
நமக்குச் சொல்லப்படும் உண்மைகளுக்குள் புனையப்பட்டவைகளும் அடங்கியிருக்கின்றன. பூரணத்துவமான உண்மை என்பது தொடர்புடையவர்களின் மௌனத்தினுள் உறைந்து கிடக்கிறது. உண்மை என்று அறிவிக்கப்படும் ஒன்றுக்குள் ’இது உண்மை எனக் கருதப்படுகிறது’ என்கிற அர்த்தம் மறைபொருளாய் இருக்கிறது. ஒரு கொலைக்குள் பொதிந்திருக்கும் உண்மைகளைத் தேடிச் செல்லும் ஒரு பயணத்தில் மனித மனங்கள் கொண்டிருக்கும் ஆற்றாமை, குற்ற உணர்வு, சலிப்பு, கருணை, கோபம் ஆகியவை வெளிப்படும் தருணங்களினூடான மர்மத்தை அணுகியிருக்கிறது ‘Once upon a time in Anatolia’ என்கிற துருக்கியப் படம். 2011ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தின் இயக்குநர் நூரி பில்கே சிலான். உலக அளவில் திரை ரசிகர்களால் மெச்சப்படும் சமகால இயக்குநர்களில் நூரி பில்கே சிலான் முக்கியமானவர்.
பொதுவாகவே, கொலையை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க சில அம்சங்களை முன்நிறுத்திதான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். கொலை செய்ய்பட்டவர் யார்? கொலை செய்யப்பட்ட காலம் / இடம், கொலையானவரின் முன்கதை, அந்தச் சரடில் பிணைக்கப்பட்டிருக்கும் சந்தேகத்துக்குரிய நபர்கள், கொலைக்கான நோக்கம் குறித்த அவதானிப்புகள் என்பனவற்றைக் கொண்டு கொலையாளியைக் கண்டறிவதுதான் இவ்வகையான ‘த்ரில்லர்’ படங்களின் சூத்திரமாக இருக்கும். கொலையாளியைக் கண்டறியும் பயணத்தினூடாக அக்கொலைச் சம்பவத்தினுள் உட்பொதிந்திருக்கும் மர்மத்தின் திரையை மெல்ல மெல்ல விலக்குகையில் பார்வையாளனை இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் யுக்திதான் இவ்வகைத் திரைப்படங்களின் வெற்றியாக இருக்கும். பார்வையாளனின் யூகங்களைத் தோற்கடித்து முற்றிலும் புதிய திருப்பங்களை நிகழ்த்தி அவனை வியப்புக்குள்ளாக்குவது மட்டுமே திரைக்கதையின் சவாலாக இருக்கும். விறுவிறுப்புத்தன்மை படத்தின் அடிநாதமாக எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆனால், நூரி பில்கே சிலான் இத்திரைப்படத்தில் கொலையை மேற்சொன்ன PATTERN படி அணுகவில்லை. ஒரு THRILLER ELEMENT ஆக அல்லாமல் நாடகிய தருணங்கள் மூலம் அக்கொலையையும் அதனுள் புதைந்திருக்கும் மர்மத்தையும் அணுகியிருக்கிறார்.
படத்தின் தொடக்கக் காட்சியில், ஒரு அறையில் கெனான், அவனது தம்பி ரமசான் மற்றும் அவர்களது நண்பன் யாசர் ஆகிய மூவரும் அரை வட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அடைக்கப்பட்டிருக்கும் கதவின் கண்ணாடி வழியாகக் காண்பிக்கப்படும் அக்காட்சியில் அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது பார்வையாளருக்குக் கடத்தப்படுவதில்லை. கெனானும், யாசரும் மது அருந்துகிறார்கள். ரமசான் டின் கோக் அருந்துகிறான். வெளியே நாயின் குரைப்பொலி கேட்கிறது. யாசர் மீந்து போன எலும்புத் துண்டுகளை ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வெளியே வந்து நாய்க்கு அதனை வைத்து விட்டு மீண்டும் உள்ளே செல்வது தூரக்காட்சியில் காட்டப்படுகிறது. திரையிலிருந்து அவனை மறைக்கும்படியாக சாலையில் சிறு சப்தமெழுப்பியபடி ஒரு லாரி கடந்து செல்வதோடு அக்காட்சி நிறைவு பெறுகிறது.
