
அவன் அடைத்த அறை அப்படி!
வியர்த்தொழுகும் வாழ்வு
வீசும் காற்று அற்பசுகம்
கதவைத் திறந்தால் மாய நெடுஞ்சுவர்
எங்கே வெளி? எங்கே வெளி?
அங்கே புகுந்தால் நீயும் ஆண்டவன்
சத்துவம் கற்றவன் சித்தனாகிறான்
பித்து பரவசநிலை
பித்தாகி நிற்கலாம்தான்
பிற்பாடு என்ன செய்ய?
****
மலை வரையும்போதோ
அல்லது
அதன் கீழ் ஓடுகிற மாதிரி
ஆற்றை வரையும்போதோ அல்ல
ஒரு வாத்தை,
அதற்கான வளைவை வரையும்போதே
மனதுக்குள் கேட்டுவிடுகிறது
‘க்வாக்’ சப்தம்.
****
குருத்து விரியும்
காளான் முளைக்கும்
சாமந்திகள் பூத்துக்கொண்டே இருக்கும்
பெண் வயதுக்கு வருவாள்
சூத்திரம் புரியும்
காசிலும் சோற்றிலும் கவனம்
எண்சாண் உடம்புக்குக் காமம் பிரதானம்
வாழ்வென்பது வேட்டைக்களம்
உலகம் ஏவாளின் ஆப்பிள் போல
நீயும் சாவாய் நானும் சாவேன்
இயங்கிக் கொண்டே இருக்கும்
இரக்கமற்ற பிரபஞ்சம்.
****
ஸ்நேகிதத்தின் வீச்செனக்குத் தெரியும்
அதனால்தான்
பறவை ஒன்று பரிச்சயமானதும்
அதன் பாஷை கற்றதும்
வானம் சுற்றியதும்
கூடடைந்து ஓய்வெடுத்து
நேற்றைக்கு வீடு திரும்பியதும்.
****
அதிகம் பூத்திராத செடி
பூத்த பூவிற்கு காற்றிலசைந்தாடும்
ஆனந்தக் களிப்பைப் போன்றது
என்றைக்கேனும் உன் பெயரை
உச்சரிக்கும்போதெனக்கு உண்டாவது
எப்போதுமல்ல
மனதுக்குள் உன் பெயர் சொல்லி
என்னை வருடிக்கொள்ளும்போதுதான்
கண்கள் பனிப்பதும்
நீர்த்துளி திரண்டு வழிவதும்
இப்படி இருவேறாய் இருப்பது
எனக்கொன்றும் புதிதல்லவே!
*******