கட்டுரைகள்
Trending

‘POWER OF NOW;இத்தருணத்தின் அற்புதம்’ – முஜ்ஜம்மில்

கட்டுரை | வாசகசாலை

நாம் வாசிக்கும் புத்தகத்தைப் பலவேறாக அணுகுகிறோம். சில புத்தகங்கள் தற்காலிகமானதாக, சிலவைகள் எக்காலத்திலும் பயன்படுவதாக, சிலவற்றை வழிகாட்டியாகக் கருதுகிறோம். இதைப் பற்றி பல எழுத்தார்கள், அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். சில புத்தகங்களை  ஐஸ்கட்டி கரையும் வேகத்தில்  வாசித்துவிட முடியும், சில புத்தகங்களை மலையைக் குடைந்தெடுப்பதைப் போன்று பொறுமையாக வாசிக்க வேண்டியிருக்கும். அப்படியான  ஒரு புத்தகத்தைதான் சமீபத்தில் வாசித்தேன். அதுதான் Eckhart  Tolle எழுதிய Power Of Now.  இது சுய முன்னேற்ற நூல் போல் தோன்றினாலும் சுய முன்னேற்ற நூல் அல்ல. ஏனென்றால் சுய முன்னேற்றப் புத்தகங்களுக்கு என்றே சில தன்மைகள் இருக்கிறது. ஒரு பத்து  அறிவுரைகள் உதாரணங்களோடு இருக்கும். ஒவ்வொரு அறிவுரையும் ஒரு அத்தியாயமாக விளக்கங்களோடு நீண்டிருக்கும். பள்ளிக்காலத்தில் சுய முன்னேற்ற நூல்கள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். அவைகள் சிலவகைகளில் எனக்கு உதவியிருக்கிறது. அப்படியான புத்தகங்களில் மனம் ஒன்றிப்போக முடியாத ஒரு புறவயத்தன்மை(objectivity)தான் காணப்படும். ஆனால் சுயமாக உணர்ந்து அனுபவித்து எழுத்தப்படும் சில நூல்களில்  நம் ஆழ்மனதோடு உரையாடும் அற்புதத்தை காணமுடிகிறது. அவைகளை சுய ஆன்மீக வழிகாட்டி நூல் என்பதாகக் கொள்ளலாம். சிலவைகள் ஆன்மீகத் தேடல் உள்ளதாகக் கூட இருக்கும். ஹெஸ்ஸேயின்   ‘சித்தார்த்தா’ நாவல் அப்படியான ஒரு நூல். அதில் உள்ள ஆன்மீகம் சார்ந்த கண்டடைதல்  வாசிப்பவர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜே. கிருஷ்ணமூர்த்தியின் நூல்கள்,  சூஃபி கவிதைகள், ரூமியின் ‘மஸ்னவி’,  நிஜாமியின் கவிதைகள், தற்போது வாசித்துகொண்டிருக்கும் பரீதுதீன் அத்தாரின் ‘பறவைகளின் மாநாடு’  போன்ற நூல்கள்  மனதுக்கு மிக நெருக்கமாக  இருப்பதை உணர முடிகிறது. அவை சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடல்லாமல்,  நம் செயலிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.  டோலின் இந்த நூல் அவருடைய சொந்த அனுபவங்களின் வாயிலும், புத்தகங்களில் கண்டடைந்தவைகளின் மூலமும் எழுதப்பட்டுள்ளது. அவருடைய பலகால ஆழமான  சுய அவதானிப்பு  மூலம் கண்டடைந்தவற்றை  தான் எழுதியுள்ளார். புத்தகத்தைப் பற்றி எளிமையாக சொல்வதானால்  ‘கடந்தகாலத்தைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ யோசிக்காமல், நிகழ்காலத்தில் வாழ்வதின் அற்புதம்’ எனலாம்.