அடுத்த காட்சியில் இரவில் ஒரு மலைப்பாதையில் இரண்டு கார்களும் ஒரு ஜீப்பும் வரிசையாக வந்து சாலையோர ஒற்றை மரத்தின் அருகே நிற்கின்றன. அவ்வாகனங்களிலிருந்து காவல் துறை தலைமை அதிகாரி நாசி, வழக்கறிஞர் நஸ்ரத், பிரேத பரிசோதனை மருத்துவர் செமல் மற்றும் காவலாளர்கள், குழி தோண்டுபவர்கள், நீதிமன்ற எழுத்தர் ஆகியோரோடு கெனானும் அவனது தம்பி ரமசானும் இறங்குகின்றனர். அவர்களது கைகள் பிணைக்கப்பட்டிருப்பதைக் கொண்டு அவர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தலைமை அதிகாரி நாசி, கெனானை இழுத்து வந்து ‘இந்த இடம்தானா?” எனக் கேட்கிறார். மர்மத்தைச் சூடியிருக்கும் அவ்விரவில், மினுங்கிக் கொண்டிருக்கும் சைரன் ஒளியும் தலைமை அதிகாரியின் விசாரணையின் தொனியும் மர்மத்தை சற்றே விலக்கி, ஒரு கொலை நடந்திருப்பதையும், கொலையானவனைப் புதைத்த இடத்தைத் தேடித்தான் அவர்கள் அங்கு வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிய வைக்கிறது. தொடக்கக் காட்சியில் பங்குபெற்ற மூவரில் அண்ணன் தம்பி இருவரும் விசாரணைக் கைதிகளாக நின்றிருப்பதைக் கொண்டு மூன்றாமவரான யாசர்தான் கொலை செய்யப்பட்டவர் என்பதை யூகிக்க முடிகிறது. கெனான் அந்த இடத்தை குழப்பத்தோடு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ‘இந்த இடம் இல்லை’ என்கிறான். அதை எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய் என தலைமை அதிகாரி கேட்கிறார். அங்கே ஒரு வட்ட மரம் இருக்கும் என கெனான் உறுதிபடச் சொன்னதும் அவர்கள் அங்கிருந்து கிளம்புகிறார்கள்.
சிறிது நேரம் பயணித்து அதே போன்று இன்னொரு நிலவெளிக்குச் செல்கிறார்கள். அந்நிலக்காட்சியைப் பார்த்துவிட்டு கெனான், இந்த இடம்தானா என உறுதியாகத் தெரியவில்லை. ஏனென்றால் அப்போது நான் மது அருந்தியிருந்ததால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை என்கிறான். தலைமை அதிகாரி நாசி ரமசானிடம் கேட்கிறார். கொலை நடந்த அன்று ரமசான் மது அருந்தவில்லை. ஆனால் அப்போது நான் தூங்கிக் கொண்டிருந்தேன் என்று பதில் தருகிறான். சகோதரர்கள் தரும் அப்பதில்கள் நாசியை எரிச்சலூட்டுகின்றன. நீண்ட நேரத் தேடுதலின் விளைவாக எழுந்திட்ட சோர்வு, வீடு திரும்பியாக வேண்டிய கட்டாயம் ஆகியவை நாசியை அழுத்திக் கொண்டிருந்தன. அந்த அழுத்தத்தின் வெளிப்பாடாக நாசி, கெனானிடம் ‘நீ வேண்டுமென்றே என்னைக் குழப்புகிறாயா’ எனக் கேட்கிறார். அவன் இல்லை என மறுக்கிறான். மீண்டும் அங்கிருந்து அடுத்த இடத்துக்குக் கிளம்புகிறார்கள்.
