மொட்டைமாடிக்குள் தருவிக்கிறது
குட்டி வானத்தை.
இரவில் பற்றவைத்த
திருட்டு சிகரெட்டின் சாம்பல்
மொட்டைமாடியில் தங்குவதேயில்லை.
ஒரே இரவின்
எல்லா மொட்டைமாடிகளிலும்
தெரிகிறது
வேறு வேறு வானம்…
***
பிரார்த்தனை
நான் பிரார்த்தனை செய்வதில்லை
என்று தெரிந்தே
‘எனக்காகப் ப்ரே பண்ணிக்கோ’,
என்று சொல்பவர்கள் உண்டு.
அவர்களுக்கும் தெரியும்
நான் சர்வநிச்சயமாகச்
செய்ய மாட்டேன் என்று.
உரையாடல் இறுதியில்
‘எல்லாம் சரியாத்தான் நடக்கும்’, எனும்
எனது பைசாப் பெறாத சொல்லாடலால்
அவர்கள் தேறிவிடுகிறார்கள்.
என்னால் தேற்றப்படும் அவர்களே
என்னையும் தேற்றிவிடுகிறார்கள்.
நான் தேற்றுபவர்கள்,
என்னைத் தேற்றுபவர்கள்,
எல்லாம் முக்கியம்தான் எனக்கு…
***
ரயில் பார்ப்பவன்
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொன்றைக் கொடுக்கிறது
ரயில்…
யானை மீது ஏறியதே இல்லை,
அம்பாரியில் செல்வது போல்
உணர வைக்கின்றன
ரயில் பயணங்கள்.
வேண்டிய இடத்தில் இறங்கிய பின்
வெளியேறவில்லை ஸ்டேசனிலிருந்து.
மணி பன்னிரெண்டு ஆக
சில நிமிடங்கள் இருக்கலாம்
அங்கேயேதான் நின்றிருந்தது
நான் வந்த ரயில்.
இன்றின் கடைசி ரயிலாக
இது இருக்கலாம்.
நாளையின் முதல் ரயிலாகவும்
இது இருக்கலாம்.
முதலாக இருந்தால் என்ன
கடைசியாக இருந்தால் என்ன
ரயில் பார்ப்பவனுக்கு…
******
வண்ணதாசன் அவர்களின் சாயலை உணரும் படியாக இருக்கிறது கவிதை வரிகள்