“அப்போவ், அல்லோருக்கும் பரோட்டா வாங்கியாப்பா, திங்கணும் போல இருக்கு. ஆச ஆசயா வருதுப்பா, எத்தன நாளா கேக்குறேன், தாத்தா வேற ஊர்லேர்ந்து வந்துருக்காங்க, இப்பவாச்சும் வாங்கிக் கொடேன்”, சொல்லும் போதே உடைந்து அழுது விடுவது போல இருந்தது ஆறுமுகத்தின் முகம்.
“ஆமாப்பா, எனக்கும்ப்பா, ஆ.. ஆங்… அன்னிக்கி ஆங்கிட்டு வந்ததில்லே அந்த பரோட்டாப்பா. பட்ருவா பரோட்டாப்பா”, திக்கித் திக்கி மழலையில் சொன்னான் முத்து .
“சரி, சும்மா சொன்னதயே சொல்ட்ருக்க கூடாது, தாத்தா வந்திருக்காங்கல்ல.. பிடிவாதம் பிடிக்காம, நல்ல புள்ளையா நடந்துக்கணும், அப்பா வாங்கித் தரேன்ன்னா வாங்கித் தருவேன், அவ்ளோதா சரியா?”, என்றான் சீனுசாமி கொஞ்சம் வெறுப்புடன்.
அவன் சரி என்றதில் இருப்புக் கொள்ளாது, ‘ஓஹோ.. இன்னைக்கு எங்க வீட்ல பரோட்டா டோய்,’ என்று கத்திக் கொண்டே தெருவிற்கு ஓடினார்கள் பெரியவனும் சின்னவனும், இடுப்பிலிருந்து நழுவும் கால் சட்டையைக் கூட லட்சியம் செய்யாமல்.
“பட்ருவா பரோட்டா….பட்ருவா பரோட்டா”.
“ஏய், செல்விய் .. செல்வீ…”
போட்ட சத்ததிற்கு இந்நேரத்துக்கு திடுக்கென்று வந்து விழுந்திருப்பாள் செல்வி. ஆனால், இன்று அப்படி எதுவும் நிகழவில்லை. வழக்கத்திற்கும் மாறாக பொறுமையாகவே நடந்து வந்தாள். அவள் நடையில் நிதானம் கொஞ்சம் தூக்கலாக இருந்தது. செல்வி எப்பொழுதும் அப்படி நிதானம் காப்பவள் அல்ல என்பதை சீனுசாமி அறிவான். அவன் குரலுக்கு போட்டது போட்டபடியே விட்டு விட்டு சட்டென்று வருபவள் இப்படி ஆற அமர வருதெல்லாம் அவள் அப்பங்காரன் இருக்குற தைரியம் தான் என்பதும் அவனுக்கு தெரிந்தேயிருந்தது.
‘இரு முண்ட, உனக்கு வச்சுகிறேன்’, என்பது போல் ஒரு முறைப்பு முறைத்துவிட்டு,”ந்த, நீயி ஒன்னும் இப்போ செய்ய வேணாம். நான் மாமாவுக்கும் சேர்த்தே ரொட்டி வாங்கிட்டு வந்துடுறேன், அந்தா கூடைய எடு, செத்த பொறுங்கே மாமா.. த்தோ வந்துடுறேன்”, என்று சைக்கிளை கீழே இறக்கினான் சீனுசாமி.
‘அப்பா வந்துருக்காரு, காபி போட்டுக் குடுக்கணும், வாரப்ப பால் வாங்கியாங்க’ என்று சொல்லியனுப்பிய போது துட்டு இல்லை என்ற மனுஷன், திடுக்குன்னு இப்போ எல்லோருக்கும் ரொட்டி வாங்கி வருவதாக வெளியே கிளம்பியது ஆச்சர்யமாக இருந்தது செல்விக்கு.
‘தண்டலுக்குன்னு காசை எங்கயும் மறச்சி வச்சிருக்கோ,’ என்று யோசித்துக் கொண்டே, “ஏங்க, காசு மீந்தா அப்டியே ரெண்டு முட்டைன்னா வாங்கிக்கோங்க, அப்பா ஆம்லெட்டு சாப்பிடும்”, என்றாள்.
“ம்” என்றான், பெருமூச்சுடன். அதற்கு அர்த்தம் செல்விக்கு மட்டுமல்ல திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலைகளை சைஸ் வாரியாக அடுக்கிக் கொண்டிருந்த பெரியவருக்கும் புரிய வாய்ப்பில்லை. அவர் நிமிர்ந்து சீனுசாமியை ஒரு பார்வை பார்த்தார்.