போகிற வழியில் நாசிக்கு, அவரது மனைவியிடமிருந்து அழைப்பு வருகிறது. தனது சூழலை விவரித்து விட்டு ‘’நீ தூங்கச் செல்’’ என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டிக்கிறார். அவர் மீதான அழுத்தத்தின் கனம் அந்த அழைப்புக்குப் பிறகு மேலும் கூடுகிறது. இரவு நேரம் என்பதாலும், அந்நிலப்பரப்புகள் யாவையும் ஒன்று போலவே தோற்றம் தருவதாலும் கெனானால் யாசரைப் புதைத்த இடத்தைச் சரியாக கண்டறிய முடியவில்லை. அடுத்ததாக ஒரு நிலவெளிக்குச் சென்று தேடியதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
அதையும் தாண்டிச் சென்று ஒரு இடத்தில் நிற்கிறார்கள். தலைமை அதிகாரி நாசி, காவலர் மற்றும் குழி தோண்டுபவர்களோடு கெனானையும் அழைத்துக் கொண்டு உள்ளே செல்கிறார். வாகனங்களின் விளக்கொளிகள் மட்டுமே அப்பகுதிக்கு ஒளியூட்டியிருந்தன. அவ்வொளியில் வழக்கறிஞர் நஸ்ரத்தும், மருத்துவர் செமலும் இயல்பான உரையாடல் ஒன்றைத் தொடங்குகிறார்கள். செமலின் திருமண வாழ்வு குறித்து, நஸ்ரத் கேட்கையில், தனக்கு திருமணமாகி, குழந்தைகள் இல்லாத நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மணமுறிவு ஏற்பட்டு விட்டதைத் தெரிவிக்கிறார். ஒரு வகையில் குழந்தைகள் இல்லாததும் இச்சூழலோடு பொருத்திப் பார்க்கையில் சரியென்றே படுவதாக நஸ்ரத் கூறுகிறார். மருத்துவ அறிவியலோடு அனைத்தையும் அணுகும் செமலிடம், தனது நண்பனின் மனைவிக்கு நடந்ததாக ஒரு மர்மமான சம்பவத்தை விவரிக்கிறார் நஸ்ரத். கர்ப்பிணியான அப்பெண் தனது கணவனிடம், ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட தினத்தில் தான் இறந்து விடுவேன் எனத் தெரிவிக்கிறாள். அவள் சொன்னதுபடியே ஐந்து மாதங்களுக்குப் பிறகு இறந்தும் போகிறாள் என்று கூறுகிறார்.
இந்த உரையாடலின் இடையே, தலைமை அதிகாரி நாசி, சினங்கொண்டு கெனானைத் தாக்கும் நிகழ்வு இந்த உரையாடலைத் துண்டிக்கிறது. நாசியின் அழுத்தங்கள் வெடித்துச் சிதறி, சம்பவ இடத்தைக் காட்டாமல் கெனான் தன்னை வேண்டுமென்றே அலைக்கழிப்பதாகக் கோபம் கொண்டு அவனைத் தாக்குகிறார். நஸ்ரத், அதனைத் தடுக்கிறார். எல்லோரும் சோர்வுற்றிருக்கும் நிலையில், இன்னும் சடலத்தைக் கண்டறியாமல் நேரம் நீடிப்பது தரும் அயற்சியைக் கூறுகிறார் நாசி.
கெனான், மருத்துவர் செமலிடம் தனக்கு சிகரெட் வேண்டுமென்று கேட்கிறான். செமல் தயக்கமேதுமின்றி அவனுக்கு சிகரெட் கொடுக்க முனைகையில் அதனை கோபத்தோடு மறுக்கிறார் நாசி. அனைவரும் சோர்ந்து விட்டதால், அன்றிரவு அருகில் உள்ள ஒரு கிராமத்தில், கிராம அதிகாரியின் வீட்டில் தங்குவதற்காக செல்கின்றனர்.
