இணைய இதழ் 95குறுங்கதைகள்

குறுங்கதைகள் – இத்ரீஸ் யாக்கூப்

குறுங்கதைகள் | வாசகசாலை

1. யாரும் யாரும் அல்ல!

மணி இரவு எட்டு இருபது. முக்கத்திலிருந்த கடை ஒன்றில் டீ சாப்பிட்டுவிட்டு நான் திரும்பியபோது எனக்காகவே அதுவரை அங்கே காத்திருந்தது போல் பாட்டி ஒருவர் தயங்கி தயங்கி பஸ் டிக்கெட்டிகிற்கு ஐந்து ரூபாய் குறைகிறதெனவும், கொஞ்சம் உதவினால் நல்லபடியாக தான் ஊர் சென்று சேர்ந்துவிடுவேன் என மருகியவாறுக் கேட்டு நிற்க, அவருடைய தொனியும் கனிவான முகமும், பேச்சும் பார்த்த மாத்திரத்தில் மனதை என்னவோ செய்துவிட்டது!

எவ்வளவு நேரமாக இப்படி நின்று கொண்டிருந்திருக்கிறார் என்று தெரியவில்லையே என நினைத்துக் கொண்டே பாக்கெட்டிலிருந்து இருபது ரூபாய் தாளை எடுத்து நீட்டினேன். அதை சற்றும் எதிர்பாராதவராய், ஏதோ நடக்க கூடாதது நடந்துவிட்டது போல உடலை நடுக்கிக் கொண்டு, ‘வேண்டாம் தம்பி. வந்த இடத்தில் எதிர்பாராத விதமாய் செலவழிந்து விட்டது; எனக்கு அஞ்சு ரூபாய் மட்டும் குடுங்க! போதும்!’ என கூப்புவது போல வந்த கைகளை உதறிக் கொண்டு வாங்க மறுத்தார்.

பரவாயில்லை எதற்கும் கொஞ்சம் கூடுதலாகவே கையில் வைத்துக் கொள்ளுங்கள் என நான் வலிந்து திணித்ததை ஒரு கட்டத்தில் மிகுந்த தர்மசங்கடத்துடன் ஏற்றுக்கொண்டார். எனக்கும் ஒரு மாதிரியாக இருந்தது. இவர் இவ்வளவு யோசிக்கும் அளவிற்கு அவ்வளவு பெரிய உதவி ஒன்றும் நான் செய்துவிடவில்லையே..! என்னுடைய கணக்குப்படி அது இரண்டு டீக்கான காசு அவ்வளவுதான். இவரை காணாமல் இன்னும் கொஞ்ச நேரம் அதே இடத்தில் நின்றிருந்தாலும் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்கள் யாரேனும் என் கண்ணில் பட்டிருக்க கூடும், அவர்களுக்காக அதே காசோ அல்லது கூடுதலாகவோ செலவு ஆகியிருக்கலாம்.

“தம்பி மய(ன்) கொஞ்சம் தூரத்துல தள்ளுவண்டியில் சின்ன பழக்கடை போட்ருக்கான். அங்க போயிக் கேட்டிருக்கலாம்தான். ஆனா, ஏனோ கொஞ்சம் யோசனையா இருந்திச்சி, அதான் இங்க நிண்ட உங்கட்ட கேட்டேன்.. ” என மீண்டும் கூச்சம் கலந்த சங்கடத்தோடு என்னைப் பார்த்தார்.

“பரவால்லங்கம்மா யார்ட்ட வாங்குனா என்ன” நான் புன்னகைத்தவாறு அவரை சமாதானப்படுத்த முயன்றேன்.

