
பனிப்பிரதேசமொன்றில்
மேகங்கள் வழிந்தோடிய
கரும்பாறையொன்றை அணைத்தபடி
நெடுநேரமாய் நிற்கிறான்.
தளர்ந்து நிற்கும்
அவன் தனிமைக்குள்
மெதுவாகத் தன் முதுகின் ஈரத்தால்
ஊடுறுவுகிறது கரங்களற்ற பாறை.
மீள்வதற்கு வழியற்ற
கார்கால இரவுகளில்
மெல்ல இறங்கும் ஈரம்
பிரிதுயர் நிறைந்திருக்கும்
அவன் வீட்டுச் சுவர்களில்
பூக்கத்தொடங்குகிறது.
அணைப்பதற்கு ஏதுவாக
கட்டப்படாத அச்சுவர்களில்
முதுகு சாய்ந்து அமர்ந்திருக்கிறது
மழைவாசம் அரும்பும் அவள் நினைவு.