அங்கே அவர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. சாப்பிடும் வேளையில் தொடர்பில்லாத, இயல்பான உரையாடல்கள் நடக்கின்றன. உரையாடலின் நடுவே மின் துண்டிப்பு ஏற்படுகிறது. கிராம அதிகாரி முக்தர், தனது மகளிடம் தேநீரும், விளக்குகளும் கொண்டு வரும்படி கூறுகிறார். குற்றவாளிகளில் ஒருவனான ரமசான், தனக்கு கோக் வேண்டுமென்று கேட்கிறான். அவர்கள் அக்கோரிக்கையை புறந்தள்ளுகிறார்கள்.
சற்று நேரத்தில் ஒரு தட்டில் தேநீர் நிரம்பிய டம்ளர்கள் மற்றும் அரிக்கேன் விளக்கை ஏந்தியபடி பேரெழிலின் முழு வடிவாய் முக்தரின் மகள் அங்கு வருகிறாள். அவள் முகத்தில் பெரும் அமைதி நிலை கொண்டிருக்கிறது. அவளைப் பார்க்கிற யாருக்கும் எளிதில் பார்வையை விலக்கத் தோன்றாதபடியான பெரும் ஈர்ப்பினை தன்னுள் கொண்டிருந்தாள். மருத்துவர் செமல்தான் அவளை முதலில் பார்க்கிறார். தான் இதுவரை கண்டே இராத பேரற்புதம் ஒன்றைக் கண்டு விட்டதைப் போல மிகையான உணர்ச்சி வெளிப்பாடுகளை அவரது முகத்தில் காண முடிகிறது. அவள் ஒவ்வொருவருக்கும் தேநீர் வழங்குகிறாள். ரமசானுக்கு அவன் விருப்பத்துக்கிணங்க கோக் வழங்குகிறாள். கெனான் அவளது அழகைப் பார்த்ததும் பெரும் குற்ற உணர்வுக்கு ஆளாகிறான். அவனையும் மீறி அவனுக்கு அழுகை வருகிறது.
விசாரணையின் தொடக்கத்திலிருந்தே மனம் திறந்து பேசாமல், எந்த உணர்ச்சிகளையும் பிரதிபலிக்காமல் இறுக்கத்துடன் இருந்த கெனான், தலைமை அதிகாரியின் தாக்குதலால் கூட பாதிப்படையாத கெனான் அப்பேரெழில் முன் தன் இறுக்கங்களைக் கைவிட்டு அழுகிறான். அது வரையிலும் அக்கொலை பற்றி எதுவும் பேசாத அவன், அப்போது கொலைக்கான காரணத்தை தலைமை அதிகாரி நாசியிடம் கூறுகிறான். கொலை செய்யப்பட்ட யாசரின் மனைவி குல்நாஷ்கும் தனக்கும் அந்தரங்க உறவு இருப்பதாகவும், அவர்களது மகன் தன் மூலம் பிறந்தவன் எனவும் கூறுகிறான். அன்றைக்கு குடி போதையில் அதை யாசரிடம் தெரிவிக்கும்போது ஏற்பட்ட சண்டையில்தான் இக்கொலை நடந்ததாகத் கூறுகிறான். மருத்துவர் செமல், வழக்கறிஞர் நஸ்ரத்திடம் கூறுவார் ‘முக்தருக்கு ஒரு தேவதை மகளாகப் பிறந்திருக்கிறாள்’ என்று. அவள் தேவதைதான். தேவதைக் கதைகளில் விவரிக்கப்படும் அத்தனை வர்ணனைகளுக்கும் பொருந்தக் கூடியவள். தனது மந்திரக்கோல் கொண்டு அவர்கள் எப்படி நன்மையை மட்டுமே விளைவிக்கும் மாற்றங்களை உண்டு பண்ணுவார்களோ அதைத்தான் முக்தரின் மகளும் செய்தாள். அவள் எதுவும் செய்யவில்லை அவளின் வருகையே அன்றாடத்தின் நெருக்கடிகளில் உழன்று கொண்டிருந்த மனங்களை இலகுவாக்கியது. கெனானுக்குள் தன் செயலுக்கான அர்த்தமின்மையை உரக்கக் கூறியது. கெனானுக்கு சிகரெட் வழங்கப்படுவதை கோபத்துடன் மறுத்த தலைமை அதிகாரி நாசிதான், விசாரணை முடிந்த பின் அவனுக்கு சிகரெட் பற்ற வைத்துக் கொடுக்கிறார். இந்தத் தலைகீழ் மாற்றத்தை அவள் வருகையே சாத்தியப்படுத்துகிறது.
