ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்- மொழிபெயர்ப்பு நாவல் விமர்சனம்
க.விக்னேஷ்வரன்

யார் இந்த தக்கிகள்? என்று நீங்கள் கேட்கலாம் சின்ன உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஒரு பயணம் போகிறீர்கள். நல்ல பயணம், நல்ல நினைவுகள் என்று போய் கொண்டிருக்கிறது. நடுவில் உங்களை மாதிரி பயணம் செய்யும் மனிதர்களை சந்திக்கிறீர்கள். அவர்கள் தங்களை உங்களிடம் அறிமுகம் செய்துகொண்டு உங்களுடன் துணை வருவதாக சொல்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் இணைந்துக் கொண்டு பயணத்தை தொடர்கிறீர்கள். பயணத்தில் அவர்கள் அன்பாக நடந்துக் கொள்கிறார்கள். ஆடல், பாடல் என்று பயணம் தொடர்கிறது. சில நாட்களுக்கு பிறகு ஒரு இடத்தில் ஓய்வு எடுக்கலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் அதற்கு சம்மதம் தெரிவித்து அங்கு ஓய்வாக அமர்கிற இரவு வருகிறது. எல்லாரும் பேசிக் கொண்டு இருக்கும் போது அந்த குழுவின் தலைவன் தனது கூட்டத்தை பார்த்து ’புகையிலை எடுங்கள்’ என்று சொன்ன அடுத்த கணம் உங்கள் அனைவரின் கழுத்திலும் அவர்களின் சுருக்கு துணி விழுகிறது. ஐந்து நிமிடத்தில் உங்களின் பிணங்கள் மட்டும் அங்கிருக்கிறது. உடனடியாக வேகமாக செயல்படும் அவர்கள் உங்கள் மொத்த பணத்தையும், நகைகளையும் கொள்ளை அடிக்கிறார்கள். நீங்கள் போட்டு இருக்கும் உடமைகளை கூட அவர்கள் விடுவது இல்லை உங்கள் நிர்வாணமான பிணத்தை ஏற்கனவே தாங்கள் தோண்டி வைத்திருக்கும் குழியில் போட்டு முடி விடுவார்கள் அதுவும் ஒரே குழியில் உங்களுடன் இருந்த அத்தனை பேரின் பிணங்களையும் சேர்த்து. இப்போது சொல்லுங்கள் தக்கிகள் என்ற சொல் கேட்டவுடன் ஏன் அத்தனை பேரின் இதயத்திலும் பயத்தை விதைத்தது என்று.
இனி நாவலின் கதைக்கு வருவோம்.
தக்கிகள் என்று கொள்ளை கூட்டத்தை கைது செய்து சிறையில் அடைக்கும் ஒரு ஆங்கில அதிகாரியிடம் ஒரு வயதான தக்கி வேலை செய்கிறான். அவனுடைய வேலை தன்னுடைய பழைய சக தக்கிகளை ஆங்கில அதிகாரிகளிடம் காட்டி தந்து தண்டனை வாங்கி தருவது. ஒருநாள் அந்த தக்கி தனது ஆங்கில அதிகாரியிடம் தனது கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறான். மொத்த நாவலும் அங்கிருந்த விரிவடைய தொடங்குகிறது.
தக்கிகள் என்றால் அடிப்படையில் ஒரு ரகசிய கொள்ளை கூட்டம் அதிலும் தனது இரைகளை கொலை செய்வதை மட்டும் கடைபிடிக்கும் கொள்ளை கூட்டம். இவர்கள் மத வேறுபாடுகள் அற்ற இனக்குழுக்கள். தங்களது கிராமத்தில் குறிப்பிட்ட காலம் வரை அமைதியாக வாழ்வார்கள். தங்கள் கையில் இருக்கும் செல்வங்கள் கரைந்து போன பின்பு தன்னை போல் உள்ள சக தக்கிகளுக்கு செய்தி அனுப்புவார்கள்.
அனைவரும் ஒன்றாக கூடி விவாதித்து தங்களது குலதெய்வமான பவானி தாய்க்கு (ஒரு தக்கி எந்த மதத்தை பின்பற்றினாலும் அவனை பொருத்தவரை அவன் குல தெய்வம் பவானி தாய் தான்) படையல் இட்டு, குறி கேட்பார்கள். குறி மற்றும் சரியான சகுனங்கள் கிடைத்தால் தங்களது வேட்டைக்கு கிளம்புவார்கள். கிட்டத்தட்ட இந்த அணியில் குறைந்தபட்சம் ஐம்பதிலிருந்து நூறு தக்கிகள் இருப்பார்கள். பாடகர்கள், சமையல் செய்பவர்கள், எடுபிடி வேலை செய்பவர்கள்,ஒற்றர்கள், கடைசியாக தாங்கள் கொல்லும் மனிதர்களை குழி தோண்டி புதைக்க உதவும் மனிதர்கள் என்ற பெரிய கூட்டமாக தான் கிளம்புவார்கள்.
தங்களை ஒரு சிப்பாய்கள் மாதிரி மாற்றி கொள்வார்கள். நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் தங்களை மதிப்புக்குரிய மனிதர்களாக மாற்றி தோற்றமளிப்பார்கள்.
