கட்டுரைகள்
Trending

சேர்ந்து கூடி முரண்பட்டு விவாதித்த வகுப்பறை- ஆசிரிய முகமூடி அகற்றி- நூல் விமர்சனம்

ஹரீஷ்

அந்த ஆசிரியருக்கு அப்பள்ளியில் அதுதான் முதல் வகுப்பு. நியூயார்கில் உள்ள தொழிற்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிக்கு சேர்கிறார். கூச்சலிடும், சண்டையிடும், கட்டுப்பட மறுக்கும் விடலைகளின்  வகுப்பு அது. ஆசிரியர் நுழைந்தவுடன் ஒரு மாணவன் தான் மதிய உணவிற்காக கொண்டுவந்திருந்த சான்ட்விச்சை இன்னொரு மாணவன் மீது எறிகிறான்.  இத்தருணத்தில், ஆசிரியர் சாண்ட்விச்சை எறிந்த மாணவனிடம் அதை எடுத்துக் குப்பையில் போடச்சொல்லவேண்டும். அல்லது எதற்கு வம்பு என்றெண்ணி தானே அதை எடுத்து குப்பையில் போடவேண்டும். ஆனால் அந்த ஆசிரியர் இவ்வாறெல்லாம் எதுவும் செய்யவில்லை. மாறாக கீழே தூக்கி எறியப்பட்ட சாண்ட்விச்சை எடுத்து சாப்பிடுகிறார். மாணவர்களுக்கு முதல் ஆச்சிரியம்.

இப்படி தனது முதல் வகுப்பிலிருந்து தொடங்கி ஆசிரியர்பணிக்காலம் முழுவதும் மாணவர்கள் விரும்பிய ஆசிரியராகத் திகழ்ந்தவர் பிராங்க் மக்கோர்ட். மக்கோர்ட் எழுதிய “Teacher Man” என்ற  புத்தகத்தின் வாசிப்பனுபவத்தை பேரா. ச. மாடசாமி “ஆசிரிய முகமூடி அகற்றி”  என்று நூலாக எழுதியுள்ளார்.

‘நீ அவர்களைப் பார்த்துக் கத்தினாலோ, திட்டினாலோ அவர்களை இழக்கிறாய். உன் சத்தத்துக்குப் பிறகு, சலனமற்று மௌனமாய் அவர்கள் வகுப்பறையில் உட்கார்ந்திருப்பது உன்னைத்திருப்பி அடிப்பது போல. வகுப்பறை அத்துடன் முடிந்துவிட்டது.’ என்பது மக்கோர்ட்டின் கூற்று. முதல் வகுப்பில் ‘தேரிய’ மக்கோர்ட் தொடர்ந்து  மாணவர்களை மையப்படுத்திய வகுப்பறையை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால் அதில் ஒன்றுகூட பள்ளி விதிமுறைகளில் இல்லாதவை. மாணவர்களை அவர்களின் அகச்  சிக்கல்களிலிருந்து விடுவிப்பதையே  மக்கோர்ட் முதன்மையாகக் கருதுகிறார். முதலில் தன்னுடைய சொந்த வாழ்வு குறித்து அவர்களிடம் உரையாடுகிறார். வறுமை காரணமாக தனது அன்னை தன்னை விற்க முற்பட்ட கதையிலிருந்து, ஆசிரியப்பணிக்கு வருவதற்கு முன் தான் செய்த பல்வேறு பணிகள் வரை மாணவர்களிடம் சகஜமாக உரையாடுகிறார். இதன் எதிரொலியாக  மாணவ மாணவியரும் தங்கள் சொந்தக் கதைகளைக் கூற ஆரம்பிக்கிறார்கள்.