“இல்லங்க தம்பி, இது வெள்ளிக்கிழமை ராவு வேற உங்க குடும்பமும் நல்லாருக்கணும், எங்க குடும்பமும் நல்லாருக்கணும்” என பரபரத்தவாறு, “இத வச்சிக்கிங்க” என்று ஒரு ரூபாய் நாணயமொன்றை பாசத்தோடு கொடுத்தார். பெரிய பரிசொன்றைத் தாங்கிப் பிடிப்பது போல் இரு கரங்களைச் சேர்த்து குழித்த வண்ணம் நீட்டி, மகிழ்வோடு பெற்றுக்கொண்டேன். அதில்தான் அவர் மனம் ஒரு வழியாக சமாதானம் அடைந்திருக்க வேண்டும். அக்கணம் அவருடைய முகம் அன்னமிட்ட கைகளின் நிறைவை சூடிக்கொண்டிருந்தது! அதுவரை சூழ்ந்திருந்த மனநெருக்கடிகள் யாவும் விலகி, “வர்றேன் தம்பி, நல்லாருப்பிய!” என்று சிரித்த முகமாய் தூரத்தில் பஸ் வரும் வெளிச்சத்தைக் கவனித்துவிட்டது போல் அதன் நிறுத்தத்தை நோக்கி சற்று வேகமாக நடக்கலானார்.

அந்த இருபது ரூபாயில் டிக்கெட் போக மிச்சத்தை அவர் வேறு யாருக்காவது கொடுக்கலாம், தர்மம் செய்யலாம் அல்லது ஏதேனும் கோயில் உண்டியலில் போட்டுவிட்டு கூட செல்லலாம். அதை அவருக்காக உபயோகித்து கொள்ள வாய்ப்புகள் குறைவு அல்லது அவர் மனம் அதை அனுமதிக்காது. அப்படிதான் என் மனம் சொன்னது.

***

2. அந்த நாள் முதல்...

பேருந்து நிலையத்தில் நல்ல கூட்டம் என்று சொன்னால் அர்த்தமற்றதாக இருக்கும் என்றாலும் அன்று முகூர்த்த நாள் என்பதால் வழக்கத்தை விட நெரிசல் அதிகமாகத் தென்பட்டது. இந்த அவதியில் தனது உடல் நலம் குன்றிய அப்பாவுடன் வரவிருக்கும் தங்கள் ஊர் டவுன் பஸ்ஸில் எப்படி ஓடிப் போய் ஏறுவதென்ற யோசனைகள் சத்தியராஜூக்குள் தீவிரத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தன. மருத்துவமனையில் இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு தாமதம் ஏற்பட்டிருந்தால் நிலைமை இன்னும் மோசமாயிருக்கும் ஏனென்றால் அடுத்து பஸ் சாயங்காலம் ஐந்து மணிக்குத்தான். சாயங்காலம் என்றால் கேட்கவா வேண்டும்? பஸ்ஸில் ஏறி இடம் பிடிப்பது இதைவிட சிரமம்தான்.

மணியைப் பார்த்தான் மதியம் இரண்டு! இங்குமங்கும் அலைமோதிக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட கூட்டத்தில் பேருந்து நிலைய சிமெண்ட் பெஞ்சில் தனது அப்பாவிற்கு இடம் கிடைத்ததே பெரும் சாதனைதான் என்று நினைத்துக் கொண்டான். ‘டீ, வடை ஏதும் சாப்பிடுறீயளா?’ என்று கேட்கத் தோன்றினாலும் அவர் பக்கம் திரும்பக் கூட இல்லை! ஊருக்குச் சென்று சேர எப்படியும் மணி மூன்று ஆகிவிடும்! சரி, பஸ் வருவதற்குள் எதுவும் வாங்கிக் கொடுக்கலாமா என்று ஒரு வழியாக அவரது முகத்தை ஏறிட்டான். வழக்கம் போல ஒரு தயக்கம் அதனால் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. நின்றுகொண்டிருந்த கூட்டத்திற்கு பஸ்ஸில் எப்படியும் முடியாதவர் அவர் மட்டுமாவது அமர ஒரு சீட் கிடைத்துவிட்டால் போதுமென்றிருந்தது.