குடி குடின்னு பொறுப்பில்லாம கெடந்த பய இப்போ கடக்கண்ணின்னு வச்சுக்கிட்டு ஊரில் ஒரு ஆளா நிக்கிறத பார்க்கிறப்ப உள்ளிருந்து எழும் பெருமிதத்தின் பார்வை அது.
‘பழச விடு கழுதய, அவ்ளோ தும்பம் சிரமத்திலும் பொண்டாட்டி பிள்ளைங்கள நல்லா பாத்துக்குற மருமகன்தா, என்ன.. இந்த குடி தான், பாடாப்படுத்தி வச்சிது, ஏதோ போறாத காலம், .இப்போ எதுவும் இல்லாம மாறி, மனந்திருந்தி வாழுறது அந்த தில்லை காளி புண்ணியம், நா போட்ட வெளக்கு வீம்போகல, யம்மா தாயீ” மனதுக்குள்ளே சொல்லிக்கொண்டு கைகளை விரித்து கன்னத்தில் போட்டுக்கொண்டார்.
ரெண்டு பிள்ளைகளும் ரெண்டு நாளா ‘பரோட்டா..பரோட்டோ’ என்று போட்டு நச்சரித்தது. செல்விக்கும் பரோட்டா திங்க ஆசை வந்துவிட்டது. பிள்ளைகள் கேட்ட போது முதுகில் மூணு போடு போடு ஓயச் செய்தவள், “ம்ம், என்ன செய்றது, கஷ்டலாம் இருக்கதான் செய்யும், அதுக்குன்னு வாய சும்மா கட்ட முடியுமா.. பிள்ளைங்க கேக்குறத வாங்கித் தராம எத்தினி நாளு அதுகளை ஏமாத்த முடியும்?” என்று அவனிடம் சாடை பேசப் போக, நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டாள்.
வாங்கின அடியில் ரெண்டு நாளாக பரோட்டாவைப் பற்றி மறந்திருந்த பிள்ளைகளை மதியமே தூண்டிவிட்டவள் அவள் தான்.
சொன்னதுதான் சாக்கு..’அப்பன தூக்கி போட்டு ஓ …’ன்னு ஊருக்குள் ஒரு சொலவடை உண்டு. அது உண்மை என்பது போலவே சீனிச்சாமியை போட்டு அரிக்கத் தொடங்கிவிட்டார்கள் ஆறுமுகமும் முத்துவும் .
“டே, சும்மா இருக்கணும், அடிச்சிருவேன் பாத்துக்கோ, மனுசன் இருக்கிற இருப்புத் தெரியாம, சோத்தை தின்னுபோட்டு செத்த சாயலாம்ன்னு வீட்டுக்கு வந்தாக்கா, ஒரே எழவு மயிரா இருக்கு. சீ…புள்ளைவளுக்கு வீட்டு நெலம சொல்லி வளக்கத் தெரியல, புள்ள வளக்குறா மயிராயி, ஒன்னிய ரெண்டு சாத்து சாத்துனா எல்லாஞ் சரியாயிடும்” செல்வியை ஏசிவிட்டு தரையில் விரிந்திருந்த துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கடை தெருவுப் பக்கம் இறங்கி நடந்தவன்தான்.
“ஏங்க, ஏன் புள்ளைவ மேல இப்படி விளுறீங்க” செல்வி சொன்னது அவன் காதில் விழுந்திருக்க வாய்ப்புகள் அதிகம் இல்லை. அதற்குள் தெருமுனையில் அவன் நிழல் கரைந்து விட்டிருந்தது.
தாத்தா வந்திருப்பதாக ஆறுமுகம் தாக்கல் சொல்லிய பின்னர்தான் வீடு வந்து சேர்ந்தான்.
சாத்துக்குடி பழம், பூ பொட்டணம் ,வாழை சீப்பு, தேங்காய், மஞ்சள் குங்குமம், வெற்றிலை பாக்கு அதன் மேல் நூற்றியொரு ரூபாய் ரொக்கம் தட்டத்தில் பரப்பி வைக்க பட்டிருந்ததை பார்த்ததும், பொங்கல் வரிசை செய்ய வந்திருப்பார் என்று அனுமானித்து கொண்டான்.
