பிக் பாஸ் 3 – நாள் 7 – தமிழ் பொண்ணுனா என்ன? – கார்னர் செய்யப்பட்ட மதுமிதா
மித்ரா
சொல்லப் போனால், பிக் பாஸ் வீட்டின் ஏழாம் நாள் நேற்றே தொடங்கி விட்டது. இன்று அதன் தொடர்ச்சி தான். போட்டியாளர்கள், பார்வையாளர்கள் எல்லாம் அதே உடையில் இருக்க கமல் மட்டும் வேறு ஒரு உடையில் வந்து வணக்கம் சொன்னார். ஆனால், இதைச் சொல்லியே ஆக வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சிகளுக்காக கமலுக்கு ஆடை வடிவமைத்துத் தருபவர் பாராட்டுகளுக்குரியவர். மிக நேர்த்தியான கச்சிதமான உடைகளுடன் கலக்குகிறார் கமல். சரி நிகழ்ச்சிக்குள் போகலாம்.
செய்தி வாசிப்பாளர்களான பாத்திமா பாபு மற்றும் லாஸ்லியாவை வீட்டில் ஒரு வாரம் நடந்த நிகழ்வுகளை செய்திகளாகத் தொகுத்துக் கூறும் படி சொல்கிறார் கமல். பாத்திமா பாபு செய்தி வாசிக்க, லாஸ்லியா ஒரு விதமான அபிநயத்தோடு நடித்துக் காண்பித்து செய்திகளைக் கூறினார்.
செய்தி வாசித்த போது பாத்திமா பாபு நமக்குத் தெரியாத ஒரு விஷயத்தைக் கூறினார். அபிராமி ஒரு தண்ணீர் பாட்டிலை குழந்தையாகக் கொஞ்சி விளையாடி வருகிறாராம். அதன் அப்பா முகேனாம். இதை பாத்திமா பாபு, “அபிராமியும் முகேனும் ஒரு பாட்டிலைக் குழந்தையாக பெற்றெடுத்து வளர்த்து வருகின்றனர். நாங்களும் அதனோடு விளையாடி வருகிறோம்.” என்று கூறினார். இது பொழுது போகாமல் விளையாட்டாகச் செய்யும் ஒரு ஜாலியான விஷயம் தான்.
ஆனால், மதுமிதாவிற்கு இது முகஞ்சுழிக்கச் செய்யும் படி இருந்திருக்கும் போல. கமல் சென்ற பிறகு, பாத்திமா பாபுவிடம் “அதை ஏன் போய் சொன்னீங்க. பாக்குறவங்க என்ன நெனைப்பாங்க அசிங்கமா இருக்காதா?” எனக் கேட்டார் மதுமிதா. “தெரியல அங்க போனதும் ஞாபகம் வந்தது சொல்லிட்டேன்.” எனக் கூறிய பாத்திமா பேச்சை மாற்ற ஏதேதோ பேசியும் விடாமல் அதைப் பற்றியே புலம்பிக் கொண்டிருந்தார் மதுமிதா.
“நாமல்லாம் தமிழ் நாட்டில் இருக்கோம். நான் ஒரு தமிழ் பொண்ணு. என் குடும்பத்தில் பாத்துட்ருக்காங்க. இதெல்லாம் அசிங்கமா இருக்கு” எனப் புலம்பித் தீர்த்தார் மதுமிதா. இதைக் கேட்ட அபிராமி டென்சனாகி கண் கலங்கினார். சட்டென கமல் திரையில் தோன்றி விட, இயல்பாக இருப்பது போல் அனைவரும் அமர்ந்தனர்.
அபிராமி கண் கலங்கியிருப்பதை கவனித்த கமல் ஒன்றுமே தெரியாதவர் போல, “என்னாச்சு அபிராமி ஏன் கண் கலங்கிருக்கு? என்னாச்சு மதுமிதா நீங்களும் ஒரு மாதிரி இருக்கீங்க? ” எனத் தூண்டில் போட்டார். மதுமிதா எழுந்து” இல்ல சார் நான் அப்பவே அந்த பாட்டில் குழந்தை மேட்டர் எல்லாம் சொல்ல வேண்டாம்னு பாத்திமாம்மா கிட்ட சொன்னேன்….” எனத் தொடங்கி மீண்டும் தமிழ் பொண்ணு தமிழ் கலாச்சாரம் என ஆரம்பித்தார். அபிராமி ” விளையாட்டா ஏதோ பண்ணதுக்கு என்னைத் தப்பா பேசுறாங்க சார்” என அழுதார். “விடுங்க இதையும் விளையாட்டா எடுத்துக்கங்க.” எனச் சொன்ன கமல், போட்டியாளர்களிடம் இதய வடிவ தலையணைகளைக் கொடுத்து தங்கள் மனம் கவர்ந்த ஹௌஸ் மேட்டிற்கு அதைப் பரிசளிக்கச் சொன்னார். அதிகபட்சமாக சரவணனுக்கு 4 இதயங்களும், சாண்டி மற்றும் தர்ஷனுக்கு 2 இதயங்களும் சேர்ந்தன. பின்னர் வனிதாவின் கேப்டன்ஸி குறித்து கருத்துக் கேட்கப்பட மீரா எழுந்து தன் மனக்குறைகளைக் கொட்டித் தீர்த்தார்.