அவரது உடற்தளர்வு குறித்த கவலைகள் கொஞ்ச நேரம் அவனை ஆழ்ந்த சிந்தனைகளுக்கு ஆளாக்கிக் கொண்டிருந்தன. கொஞ்ச நேரத்தில் நேராக ஷெட்டிற்கு செல்லும் பாவனையுடன் இருக்கைகளெல்லாம் காலியாக தனக்கே உரிய கர்ஜனையோடு மெதுவாய் வந்து கொண்டிருந்த பேருந்து இவர்கள் செல்லும் ஊர் மார்க்க நிறுத்தத்தினுள் புகுந்ததும் தனது சத்தத்தை நிறுத்திக் கொண்டது. பயணிகள் முண்டியடித்துக் கொண்டு செல்ல, தான் விரைவாகப் புகுந்து சீட் போட்டு வைப்பது போல தனது அப்பாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சத்தியராஜ் பேருந்தை நோக்கி ஓடினான்.

அவனுடைய அப்பா மெல்ல ஏறி, அத்தனை இயலாமையிலும் மூச்சு முட்டும்படி நின்றுகொண்டிருந்த இடைப்பட்ட கூட்டத்தையெல்லாம் எப்படியோ சமாளித்து ஒதுக்கிக் கொண்டு, சத்தியராஜ் பிடித்து வைத்திருந்த இருக்கையை நோக்கிச் சென்று அடைவதற்குள் மகன்காரன் ஒரு ஆயிரம் முறையாவது சொல்லியிருப்பான் ஆள் வருகிறதென.

கண்டக்டரின் பேக்கும் முழங்கையும் வாட்சும் பேனாவும் தத்தம் திசைகளில் கூட்டத்தை அழுத்தியும் குத்தியும் கூட்டத்தை பெயர்த்தபடிச் செல்ல, டிக்கெட் டிக்கெட் என்று அவரது குரல் மூன்று பேர் அமரும் இருக்கையின் சன்னல் பயணியையும் நடுப்பயணியின் இருக்கை வரை கழுத்தையும் கையையும் எக்கி நீட்ட வைத்தது. ஒரு விதத்தில் ரேஷன் கடை பிழைப்புதான்!

சத்தியராஜ் பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு தனது அப்பா பக்கம் திரும்பாமலே அவரை ஒரு பார்வைப் பார்த்தான். வியர்வையில் ஊறிய அதிரசம் போல அவரது கன்ன மேடுகள் காட்சியளித்தன. எப்போதும் செல்லும் கடைத்தெரு பாதையில் என்ன பிரச்சனையோ தெரியவில்லை அங்கிருந்த ட்ராபிக் போலீஸ் ஒருவர் மாற்றுப் பாதையை கைகாட்டி வரும் வாகனங்களை திசை மாற்றிவிட்டிக்கொண்டிருந்தார்.

அந்த குறிப்பிட்ட பாதையில் சத்தியராஜிற்கு சில பசுமையான நினைவுகளும் உண்டு. ஏனென்றால் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த பக்கம்தான் நண்பர்களோடு பெரும்பாலும் சுற்றித் திரிவான். வழி நெடுக கூட்டம், கூட்டம், கூட்டம்! அதேதான் முகூர்த்த கூட்டம்! பஸ் பெருத்த தீனி தின்ற யானை போல மெல்ல மெல்ல அசைந்து ரோட்டில் தேய்ந்து சென்றது. மேலும் அந்த பாதையில் கல்யாண மண்டபம் ஒன்றும் இருக்கிறது; பிறகு கேட்கவா வேண்டும்?!

இப்போதுதான் அது கல்யாண மண்டபம். ஆனால், ஒரு பொன்னான காலத்தில் கர்ஜனைகளோடும் கத்திச் சண்டைகளோடும் எம்.ஜி.ஆர் – சிவாஜி படங்கள் ஓடிக்கொண்டிருந்த புகழ் பெற்ற தியேட்டர்! ரஜினியின் அருணாச்சலம் வரையும் கூட கட் அவுட் அபிஷேகங்களோடு தனது பெயரையும் கவுரவத்தை காப்பாற்றிக் கொண்டுதான் வந்தது. பின்னர்தான்.. அதாவது இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில்தான் பிட்டுப் படங்கள் மட்டும் ஓடும் அளவிற்கு அதன் அருமைகள் பெருமைகள் யாவும் அதல பாதாள நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது! ஒரு புறம் திருட்டு விசிடிகளும் மறுபுறம் கேபிள் டிவிகளில் ஓடத் தொடங்கிய புத்தம் புது சூப்பர் ஹிட் படங்களும்தான் அதற்கு பெரும் சாபமாக அமைந்துவிட்டன என தியேட்ட்டர் உரிமையாளர்கள் தங்களுக்குளேயே அங்கலாய்த்துக் கொண்டனர்.

