கட்டுரைகள்

விடுதலைக்குரல் கேட்கும் மலர்வதியின் “காட்டுக்குட்டி” – நாவல் விமர்சனம்

-சுப்ரபாரதிமணியன்

குடும்பமாய் நிலைத்து நிற்க ஆசைப்படும் இரு பெண்களின் கதை மலர்வதியின் “காட்டுக்குட்டி” நாவல். ஆனால் குடும்ப அமைப்பைத் தகர்க்க எத்தனை சதிகள், துன்பங்கள். ரமணி செய்த தவறு ஒருவனைக் காதலித்ததுதான். அவனால் கைவிடப்பட்ட போது  சூழ்நிலைகளால் அவள் விபச்சாரியாக்கப்பட்டாள். மகள் காட்டுக்குட்டி என்ற குட்டி மணி அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று ரமணி ஆசைப்படுகிறாள்.அவளை அதிலிருந்து மீட்டெடுக்க நடக்கும் போராட்டங்களை அதிலும் குறிப்பாக உளவியல் சிரமங்களை இந்நாவல் சித்தரிக்கிறது. பல நாவல்களில், திரைப்படங்களில் சொல்லப்பட்ட கதை அதை மலர்வதி தன் கன்னியாகுமரிப் பின்னணியில் நெஞ்சம் பதைக்க வைக்கிற அளவில் கரடுமுரடாய் சொல்கிறார்.

காட்டுக்குட்டி என்றால் அப்பன் பெயர் தெரியாமல் பிறக்கும் குழந்தை மீது சுமத்தப்படும் அவச்சொல்லாகும். வாலிப வயதைத் தொட்டாலும் அவள் எல்லோரின் பார்வையிலும் காட்டுக்குட்டிதான்.காலந்தோறும் அந்தப் பெயர்தான். அப்பெயரை மாற்ற அம்மா ரமணி பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறாள். ரமணி காதலனால் வஞ்சிக்கப்பட்டவள். அதன் பின்னுமிரண்டு ஆண்களை நம்பிப் போய் ஏமாந்தவள். உதிரி வேலை செய்யும் அப்பு என்பவன் யாராவது வயதானவர்கள் சாகக் கிடந்தால் அவர்களைப் பராமரிப்பது, தேவையானவர்களுக்கு உதவி செய்வது என்று இருப்பவன். அப்பு கூட ரமணிக்கு ஏதாவது உதவி செய்ய நினைக்கிறான். ஆனால் ஆண் அதிகாரம் அவனையும் தூரத் துரத்துகிறது. ஆண்களின் உளவியலை மாற்றியும் இறுக்கமாகவும் வைத்திருக்கும் சமூகம் இந்தப் பெண்கள் மீதும் தொடர்ந்து வன்முறையைச் செலுத்தி வருகிறது. அதன் தொடர் விளைவுகள் மனப்பிறழ்வு நிலைக்குக் கூடக் கொண்டு சென்று விடும். அதிலிருந்ததெல்லாம் ரமணி தப்பிக்கிறாள். ரமணி அவள் வீட்டருகில் நிற்கும் ஒற்றை மரமாய், சாட்சியாய் நின்றுக் கொண்டே இருக்கிறாள். கொள்ளையடித்தும் ஊர் வாயில் விழுந்தும் இம்சிக்கும் ஒரு கும்பல் குட்டி மணியை அபகரிக்கப்பார்க்கிறதும். ரமணி மீண்டெழுவது முக்கியமாக இருக்கிறது. வெறும் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொள்வது போல் அவள் வாழ்க்கை அமையவில்லை. “செத்தவன் குண்டி வடக்கையா தெற்கையா . அவனுக்கு தெரியாது” என்பது போல் அல்லாடும் வாழ்க்கையை விவரிக்கிறார்.

குட்டி மணி பாதி கிழவனுக்குக் கூட திருமணம் செய்து வைக்க இயலாதபடி தனித்து விடப்பட்டவள். ”ஒணந்து போன பொறகு எம்புடு வெள்ளம் ஊத்தினாலும் கொவுராது. நான் ஒண்ந்தாச்சி. ஒண்ந்த்து ஒணந்ததுதா. ஒரு பொட்டச்சி ஒண்ந்து போச்சுன்னா அவ மனசெக்கூட பேசாட்டா பிரகு அவ கூட பேச ஒக்காது. அவ தேகம் கூட அழுகிப் பெறகு ஒணந்து போகும்”என்கிறாள். கன்னி்யாகுமரியின் பேச்சு வழக்கு பொது வாசகனைத் திண்டாட வைப்பதுதான். அதற்காய் பொதுமொழியில் இந்நாவலை மலர்வதியால் எழுதி விடமுடியாது. படிப்பவனுக்கு இருக்கும் சிரமங்கள் தொடர்ந்து பக்கங்கள் தூரப்போகும் போது சுலபமாகும்.புனைவுச் சம்பவங்களைத் தவிர்த்து மனமொழியின் மூலம் போராட்டம் சொல்லப்படுவது படிக்கச் சிரமம் தருகிறது.   மலர்வதி காட்டும் அடர்ந்த மரக்கூட்டங்களும் நவுடக்கள்ளிச்செடிகளூமான ஊர்  பின்னால் கோவிலும் கட்டிடங்களும், சத்திரமுமாக நிற்கிறது. மனிதர்கள் காட்டுச் செடிகளின் இயல்பை மீறிக்கொண்டு இறுகிய கட்டங்களாக மாறிப்  போகிறார்கள்.

காந்தாரியாய் (எரிக்கும் மிளகாய்) துன்புறுத்தும் சம்பவங்கள் ரோசம்மா கிழவியின் .உறியை இறக்கிப் பாத்தா பழைய நாலாணத்துட்டு நான்கும் ரெண்டு ரூபா நோட்டு ஒன்றும் அழுக்குப்பட்ட கைக்குட்டையும் இருப்பது போல் பழையதைக்  கிளரக்கிளர ஏதேதோ வந்து கொண்டே இருக்கின்றன ரமணியின் பூர்வீக வாழ்க்கையில் . அத்தனையையும் கொட்டித் தீர்க்கிறார் மலர்வதி. இதிகாசங்கள், தொன்மங்கள் , புராணங்கள் என்று எல்லாவற்றிலும் இப்படி பெண்கள் இருப்பு சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்கள் மீட்சி சார்ந்து யோசிக்காமல் நைந்து போகிறார்கள். கடவுள், மதம், பக்தி என்பதெல்லாம் நெருக்கடிகளுக்குள் தொடர்ந்து தள்ளிக் கொண்டே இருக்கின்றன ரமணி அதிலிருந்து மீளப் போராடுவதை இந்நாவல் சொல்கிறது.

ரமணி கேட்கும் கேள்விகள் முக்கியமானவை. கரடு முரடான  மொழி.  முட்களாய் பாவிய அனுபவங்கள்.ஊழ்வினை என்று சொல்லும் பதில்களுக்கு மத்தியில் ஒரு விடுதலைக்குரல் கேட்பதை உணர முடிகிறது.

நூல் : காட்டுக்குட்டி (நாவல்)

எழுத்தாளர்: மலர்வதி

பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்

விலை: ரூ 200

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button