மருத்துவர் செமலும், வழக்கறிஞர் நஸ்ரத்தும் அந்த இரவில் பேசிக்கொண்டிரும்போது முக்தரின் மகளாக இருக்கும் தேவதையின் வாழ்வு இந்த கிராமத்துக்குள்ளேயே எந்த பெரிய மாறுதல்கள் ஏதும் இல்லாமல் சுருங்கி விடும் என்கிறார் நஸ்ரத். அவள் குறித்தான உரையாடல் நிறைவடைந்ததும் நஸ்ரத், மீண்டும் தனது நண்பனின் மனைவிக்கு நடந்த மர்மத்தைப் பற்றிப் பேசுகிறார். குறித்த தேதியில் எப்படி அவளால் இறக்க முடிந்தது என்கிற கேள்வியை முன் வைக்கிறார். அவள் விஷமருந்தியிருக்கக் கூடும் என்று செமல் கூறுகிறார். அதை மறுக்கும் நஸ்ரத், மருத்துவர்கள் அவளது இறப்புக்கு மாரடைப்புதான் காரணம் என்று தெரிவித்தாகக் கூறுகிறார். பிரேத பரிசோதனை மேற்கொண்டிருந்தால் மட்டும்தான் அச்சாவுக்குப் பின்னான காரணத்தை உறுதிப்படுத்தியிருக்க முடியும் என்று செமல் சொல்வதை நஸ்ரத் ஏற்க மறுக்கிறார். அச்சாவுக்கான காரணம் மாரடைப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டதுதான் என்கிறார்.
மறுநாள் காலையில் அவர்கள் யாசர் புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டடைகிறார்கள். கயிற்றால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சடலத்தை மீட்கும்போது தலைமை அதிகாரி நாசி மீண்டும் கெனானைத் தாக்குகிறார். சடலத்தின் கை, கால்களை கயிற்றால் பிணைத்திருப்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கொலையாளியிடமே கொலை செய்யப்பட்டவனின் மரணத்துக்கு என்ன மதிப்பளித்தாய் என்கிற கேள்வியை கடும் உக்கிரத்தோடு முன் வைக்கிறார். அச்சடலத்தைப் பார்த்ததும் கெனானின் தம்பி ரமசான் அழுதபடியே இக்கொலையை நாந்தான் செய்தேன் என்கிறான். கெனான் அவனை அமர்த்துகிறான்.