அப்படி வரலாறு சீரழிந்துக் கொண்டிருந்த ஆகாத நாளொன்றில்தான் பாதி போதையில் தத்தம் நண்பர்களோடு படம் பார்க்க வந்திருந்த இந்த அப்பனும், காலேஜை கட் அடித்துவிட்டு வந்திருந்த இந்த மகனும் கூட ஒருவரையொருவர் எதிர்பாராமல் அந்த தியேட்டருக்குள் எதிர்கொள்ள நேரிட்டதும், இதோ இப்படி மௌன சாமியார்களாகவே ஒருவருக்கொருவர் காலத்தை கழித்திடும்படி ஜென்மத்திற்கும் இப்படி ஆளாகிப் போனதும்!

தியேட்டர் நெருங்க நெருங்க இருவர் இதயமும் ஒத்திசைவில் அடித்துக் கொள்வது போல் தோன்றியது. குறிப்பிட்ட இடம் வருவதையுணர்ந்து தலைகளை தாழ்த்திக் கொண்டாலும், நினைக்க நினைக்க அன்றைய காட்சிகள் எந்த மங்கலும் இல்லாமல் ஓடிக்கொண்டேயிருந்தன. இன்னும் கூட அந்த ஸ்டாப்பை ‘வீனஸ் தியேட்டர்!’ என்றுதானே சொல்லி நிறுத்துகிறார்கள்!

இருந்தாலும் பஸ்ஸிலிருந்து தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை அசைபோட்டுப் பேசிக்கொண்டிருந்த ஒரு இளம் ஜோடி போல, பல இந்நாள் தம்பதிகளுக்கு அது ‘சுபம்’ திருமண மஹால்தான்! ஆட்கள் ஏறியதும் பஸ் அங்கிருந்து நகர நகர அப்பனுக்கும் மகனுக்கும் சுவாசம் சீராகத் தொடங்கியது.

***

3. பயணம்

அதுவரை முன்பின் திருவனந்தபுரத்திற்கெல்லாம் சென்றிருக்காத நான் ஒருமுறையாவது யாரிடமாவது அதன் பஸ் ரூட்டைப் பற்றி விசாரித்திருக்கலாம். வேலை என்று வந்துவிட்டால் இப்படித்தான் போகிற போக்கில் எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என கடிவாளம் கட்டிய குதிரை மாதிரி ஓட ஆரம்பித்துவிடுவேன்.

மதுரையிலிருந்து நேரிடையாக நாகர்கோயிலுக்கோ அல்லது திருநெல்வேலிக்கோ டிக்கெட் எடுத்திருக்கலாம். பயண நேரம் மூன்று மணி நேரம் பக்கம் காட்டியதால், கூகுள் மேப்பை மேலோட்டமாக மேய்ந்ததில் இடையில் சிவகாசி கண்ணில் தட்டுப்பட்டது. ஏனென்றால் எனக்கு இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறையாவது ஒண்ணுக்கு போய்விட வேண்டும்! ஆனால், அது சுற்றுவழி என சென்று கொண்டிருந்தபோதே தெரிந்தது.

அதனால் சாத்தூர் பைபாஸில் இறங்கி, நேராக மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கே செல்லும் பேருந்திற்கே தாவும் நிலைக்கு உட்தள்ளப்பட்டேன். விளைவு? சித்திரை மாத வெயிலுக்கும் அதற்கும் பசியும் தாகமும் கலந்து உள்ளுக்குள் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. அந்த அவதியில் வழக்கமாக வரும் யூரின் பயங்கள் எங்கே போனது என்றே தெரியவில்லை!