மீண்டும் கமல் சென்று விட, மீண்டும் பஞ்சாயத்து தொடங்கியது. ” உனக்கு அவ்வளவு பிடிக்கலைன்னா என் கிட்ட நேரடியா சொல்லலாம். உன் கூட தான் பெட் ஷேர் பண்றேன். அதை விட்டுட்டு இத்தன பேர் முன்னாடி தப்பா பேசிட்டயே ” என்பது அபிராமியின் ஆதங்கம். ” என்ன பெரிய தமிழ் பொண்ணு, கலாச்சாரம் அப்போ எங்களுக்கெல்லாம் கல்ச்சர் இல்லையா? நாங்க பொண்ணு இல்லையா?” என்பது ஷெரின் மற்றும் சாக்ஷியின் வாதம். ” அது விளையாட்டோ, உண்மையோ அவங்களோட தனிப்பட்ட விஷயம். அதுல தலையிட, கருத்துச் சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. அப்டிலாம் கலாச்சாரத்தை காப்பாத்தனும்னு நெனைச்சா நீ சினிமாலயே நடிக்க முடியாது.” என்பது வனிதாவின் வாதம். ” இப்ப நான் கூடத் தான் 4 பேரை லவ் பண்றேன்னு சொல்லிட்டு சுத்திட்ருக்கேன். அதுக்குனு அது உண்மையா? என்னால கலாச்சாரம் கெட்டுப் போய்ருமா? தெரியாமத் தான் கேக்குறேன் வாட் ஈஸ் த டெஃபனிசன் ஃபார் தமிழ் பொண்ணு இன் யுவர் டிக்சனரி?” என்பது கவினின் கேள்வி.
இப்படிப் பலமுனைத் தாக்குதலில் நிலைகுலைந்து போன மதுமிதா ஒரு கட்டத்தில் அழத் தொடங்கினார். ஆனாலும், பிடிவாதமாகத் தான் சொல்வது தான் சரி என வாதிட்டார். ஒட்டுமொத்தமாக அனைவரும் மதுமிதாவிடம் சொல்ல வந்தது, “தமிழ் பொண்ணு, தமிழ் கலாச்சாரம் என்று பேசுவது தவறு. அது வீட்டிற்குள் பிரிவினையை ஏற்படுத்தும். மற்றவர்களை ஒதுக்கி வைப்பது போல ஆகும். அவரவர் எந்த கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்பது அவரவர் விருப்பம்” என்பது தான். அது உண்மையும் கூட. மதுமிதாவை இது போல விளையாட யாராவது அழைத்திருந்தால், அப்போது அவர் இப்படி ரியாக்ட் செய்யலாம். ஆனால், இருவர் விளையாடியதைக் கண்டு கலாச்சாரத்தைக் காக்க வெகுண்டெழுந்திருக்கத் தேவையில்லை என்றே தோன்றியது.
இதையெல்லாம் அவர்களுக்குத் தெரியாமல் பார்வையாளர்களோடு பார்த்துக் கொண்டிருந்த கமல், ஒன்றும் தெரியாதது போல் திரையில் தோன்றி வணக்கம் வைத்தார். “என்ன மதுமிதா அழறீங்க?” என்ற கமலின் கேள்விக்கு “தயவுசெஞ்சு கேக்காதீங்க சார். இப்பத் தான் முடிஞ்சுருக்கு இதெல்லாம் டிவி ல காட்டாதீங்க” எனக் கையெடுத்துக் கும்பிட்டார் வனிதா. ஆனால், பிக் பாஸ் சகுனி சம்பவங்கள் எதையும் ஒளிபரப்பாமல் ஞாயிற்றுக் கிழமைக்கென்றே எடுத்து வைத்துத் திட்டமிட்டு சண்டையை உருவாக்கி அதைத் தெள்ளத்தெளிவாக ஒளிபரப்பி விட்டார்.
பிறகு கமல் பிக் பாஸ் வீட்டின் அடுத்த கேப்டனாக விரும்புபவர்களை எழுந்து நிற்கச் சொல்ல, மோகன் வைத்யா, முகேன், ரேஷ்மா மற்றும் மீரா மிதுன் எழுந்தனர். அவர்களிடம் வாக்குறுதியைக் கேட்ட பிறகு, மோகன் வைத்யா கேப்டனாக விரும்புபவர்களை கை உயர்த்தச் சொன்னார் கமல். 9 பேர் கை தூக்கினர். அடுத்து முகேனுக்காக 5 பேர் கை தூக்க, மெஜாரிட்டியில் வெற்றி பெற்று வீட்டின் இந்த வார கேப்டன் ஆனார் மோகன்.
அடுத்த வாரம் சந்திப்போம் எனக் கூறி கமல் விடை பெற்றதும், அபிராமி இனி மதுமிதாவோடு படுக்கையைப் பகிர்ந்து கொள்ள முடியாது எனக்கூறி லாஸ்லியாவின் இடத்தில் மாறிக் கொண்டார். ” உண்மையா இருந்தா யாருக்கும் பிடிக்காது. நம்ம நாமளா இருக்கவே கூடாது போல. உலகத்துல பெரிய தப்பு அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றது தான்” என்று புலம்பிக் கொண்டிருந்த மதுமிதாவுக்கு ஆறுதர் சொல்லி கரம் கோர்த்தார் மீரா மிதுன்.