குடும்ப வாழ்வு சார்ந்த எவ்வித நெருக்கடியுமற்றவர்களாக இருப்பதால்தான் செமல் மற்றும் நஸ்ரத்தால் விசாரணையின் தொடக்கத்திலிருந்தே இயல்பாக இருக்க முடிகிறது. ஆனால் குடும்பப் பொறுப்புணர்வுக்குள் ஆட்பட்டிருக்கும் நாசிக்கு அது பெரும் அலுப்பூட்டக் கூடிய, இம்சிக்கக் கூடிய ஒன்றாக இருந்தது. பிரேதத்தைக் கைப்பற்றி வழக்கறிஞரிடம் ஒப்படைத்த பின் இத்துடன் தனது பணி முடிந்து விட்டதை நினைத்து ஆறுதல் கொள்கிறார் நாசி. யாசரின் உடல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மருத்துவமனைக்கு வெளியே யாசரின் உறவினர்களோடு அவனது மனைவியும், மகனும் நின்றிருக்கிறார்கள். அக்கூட்டம் கடுங்கோபத்துடன் கெனானைத் தாக்க வருகிறது. காவலர்கள் அவர்களிடமிருந்து அவனைப் பாதுகாக்கிறார்கள். யாசரின் மகன், கெனான் மீது கல்லொன்றை எடுத்து எறிகிறான். தெரிவிக்கப்படாத உண்மைகள் எவ்வளவு மூர்க்கமானவை என்பதை கெனான் அப்போது உணர்ந்திருக்கக் கூடும். தனது மகனின் கையாலேயே கல்லடி பட்ட தருணம் அவனை பெருஞ்சோகத்துக்குள்ளும், குற்ற உணர்வுக்குள்ளும் ஆட்படுத்தி விடுகிறது. தலைமை அதிகாரி நாசி, மருத்துவர் செமலை சந்திக்கும்போது இது குறித்து உரையாடுகின்றனர். யாசரின் மகன் இந்த வயதில் தந்தையை இழப்பது மிகவும் துயரமானது என்பார் நாசி. “கெனான் சொன்னது போல, யாசரின் மகன் கெனானுக்குப் பிறந்தவன் என்பதை நம்புகிறீர்களா?” என்று செமல் அவரிடம் கேட்பார். அது பற்றித் தனக்குத் தெரியாது என்றும் ஆனால் அவன் கல்லால் அடித்ததை நினைத்து கெனான் நீதி மன்றத்துக்குச் செல்லும் வரை அழுது கொண்டிருந்தான் என நாசி கூறுவார்.
பிரேதப் பரிசோதனையின் முடிவு அறிக்கைக்காக வழக்கறிஞர் நஸ்ரத் மருத்துவமனைக்கு வரும்போது நண்பனின் மனைவி குறித்த உரையாடல் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறது. அப்பெண்ணின் மரணம் நிச்சயம் தற்கொலையாகத்தான் இருக்கும் எனக்கூறும் செமல் குறிப்பிட்ட ஒரு மருந்தை தேவையான அளவுக்கும் அதிகமாக உட்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட்டு இறப்பைச் சந்திக்க நேரிடும் என்கிறார். செமலின் அந்த பதில் நஸ்ரத் அது வரையில் கொண்டிருந்த தீர்க்கத்தைக் குதறி விடுகிறது. அதன் பின் அந்தப் பெண்ணைப் பற்றிய மேலும் சில தகவல்களையும் விவரிக்கிறார். அவள், தனது கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு கொண்டதைப் பார்த்து விட்டாள். ஆனால் அச்செயலுக்கான மன்னிப்பையும் வழங்கி விட்டாள் என்கிறார். அவ்வளவு எளிதாக அவர்களால் அதை மன்னிக்க முடியாது. இத்தற்கொலையின் காரணம் கூட அதுவாகத்தான் இருக்கும். தன்னை மாய்த்துக் கொள்வதன் வழியே தனது கணவனை தண்டிக்கும் பொருட்டே இத்தற்கொலை மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்பதை தர்க்கப்பூர்வமாக நிறுவுகிறார் செமல். சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு, கொடுந்துயரின் குறிகள் முகத்தில் வெளிப்பட, ‘’பெண்கள் இரக்கமற்றவர்கள்’’ என்று கூறுவார் நஸ்ரத். அவர் இதுவரையிலும் நண்பனின் மனைவியாக குறிப்பிட்ட அப்பெண் அவரது மனைவிதான் என்பதை நஸ்ரத்தின் உணர்ச்சி வெளிப்பாட்டின் வழியாக பார்வையாளனுக்குக் கடத்துகிறார் இயக்குனர். இது குறித்தான உரையாடலின் ஆரம்பத்திலிருந்தே, அவள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என நஸ்ரத் தீர்க்கமாக இருந்ததன் பின்னால் அது தற்கொலையெனில் அதன் மீதான தனது பொறுப்பு கேள்விக்குட்படுத்தப்படும் என்கிற பதற்றமும் உறைந்திருக்கிறது.