சிறு காத்திருப்பிற்கு பிறகு பேருந்து ஒன்று நாகர்கோயில் பலகையைத் தாங்கி வர, பழைய பயத்தில் திருநெல்வேலிக்கே டிக்கெட் எடுத்தேன். கண்டெக்டர் முறைத்தார்; நாகர்கோயில் போக வேண்டியவன் திருநெல்வேலிக்கு டிக்கெட் எடுத்ததற்காக இல்லை! ஐநூறு ரூபாய் நோட்டாக கொடுத்ததற்கு! சில்லறை பிறகு தருகிறேன் என்று கூட சொல்லவில்லை, படக்கென தனது பேக்கை அடைத்து, கக்கத்தில் வைத்துக் கொண்டு ‘டிக்கெட் டிக்கெட்’ என்று பின்புறமாகச் சென்றுவிட்டார். இவர் மீதம் தருவாரா மாட்டாரா என்ற கவலைகள் மேலோங்கிக் கொண்டிருந்தது தேவையில்லாததா அல்லது அதீதமானதா எனத் தெரியவில்லை. ஆனால், அதையும் தாண்டிய பெரும் பிரச்சனையொன்று என்னைப் பீடிக்க தொடங்கியது. நீங்கள் நினைப்பது போல ஒண்ணுக்கு போவது பற்றியெல்லாம் அல்ல; பசி உயிரைக் கொன்று கொண்டிருந்தது!

அதை மேலும் தூண்டுவது போல எனக்கு இடப்பக்கம் மற்றும் வலப்பக்கம் அமர்ந்திருந்தவர்கள் தாம் கொண்டு வந்திருந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை பிரிக்கலாயினர். ஒரு புறம் குட் டே பிஸ்கெட் மற்றும் வாழைப்பழம் என்றால் மறுபுறம் பஃப்ஸ் மற்றும் மாஸா ட்ரிங்! நடுவில் ஒருத்தன் இருக்கிறானே ஒரு பேச்சுக்காவதுக் கேட்போமே என்ற பிரக்ஞையோ சமூக அக்கறையோ ஏதுமில்லாமல் தத்தம் நொறுக்கல்களில் மட்டும் மிதமான சத்தம் வரும் அளவிற்கு மட்டும் கவனத்தையும் நாகரீகத்தை கடைப்பிடித்தார்கள்.

எனக்கு இதுபோல் ஒரு சந்தர்ப்பம் அமைந்திருந்தால் நிச்சயம் ‘எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று இருந்ததை நீட்டியிருப்பேன் அல்லது மற்றவர்கள் முன் சாப்பிட பிடிக்காமல் பிரிக்காமலே வைத்திருந்திருப்பேன். ஆனால், அந்த நேரம் அவசரத்திற்கு குடிக்க ஒரு தண்ணீர் பாட்டில் கூட வாங்க மறந்துவிட்ட பாவியாகிவிட்டிருந்தை நினைத்து வருந்தலானேன். பசி வயிற்றைக் கிள்ளியது, கவுரவம் பார்க்காமல் பிஸ்கெட் ஒன்றைக் கேட்டு வாங்கலாமா எனும் அளவிற்கு எனது பலவீனம் கூடிக் கொண்டேச் சென்றது.