அப்போதைய சாலைகளை பற்றி சொல்ல வேண்டும். சொல்லப் போனால் அப்போது இந்தியா என்ற தேசம் இல்லை. பெரும்பாலும் சின்ன, சின்ன அரசுகள் மற்றும் பெரிய, பெரிய ராஜ்யங்கள் தான் இருந்தது இவை தக்கிகளுக்கு பெரிதாக உதவியது. பாதுகாப்பான ஆள் நடமாட்டமே இல்லாத சாலைகள் அவர்களின் அத்தனை கொள்ளை மற்றும் கொலைகளுக்கு உதவியது.
கூட்டமாக பயணிக்கும் தக்கிகள் பெரிய நகரங்களை அடைந்தவுடன். நகருக்கு வெளியே கூடாரம் அமைத்து தங்குவார்கள். அதில் நான்கு அல்லது ஐந்து பேர் மட்டும் நகருக்குள்ளே உளவு பார்க்க போவார்கள். நகரத்தில் அவர்களுக்கு உளவு சொல்ல வேறு தக்கிகள் இருப்பார்கள். அவர்கள் சொல்லும் பயணிகளை குறித்துக் கொண்டு அவர்களிடம் சென்று பழகுவார்கள். அவர்களுக்கு பயணத்தில் பாதுகாப்பு தருவதாக உறுதி தந்து அவர்களை தங்கள் பயணத்தில் இணைந்து கொள்வார்கள். ஆடல், பாடல் என்று அவர்களை மகிழ்வித்து சரியான இடத்தில் சரியான நேரத்தில் தங்கள் கைகளில் இருக்கும் துணியின் உதவியுடன் அவர்களின் கழுத்தில் டக்கென்று சுருக்கு போட்டு அந்த பயணிகளின் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களின் கதையை ஒரே நேரத்தில் முடிப்பார்கள். தக்கிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிகம் கொல்வது இல்லை முடிந்தவரைக்கும் அவர்களை தங்கள் மனைவி மற்றும் பிள்ளையாக மாற்ற முயல்கிறார்கள் அதற்கு சம்மதிக்கவில்லை எனில் அவர்களுக்கும் சுருக்கு கயிறு தான். இப்படி கொல்லப்பட்ட அத்தனை பயணிகளை தங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி தோண்டி உள்ள குழியில் போட்டு புதைந்துவிட்டு தங்களது அடுத்த வேட்டையை தேடி கிளம்புவார்கள்.
இதுதான் தக்கிகள் வாழ்வு அவர்கள் கொலை செய்வதை பாவமாக பார்ப்பதில்லை. அவர்களை பொருத்தவரை அது மிகவும் புனிதமான பணி இதற்காக தான் கடவுள் பூமியில் தங்களை படைத்துள்ளார் என்பது தக்கிகளின் எண்ணம்.
இந்த கதைகளை சொல்லும் தக்கி மொத்தமாக செய்யும் கொலைகளின் எண்ணிக்கை மட்டும் 750 (இதில் இருபது வருட ஜெயில் தண்டனை வேறு.) இல்லையெனில் ஆயிரம் கொலை செய்திருப்பேன் சகாப் என்று அந்த தக்கி ஒரு இடத்தில் கூறுவான்.
மொத்த நாவலும் அந்த கதை சொல்லும் தக்கியின் பார்வையில் விரிகிறது. அவனது பெற்றோர்களை தக்கி ஒருவன் ஏமாற்றி கொலை செய்து, அவனை தத்து எடுத்து வளர்க்கிறான் . இளைஞனாக மாறி அவனும் தக்கியாக மாறி தனது கொள்ளை மற்றும் கொலை தொழிலை தொடங்குகிறான்.
அவன் வாழ்க்கை கதை தான் இந்த மொத்த நாவலும், அவன் செய்யும் முதல் கொலை, அவனது கொலை சாகசங்கள்,அவனது வீரம், அவனது காதல்கள என்று வரலாறு விரிகிறது…. வாசிக்க வாசிக்க நமக்கு மனதில் பயம் கூடுகிறது. வரலாற்றில் இப்படியும் ஒரு இனக்குழு எத்தனை மனிதர்களை அழித்து, அவர்கள் உடல்கள் கூட கிடைக்காமல் காணாமல் செய்துள்ளது என்று நினைக்கும் போது ரத்தம் உறைகிறது.
கடைசியாக நிறைய மனிதர்கள் காணாமல் போகவவே, ஆங்கில அரசாங்கம் திறமையான அதிகாரிகளை வைத்து மொத்த தக்கி கூட்டத்தையும் அழித்து ஒழித்துள்ளனர்.
(தக்கர் கொள்ளைர்கள் என்ற புத்தகத்தில் இதைப்பற்றி விரிவாக இரா.வரதராசன் எழுதியுள்ளார். )
மொத்தத்தில் தக்கிகளின் வரலாறு என்பது இந்திய வரலாற்றில் இருண்ட பக்கங்களே அந்த பக்கங்கள் பற்றி அறிய இந்த நூல் பெரிதாக நமக்கு உதவுகிறது.
தமிழில் போப்பு அவர்களின் மொழிபெயர்ப்பும் இன்னும் வாசிப்பதற்கு சுவராசியத்தை தருகிறது.
‘ஒரு வழிப்பறி கொள்ளையின் ஒப்புதல் வாக்குமூலம் ‘ (ஆங்கிலத்தில் Confession of thug ) எழுதியவர் பிலிப் மெடோஸ் டெய்லர். தமிழில் போப்பு அவர்களின் மொழிபெயர்ப்பில் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.