பிரேதப் பரிசோதனையின் போது, சுவாசக் குழாய் மற்றும் நுரையீரலில் மண் துகள்கள் இருப்பதைக் கொண்டு யாசர் உயிரோடு புதைக்கப்பட்டிருக்கிறார் என்கிற தகவலை செமலின் உதவியாளர் தெரிவிக்கிறார். பிரேதப் பரிசோதனை முடிவு அறிக்கையில் யாசர் உயிரோடு புதைக்கப்பட்டதை செமல் குறிப்பிடாமல் நுரையீரலில் இயல்புக்கு மாறான எந்த மாற்றமும் இல்லை எனப் பதிகிறார். இச்செய்கைக்கான அர்த்தம் விளங்காமல் அவரது உதவியாளர் குழப்பத்தோடு அவரைப் பார்க்கையில், செமல் மருத்துவமனைக் கண்ணாடிச் சாளரத்தினூடாக வீடு திரும்பிக் கொண்டிருக்கும் யாசரின் மனைவி மற்றும் மகனைப் பார்க்கிறார். அவர்கள் செல்லும் பாதையின் கீழே மைதானத்தில் அச்சிறுவனையொத்த வயதுள்ள சிறுவர்கள் கால் பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள். மைதானத்திலிருந்து பந்து மேலே வந்து விழுகிறது. துடிப்பும், உற்சாகமும் பொங்க அவன் அப்பந்தினை மைதானத்தை நோக்கி உதைக்கிறான். அக்காட்சியை செமல் பெரும் நெகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருப்பதோடு படம் நிறைவடைகிறது. அச்சமயத்தில், தந்தை இல்லாத மகன்கள் எதிர்கொள்ளும் துயர்கள் பற்றி படத்தில் முன்பு பேசப்பட்டனவை நம் நினைவுக்கு வரும்போது, மனித வாழ்வு குறித்த அகன்ற பார்வையும், மனிதர்கள் மீதான பெரும் கரிசனமும் கொண்ட பேருன்னதமிக்க மனிதராகத் தோன்றுகிறார் செமல்.
இத்திரைப்படத்தில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியப் பாத்திரப்படைப்பு என்றால் அது மருத்துவர் செமல்தான். இப்படத்தின் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுமே ஏதேனுமொரு துயரை சுமந்தலைந்தபடிதான் இருக்கின்றன. செமலும் இதற்கு விதிவிலக்கானவரல்ல. அவரது மணமுறிவு அவரது துயர்களில் முதன்மையானது. ஆனால் படம் நெடுக எவ்வித முன்முடிவுகளுக்கும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத ஸ்திரமான மனிதராக அவர் இருக்கிறார். அத்தன்மைதான் வழக்கறிஞர் நஸ்ரத், தன் தனிப்பட்ட வாழ்வு குறித்த திறந்த உரையாடலை மேற்கொள்வதற்கான தடத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
METAPHOR ELEMENT நிறைந்த இத்திரைப்படத்தில் முக்தரின் மகளை முக்கியமான உருவகமெனக் கூறலாம். அவள் தேவதையின் குறியீடாகவே படத்தினுள் வருகிறாள். கெனானுக்கு அவள் தேநீர் வழங்கும்போது, அரிக்கேன் விளக்கொளியில் மிளிரும் அப்பேரழகைக் காண்கிற கெனான் அழுகிறான். ஏனென்றால் அவன் ஒரு பெண்ணுக்காகத்தான் இப்படியொரு கொலைக்குற்றத்தையே செய்திருப்பான். அப்படியான நிலையில் பேரழகி ஒருத்தியின் அண்மை அவனது செய்கையை முழுவதும் அர்த்தமற்றதாக்கி விடுகையில் அவனுக்குள் குற்ற உணர்வு மேலெழும்புகிறது. எல்லாம் அற்பமாகத் தோன்றுகிறது. கெனானின் பார்வையில், முக்தரின் மகள் அவனுக்கு அடுத்ததாக இறந்து போன யாசருக்குத் தேநீர் கொடுப்பாள். அதைப் பார்த்து அதிர்ந்து போகும் கெனான், “யாசர்… நீ சாகவில்லையா” எனக் கேட்பான். அப்போது யாசருக்கு பேச்சு வராமல் மூச்சுத் திணறுவதைப் போலான காட்சியை இயக்குனர் வைத்திருப்பார். யாசர் உயிரோடு புதைக்கப்பட்டதற்கான உருவகம் முன்பே பார்வையாளனுக்குக் கடத்தப்படுகிறது.