அப்போதுதான் ஆழ்ந்து உணர ஆரம்பித்தேன், இருபுறத்திலும் கனமான அல்லது பிரளயம் மிகுந்தது போன்றதொரு அமைதி ஓசையில்லா நொடி முள் போல் என்னையே சுற்றிச் சுற்றி வந்ததை. ஜன்னலோர ஆசாமியிடமிருந்து பப்ஸின் அடுக்குப் பிசிறொன்று நொறுங்கி என் கருப்பு நிற பேண்ட்டில் காய்ந்துதிர்ந்த பூவரச சருகின் ஐம்பதில் ஒரு பங்கு போல் துருத்திக் கொண்டு நிற்க, “ஸாரி சார்!” என்று பதறியபடி அவர் கையைக் கொண்டு வந்தாலும், என் பேண்ட்டில் பட்டதை விட நூறு மடங்கு அவரது விரல்களில் ஒட்டிக் கொண்டு நின்றது. அதற்கு பயந்து, ‘பரவாயில்லை சார்’ என நானே சுண்டு விரலால் தட்டி அந்த துகளை அப்புறப்படுத்தினேன். ஏனென்றால் ஒருவேளை அதை அப்படியே விட்டிருந்தாலும், அதை கூட ரகசியமாக எடுத்து உண்ணும் அவல நிலைக்கு அகோர பசி என்னைத் தள்ளியிருந்தது.

“இந்தாங்க சார்!” ஸ்ரீ மகா லட்சுமி ஐயங்கார் என்று பேக்கரியின் பெயர் அச்சடிக்கப்பட்டிருந்த பாலித்தீன் பையிலிருந்து இன்னொரு பப்ஸை எடுத்து என் புறமாக நீட்ட, வெட்கத்தை மீறி எச்சில் ஊறிக் கொண்டு நின்றாலும், சம்பிரதாயத்திற்கு, ‘வேண்டாம் சார். நீங்க சாப்பிடுங்க!’ என்று திடீர் சங்கோஜத்தோடு மறுக்கலானேன்.

“பரவாயில்ல சார் சாப்பிடுங்க! ரொம்ப டயர்டா இருக்கீங்க! தண்ணீ ஏதும் வேணுமா?” தோள் பையின் ஒரு முனையிலிருந்து பாதி குடித்த நிலையிலிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து தர முயன்றார். முகத்தில் ஒரு சிநேகமான புன்னகை படர்ந்திருந்தது. பார்க்கவும் என் வயதை ஒத்தவராகத்தான் தெரிந்தார் அதாவது ஒரு முப்பதி மூன்று, முப்பத்தைந்து இருக்கும்! நான் இந்த முறையும் மறுத்தால் திருநெல்வேலி வரும் வரை என் வயிற்றுக்கு அல்வாதான் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால், ஒரு ஏற்பு புன்னகையோடு மெல்லிய இழைகளால் பின்னப்பட்ட பறவையின் கூடு போலிருந்த அந்த வஸ்துவையும் தண்ணீரையும் ‘தேங்க்ஸ்!’ என்று சத்தம் வராத குபீர் சிரிப்போடு வாங்கிக் கொண்டேன்.

ஒருவரின் நற்செயல், நல்லவரெனில் தொற்று நோயை போல் அது அடுத்தவரையும் தூண்டவல்லது என்ற யதார்த்தத்திற்கு ஆளானவராக வலப்பக்கம் அமர்ந்திருந்த அந்த இருபத்தைந்து வயது தம்பியும் நான்கு பிஸ்கெட் தட்டைகள் ஒன்றன் மீது ஒன்றாகச் சரிந்திருந்த மிச்சப்பட்டிருந்த பாக்கெட்டை கொடுத்து, “சாப்பிடுங்கண்ணே!” என்று சொல்ல, “என்னப்பா நீங்களே தின்னுக்கிட்டு இருக்கீங்க? எங்களுக்கெல்லாம் தரமாட்டீங்களா?” என்றவாறு எதிர்பாராமல் எங்கள் பக்கம் வந்து பல்வரிசைகள் காட்டி நின்ற அந்த கோபக்கார கண்டக்டர் சட்டென குழந்தையாக மாறிப்போயிருந்தார். பாவம், அவரும் பசியோடு இருந்திருப்பார் போல!

சிரித்துக் கொண்டே அந்த தம்பி அதை அவரிடமும் நீட்டினான். எனக்கு டிக்கெட் போக பாக்கி வர வேண்டியிருந்த சில்லறையைப் பற்றிய பதற்றங்களும் விலகத் தொடங்கின.

idris.ghani@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button