ஹரீஷ்
ஹரீஷ்

இப்படி உரையாடிக் கொண்டே இருந்தால் பாடம் எப்பொழுது நடத்துவது? ஆசிரியர்கள் – பெற்றோர்கள் சந்திப்பொன்றில் ஒரு பெற்றோர் இதை நேரடியாகவே மக்கோர்ட்டிடம் கேட்கிறார். மக்கோர்ட்டும் அதற்கான முயற்சியில் இறங்குகிறார். இலக்கணப் பாடத்தை துவங்கும்பொருட்டு “John went to  store ” என்ற வாக்கியத்தில் உள்ள எழுவாய் பற்றி கேள்வி எழுப்புகிறார். “போச்சுடா, இவரும்  ஆரம்பிச்சுட்டாரா? ” என்ற மாணவர்களின் முணுமுணுப்பு துவங்கிவிட்டது. ஆனால் பாடம் எடுத்தாகவேண்டுமே! மக்கோர்ட் இப்போது கேள்வியை இப்படிக் கேட்கிறார் –  “Why did John go to the store?” வகுப்பறை உற்சாகமாகிறது.  ஜான் கடைக்கு சென்ற கதையை மாணவர்கள் ஒரு சங்கிலித் தொடராக சுவாரசியமாக கூறுகின்றனர்.

சரி,இவாறாக இலக்கணம் கற்பிக்கும் முறையை ஒரு வடிவத்திற்கு கொண்டுவந்தாயிற்று. மாணவர்களை எப்படி எழுத வைப்பது. அதற்கும் மக்கோர்ட் ஒரு வழி கண்டுபிடித்தார். பள்ளிக்கு விடுப்பு எடுக்கும் மாணவர்கள் ‘வருத்தக் கடிதம்’ என்று ஒன்று எழுதிக் கொண்டு வரவேண்டும். இவை பெற்றோரிடமிருந்து வர வேண்டிய கடிதங்கள் என்றாலும், பெரும்பாலும் இவற்றை எழுதுவது மாணவர்களே என்று மக்கோர்ட் அறிந்துவைத்திருந்தார். பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி தங்கள் விருப்பப்படி கற்பனை கலந்து விருப்பக்கடிதங்கள் எழுதுமாறு மாணவர்களிடம் மக்கோர்ட் கூறுகிறார். மாணவர்கள் மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கையில் பள்ளி முதல்வரும், கல்வித்துறை அதிகாரியும் வகுப்பறையில் நுழைந்து நோட்டமிடுகின்றனர். சில மாணவர்கள் எழுதிய கடிதங்களை வாசிக்கின்றனர். “அதிகாரி உங்களை காண விரும்புகிறார்” என்று கூறி தலைமை ஆசிரியர் வகுப்பறையிலிருந்து விடைபெறுகிறார். பயந்தபடியே முதல்வர் அறைக்குள் மக்கோர்ட் செல்கிறார். “பிரமாதம், இப்படித்தான் இறங்கிவந்து பிள்ளைகளுக்குப் புரிகிறா மாதிரி கத்துக் கொடுக்கணும்” என்கிறார் அதிகாரி. இதைவிட ஒரு ஆசிரியருக்கு உற்சாகம் தரக்கூடிய விஷயம் வேறெதுவாக இருக்க முடியும்.