படத்தின் இயக்குநர் கொலைச் சம்பவத்தைக் களமாகக் கொண்டு அக்குற்றத்தினை ஆராயமல், அக்குற்றச் சம்பவத்தின் தொடர்ச்சியாக உண்டாகும் உள நிலைகளைகளினூடாக மனித இருப்பு குறித்து ஆராய்ந்திருக்கிறார். ஆகவேதான் அக்கொலைச் சம்பவத்தினுள் பொதிந்திருக்கும் பூரணத்துவமான உண்மையைத் தேடும் முனைப்பு அர்த்தமற்றது என நினைக்கிறார். எப்படியென்றால் இக்கொலை தற்செயலாக நிகழ்ந்ததா? அல்லது திட்டமிடப்பட்ட கொலையா? என்கிற கேள்விக்கான எந்த விளக்கங்களையும் அவர் திரைக்கதைக்குள் அனுமதிக்கவில்லை.
குடிபோதையில் ஏற்பட்ட மோதலின் விளைவாக நிகழ்ந்த கொலை என சொல்லப்படுகிறது. அச்சந்திப்பே கொலைக்கான திட்டுமிடுதல்தானா, இல்லை, யாசரின் மனைவியோடு கெனான் கொண்டிருக்கும் அந்தரங்க உறவு முன்பே யாசருக்குத் தெரிந்திருந்து, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்த யாசருக்கு குடி போதையில் அது வெளிப்பட்ட போது நிகழ்ந்த மோதலா? அக்கொலையுடன் நேரடியாக தொடர்புபட்டவன் கெனான், இருந்தும் அவனது தம்பி தான்தான் கொன்றதாகத் தெரிவிக்கிறான். அப்படியெனில் அக்கொலையில் கெனானின் பங்களிப்பு என்ன? யாசர் உயிரோடு புதைக்கப்பட்டிருக்கிறான் எனில் குடிபோதையில் தற்செயலாகத் தாக்க மயங்கி விழுந்த யாசரை இறந்ததாக எண்ணிப் புதைத்தார்களா அல்லது திட்டமிட்டே உயிருடன் புதைத்தார்களா? யாசரின் மரணம் அவனது மனைவிக்குள் எவ்விதமான சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. மருத்துவமனையில் செமல் அவளைப் பார்க்கும்போது கால் மேல் காலிட்டு அமர்ந்து ஒரு காலை ஆட்டியபடி இருப்பாள். (யாசரின் சடலம் காட்டப்படும்போது மட்டும் அவளுக்கு அழுகை வரும்) அப்படியென்றால் அம்மரணம் அவள் எதிர்பார்த்ததுதானா? என அக்குற்றத்தினுள் உறைந்து கிடக்கும் கேள்விகள் பல. அந்த மர்மங்களை விலக்கி இதுதான் உண்மை எனக் காட்டும் வழமையான போக்கிலிருந்து முற்றிலும் விலகி, அபாரமான திரை மொழியினூடாக மனித வாழ்வின் மெய்மையைக் காட்சிப்படுத்திய விதத்தில் உன்னதமான கலையனுபவத்தைக் கொடுக்கிறது ONCE UPON A TIME IN ANATOLIA. பூரணத்துவமான உண்மையைத் தேடிக் கண்டறிவதைத் தாண்டியும் மனித வாழ்வு பல அர்த்தங்களை உள்ளடக்கியது. மிக நீண்டதும் கூட.