
இருபதுகளின் கடைசியில்
முதல்பிரசவம்
குழந்தையின் தலைகொஞ்சம் பெரிதென
கிழித்த இடத்தில் ஐந்தாறு தையல்கள்
அதன் பெயர் சுகப்பிரசவம் .
பின் அசந்தர்ப்பத்தில் உயிர்த்ததென
அபார்ஷன் ஒருமுறை
முதிர்ந்த முப்பதுகளில் ..
“ரிஸ்க் வேண்டாம்
சிசேரியன் நல்லது”
அடிவயிற்றின் குறுக்கில்
ஆயிரங்கால் பூரானென தையல்.
இப்போது இடம்பெயர்ந்திருந்தது வலி
மத்திய நாற்பதுகளில்
சட்டென்று மாறியது
ஹார்மோன்களின் வானிலை
மாதம் மும்மாரி பொழிந்தது
மனசின் உதிரத்தோடு
உடம்பின் உதிரம்.
“இரண்டு குழந்தை பெத்தாச்சே
இனிமே எதுக்கு ?!
எடுத்திடலாம்.”
ஒரு கருப்பையின் பயன் அவ்வளவேதானா
கேள்விகள் மனதிலிருக்க
சரியென்றே உரைத்தாள்.
கிழித்து கிழித்து தைத்த துணியென
பெருத்த வயிறுடன்
நைந்த மனது..
பெண்ணிற்கு
தையல் என்பது காரணப்பெயர் தானோ?!
என் மனதிலும் அடிக்கடி தோன்றும் கவிதை கரு இது…நல்லாயிருக்குங்க ஜான்ஸி