ச.மாடசாமி
ச.மாடசாமி

“Teacher Man” நூலில் மக்கோர்ட் தனது பரீட்சார்த்த முயற்சிகளை மட்டும் பதிவு செய்யவில்லை. அமெரிக்க சமூகத்தில் நிலவிவந்த நிறம் சார்ந்த வேறுபாடுகளால் தான் சந்தித்த இடர்களையும் பதிவு செய்கிறார். பெல் என்ற கறுப்பின மாணவன் ஒருவன் மிகவும் அலங்காரமான வார்த்தைகளால் எழுதக்  கூடியவன். மக்கோர்ட் அம்மாணவனிடம் வார்த்தைகளை அலங்காரமாக கோர்த்து எழுதுவது வாசிப்பிற்கு தடையாக இருக்கும். எழுத்தில் எளிமையே பிரதானம் என்று கூறுகிறார். தான் ஒரு கறுப்பின மாணவன் என்பதால் மக்கோர்ட் தன்னை அங்கீகரிக்க மறுக்கிறார் என்று பெல் கூறுகிறான். அப்படியெல்லாம் இல்லை. நீ எப்படி வேண்டுமானாலும் எழுது என்று மக்கோர்ட் சொல்ல,” தங்களின் இரக்கத்தை நான் கோரவில்லை. தங்கள் விருப்பப்படி எனது எழுத்தை நீங்கள் மதிப்பிட்டுக்குக்  கொள்ளலாம்” என்கிறான் பெல். கறுப்பின மக்கள் அனுபவிக்கும் அகவய பிரச்சனைகளை இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

 

தனது பலவீனங்களையும் மக்கோர்ட் நேர்மையாகவே எழுதியிருக்கிறார். ஒருமுறை பென்னி என்ற மாணவனிடம் ஒரு விஷயத்தில் தோற்றுப் போகிறார். அவரது ஈகோ பென்னியை மிதமாகவேனும் பழிவாங்க துடிக்கிறது. பென்னி அருகே சென்று சாக்பீஸை கீழேபோட்டு அதை குனிந்து எடுக்கையில் பென்னியின் காலை வாரிவிடுகிறார் மக்கோர்ட். பென்னி ஏதும் கூறாமல் அமைதியாக இருக்கிறான். அவன் ஒரு கராத்தே மாணவன். பின்னாளில் பள்ளியை விட்டுச் சென்ற பென்னியை  மக்கோர்ட் தெருவில் சந்திக்கிறார். தற்காப்பு வீரக்கலைகளை கற்றுக் கொண்டிருப்பதாக பென்னி கூறுகிறான். “எப்போதெல்லாம் நன்றாகக் கற்று வருகிறோம் என்ற பெருமிதம் வருகிறதோ அப்போதெல்லாம் போய்க் கக்கூஸ் கழுவிட்டு வா” என்று தன் குரு கூறுவதாக பென்னி சொல்கிறான். தன் காலை வாரிவிட்ட மக்கோர்ட்டை பார்த்தும் பென்னி இவ்வாறு கூறுகிறான், ” நீங்கள் உங்கள் முகத்தை அன்று காப்பாற்ற வேண்டியிருந்தது. அதனால் என் காலை வாரிவிட்டீர்கள். ஆனால், இனி உங்களை பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள நினைத்தால், நீங்கள் கட்டாயம் வீட்டுக்குப்போய் கக்கூஸ் கழுவ வேண்டும்,”.

இப்படியாக, மக்கோர்ட்டின் வகுப்பறை அனுபவங்கள் நீள்கிறது. இந்த அனுபவங்களை மக்கோர்ட் எழுதிய வயதைக் கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும். “Teacher Man” நூலை மக்கோர்ட் எழுதியபோது அவருக்கு வயது 75. சுயவிமர்சனம்தான் மக்கோர்ட்டின் பலம் என்று கூறுகிறார் பேரா.  மாடசாமி. வெற்றியின்போது, இது சரியான வெற்றிதானா என்று தனக்குள் கேள்வி எழுப்புகிறார். தோல்வியின்போது இதில் தன் தவறு என்ன என்பதை தேடிப்பார்க்கிறார். “தனித்து விலகி மௌனமாய் இருப்பதைவிட, சேர்ந்து கூடி முரண்பட்டு விவாதிப்பது நல்லது” என்கிறார் மக்கோர்ட். இது ஆசிரியர்களுக்கான வார்த்தைகள் மட்டுமல்ல. நம் அனைவருக்குமான வார்த்தைகள்.

ஆசிரிய முகமூடி அகற்றி

பேரா. ச. மாடசாமி

அறிவியல் வெளியீடு

விலை – ரூ. 50

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button