“வாங்க மாமா, எப்போ வந்திங்க,வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க, பொங்கல்லாம் வந்துட்டா, அத்தை கண் ஆப்பரேஷன் முடிஞ்சி நல்லா ஆகிட்டாங்களா, சின்னவனுக்கு பொண்ணு ஏதும் வந்துச்சா?” – என்று பதிலுக்கு பொறுக்காமல் விசாரிப்புகளை அடுக்கினான்.
“வரலாம்னு பாத்தா எனக்குதான் வேல ஒளியேவே மாட்டுது” – அவர் கேட்கும் முன்னமே தானாக சொல்லிக்கொண்டான்.
வெற்றிலையின் முதுகில் சுண்ணாம்பு தடவிக்கொண்டிருந்த பெரியவர், எல்லாவற்றுக்கும் சேர்த்து ஆமோதிப்பது போல பெருத்த ஒரு “ம்” போட்டார்.
“ஏய்.. செல்வீ, காப்பி போட்டு மாமாவுக்கு கொ…” என்று சீனுசாமி சொல்லி முடிக்கும் முன்னர் அவனை எரித்து விடுவதைப் போல பார்த்தாள் செல்வி.
உஷ்ணம் தாளாமல் குனிந்து கொண்டான் சீனுசாமி.
“இருங்க மாமா, தோ பால் வாங்கிட்டு வந்துடுறேன்”, என்று சொல்லிக்கொண்டு கிளம்பிய போதுதான், பிள்ளைகள் அவனிடம் பரோட்டோ கேட்டார்கள்.
தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவன், ‘டேய் எனக்கு வெய்ட்டிசு’ என்று கூட்டாளிகளிடம் சொல்லிவிட்டு, “யப்பா, எனக்கு மூணு வேணும்ப்பா”, கொஞ்சும் தொனியில் விரல்களை மடக்கிக் காட்டி சொல்லிவிட்டு மீண்டும் விளையாட ஓடிய முத்துவை பார்த்துக்கொண்டே சில நேரம் அங்கேயே நின்றான் சீனுசாமி.
“டேய், இப்போ என்னிய புடி பாப்போம்”, என்றபடியே தாவி ஓடி மறைந்தான் முத்து.
சீட்டில் ரெண்டு தட்டுத் தட்டி விட்டு லாவகமாக ஏறி உட்கார்ந்தான். ‘கிரீச் கிரீச்’ என்று லேசாக முனகியது சைக்கிள். செல்வி கதவோரம் நின்றுகொண்டிருந்தாள். அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு பெடலை மிதித்தபடி, ஒரு காலை உந்தி பார் கம்பிக்கு மேலாக இடும் பொழுது, இடது கையை கொண்டு வேட்டி நழுவாமல் பார்த்துக்கொள்ளும் அவனின் கவனம் அவளுக்கு பார்ப்பதற்குப் பிடிக்கும்.
சைக்கிளின் முனகல் மெல்ல மெல்ல காற்றில் அடங்கியது. அவன் உருவமும் இருளில் மறைந்தது.
“என்னைய வச்சன்னா பாருன்னு நிக்கிறா, பாவி! நேரத்துக்கு சோறு கூட போட மாட்றா…எங்க போயி சொல்ல, மரியாத இல்லாம அது இதுன்னு சாடை பேசுறது. புருஷன்கிட்ட பொல்லாப்பு காட்றது. அந்த பயலும் அப்படியே மாறிட்டான்மா.. சும்மா. முகம் குடுத்து கூட பேசுறது கெடையாது. சுள்ளு சுள்ளுன்னு பாக்குறான். வெத்தல பாக்கு வாங்க கூட காசு தர்றது கெடையாது.
சின்னவனுக்கும் வயசு கடந்து போவுது. நம்ம வேலைக்கு எவனும் பொண்ணு தர மாட்றான். அப்படியே தரேன்னு வந்தாலும் எல்லா புள்ளைவளும் இப்போ படிச்சிருக்குவோ, படிச்ச பையன்தான் வேணும்ன்னு சொல்லுதுவோ. காலம் மாறிப் போச்சுது. சமாளிக்க முடியல. அவனுக்கு ஒரு பொண்ணு பாருடான்னா கோவம் பொத்துக்கிட்டு வருது.