மிக எளிமையான,  கேட்டுப் பழகிப்போன ஒரு விஷயமாகத் தோன்றுகிறதல்லவா?  இதைப் பற்றி பல நூல்கள் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் இதை மிக ஆழமாக அணுகி, ஆன்மீகத் தளத்திற்கு கொண்டு செல்லும் பார்வைதான் நூல் வாசிப்பில் நம்மை ஆச்சரியப்படுத்தும். சுய முன்னேற்ற நூல்கள் நமக்கு வாழ்கையில் முன்னேறும் வழிமுறைகள் என்பதாக பட்டியல் போட்டு அதைப்  பலருடைய வாழ்வியல்   உதாரணங்களின் மூலம்  காட்டும். அது ஒரு முறை. ஆனால் இந்நூல் நம் சிந்தனை முறையில் உள்ள பிரச்சனையை, அதனால் நாம் உணரும் சிக்கல்களை  நம்மோடு சேர்ந்து உரையாடுகிறது.  மதத்தின் இதயம்  ஆன்மிகம் என்பதாக ஆன்மீகவாதிகள் கூறுவார்கள். மதங்கள் வேறுபாடுள்ளவைகளாக  இருந்தாலும் எல்லா மதங்களிலும் உள்ள ஆன்மீக பாதைகளில் ஒற்றுமை இருக்கிறது.

டோல் இந்த நூலை எழுதுவதுற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான சம்பவம் இருக்கிறது. அவருடைய 28 வயது வரை கடுமையான மனச் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வந்த அவர், ஒருநாள் மன நெருக்கடி மிக அதிகமாக ஆன நிலையில் தூங்கச் சென்றார். மறுநாள் காலையில் எழும்போது ஆச்சரியப்படும் வகையில் மிக ஆழமான ஒரு அமைதியை, நிம்மதியை அவர் உணர்கிறார். அதே நிலையில் அருகில் உள்ள  பசும்புல் பரப்பில் உள்ள நாற்காலியில் அமர்கிறார். கிட்டத்தட்ட 2 வருடகாலம் மனதில் ஆழமான ஒரு இன்பத்தோடு  தினமும் அந்த இடத்திலேயே  உட்க்கார்ந்திருக்கிறார். தோரோ வால்டன் குளத்தருகே தங்கியதைப் போல இவர் இவ்விடத்திலே உட்கார்ந்திருக்கிறார்.  அவருடைய முனைவர் பட்ட ஆய்வையும் பாதியிலேயே விட்டுவிட்டார். பின்னாட்களில் அதே ஆழமான அமைதியோடு தான் கண்டடைந்த உண்மைகள்,  கண்டடைதல்களைப் பிறருக்கும் சொல்லிதர ஆரம்பித்தார். அதை நூல்களாக வெளியிட்டு அவை லட்சக்கணக்கான பிரதிகள் விற்றன. பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.

Eckhart  Tolle

டோல் சொல்வது ‘நம் பிரச்சனைகள் எல்லாம் நாம் மனதில் கற்பனை செய்துகொண்டவைதான். நடந்து முடிந்த சில கசப்பான அனுபவங்களின் மூலம் எதிர்க்காலத்தைப் பற்றி நமக்குள் எழும் பயங்கள், நம்முடைய நேரத்தை சாப்பிட்டுவிடுவதோடல்லாமல் நம்முடைய மனச் சிக்கல்களுக்கும் காரணமாக ஆகின்றன. நாம்  நிகழ்காலத்தின் இன்பத்தை மறந்து விடுகிறோம். உண்மையில் நமக்கு நடக்கும் பிரச்சனைகளை விட அதைப்  பற்றிய நம்முடைய பயங்கள்தான் 90 சதவீதம் உள்ளன. இப்பெரும் பிரபஞ்சத்தின் ஒரு சிறு துளிதான் மனிதன். உலகில் நடக்கும் நிகழ்வுகளை  எப்படி நாம் அதற்கு வெளியில் நின்று காண்கிறோமோ அதேபோல் நம்மையே நாம் வெளியில் இருந்து  காண வேண்டும் என்கிறார். நம்முடைய எண்ணங்கள், சிந்தனை ஓட்டங்களை, உணர்வுகளை  நாம் ஒரு வெளி நபராக இருந்து அவதானிக்க வேண்டும். கோபம் வரும்போது அதை நாம் வெளியிலிருந்து கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். டோல் சொல்வது நிகழ்காலத்தில் வாழ்வதென்பது மகிழ்ச்சியாக வாழ்வதென்று   அர்த்தமல்ல, மாறாக கவலையோ மகிழ்ச்சியோ இரு நிலைகளிலும் ஆழமான ஒரு அமைதியை உணர்வது. இதைத்தான் அவர்  எவ்வளவு பெரும் சிக்கலான நேரமாக இருந்தாலும் ஆழமான ஒரு அமைதியை தன்னால் அனுபவிக்க முடிகிறதென்று சொல்கிறார். இந்தப் பயிற்சியை பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளின்போது கூட செய்து பலன்பெற முடியும் என்கிறார். அதாவது வலியை வெளியிலிருந்து நாம் கவனிப்பது. இவ்வுலகின் ஒரு அங்கம்தான் மனிதன். மனிதனுக்கென்று தனி வடிவமோ, அடையாளமோ கிடையாது. இவை நாம் ஏற்படுத்திக்கொண்டவைதான். ஒரு மீனுக்கு ‘மீன்’ என்று பெயரை நாம்தான் வைக்கிறோம். அதுவாக சொல்லிக்கொள்ளவில்லை. நமக்கென்று பெயர், அடையாளம், என்று கொஞ்சம் கொஞ்சமாக நாம் நம்மை தனி வடிவமாகப் பிரித்து உணர, உணர  பிறரிலிருந்து பிரிந்து நிற்கிறோம். இதனால்  நம் ஈகோ பூதாகரமாக வளர்ந்து, அது  பிறர் மேல் வெறுப்பு உண்டாகி வன்முறை செய்யத்  துணைபோகிறது. டோல் சொல்ல வருவது முழு உலகையும் ஒரு உடலாகப் பார்க்கும் பார்வை. நாம் எல்லாம் அவ்வுடலின் உறுப்புகள். ஒரு உறுப்பு இன்னொரு உறுப்பிடம் சண்டை கொள்ளுமா? எல்லாம் இணைந்துதானே இயக்கமே நடைபெறுகிறது.

