
இந்தப் படத்திற்கு சென்சார் போர்டு கொடுத்த ‘ஏ’ சர்டிபிகேட் பற்றிப் பேச நினைக்கிறேன். அப்படி என்ன வன்மமான பாரமான காட்சி இருக்கிறது என்று இந்தப் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்? ரத்த வெறியோ காம வெறியோ எதுவுமே இல்லை. செந்திலின் அத்தையாக வருபவர் ஒரே ஒரு இடத்தில் ‘குண்டி’ என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். கண்டிப்பாக ‘ஏ’ சர்டிபிகேட் கொடுப்பதற்கு அதெல்லாம் காரணமாக இருக்காது என நினைக்கிறேன்.

ஒருவேளை இந்தப் படத்தை குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் பார்க்க கூடாது என்று கொடுத்திருப்பார்களோ? அவர்கள் ஏன் பார்க்கக் கூடாது? அவர்கள் இதைப் பார்த்துதான் ‘தலைக்கூத்தல்’ பழக்கவழக்கத்தை பின்பற்றப் போகிறார்களா என்ன? தலைக்கூத்தலை சரி என்றும் மனிதாபிமானம் மிக்க செயல் என்றும் போதிப்பது எந்த தலைமுறை? விழிப்புணர்வு படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்து முடக்குவது ஏன்? இப்படியெல்லாம் கேள்வி கேட்கத் தோன்றுகிறது. ஒருவேளை படக் குழுவினரே ஏ சர்டிபிகேட்டை கேட்டு வாங்கினார்களோ என்னவோ? சரி அதை விட்டுவிடுவோம்.
இந்த ஆனந்த விகடன் ஏன் பாரம் படத்திற்கு அப்படியொரு விமர்சனம் தந்தது. “இந்தப் படம் பார்வையாளர்களுக்கு பாரம்” என்று எதை வைத்து விமர்சித்தது என்று தெரியவில்லை. ஆனந்த விகடன் குறிப்பிட்டதைப் போல சலிப்பு கண்டிப்பாக எனக்கு எந்தக் காட்சியிலும் ஏற்படவில்லை. படம் சீக்கிரம் முடிந்துவிட்டதைப் போன்ற உணர்வுதான் ஏற்பட்டதே தவிர சீக்கிரம் முடிங்கடா என்ற உணர்வு கண்டிப்பாக எனக்கு ஏற்படவில்லை. அவ்வளவு துல்லியமாக காட்சிகளை எடிட் செய்திருக்கிறார் இயக்குநர் பிரியா கிருஷ்ணசுவாமி.
திருவிழாவைக் காட்டும் முதல் காட்சியின் ஒளிப்பதிவு முறையே படத்தின் தன்மையை சொல்லிவிடுகிறது. உடை வடிவமைப்பு, லொக்கேசன்கள் அனைத்தும் எளிமை. ஒரு விஷயத்தை எளிமையாகச் சொல்வதுதான் மிகக் கடினம் என்று இயக்குநர் பாலுமகேந்திராவின் பிள்ளை இயக்குனர் ராம் அடிக்கடி சொல்வார். அவர் சொன்னதுபோல மிக மிக எளிமையான இந்தப் படத்தை என்னால் அதிகம் ரசிக்க முடிகிறது.
மேக்கப் இல்லாத நிஜ மனிதர்கள்… சினிமாத்தனம் இல்லாத யதார்த்தமான நடிப்பு, வசன உச்சரிப்பு… குறிப்பாக அத்தையாக நடித்தவர் கண்ணுக்குள்ளயே நிற்கிறார்…. அப்படியே நம் வீட்டு பெண் ஒருவரை திரைக்குள் பார்த்ததைப் போன்ற உணர்வு. கருப்பசாமி, செந்தில், முருகன், வீரா, ராஜன், மீனா போன்ற கதாபாத்திரங்களின் முகங்கள் இன்னமும் கண்முன்னே வந்து செல்கின்றன. ஒரு காட்சியில் மட்டுமே வரும் கருப்பசாமியின் உடல் துடைத்துவிடும் ஆயாவின் நடிப்பு அவ்வளவு யதார்த்தம்.
எளிமையான காட்சி வடிவமைப்புகள் மூலம் கதை நகர்தல், ஆங்காங்கே மட்டுமே ஒலிக்கும் பின்னணி இசை, படத்தோடு ஒன்ற வைக்கும் மிக நுணுக்கமான ஒலிப்பதிவு, மிக அழகாகக் காட்டப்பட்ட வாழ்வியல் போன்றவை இந்தப் படத்தின் பெரும்பலம். இவையெல்லாம் இந்தப் படத்தின் மூலமாக நாம் கற்க வேண்டியவை.
இந்தப் படத்தின் இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி தமிழகத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவரது தாத்தா பாட்டி முன்னொரு காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்து அயல் மாநிலத்திற்கு குடிபெயர்ந்தவர்கள். தனது தாத்தா பாட்டி வாழ்ந்த ஊர் என்பதற்காக தமிழகத்திற்கு வந்து வாழ்ந்து தமிழ் உலகை ஆழ்ந்து கவனித்து தமிழில் படமெடுத்து அதற்கு தேசிய விருது வாங்குவதெல்லாம் வேற லெவல்.
செந்திலு… செந்திலு… என்ற கருப்பசாமியின் குரல் படம் முடிந்த பிறகும் என் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருப்பதுதான் இந்தப் படத்தின் வெற்றி. என்னைப் பொறுத்தவரை நம் குடும்பப் பெண்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் ‘முத்துக்கு முத்தாக’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற படங்களை விட மிகச் சிறப்பான படம் இந்த பாரம்.