அன்னிக்கு அப்படிதான், சின்னவனுக்கு ஜாதகம் ஒன்னு வந்துருக்கு பொருத்தம் பார்றான்னா, கட்டைய எடுத்துகிட்டு அடிக்க வாரான். என்னடா இது கூத்துன்னு பாத்தாக்கா இந்த சின்னப்பய ஒருநா குடிச்சிப்போட்டு அண்ணிக்காரிய ஏதும் வஞ்சிருப்பான் போல. பொண்ணு கிண்ணு பாத்து வைக்காம இப்படியே இருக்கீங்க, அது இதுன்னு, அந்த வேகத்துல, அவ அவன் புருஷன்கிட்ட சொல்லி வைக்க, இவன் பொண்டாட்டி பேச்சக் கேட்டுக்கிட்டு என்னிய அடிக்க துணியிறான்.
என்னமோ போ, வீடு வீடா இல்லமா. எதோ நானும் காலம் தள்ளுறன். ங்கொம்மா இருந்த வரைக்கும் சரி. அவ போயிச் சேந்துட்டா மவராசி, என்னிய தனியா உட்டுப்போட்டு, ஒருநா ங்கொம்மா சமாதி வச்ச இடத்த போயி பாத்தேன் தாயீ. மனசே கேக்கல. சமாதி ஆப்படல, சும்மா நின்னு அழுதுட்டு வந்துட்டன். ராத்திரிக்கு ஒரு குவார்ட்டர் சாப்ட்டு வந்து படுத்துட்டேன். வேற என்ன செய்ய?
அவளையும் குத்தம் சொல்லகூடாது, அவளும் எவ்ளோதான் பொருத்துப்பா.. சும்மா தண்ணிய போட்டுட்டு…அவளே இவளேன்னு ஒரு அண்ணிக்காரிய மரியாத இல்லாம பேசலாமா? எனக்கும் கண்ணு புரிய மாட்டுது, நியாபகம் கொறஞ்சி போச்சுது, வயசு என்ன கம்மியாவா ஆவுது, நம்ப கணக்கும் அவ்ளோதான், போய் சேர வேண்டிய டிக்கெட் தான்”, மனசில் இருந்தவற்றைக் கொட்டிவிட்ட திருப்தியில் வெற்றிலைச் சாந்தை திப்பி வாய் கொப்பளித்தார் பெரியவர்.
செல்வராசு கடன் தொல்லையால் வீட்டை விற்றது முதல், பூபதி வீடு கட்டிகொண்டு குடி போனது. மூணாவது விட்டுப் பையன் தூக்கில் தொங்கியது, தெருவில் திரியும் கருப்பு மாடு காளை கண்ணு போட்டது வரையில், அப்பாருக்கும் மகளுக்கும் இன்னமும் பேசிக்கொள்ள நிறையவே இருந்தன.
ஆனால், செல்வி மட்டும் வாசலையே பார்த்து கொண்டிருந்தாள்.
‘ஓ…ம் நமோ நாரா…யணா…ய… நேரம் இரவு ஒன்பது’ – பெத்தபெருமாள் கோவில் மெஷின் நேரம் சொல்லிற்று.
“கடையில யாரும் வந்துருப்பாங்”, என்றாள்.
பெரியவர் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஏதோ சொல்லி முணுமுணுத்துக் கொண்டே வெற்றிலை பொட்டலத்தைப் பிரித்தார்.
தெருமுனையைக் கடந்த சீனுசாமி, சட்டைப் பையை தடவிப் பார்த்தான். அது காலியாக இருப்பது தெரிந்தேதான் அப்படிச் செய்தான். உஃப்பென்று ஒருமுறை பையை ஊதினான். வெறும் பையில் காற்று சன்னமாக சடசடத்தது . இரவில் மேகம் ஏறிக்கொண்டு வருவதை அவன் கவனித்தான். தூங்கு மூஞ்சி மர காற்று இதமாக வீசியது. இரவில் அந்த மரத்துக்கு கீழே நிற்க கூடாது என்று அம்மா சொன்னது திடீரென்று அவன் நினைவுக்கு வந்தது. அவள் சொன்னது போல அப்படியே மூச்சு முட்டி செத்துப் போனால் கூட தேவலாம் என்று நினைத்து கொண்டான். லேசாக தூறல் விழ ஆரம்பித்தது. அவன் அதை ரசிக்கவில்லை. நெற்றியில் துளிர்ந்திருந்த வியர்வையை வழித்து வேட்டியில் துடைத்துக்கொண்டான். என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான்.