இத்தருணத்தில்  வாழ்வதென்றால்   விழிப்பு  (conscious) நிலையில் இருப்பது. அதைத்தான் Being  என்கிறார்  டோல். இம்மாபெரும் பிரபஞ்சத்தின் ஒரு சிறு துகள்தான்  மனிதன்.  அந்தத் துகள்  எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல் பார்க்க வேண்டும். இந்த நிலைதான் ஆன்மீகவாதிகளின் நிலை என்றும் இது உயர் கற்பனையாற்றலுக்குமான நிலை என்பதாகவும் கூறுகிறார். அப்படியென்றால் எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாமல் வெறுமனே உட்கார்ந்து இருக்க வேண்டும் என்பதாக டோல் சொல்கிறாரா? என்ற கேள்வி எழும். அவர் சொல்ல வருவது  நாம் செய்ய நினைப்பதை செய்யலாம், அதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடலாம். ஆனால் அதனால் ஏற்ப்படக் கூடிய பலன் எதுவாக இருந்தாலும் அதை   வெளிநபராக இருந்து கவனிக்க வேண்டும். அது மகிழ்ச்சியானதாகவும் இருக்கலாம், சோகமானதாகவும்  இருக்கலாம்.

இவற்றை வெறுமனே அவதானிப்பவராக இருக்கும் நிலைதான் Being என்ற இத்தருணத்தில் இருப்பது என்பதின் அர்த்தம். இதை நன்கு புரிந்துகொள்ள டோல் பரிந்துரைக்கும் திரைப்படங்களில் ஒன்றான  ‘A  PEACEFUL WARRIOR’   என்ற படத்தைப் பாருங்கள். மிக அற்புதமான ஒரு படம்.   டோல் பேசக்கூடிய பல  விஷயங்களை வேகமாக வாசித்துக் கடந்துவிட முடியாது. நிதானமாக பல வாசிப்புகள் கொடுத்து  புரிந்துகொள்ள வேண்டும் . அப்போதுதான் அவை  சிறுகச் சிறுக நமக்குள் இறங்கி வேர் பிடிக்கும். POWER OF NOW புத்தகத்தைப்  பற்றிய ஒரு முன்புரிதலுக்கு இளம் திரைப்பட இயக்குநர் ஒருவரோடு  இப்புத்தகத்தைப் பற்றியும், அவருடைய அனுபவங்கள்,  மற்றும் அந்த இயக்குநர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் ஆழமான பதில்கள் கொண்ட ஒரு காணொளி YOUTUBE ல் கிடைக்கிறது. ECHART TOLLE-POWER OF NOW என்று தேடினால் கிடைக்கும். ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வார்த்தைகள் போலவே எக்கார்ட் டோல்  அவர்களின் வார்த்தைகளும் மிக எளிமையானதாக, ஆனால் மனதின் ஆழத்தில் ஊடுருவக் கூடிய சக்தியுள்ளதாக உள்ளது. POWER OF NOW  நிச்சயம் வாசிக்கப்படவேண்டிய ஒரு புத்தகம்.

*** ***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button