ரெண்டு நாட்களில் சேட்டு கடையில் மூழ்கவிருக்கும் செல்வியின் தோட்டைப் பற்றிய கவலையோ, காலை விடிந்ததும் கட்ட வேண்டிய தண்டல் பற்றியோ நினைப்போ அவனுக்கு இல்லை, அவனுடைய இப்போதைய தேவை ஒரு நூறு ரூபாய். யாரிடம் கேட்பது..? யோசனையில் கால்கள் வேலை செய்ய மறுத்தது சீனுசாமிக்கு.
யோசித்துக்கொண்டே சைக்கிளை விட்டு இறங்கினான். பேங்க் வீட்டுகாரர், நூர் பாய், காசுக் கடை செந்திலு, மில்லு ஜெயராமன், வண்டிக்காரவங்க வீடு, பக்கத்து கடை அண்ணன் என்று மனதுக்குள் ஒரு நீண்ட பட்டியல் வாசித்துப் பார்த்தான். யாரும் ஒத்து வருவது போலத் தோன்றவில்லை.
‘எல்லோரிடமும் கை மாத்து வாங்கியாச்சு. இனி ஊரில் யாரும் புதுசா குடி வந்தால்தான் உண்டு’ – என்று மனதிற்குள் சலித்துக் கொண்டான். தண்டல்காரரிடம் கேட்கலாம்தான். ஆனால், இன்றைய தண்டலுக்கு பதில் சொல்ல முடியாமல் அவனுக்கு பயந்துதான் கடையை சீக்கிரம் அடைத்து வந்தது. இந்த லட்சணத்தில் எங்க அவரை போய் பார்ப்பது?
வரிசை பணத்தை வாங்கி வந்துவிடலாம் என்ற யோசனை வந்து வீட்டை நோக்கி சைக்கிளை அழுத்தினான். அது செல்வியின் இன்றைய நடையை விடக் கூடுதல் பொறுமையாக இருந்தது. தெரு முக்கில் நுழைந்த அவனை நோக்கி ஓடிவந்த முத்துவைப் பார்த்து சைக்கிளை வேகமாகத் திருப்பிக் கொண்டு மீண்டும் கடைத் தெருப் பக்கம் வேக வேகமாக மறைந்தான் அவன் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்ற அவன் எண்ணம் நிறைவேறவில்லை.
தன்னைத் தானே மிதித்துக் கொள்வது போல அவமானத்தில் குறுகி போனான்.
ஆற்றாமையில் அரட்டினான். “ஆ…… ” – அந்த ஊமை இரவில் அவனின் சத்தம் அவன் அழுகை போலவே மழையில் நனைந்தது.
தண்டல்காரன் ஒருவன்தான் சீனுசாமியிடம் மீதமிருக்கின்ற கடைசி நம்பிக்கை. அவன் வீட்டுப் பக்கமாக சைக்கிள் திரும்பியது.
வழியில் கடைத் தெரு சின்னாயி அம்மன் வருவோர் போவோருக்கு சிரித்த முகத்துடன் அருள் பாலித்துக் கொண்டிருந்தாள்.
“அண்ணே, வணக்கம்ண்ண! வீட்ல மாமனார் வந்துருக்காருண்ண. அவசரமா ஒரு நூறு ரூபா வேணும், நீங்கதாண்ண தரணும். உங்களதான் நம்பி வந்துருக்கேன்ண்ண. அவுங்களுக்கும் சேத்து சாப்பாடு வாங்கி வரேன்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்ணே. வெறுங்கையோடு போய் நின்னா மாமனார் முன்னால மானமே போயிடும்ணே. நீங்கதான் கொஞ்சம் பாத்து தயவு பண்ணனும்ணே. நாளைக்கு தண்டலோட சேத்து கண்டிப்பா கொடுத்துடுறேன்”, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தயங்கித் தயங்கிக் கேட்டான் சீனுசாமி. இயல்பை விட சற்றுக் குனிந்திருந்தான்.
“ஏண்டா, என்ன பாத்தாக்கா எப்டி இருக்கு..ஆங்.” தண்டல்காரனின் ஒரு அதட்டலில் சர்வமும் அடங்கிப் போனது சீனுசாமிக்கு.
“இன்னைக்கு பாக்கியே பதில் சொல்ல வக்கு இல்லாம ஓடிப் போயிட்ட. வீட்ல வந்து வசூல் பண்ண எவ்ளோ நேரம் பிடிக்கும்ன்னூ நினைக்கிற.. ? நான்தான் பிள்ளைங்க முன்னால நல்லா இருக்காதுன்னு ஒன்ன உட்டு வச்சிருக்கேன். கொடுத்த காசுக்கே வழி தெரியல. இதுல இன்னும் நூறுவா வேணுமாம்.. வந்துட்டான். போடா அந்தாண்ட காசும் கெடையாது, ஒன்னும் கெடையாது. நாளைக்கு தண்டல் மட்டும் பாக்கியில்லமா வரல, ஓன் வீட்டுலதான் ராத்தூக்கம், போடா” அடிக்காத குறையாக விரட்டிவிட்டான் தண்டல்காரன்.
வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது. தெப்பலாக நனைந்த அவன் சின்னாயி கோவிலில் வந்து உட்கார்ந்தான். துக்கம் மேலிட சின்னச் சின்னதாக பெருமூச்சு அவனிடமிருந்து வந்து கொண்டிருந்தது. எவ்வளவு நேரம் அங்கு உட்கார்ந்திருந்தான் என்பது அவனுக்கே தெரியாது. அயர்ந்து போனவன். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் தூங்கிப் போனான்.
தெருநாய்களின் கூச்சலில் சடாரென்று எழுந்து கொண்டான். சுற்றி முற்றி பார்த்தான். மழை விட்டு விட்டிருந்தது. மழைத் துளிகள் வீட்டு ஓடுகளிலிருந்து சொட்டும் சத்தத்தை தவிர தெரு வேறு அரவமற்று இருந்தது. மழையில் நனைந்த தூங்குமூஞ்சி மரங்கள் அவனையே விழித்துப் பார்ப்பது போலத் தோன்றிற்று. திரும்பிப் பார்த்தான், சின்னாயி புன்னகை மாறாமல் வீற்றிருந்தாள்.
வீதி விளக்குகள் ஏரியவில்லை. கதவண்டை நின்றுகொண்டிருந்தான். தயங்கித் தயங்கி தட்டப் போன சமயம், கதவு தானாக திறந்தது, பஃக்கென்று இருந்தது அவனுக்கு. பெரியவர் மூத்திரம் பெய்ய வெளியே வந்தார்.
“எங்க தம்பி போனீங்க?” பதிலுக்கு காத்திராமல் எதிர் சாலையில் வழித்துக் கொண்டு உட்கார்ந்தார்.
நேரம் மணி பனிரெண்டு இருபது என்று கடிகாரம் காட்டியது. பிள்ளைகள் தூங்கிவிட்டிருந்தார்கள்.
“ஏங்க, எங்கங்க போனீங்க” – இது செல்வி
“நீங்களாம் சாப்டீங்களா?” என்றான் சீனுசாமி.
“நாங்கல்லாம் சாப்பிட்டோம். நீங்க எதோ ரொட்டி வாங்கப் போனிங்க. என்னாச்சு?” கேட்டுக் கொண்டு கொட்டாவி விட்டபடி போய் படுத்துக்கொண்டாள் செல்வி.
“கடைத்தெருவில் ஒரே பொங்க கூட்டம். ஒரு வேல வேற தீடீர்னு ரென்று வந்துருச்சு. அதான் தாமசம் ஆகிட்டு” அவன் சொன்னதை அவள் கேட்கவில்லை.
“நீங்க சாப்புட்டு படுங்க தம்பி” என்றார் பெரியவர்.
“இல்ல மாமா, நான் வேல முடிச்சி வரும்போதே ரெண்டு ரொட்டிய பிய்ச்சு போட்டுதான் வந்தேன்”.
எதுக்களிப்பது போல ஒரு பாவனை செய்தான். ரெண்டு மூன்று லோட்டா தண்ணீர் குடித்துவிட்டு பிள்ளைகள் பக்கத்தில் படுத்துக்கொண்டான்.
‘ப்பா, பட்ரூவா…பட்ரூ.. ப்பா..ங்கே’ – என்று தூக்கத்தில் அழுதான் முத்து. அவனை ஓயச் செய்து தூங்க வைத்தாள் செல்வி.
ஊரே தூங்கிவிட்ட நடு நிசியில் விசும்பல் கேட்டு எழுந்து கொண்ட பெரியவர் உள்ளே சென்று பார்த்தார். அழுவது முத்துவல்ல என்பது மட்டும் தெரிந்தது. சத்தம் காட்டாமல் வந்து படுத்துக் கொண்டார்.
வெளியில் லேசாக மழை தூற ஆரம்பித்தது.
******